குறுங்கதை 17
சத்தியங்கள்
ஹரணி
இரவு எட்டுமணிக்கு கனகத்தின் மகன் வேலு பேசினான்
கோபியிடம்.
மாமா… நம்ப வள்ளிக்கு ரொம்ப முடியாம ஆசுபத்திரிக்குக்
கொண்டு வந்திருக்காங்க.. மூச்சுத் திணறலாம். டாக்டர்கள் முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்..
அதிர்ச்சியாக இருந்தது.
வள்ளி கோபியின் அண்ணன் மகள் (கோபியின்
சித்தப்பா பேத்தி) வாழ்க்கை முழுக்க வறுமை அனுபவித்தவள். அவளுக்குத் திருமணமான நிகழ்வு
அப்படியே மனத்தில் நிற்கிறது. அந்தத் தருணம் கோபி வெளியூர் போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில்
அவன் மனைவி போன் செய்தாள்.
என்ன சங்கரி?
ஏங்க நம்ப வள்ளிக்கு நாளைக்குக் கல்யாணம்.
அதான் தெரியுமே. நாளைக்கு நான் லீவு போட்டுட்டேன்.
அதுக்கில்லீங்க… என்று இழுத்தாள் சங்கரி.
தெளிவா சொல்லு. இழுக்காதே என்றான் கோபி.
இல்லங்க.. கட்டில் பீரோ மெத்தை வாங்கித்
தரேன்னு சொன்னவங்க கழுத்தறுத்துட்டாங்களாம்.. அந்த அக்கா வந்து அழுதுகிட்டிருக்காங்க..
எப்படியாச்சும் எம்பொண்ண கரையேத்திடுங்கன்னு.. என்றாள்.
தெளிவாகப் புரிந்துவிட்டது கோபிக்கு.
ஒருவகையில் அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தான். வள்ளியின் அப்பா டிரைவர். குடிகாரன்.
எல்லாம் செயலிழந்த நிலையில் வீட்டில் இருக்கிறான். வலிமையற்றவனிடம் வாதம் செய்வது பலனற்றது.
கோபி வந்து கடைத்தெருவிற்குப் போய் கட்டில்,பீரோ, மெத்தை எல்லாமும் வாங்கி வந்து கொடுத்தான்.
கைச்செலவுக்கு என்று வள்ளி அம்மா கேட்டதற்கு எட்டாயிரம் பணத்தையும் கொடுத்தான். என்
மகளாக இருந்தால் செய்யமாட்டேனா என்று..
நினைவுக்கு வந்ததை எண்ணி கலைத்தான்.
இப்போது உயிருக்குப் போராடுகிறாள் வள்ளி. காரணம் அவள் கணவன். ஆண் குழந்தை வேண்டுமென்று
இதுவரை 12 முறை கலைத்து தற்போது இரண்டு பெண்குழந்தைகள் ஒன்றரை வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.
வள்ளிக்கு முதல் பிரசவத்தின்போதிருந்தே அனிமிக். இரத்தச் சோகை. அடுத்தடுத்த குழந்தை
பெறுவது ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள்.
கிராமத்தில் வாக்கப்பட்டவள் வள்ளி. வறுமையும்
கூட. பலனற்றுபோனது மருத்துவர்களின் எச்சரிக்கைகள்.
மருத்துவமனைக்கு இரத்தம் தேவைப்படுகிறது
என்று வேலு ஏற்பாடு செய்திருந்தான்.
மாமா.. இப்ப இரத்தம் கேட்டாங்க ஏற்பாடு
பண்ணியிருக்கேன்.
யாரும்
கொரோனான்னு ரத்தம் குடுக்கப் பயப்படறாங்க.. ஆசுபத்திரிக்கே வர யோசிக்கிறாங்க..
எல்லாம் முடிந்துவிட்டது.
இரவு பத்துமணிக்கு பக்கத்துப் பெட்காரர்
போன் செய்ததாக வேலு சொன்னான். வள்ளி இறந்துப்போயிட்டா மாமா.. கொரோனா டெஸ்ட் பாத்துட்டுதான்
பாடியத் தருவாங்களாம். டெஸ்ட்க்காக அடுத்தநாள் காலை வரை காத்திருந்தார்கள். நெகடிவ்
என்று வந்து பாடியைத் தந்தார்கள். அதற்குள் வள்ளியின் அம்மா காவல் நிலையம் போய்விட்டாள்.
என் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. கணவன்தான் அடித்துக்கொண்டுவந்து என் வீட்டில்
விட்டுவிட்டுப்போனான். ஆகவே என் மகள் இறப்புக்கு அவன்தான் காரணம்.
காவல்நிலையத்தில் பஞ்சாயத்துபோனது. கடைசியில்
வள்ளியின் தாய் பிடிவாதமாக இருந்ததால் பாடி போஸ்ட்மார்ட்டம்போய் வந்தது.
கோபி, வேலு எல்லோரும் போனார்கள்.
தெருவில் கிடத்தியிருந்தார்கள். நாலைந்துபேர்கள்
மட்டுமே ஆண்களும் பெண்களுமாக இருந்தார்கள். தள்ளி தள்ளி நின்றார்கள்.
வள்ளியின் தாய் கோபியிடம் மாரில் அடித்துக்கொண்டு
அழுதாள். உங்க மவள பாத்திங்களா என்று…
இறந்துபோன மகளிடம் போய் பாருப்பா.. உன்ன பாக்க எல்லா சித்தப்பாவும் மாமாவும்
வந்திருக்காங்க.. என்று சொல்லி அழுதாள்.
எல்லாம் முடிந்து வேனில் ஏற்றிக்கொண்டு
சுடுகாடு போனார்கள்.
அன்று இரவு வேலுவின் அம்மா ஒரு செய்தி
சொன்னாள். வள்ளி இறந்துபோய்விட்டாள். ஆனால் அவள் உயிருடன் இருந்தபோது சம்பாதிக்க வக்கில்ல
என்று அவள் அப்பாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டாள். என்று. ஒருவேளை அதன் பலனோ
என்று சொல்லாமல் நினைக்க வைத்தது. எப்படியாயினும் சிறிய வயதில் கணவன்வராமல் பிள்ளைகள்
வந்து அம்மா வென்று சொல்லி அழாமல் ஒரு பிணம் அனாதைபோல வள்ளியின் உடல் சுடுகாட்டிற்குச்
சென்றதே ஊழ்வினைதான்.
குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு ஆண்மகன்
குடித்துவிட்டு உடல்நிலை கெட்டு இயங்கமுடியாத சூழலில் மனைவியும் மகளும் என்ன செய்வார்கள்.
கோபத்தைக் காட்டத்தானே செய்வார்கள். மாடிப்படியில் தள்ளிவிடுமளவுக்கு கொடுமைக்காரிகள்
அல்ல ஆனால் தொட்டுப் பேசியதில் தடுமாறியிருக்கலாம். எல்லாமும் வறுமையின் நாடகங்கள்.
இனி வழக்கு நடந்து எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் வள்ளியின் உறவுகள் அத்தனைபேர்
இருந்தும் தனித்தவளாய் அனாதைப்போல அவள் உடல் வண்டியில் சென்றது கோபிக்கு உறுத்தலாகவே
இருந்தது. அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தானே? இறைவனின் கணக்குகள் சிலவற்றுக்கு
நம்மால் தீர்வு காணமுடியாதுதான்.