சமூக
அக்கறையாளர்களின் சரித்திர விழா....
பிறப்பது சம்பவமாக இருக்கலாம்
ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல்
அப்படியே வாழ்ந்த சரித்திரமாகப் பிரிந்திருப்பவர் நம்முடைய நேசத்திற்குரிய மேதகு
அப்துல் கலாம் அவர்கள்.
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது
என்கிற ஒன்றைத்தான் தங்களின் வாழ்நாள் முழுக்கக் கொள்கையாகப் பின்பற்றி வாழ்ந்து
மறைந்தவர்கள் பலபேர். அவர்கள் வரலாற்றின் திசைக்குக் கூடக் கருதப்படுவதில்லை.
ஆனால் அதைத்தான் தங்களின் சரித்திரமாக எண்ணிக்கொண்டு வாழ்ந்த அறியாமை சாகும்வரை
அறியப்படவில்லை.
ஆகவே நல்லதொரு சமூகத்தை
வடிவமைக்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மனிதனிடத்தும் தானாக உருவாகவேண்டும். இத்தகைய
சமூகத்தை வடிவமைப்பதில் பல்வேறு காரணிகள் பங்கெடுக்கின்றன. அவற்றில் ஒரு காரணிதான்
படைப்புலகம். அதனைப் படைக்கின்ற படைப்பாளன். சமூகத்தைச் சாதாரண மனிதன் பார்ப்பதில்
இருந்து விலகி அக்கறையோடும் கவலையோடும் கவனத்தோடும் காண்கிறவன் படைப்பாளன். எனவே
சமூகத்தின் தீமை கண்டு அவன் கவலையுறுகிறான். மனம் கொந்தளிக்கிறான். தீர்வுக்கு
அவன் மனம் அலைபாய்கிறது. பரபரக்கிறது.
நன்மையுறும்போது பெருமகிழ்ச்சி கொள்கிறான் அது யாரால் இச்சமூகத்திற்கு
விளைந்திருந்தாலும்.
இதைத்தான் நம்
முன்னோடிகள் வாய்மொழியாக மக்களிடத்து எடுத்துச்சொல்லியும் ஒரு கட்டத்தில்
ஓலைச்சுவடிகளில் எழுதியும் நமக்கு வழங்கிவிட்டுப்போயிருக்கிறார்கள்.
அவை நமக்குக் கிடைத்த
புதையல்கள்
வாழ்வுப் பேறுகள்
வரங்கள்
அரு மருந்துகள்
அமிழ்தங்கள்
இன்னும் பல பெயர்களில் விருப்பம்போல் இவற்றை
அழைத்துக்கொள்ளலாம்.
ஓலைச்சுவடியிலிருந்து ஏட்டுச்சுவடிக்கும் பின்னர் பல்வேறு வண்ணங்களில்
நூல்களாகவும் அவை மாற்றம்பெற்று அவற்றின் உச்சமாகத்தான் இன்று கணிப்பொறியின்
இணையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
ஒரு படைப்பாளன் அவனைப் படைப்பாளன் என்று உணர்கின்ற தருணத்தில்
உணர்வுப்பூர்வமாக கிளர்ந்து ஒன்றை படைக்கும்போது அதில் அவனின் திறனும்
சுயம்சார்பும் யாருமறியாத ஒன்றைத் தானறிந்ததுபோலவும் வெளிப்படுத்துகிறான். அது பலரின்
கவனத்திற்கு ஆளாகி அது தனிமனிதன் சார்ந்தது அல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கே
பொருத்தமானது என்று உணர்த்தப்படும் தருணத்தில் தன்னிலையைச் சரியாகப் படைப்பாளன்
உணர்ந்துகொள்கிற சூழலில் அவன் இச்சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடப்பாடு
புரிகிறது. மனம் மாற்றமடைகிறது. சமூகத்தினைக்
காக்கும் பொறுப்பிற்குத் தன்னைத்தானே ஆளாக்கிக் கொள்கிறான். அதற்கான பல்வேறு
வழிகளை அவன் மனம் அசைபோடுகிறது திறனாகத் திட்டமிடுகிறது. அவற்றைப்
பக்குவப்படுத்தியபின்னர் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறான். அது குறிப்பிட்ட சமூகப்
பயனை நோக்கிய பயணத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறது.
