Wednesday, May 1, 2013

தமிழின் அணையாவிளக்கு.....பாவேந்தம்...                      இந்தச் சிறு கட்டுரையை நான் 29.04.2013 அன்று எழுத எண்ணியிருந்தேன். மனதுக்குள் எழுதிவிட்டு பிறகு பதிவிடலாம் என்று இன்று  பதிவிடுகிறேன்.

                       மேற்குறிப்பிட்ட நாளில்தான் 1891 ஏப்ரல் 29 புதன் இரவு 10.15 மணிக்கு புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழுக்குப் புதையலாகக் கிடைத்தார்.

                       தமிழ் படிக்க வருவதற்கு முன்னரே அப்பாவால் திராவிட இயக்கமும் திராவிட இயக்கத் தலைவர்களும் அறிமுகமான சூழலில் பாவேந்தரையும் அவரது கவிதைகளுடன் அறிமுகம் செய்துவைத்தார். 10 வது படிக்கிறபோது பாரதியையும் பாவேந்தரையும் திருக்குறளையும் முதன்முதலாகப் பொருள் புரிந்தும் புரியாமலும் வாசித்து மறந்த காலக்கட்டமது.

                       அப்புறம் பாவேந்தரை ஆழமாக பல சான்றோர்களின் பேச்சைக் கேட்டபிறகு வாசிக்கவேண்டும் என்கிற அவசியத்தையும் கடமையையும் பொறுப்பையும் எனக்கு உணர்த்தியது.

                        அவருடைய பிறந்த நாளில் பாவேந்தர் பாரதிதாசனர் பற்றி இச்சிறு கட்டுரையை என்னுடைய கடமையாக எண்ணி உங்களின் சிலநிமிடச் சிந்தனைகளுக்குப் பரிசாக அளிக்கிறேன்.

                       தமிழ்த்தாயின் இரு கண்களாகப் பாரதியாரும் பாரதிதாசனும்.

                       பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை அவரது புதல்வர் மன்னர்மன்னன்  கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நுர்லாக எழுதியுள்ளார். பாவேந்தரின் 54 ஆண்டுகால வாழ்வைச் சொல்ல 20 ஆண்டுகள் உழைத்தேன் என்று அந்நுர்லில் குறிப்பிடுகிறார் மன்னர்மன்னன் அவர்கள்.

                     சுப்புரத்தினம்  என்ற  தனது பெயரை பாரதியாரைச் சந்தித்தபின் அவருடைய கவியாளுமையில் தன்னைப் பறிகொடுத்து பாரதிதாசனாக மாற்றிக்கொண்டார். இருவருடைய சந்திப்பு எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நிறைய ஆய்வு விவாதங்கள் உள்ளன.

              இருப்பினும் பாரதிதாசன் வாழ்வில் நடந்த இருபெரும் முக்கிய நிகழ்வுகளாக அவர் பாரதியாரைச் சந்தித்த நிகழ்வையும் தந்தை பெரியாரைச் சந்தித்ததையும் வரலாற்று நிகழ்வுகளாகக் குறிப்பிடுவார்கள். இந்நிகழ்வுகள் பாவேந்தர் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தியவை எனலாம்.

                    பாரதியைப் பின்பற்றி அரசியல் விடுதலை. சமுக ஏற்றத்தாழ்வு ஒழிதல் வேண்டிப் பின்னர் சமுகச் சீர்திருத்தம் என்பதை முதன்மையாகவும் கொண்டு பாடல்களை இயற்றினார்.அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பால் அவரது படைப்புலகம் அதன் வழியாகவே மையங்கொண்டது. தாய்மொழிக்கல்வி. பெண்ணுரிமை. முடப் பழக்கவழக்கம் ஒழிப்பு அனைவருக்கும் கல்வி அனைவரும் சமம் என அவரது கவிதைகள் அமைந்தன.

                சில முக்கிய நிகழ்வுகள்

                1929 குடிஅரசு ஏட்டில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதற்பாடல் எழுதியது.

                1933  இல் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திட்டது.

                 1935 ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டல்ம் தொடக்கம்.

