Sunday, June 17, 2012

வாசிப்பில்...


                   எழுதுவதைவிட பல சமயங்களில் வாசிப்பது சுகமாக உள்ளது. சமீபத்தில் பின்வரும் மூன்று புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன.

                       1.  குணசேகரன் - இல்லாமல் இருத்தல் (சிறுகதைகள்)
                       2, செல்வகுமரன் - பூவரசம் பூ மஞ்சளிலிருந்து சிவப்பாக
                                                                                                      (கவிதைகள்)
                       3, பத்மா -  மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் (கவிதைகள்)


     
                 முனைவர் அ, குணசேகரன் அவர்கள் குடந்தை அரசுக் கலைக்கல்லுர்ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் என்பதற்கு முன்னதாக அவர் நல்ல படைப்பாளி. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக முற்போக்கு சிந்தனையுடன் மனித வாழ்வியலைப் படம்பிடிப்பவர். கவிதைத்தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்பும் என் அவரது படைப்புக்கள் பரிமாணம் கொண்டவை. நெடுஙகாலமாக எழுதிவரும் அவரின் சிறுகதைத் தொகுதி இப்போதுதான் வருகிறது. தஞ்சை மண் சார்ந்தவர். தஞ்சை மண் சார்ந்து தி,ஜானகிராமன்.. பாலகுமாரன்...சி.எம்.முத்து.. சோலை சுந்தரபெருமாள்.. என மண் வாசம் மிக்க படைப்பாளர்களுக்கிடையே தனக்கென்று ஒரு தனித்துவ அடையாளத்துடன் தனதான வாழ்வியலை மண்வாசமுடன் குணசேகரன் அவர்கள் இத்தொகுப்பில் அறியத் தருகிறார். மிகக் குறைந்த கதைகளே கொண்டிருக்கும தொகுப்பு. மொத்தம் ஒன்பது கதைகள்தான். ஆனால் இந்த ஒன்பதுகதைகளிலும் ஒரு இல்லாமல் இருத்தல் எனும் ஞானம் ஒளிவிடக் காணமுடிகிறது.

                  எளிய நடை... ஆழமான சிந்தனை... இறுக்கமான மரபின் வெளிச்சம்.. எதனோடும் சமரசம் செய்துகொள்ளாத எழுத்து,, பொருண்மையின் வீச்சத்தில் வெளிப்படும் துணிச்சல்..உரையாடல்களில் வெளிப்படும் கோபம்..ஆதங்கம்.. ஏக்கம்.. தன்மான உணர்ச்சி.. தன்னம்பிக்கை இப்படி பலமுனைப்புக்களில் தனது மண்ணையும் தன்னுடைய மனிதர்களையும் அவர்களின் அவலங்களையும் விடியலின் விழிப்புணர்வையும் ஒவ்வொரு கதையிலும் பதிவு செயது காத்திருக்கிறார். எல்லாக் கதைகளும் நம்மோடு இருக்கின்றன. நம்மோடு இணக்கமாய் பேசுகின்றன. நம்மோடு அவற்றின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கின்றன. வாருங்கள் என் உணர்வின் வெப்பத்தை உணருங்கள் என்று நமக்கு சூடேற்றுகின்றன. அழவேண்டிய இடத்தில அழ வைக்கின்றன.  துர்ண்டவேண்டிய சூழலில் அவை துர்ண்டுகின்றன.