இத்தன்மையைத்தான் வலைப்பக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஒவ்வொரு சிறிய பதிவும் மிகப்பெரும் சிந்தனையின் இன்னொரு வாசலைத் திறந்துவைக்கிறது.
அது உலகின் எங்கேனும் சிறு மூலையில் இருக்கும் ஒருவனின் அவசரத் தேவையாக, நெடுநாள்
தீர்வுக்காகக் காத்திருக்கும் தேவையின் நிறைவையும் பூர்த்திசெய்கிறது. எனவே நல்ல
சமூகம் எனும் விருட்சத்தின் விளைவிற்கு உரமாக, காற்றாக, நீராக, சூழலாக
வலைப்பதிவுகள் அமைகின்றன. எனவே சமூகத்தின் மீதான அக்கறையுள்ள, பொறுப்புள்ள,
சத்தியச் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளவர்களே வலைப்பதிவுகளுக்குப்
படைப்பாளர்களாக நிற்கிறார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான்
வலைப்பதிவர்கள் சந்திப்பு நான்காவதாண்டாகக் களம் கண்டிருப்பது வரலாற்றின் மிக
முக்கிய நிகழ்வாக அமைகிறது எனலாம்.
இரண்டு
இத்தகைய எண்ணங்களைச் சுமந்துகொண்டிருப்பவர்கள்
சும்மா இருப்பதில்லை. இதனை மேலும் விரிவுபடுத்தி சமுகம் என்கிற ஒன்றின் வடிவமைப்பிற்கும் செயற்பாட்டிற்கு அதில்
இயங்குகின்ற எல்லா மனிதர்களுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்த்துவதற்கு
முனைகிறார்கள். அதன் விளைவாகத்தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு என்பது ஒவ்வொரு
ஆண்டும் அவசியம் என்பதை மெய்ப்பிக்க நான்காண்டுகளைக் கடந்து நிற்கிறார்கள். இதனைத்தான் புதுக்கோட்டையில் 11.10.15 அன்று
ஒருநாள் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.
இந்த வலைப்பதிவர்கள்
சந்திப்பு என்கிற மிகப்பெரும் நெடுந்தேரை அழகுற வடிவமைத்த சிற்பிகள்
1. கவிஞர் எழுத்தாளர்
நா.முத்துநிலவன், அவர்கள்
2. வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன், அவர்கள்
3. கவிஞர் தங்கம்
மூர்த்தி, அவர்கள்
இந்த மூவரின்
உருவாக்கத்தில் விளைந்த தேரின் வடமாகப் பின்னணியில் நின்றவர்கள் பலர்.
ஒவ்வொருவரும் தேரின் ஒப்பனையில், தேரின் அசைவில், தேரின் செயற்பாடுகளில் அங்கங்கே
நின்று வடம் இழுத்தார்கள். இதனைத் தரிசிக்க வந்தவர்கள் வலைப்பதிவர்கள். வடம்
இழுத்தவர்கள் ஒரு பூமாலையின் பூக்களைப்போல அணிவகுத்திருந்தார்கள்.
1. வரவேற்பில்
நின்றிருந்தவர்கள் அன்புடன் பெயரையும் வலைப்பக்கத்தின் பெயரையும் கேட்டு உரிய
எண்களைச் சொல்லி அதன்படி கைப்பை, வலைப்பதிவர் கையேடு,
குறிப்பேடு, அழகிய பேனா, உரிய அடையாள அட்டை என்று
இன்முகத்தோடு வழங்கி இருக்கையில் அமர கைகாட்டிய வழிகாட்டல் இதமாக
இருந்தது.
2. என் பெயர்
விடுபட்டுவிட்டது என்கிற விவரத்தை கரந்தை ஜெயக்குமார் அறிந்து அதனை கவிஞர்
கீதாவிடம் கூட, அவர் நீங்கள் அமருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்
என்று அத்தனை பரபரப்புக்குமிடையில்மறக்காமல் அமர்ந்திருக்க இருக்கை தேடிவந்து வழங்கிய பான்மை மிக இதமானது.
