கல்விக் கண்ணீர்..
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வருகின்ற கொலை. கொள்ளை தொடர்பான அடிக்கடி வருகின்ற செய்திகளைப் போன்று கல்வித் தொடர்பான பிறழ்வு செய்திகள் மனத்தை வேதனைப்படுத்துகின்றன.
பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரின் உயிர் பறிப்பு. மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான பாலியல் வன்முறையை மேற்கொள்வது போன்ற செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் ஒரு கல்லுர்ரியின் முதல்வர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். இறந்துபோன அந்த முதல்வரின் ஒரே மகள் சிறு வயது அவளின் சொற்கள் இவை
அங்கிள்... அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே,
ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா அப்பா
இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?
(நன்றி தி இந்து நாளிதழ்...12.10.2013)
நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன தந்தையை இழந்த மகளின் வேதனை.
இது இப்படியே தொடர்ந்தால் எதிர்கால கல்வியின் நிலை என்னவாகும்? எதிர்கால சமுதாயம் எப்படி நல் சமுதாயமாக மலரும். எப்படி ஆயினும் இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் வேதனையானதுமாகும். இதற்குரிய நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. உரியவ்ர்களுக்குத் தண்டனையும் உறுதி. என்றாலும் படிக்கவேண்டிய நிலையில் அந்த மாணவர்களின் மனத்தில் இத்தனை வன்மம் வளர்த்தது எது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்லாசிரியர் இயல்புகளையும் மாணாக்கர் இயல்புகளையும் ஆசிரியர் பாடங் கற்பிக்கும் முறையையும் மாணவர்கள் பாடம் கேட்கும் முறைகளையும் குறிப்பிட்டு இலக்கணம் வகுத்திருக்கிறது.
இவற்றுக்கான தீர்வு என்பது ஆசிரியர்களும் சரி மாணர்க்கர்களும் சரி தரமாக உருவாக்கப்படவேண்டும் என்பதுதான்.
இன்றைக்கும் ஆசிரியர் பணியை உப தொழிலாகக் கருதும் ஆசிரியர்களின் விழுக்காடுதான் அதிகமாக உள்ளது. ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன்பும் சரி வந்தபின்பும் சரி பணம் சம்பாதித்தல் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள ஆசிரியர்கள்தான் அதிகம். தன்னை மேன்மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதுமில்லை. மாணவர்களுக்குப் பாடம் சொல்வதில் சரியான பயிற்சியின்மையும் உள்ளது.
கல்வி குறித்து சித்பவானந்தர் குறிப்பிட்டுச் சொல்கிறார்
ஆசிரியர்கள் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும்
ஈடுபாட்டோடும் எளிமையாகவும் இருக்கவேண்டும்.
ஏனென்றால் அவர்களை எப்போதும் மாணவர்கள்
கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்று.
நாட்டிலுள்ள ஒழுக்கக் கேடுகளுக்கு ஒழுக்கமின்மையே
காரணம். ஒழுக்கசீலர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும்
இருத்தல் வேண்டும். எப்போதும் ஒழுக்கத்தையும் அறிவையும்
மேம்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
மேலும் காந்தியடிகள் குறிப்பிடும்போது
எந்தக் கல்வியின் இறுதிநோக்கமும் தொண்டாகவே இருக்க
வேண்டும். இப்படியொரு வாய்ப்பு ஒரு மாணவனுக்குக்
கிடைத்தால் அதனை அரிய வாய்ப்பாகவும் கருதவேண்டும்..
ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Teach him always to him to sublime faith himself and faith in mankind.
Teach his never put a price tag on his heart and soul
தன்மீது தன்னம்பிக்கையும் இந்த மனிதகுலத்தின் மீது மாறாத அன்பு செலுத்துபவனாகவும் தன்னுடைய இதயம் மற்றும் ஆன்மாவின் மேல்
விலைப்பட்டியல் ஒட்டாத கல்வியையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் என வேண்டுகிறார்.
இந்துஸ்தானத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்ட ஔரங்கசீப் தனக்குப் பள்ளிப்பருவத்தில் ஆசிரியராக இருந்த முல்லா சாகேப் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத் தத்துவங்களை
நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனத்தை நிதானத்தில்
வைக்கப் பயன்படும். அரிய தத்துவங்களைப் போதித்திருந்தால்
ஒருவேளை அதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு செல்வத்தில்
திளைத்துக்கிடந்தாலும சரி.. துரதிர்ஷ்டத்தில் தாக்கப்பட்டு
தோல்வியைத் தழுவினாலும் சரி இரண்டுக்கும் மயங்காத
மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள்
போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன?
எப்படி இந்த பூமி இயங்குகிறது என்பதையெல்லாம் உணர்ந்து
கொள்ள எனக்கு இந்தக் கல்வியைப் போதித்திருந்தால்
உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டனவாக இருந்திருப்பேன்
என்று எழுதுகிறான்.
எனவே ஆசிரியரின் நேர்மை. ஒழுக்கம். தரம் . தன்மை. திறமை இவற்றைப் பொறுத்தே மாணவர் சமுதாயமும் உருவாகிறது. எனவே எப்படியாயினும் இனிமேலாவது ஆசிரியர் தெரிவில் முழுக்க முழுக்கத் தகுதி திறமையை மட்டும் கொண்டவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் எதிர்காலச் சமுதாயம் பண்படும் தரமான மாணவர்களும் உருவாவார்கள். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் எவ்வித ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் முழுக்க கல்வித்தகுதியையும் அதற்கான திறனையும் கொண்டவர்களை மட்டுமே தெரிவு செய்தால் மிகுந்த நலமுடைய சமுதாயம் உருவாகும்.
இப்படியில்லாத சூழமைவில் நல்லாசிரியர்கள் இப்படித்தான் வன்முறைக்குப் பலியாகிப்போவார்கள். மாணவர்களும் நொடியில் ஏற்படும் மனச் சலனத்தில் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து சிதைந்துபோவார்கள். கல்வி. மருத்துவம் இரணடும் உயிர்காப்பவை. இவற்றில் எவ்வித எதிரான நடவடிக்கைகளுக்கும் இடம் தந்துவிடக்கூடாது. அப்படி கடுகளவு ஓட்டை விழுந்தாலும் அது பெரிய பிளவாகி எல்லாவற்றையும் விழுங்கிவிடும்.
கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.
ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.