Thursday, June 19, 2014

வாழ்க்கையின் சுவை....
                            வாழ்க்கையின் சுவை....

                   அலுவலக வேலை நிமித்தமாக நேற்றிரவு செம்மொழியில்
கோவை சென்று இன்று திரும்பிவந்தேன். திரும்பி வருகையில் பேருந்துப் பயணம்.  அதில் சில சுவைகள்.நிகழ்வு 1


                  எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறது. விதிக்கப்பட்ட வாழ்க்கையின் இன்பமும் துன்பமும்கூட அவரவரக்கானது.
இதை ஒவ்வொரு பயணத்தின்போதும் உணர்கிறேன். கூட்டங்கூட்டமாய்
பயணித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

                    பரபரப்பாக ஓடி வருவது.

                    ஒரு கையில் துர்க்கமுடியாத நிலையில் நாலைந்து பைகள்.
இன்னொரு கையில் குழந்தை.

                        ஏங்க இது.. சிங்காநல்லுர்ர் போவுமா?

                        கண்டக்டர் பதில்சொல்வது அவரின் மனநிலையை (மூட்)
பொறுத்தது. எப்படியாயினும் ம்... என்பதை ஒலிக்குறைவாகவேணும்
சொல்லிவிடுவார்.

                        இந்தாங்க நான் அடுத்த மார்க்கட் ஸ்டாப்பிங் இறங்கணும்..  பர்க்கி
சில்லறை கொடுங்க.. அப்புறம் ஒரு ஐந்நுர்றுக்கு சில்லறை கொடுங்க..

                          இதற்கு எதிர்விளைவு காட்டும் கண்டக்டரைப் பற்றித் துளியும்
கவலைப்படுவதில்லை.

                           என்னங்க சில்லறை இருக்கா ? இல்லியா?

                           பேருந்து போய்க்கொண்டிருக்கையில்

                           எல்லாருமா ஆயிரம் ஐந்நுர்றா கொடுத்தா என்ன பண்றது?
கண்டக்ருக்குன்னு தேடி எடுத்துட்டு வருவீங்க போலருக்கு..நான் என்ன
பேங்க் ஆபிசரா.. அப்படியொரு பொழப்பு போட்டிருந்தாக்கூட  அங்கயும்
சில்லறைதான் கொடுப்பேன் போலிருக்கு..

                           ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


         நிகழ்வு 2


                                ஐம்பது வயதைத்தாண்டியவர் அவர்.  சிங்கா நல்லுர்ரைவிட்டு
பேருந்து புறப்பட்டு பல்லடம் வந்து டிக்காக நிறுத்தியபோது நிறுத்தியிருந்த
பேருந்தில் ஏறி நிற்காமல் ஆடிகொண்டிருந்தார்.

                               நன்றாகக் குடித்திருந்தார்.

                               எங்க போறய்யா நீ? பல்லில் சிக்கிக்கொண்ட போண்டாவின்
துகள்களை சிறுகுச்சியால் குத்திக்கொண்டே கண்டக்டர்,

                               காங்கயம் ஒண்ணு கொடுங்க ஐயா.. அத்தனை குடியிலும்
மரியாதையாகப் பேசினார்.

                               இடமிருக்கே உக்காரேன்..

                               வேண்டாம். துர்ரமா பயணம்போறவங்க உக்காரட்டும்..
பொண்டு புள்ளவ வரும்.. ஆடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆட்டததிற்கும்
கல்யாண வீட்டில் வாசனை திரவியம் அடிப்பதுபோல போதை நெடி..
எல்லார் மூக்கின் முற்றத்திலும் நடனமாடியது,, யார் மீதாவது வாந்தி
எடுத்துடுவாரோ என்கிற பயம் வேறு எல்லார்க்கும் இருந்தது,

                               கண்டக்டர் டிக்கட் போட்டுவிட்டு வந்தார். அவரை
நிறுத்திவிட்டு ஆடிக்கொண்டிருப்பவர் கேட்டார்.

                                  ஐயா.. உங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ்?

                                  ஏன் அதக் கேட்டு என்ன பண்ணப்போறே? எனக்கு பிரமோஷன்கீது கொடுக்கப்போறியா?

                                   சொலலுங்கய்யா..

                                   பதினைந்து வருஷமாச்சு.. என்றார் கண்டக்ட்ர்.

                                  எனக்கு முப்பத்தியேழு வருஷம் சர்வீஸ். குடிச்சுக்கிட்டே
யிருக்கேன். ஆனா ஒரு தடவகூட யார் மேலயும் வாந்தி எடுத்தது இல்ல,
அப்படித்தான் நான்.. அதானய்யா உங்களுக்கு டவுட்டு,, நானும் கிராம
சிப்பந்தியா இருந்தவதான் தாசில்தாரு ஆபிசுலே.. ஆனா வேலையில
கரக்ட் இருப்பேன். வேல முடிஞ்சவுடனே கடைதான்,, குடிதான்,,

                                   டிரைவர் உட்பட எல்லோரும் சிரித்துவிட்டோம்.

                                   காங்கேயம் வரும் வரை ஆடிக்கொண்டிருந்தார். ஆடியபடியே இறங்கிப்போனார். ஆனால் வாந்தி எடுக்கவில்லை.