                 நமக்கும் இத்தகைய இன்னல்களும் துயரங்களும் இருக்கின்றன. நாமும் விடுபடத்தான் துடிக்கின்றோம். ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். இப்படி எதார்த்தமான மனோபாவத்தில் செறிவான கட்டுக்கோப்பில் குறைந்த மிகக் குறைந்த கதைகளைக் கொண்ட தொகுப்பு இல்லாமல் இருத்தல். தலைப்பே நம்மை யோசிக்கவும் மனம் கசியவும் வைத்துவிடுகின்றன, சமுகம என்கிற பொது அமைப்பில் மனிதனின் இருத்தல் என்பது பல்வகை வண்ணங்களைப் பூசிக்கிடக்கின்றன. ஒருவ்னின் வாழ்வு போல இன்னொருவன் வாழ்வு இருப்பதில்லை. அளவுக்கதிகமாக இருக்கிறது ஒரு வாழ்வு. அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து கிடக்கிறது இன்னொரு வாழ்வு. அவலங்களைப் பின்னி நெளிகிறது இன்னொரு வாழ்வு மூச்சுவிடத் திணறுவதைப்போல ஒரு வாழவு சிக்கல் அமைகிறது. ஒடுக்கப்பட்ட உள்ளங்களின் மனச் சிதைவுகள் உடல் சிதைவுகள் வாழ்வு சிதைவுகள் இவற்றையெல்லாம் அருகிருந்து கணடு மனம் கசிந்த ஒரு மனிதாபிமானமிக்க அதேசமயம் இவற்றுக்கெல்லாம் ஒரு விடுதலையை தன்மான உணர்வோடு வேண்டிய படைப்பாளியாகவும் தன்னை தனித்துவப் படுத்துகிறார் குணசேகரன்.

                    எல்லாவற்றிலும் இந்த சமுகத்தின் மாற்றத்திற்கான ஒரு விளைவை அது இருந்தும் இல்லாமல் இருப்பதைப் பல்வேறு கதைப் பொருண்மைகளில் கசிய காட்சியாக்குகிறார்.  கிராமப் புறங்களின் வாழ்வியல் அதனைச் சார்ந்து அமைந்திருப்பதையும் அதில் கிடைக்கும் பரிபூரண வாழ்வையும் கிராமத்திலிருந்து மகனையும் பேரக் குழந்தைகளையும் பார்க்கவரும் ஒரு தாய் கிராமத்தின் வாய்க்கால்களில் இருந்து பிடித்து வந்த நண்டுகள் மனதைக்கவருகின்றன. நண்டுக்ள் பிடிக்கும் கலை குறிததும் நண்டுகள் குறித்து ஆசிரியர் விவரிப்பது அப்படியே நம்மை கிராமத்தில் கிறங்கவைக்கிறது நண்டுபிடியாய். கிராமத்து வாழ்வியலை அழகாகப் படம்பிடிக்கிறது என்றாலும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் அறியாமை கள்ளங்கபடமற்ற வெள்ளந்தித்தனம் அங்கேயும் ஒரு மனிதன் தன்னை நம்பும் சக மனிதரகளை ஏமாற்றும் அயோக்கியத்தனம் என எல்லாவற்றையும் வலியோடும் வலுவோடும் பதிகிறார். நீங்கள் வாசித்து அதனை அனுபவிக்கவேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.

              கவிகுடில் பதிப்பகம். 20 சக்கரா நகர். மருத்துவர் மூர்த்தி சாலை. கும்பகோணம்-1. ஆசிரியருடன் பேச 9487031795

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

            கவிஞர் செல்வகுமரன் தந்திருக்கும் முதல் கவிதைத் தொகுப்பு பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிவப்பாக....காவ்யா வெளியீடாக வந்துள்ளது. சொந்த ஊர் நாகர்கோயில். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதுர்ரக் கல்வி இயக்ககத்தில் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறது.

           அடிப்படையில் முற்போக்குச் சிந்தனையும் ஈழமும் மனதில் கொண்டிருக்கும் நல்ல படைப்பாளி. புலம் பெயர் படைப்பாளிகளின் படைப்புக் குறித்து இவரது முதல் நுர்ல் வெளிவந்துள்ளது. அதற்குப் பின்னர் செறிவான தரமான கட்டுரைகளைப் பேசும் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் எனும் நுர்ல் இரண்டாவது. தற்போது இந்தக் கவிதைத் தொகுப்பு. இவரது வலைப்பூ பதியம்பிளாக்ஸபாட் என்பதாகும்.

               தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை வாசிக்கிறார். நேசிக்கிறார். அவர்களின் ஏக்கங்களையும் எண்ணங்களையும் தனதன்போடு இணைத்து கவிதைகளாக வெளிப்படுத்துகிறார். நிரம்பவும் தன்னை சிக்கல்படுத்திக்கொள்ளாத மொழிநடையில் தனது கவிதைகளைப் படைக்கிறார். நுட்பமான செய்திகளைப் பொருண்மையாக்குகிறார். சிலசமயம் அவை வாசிப்போருக்கு சாதாரணமாகத் தோன்றினாலும் அதன் நுட்பத்தை இவரது கவிதையின் மூலம் நம்மைக் கண்டறிய வைக்கிறார். கவிதைகள் முழுக்க நாகர்கோயில் மண் சார்ந்த சொற்கள் வாசமுடன் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. எதார்த்தமான நிகழ்வுகளையே வசப்படுத்துகிறார். நல்ல எளிமையான உவமைகள் மனதை இருத்திப்போடுகின்றன. சிக்கல் இல்லாமல் தனது கவிதைப் பாதையில் பயணிக்கிறர்ர் நம்மையும் இணக்கமாய் அழைத்துப்போகிறார்.

                    சில கவிதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

                     அம்மா வீடு வருவதாய் சொன்னாள்
                     பக்கத்து வீட்டுப் பாட்டி
                     கறியும் சோறுமாய் காத்திருந்தேன்
                     ஒட்டுத் திண்ணையில்
                     அன்று முழு அம்மாவாசை,,,
                     /////////////////////////////////////
                     நான் ஒரு குழந்தை வீதியில் பிறந்தேன்
                    எனது குழந்தை பதுங்கு குழியில் பிறந்தது
                    எனது பேரக்குழந்தை
                    முள் வேலிக் கம்பிக்களுக்கிடையில் பிறந்தது,,,
                    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
                    ........................................
                    நிலவொளியில் இடம்மாறும்
                    தென்னை பூவரச மரங்களின் நிழல்கள்
                    பின்னிரவு நேரத்தில் வீசும் ஊதல் காற்று
                    செண்டை மேளத்தின் உறுமல்
                     குடிமகன் நீட்டி ஊதிய சங்கின் ஓசையுமாய்
                    எல்லோரையும் தழுவிக்கொள்கிறது மரணம்
                     //////////////////////////////////////////////////////////////////////////////////////////////


            தனக்கென்று ஒரு தனித்த அடையாளத்துடன் கவிதைகள் மஞ்சளிலிருந்து சிவப்பாக மாறி மனதிலேறுகின்றன.

             காவ்யா.16/ 2 கிராஸ் டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம். சென்னை-124,
             கவிஞருடன் பேச.9442365680

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

     அடுத்த பகிர்வில்

                           பத்மாவின் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் கவிதைகள் குறித்து.

                   சந்திப்போம்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                     ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பணங்கள் கருப்புப்பணம் அல்ல என்று அறிவித்திருக்கிறார் இவர்.  கலாம் என்றால் கலகம் என்று முத்தமிழறிஞர் கூற இஸலாமியச் சமுகம் கொந்தளித்திருக்கிறார்கள்.வேறு சிலர்  கழகம் என்றால் சூதாடும் இடம் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். நாங்கள் அப்படிச் சொல்லலாமா என்று  பதிலுக்குக் கேட்டிருக்கிறார்கள்.,ஞானி என்கிற பொருள் உடைய பெயரை ஏன் இப்படி என்று, இருப்பினும் நாட்டின் முதல் குடிமகனாக இருந்தவரை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஏதேனும் புதுமையான விளக்கம் உடன்பிறப்புக்களுக்குக் கிடைக்கும்.  சங்க இலக்கியத்தில் கலாம் (கலாஅம்)என்பதற்கு போர் என்பது பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
                 
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////