3. ஒவ்வொருவரையும் கவிஞர்
முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன், கவிஞர் தங்கம் மூர்த்தி புன்னகையுடன் வரவேற்று ஓரிரு சொற்களாவது பேசியே
நகர்ந்தார்கள். ஒவ்வொரு வலைப்பதிவரும்
அவரவருக்கு தெரிந்த வலைப்பதிவரை வரவேற்றுக்கொண்ட நிகழ்வு பெரிய உறவுக் கூட்டத்தில் இருக்கிற
பலத்தை அளித்தது.
4. அமர்ந்திருந்த
ஒவ்வொருவருக்கும் இடம் தேடி இளம் பெண்பிள்ளைகள் சுடுசுவைநீர்
தந்துபோனார்கள்.
5. வலைப்பதிவர் ஒவ்வொருவரும் உடனடியாக அடையாள
அட்டையில் தங்கள் பெயரை
எழுதிக்கொண்டு அமரத் தொடங்கிய சூழல் சமூக அக்கறையின்
பிரதிநிதித்துவத்தைப் பறைசாற்றியது.
மூன்று
வலைப்பதிவர் விழா
வலைப்பதிவர் ஒருவரின்
மகளின் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மென்மையான ஒரு மலரின் வாசம்போல இருந்த அவ்விளம்
குரல் மனதை வசியப்படுத்தியது.
தமிழ்மொழியின் ஒருபாடல்...
வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பக்கங்களின் நோக்கங்களைக் குறிப்பிடல்..
பின்னர் ஒரு சிறப்பு அழைப்பாளரின் பேச்சு
என்கிற வகையில் விழா நிகழ்வுகளைத் திட்டமிட்டவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்.
அதனைத் தன்னுடைய கம்பீரமான குரலில் கவிஞர் தங்கம் மூர்த்தி தொகுத்தளித்தமை வெகு
சுவையாக இருந்தது.
விழாவிற்கு
மிகபொருத்தமாகத் தமிழ் விக்கிபீடியாவின் தலைவர்...ராஜ்குமார்.. தமிழ் இணையக்
கல்விக் கழகத்தின் துணை இயக்குநர் திருமிகு தமிழ்ப்பரிதி... அழகப்பா
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இளமைத்துள்ளல் பேராசிரியர் முனைவர் சுப்பையா..
புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி வழிகாட்டி
முதன்மைக் கல்வி அலுவலர் நா.வேல்முருகன் (இவரின் செயற்பாடுகளைத் தனியே
எழுதவேண்டும்.) என மேடை அழகுக்கு மேலும் அழகு சேர்த்தார்கள்.
விழா மேடையில் சிறப்பு
விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அழகாக அவர்களின் மார்பளவு புகைப்படம்
பதிக்கப்பட்ட அழகான நேர்த்தியான முறையில் செய்யப்பட்ட கேடயம் மற்றும் நூல் ஒன்றும்
வழங்கப்பட்டது. பாவேந்தரின் பாடல் விருந்திற்குப் பிறகு மின் இலக்கியப் போட்டியில்
வெற்றிபெற்றவர்களுக்குக் கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கான
பரிசுகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிய மாண்பு வலைப்பதிவர்களின் சமுகப்
பதிவுகளுக்கு வழங்கப்பட்ட தரச்சான்றிதழாக இலங்கியது. ஏராளமான கட்டுரைகள் ஒவ்வொரு
கட்டுரையும் இந்த சமூகத்தின் உயர் நன்மைக்கு அரு மருந்தாக எழுதப்பட்டிருந்தன.
பின்னர் இப்போட்டிகளுக்கான
நடுவர்களை அழைத்து அவர்களுக்கும் உரிய கௌரவம் கேடயத்துடன் வழங்கப்பட்டமை
சிறப்பானதாகும். கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் சுற்றுச்சூழல் கட்டுரை வகைக்கு
என்னை நடுவராக இருக்கும் வாய்ப்பு வழங்கியமை எனக்குக் கிடைத்த பேறாக எண்ணி
மகிழ்ச்சி திளைக்க இயங்கினேன்.