நிகழ்வு 3


                     பேருந்தில் வரும்போது கரூர் தாண்டி சாலையோரம் ஆக்ரமிப்பு செய்திருந்தமையால் இடதுபக்கமிருந்த வீடுகள் ஒவ்வொன்றின் முகப்பும் இடிக்கப்பட்டிருந்தன.  அவற்றின் சுவர்களில் ஒரே விளம்பரம். கிருஷ்ணா
அரிசிக்கடை.  அவற்றை எழுதிய ஓவியரின் ரசனையாக இருக்கவேண்டும்
என்று நினைக்கிறேன்.  கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள கி என்ற எழுத்தின்
தலையில் இரண்டு மயில் இறகுகளை வரைந்திருந்தார். கிருஷ்ணா என்ற சொல்லிற்கு அடிக்கோடிட்டதுபோல ஒரு புல்லாங்குழலையும் வரைந்திருந்தார்.


நிகழ்வு 3


                             நாட்டாமை போல மீசை வைத்திருந்தார். தலையில் கறுப்பு மை பூசியிருந்தார். மீசை முழுக்க வெள்ளை. இடது கையில் ஒரு தாளை பொட்டலம் போல சுருட்டியிருந்தார். வலது கையில் ஒரு சில்வர் துர்க்கு.
சூடான பட்டாணி சுண்டல்.. சூடா இருக்கு பட்டாணி சுண்டல்.. தரட்டுமா சார்.. தரட்டுமா ஐயா.. தரட்டுமா அம்மா சூடான பட்டாணி சுண்டல்.. என்றபடி
கத்திக்கொண்டே போக. வாசனை துர்க்கைத் தாண்டி பேருந்தில் தவழ்ந்தது.
நாலைந்துபேர்கள் வாங்கினார்கள். திறந்து பொட்டலமாக மடித்துக்கொடுக்க பட்டாணி சுண்டல் வாசனை வாங்கித் தின்னவேண்டும் என்று துர்ண்டியது.
துர்ண்டலில் சிலர் வாங்கினார்கள்.

                         அப்போது பேருந்து சிங்காநல்லுர்ரைவிட்டுப் புறப்படவில்லை.

                         சற்றுநேரத்தில் அந்த சுண்டல்காரர் இறங்கி எதிரில் இருந்து ஆவின் பால் கடைக்குப் போய் சுண்டல் துர்க்கை வைத்துவிட்டு நெற்றியின் வியர்வையைத் துடைத்தார் (இதுபற்றி சற்று விளக்கமாக கீழே தருகிறேன்)
பின்  கடையில் இருந்த சம்சாக்களில் இரண்டை எடுத்து,,

                             டீ சூடா போடுப்பா,, என்னா பசி என்றபடி சம்சாக்களைத்
தின்ன ஆரம்பித்தார்.

                            தின்று முடித்ததும் கடையிலிருந்த துண்டு பேப்பரை எடுத்து
கையை. வாயைத்துடைத்துக்கொண்டார்.

                                டீயை சாப்பிட்டு முடித்தார்.

                               எல்லாம் முடிந்ததும் தன் இடது கைப்பக்கம் வைத்திருந்த அந்த
(அவரின் சுண்டல் மடிக்கும் தாள் அது) தாளை எடுத்துப் பொட்டலம் போல
மடித்துக்கொண்டு

                             பசிக்கு சூடான பட்டாணி சுண்டல்,,, என்று குரலெழுப்பியபடியே
அடுத்த பேருந்திற்குள் ஏறினார்.

                         
                               அவரவர்க்கான தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும  தீர்வுகளுக்கும் எனப் பயணம் மேற்கொண்டாலும் சற்று
அதிலிருந்து விலகி சூழலைக் கவனித்தால் வாழ்க்கை சுவையானதுதான்,


                              0000000000000000000                     சுண்டல்காரர் நெற்றி வியர்வையைத் துடைத்தார் என்று எழுதினேன் அல்லவா?

                       ஒரு படைபபாளியாக இருப்பதால்  அதை கதையில் சொன்னால் எப்படி கற்பனை செய்து எழுதுவேன் என்று யோசித்தேன்,

                         உங்களுக்கும் அந்தக் கற்பனை பகிர்வு,


                          கற்பனை   1

     
                           ஒரு கேள்விக்குறியை படுக்க வைத்ததுபோல் வலதுகையின்
நான்குவிரல்களை மடக்கி நெற்றியின் வியர்வையை விரல்களால்
விழுங்கி பின் அப்படியே தரையில் துப்பினார் அந்த சுண்டல்காரர்.

                        கற்பனை 2


                         மழைக்காலத்தில் இயங்கும் வைப்பரைப்போல விரல்களை
வைப்பர்களாக்கி நெற்றிவியர்வையைத் துடைத்து உதறினார். கலலடிபட்ட
மரத்திலிருந்து பயந்து பறக்கும் பறவைகளைப்போல அந்த வியர்வைத்
துளிகள் நாலாபக்கமும் சிதறின சுண்டல்காரரின் விரல்களிலிருந்து விடுபட்டு,

                          கற்பனை 3


                            தலையில எழுதிய எழுத்தின் மையொழுகுவதைப்போல
சுண்டலகாரரின் நெற்றியில் வியர்வை ஒழுகியது. வலதுகையால் துடைத்து
எரிச்சலோடு எறிந்துவிட்டு டீயை போடுப்பா என்றபடி அதே கையால
சம்சாவை எடுத்து வாயில் வைத்து பசியின் வேகத்தைக் காண்பிக்க ஆரம்
பித்தார்,

                                சந்திப்போம்.