சிறப்பு விருந்தினர்கள்
ஒவ்வொருவரும் தங்களின் பேச்சை பேச்சாகத் தராமல் அத்தனையையும் ஒரு சிறந்த நூலாகத்
தந்ததுபோலப் பேசியமை தரமான அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்சிப்படுத்தியது.
1. அயல்நாட்டிலேயே எல்லாக் கல்வியையும்
கற்றிருந்தாலும் தாய்மொழி மேன்மைக்கே என்னை
அர்ப்பணிப்பேன் என்று எல்லோரும் எழுத வாருங்கள் என்று
விக்கிபீடியாவின் தலைவர் ராஜ்குமாரின் கருத்துரை கரும்புத் தின்ன கூலி
கிடைத்ததுபோல. மதிப்புறு பயனுறு பேச்சு.
2. தமிழின் ஆற்றலைப்
புயலாகக் காட்சிப்படுத்தியவர் தமிழ்ப்பரிதி அவர்கள். தாய்மொழியின்
மேன்மையை உணர்த்திய பேச்சு.
3. முதன்மைக் கல்வி
அலுவலர் நா.அருள்முருகனின் செயற்பாடுகளை ஏற்கெனவே கரந்தை
ஜெயக்குமார் வலைப்பதிவில் வாசித்தவன். ஏதேனும் ஒரு பயனை முன்னிறுத்தியே
அவரின் பேச்சு அமைந்தது.
4.
படித்தது ஆங்கில இலக்கியம். தோற்றம் இளைஞனின் தோற்றம். அழகான கண்ணாடியணிந்து
அவர்பேசிய தமிழ் வியப்பின் தேசத்தை வரைந்தது
மனத்தினுள். திக்காத, திணறாத, எங்கும் வேறு சொற்கள் பயிலாத,
தமிழின் மணத்தைக் கடைபரப்பிய மாண்பமை துணைவேந்தர்
சுப்பையாவின் பேச்சு ஒரு நல்ல இலக்கியப் பாடத்தைக் கற்ற அனுபவத்தைத் தந்தது.
இளங்காலைப் பொழுதில் தென்றல் மிதந்துவர..
மரங்களெல்லாம் அசைந்து நிற்க, பறவைகள் பாடியபடியும் பறந்தபடியும் இருக்க
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதிக்கரையின் மீதமர்ந்திருப்பதுபோன்ற உணர்வுடன்
வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது.
மதிய உணவு அறுசுவை. அத்தனையும்
மணந்த்து. போதும் போதும் என்று மனது உரைக்க
வயிறு நிறைந்தது. சாப்பிடச்
செல்வோரை தன்னுடைய வழக்கமான சுவையான நகைச்சுவையால் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்
பசியேற்றியமை பாந்தமாக இருந்தது.
ஒரு பெண்மணி என்னருகில்
வந்து என்னங்க ஐயா வேண்டும் என்றார். ரசம்
வேண்டும் என்றேன். எடுத்துவரப் போனார். உடனே ஜெயக்குமார் சொன்னார் ஐயா அவங்க
தொடக்கக் கல்வி அலுவலர் என்று. வியந்துபோனேன்.
மண்டபம் முழுக்க இப்படி அதிகாரத்தில் இருப்பவர்கள் அன்பின் சொற்களை
வழங்கிக்கொண்டிருந்தார்கள் சூடான சுவையான உணவோடு. கவிஞர் நா.முத்துநிலவனின்
அன்புதேசத்துப் பிரஜைகள் இவர்கள் என்று மனம் அறுதியிட்டுக் கூறியது.
விழாவின் முத்தாய்ப்பாக உலகெங்கும்
தேசாந்திரியாகச் சுற்றும் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் வருகையும் பேச்சும்.
நான் உங்களில் ஒருவன் என்கிற போக்கில் அலட்டல் இல்லாத அருமையான பேச்சு. கம்பனின்
கட்டுத்தறிக்குக் கட்டுப்பட்ட இராமவேழத்தைப்போல எஸ்ராவின் பேச்சுக்கு எல்லோரும்
கட்டுப்பட்டிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலை அவர் அழகான பதிவாகத் தந்துக்கொண்டிருந்தார்.
மனத்தில் அதனைப் பதிந்துகொண்டிருந்தோம்.
நாட்டுப்பண்ணுடன் விழா
இனிது முடிந்தது.
நான்கு
நிகழ்வின் சிறப்புக்
காட்சிகள்..
1. விழாவிற்காகத் தனியொரு
சிறுபேருந்து ஒன்றை எடுத்து.. இனிமைநிறை வயிறுநிறை இட்லியும்
சட்னியும் தந்து மனத்தை நிறைத்த கரந்தை ஜெயக்குமார் குடும்பத்தாரின்
அன்பு விருந்தோம்பல்.
2. திருமண அரங்கமே பல்வேறு
பதிவர் பறவைகளின் சிறகசைப்பில் சலசலத்திருக்க
அவற்றையெல்லாம் ஒரு தந்தையின் கண் பார்வையோடு எல்லாவற்றையும் ஏற்பாடு
செய்து எதனையும் வெளிக்காட்டாது ஒரு ஓரமாய் நின்று மகிழ்வோடு
ரசித்துக்கொண்டிருந்த கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்.
3. வலைப்பதிவர் சந்திப்பு,
அதற்கான பதிவு, அறிவிப்பு, போட்டிகள்,அதில் கலந்துகொள்வது
தொடர்பான விவரங்கள், நடுவர்களுக்கு வர்கள் எளிமைப்படுத்தி
வழங்கிய விவரங்கள் என எல்லாவற்றையும் கடந்த நான்கைந்து
மாதங்களாகச் செய்து நின்று எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல
அமைதியாய் இயங்கிய வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்.
4. வலைப்பதிவர்கள் சிலரின்
கவிதைகளை ஓவியப்படுத்தியிருந்தமை. சில கவிதைகளில்
எழுத்துப்பிழைகள் நிறைந்திருந்தன.
5. வலைப்பதிவர்கள் தங்களின்
அறிமுகத்திற்குப் பின் மேடைவிட்டு இறங்கும்போது அவர்களுக்கு
வழங்கிய புத்தகத்தை வழங்கிய கவிஞரின் மனது.
6. கரந்தை ஜெயக்குமார்
தன்னுடைய வித்தகர்கள் நூலை வெளியிட எனக்கு வழங்கிய வாய்ப்பு.
7. மனதுக்குப் பிடித்தமான
ஜிஎம்பி ஐயா.. அம்மா... செல்லப்பா ஐயா.. திண்டுக்கல் தனபாலன்...
நந்தலாலா இதழின் ஆசிரியர் வைகறை என் இனிய சகோதரன்
தி.நெடுஞ்செழியன்.. திரு இரா. மாதவன்.. திரு துரை மணிகண்டன்.. திரு அண்டனூர்
சுரா.. மனதிற்கினிய கவிஞர் அம்சப்பிரியா..
இளவல் கவிஞர் பூபாலன்.. 74 வயது கர்னல் கணேசன்.. அன்புச்
சகோதரி கவிஞர் கீதா.. கரந்தை சரவணன் தலைமையாசிரியர் (என்
மகனுக்கும் ஆசிரியர்).. இவர்களுடனான சந்திப்பு இனிமையானது.
8. நிகழ்வின் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இசையை
இசைத்த பான்மை. மனத்தை நெகிழவும்
சுவைக்கவும் வைத்தது
9. அறுபது வயதைக்கடந்த பதிவர்கள் அதிகம் வந்தமை
ஆச்சர்யம். நாம் இன்னும்
இயங்கவேண்டிய உந்துதலையளித்த ஒன்றாகும்.
10. என்னுடைய பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களின்
வருகை.சந்திப்பு ஏற்படுத்திய உவகை.
ஐந்து
பல வேடிக்கை மனிதரைப் போல
நான்
வீழ்வேனென்று
நினைத்தாயோ...
-
மகாகவி
பாரதியார்..
உடம்பு மயானத்திற்கு
விளக்கேற்றுகிறது
நாம்
உயிரோடிருக்கும்போது எத்தனையோ
ஒளிவிளக்குகளை உலகில்
ஏற்றவேண்டும்.
-
பேரா.கு.வெ.பா.