                  1937 புரட்சிக்கவி வெளியீடு.

                  1938 பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி வெளியீடு.

                   1942 குடும்ப விளக்கு 1. 1944 குடும்ப விளக்கு 2 1948 குடும்ப விளக்கு 3
                   1950 குடும்ப விளக்கு 4. 5 வெளியிடு.
                    1955 புதுவை சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபென்று அவைத்தலைமை.
                    1959 பாரதிதாசன் நாடகங்கள்
                     1964 இல் ஏப்ரல் 21 இல் இயற்கை எய்துதல்..

                   எல்லா நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள அவரது கவிதைத் தொகுதி நுர்லில் ஆண்டுவாரியாக அச்சிடப்பெற்றுள்ளது. ஆர்வமும் தேடுதலும் கருதி சிலவற்றை மட்டும் சான்றாகக் கொடுத்துள்ளேன்.

                       பாரதிதாசனைத் தேடிப் படிக்கவேண்டும்
 
                      ஒருமுறை வாசிக்கவேண்டும்.

                      எனக்கு நிரம்பப் பிடித்தது குடும்ப விளக்கு என்னும் நுர்ல்.

                      என்றைக்கும் அழியாக குடும்பத்தின் நல்ல இல்லறத்தின் மேன்மையை உணர்த்துவது அது. உடலைத் தாண்டி மனதால் வாழ்வது என்கிற உன்னதத்தை வெளிப்படுத்துவது.

                       சுருக்கமாகச் சொன்னால் பாவேந்தர் ஒரு நீண்ட கடல்.

                      அதை நதியளவுகூட சுருக்கமுடியாது.

                       நான் சிறுஓடையாகக் காட்டியிருக்கிறேன் அவ்வளவே.

                       சான்றாகத் தமிழின் இனிமை எனும் அவரது கவிதை


                     கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
                     கழையிடை ஏறிய சாறும்
                     பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சப்
                     பாகிடை ஏறிய சுவையும்
                     நனிபசு பொழிந்திடும் பாலும் - தென்னை
                     நல்கிய குளிரிள நீரும்
                     இனியன என்பேன் எனினும் - தமிழை
                     என்னுயிர் என்பேன் கண்டீர்...

                     பொழியிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
                     புனலிடை வாய்க்கும் கலியும்
                     குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
                     கொட்டிடும் அமுதப் பண்ணும்
                     குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
                     கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
                      விழைகுவ னேனும் தமிழும் - நானும்
                     மெய்யாய் உடலுயிர் கண்டீர்....
   
                      பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
                      பக்கத் துறவின் முறையார்
                      தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
                      சந்ததம் மறவாத தந்தை
                      குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
                      கொட்டி வளர்க்கும் பிள்ளை
                      அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
                      அறிவினில் உரைதல் கண்டீர்...

                      நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
                      நிறையக் குளிர்வெண் ணிலவாம்
                      காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
                      கடல்மேல் எல்லாம் ஒளியாம்
                      மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
                      மலைகளின் இன்பக் காட்சி
                      மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
                      விந்தையை எழுதத் தரமோ?

                      செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
                      தேக்கிய கறியின் வகையும்
                      தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
                      தயிரோடு மிளகின் சாறும்
                      நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
                     நாவிலி னித்திடும் அப்பம்
                     உன்னை வளர்ப்பன தமிழா- உயிரை
                     உணர்வை வளர்ப்பது தமிழே...


                    பாவேந்தம் போற்றுவோம்.
                                  

             

           

                     

தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....5                   தொட்டி மீன்கள்......குறுந்தொடர்......5                        தொண்டை வறண்டுபோய் நெடுநேரம் தாகத்துடன் அலையும்போது குளிர்ந்த தண்ணீரும் மோரும் கிடைத்தால் அந்த சுகத்தை சொல்லால் விவரிக்கமுடியாது,,,

                         அப்படியே களைத்துப்போய் உட்கார எண்ணும்போது குளிர் ஊட்டப்பட்ட அறையில் அபப்டியே சரிந்து உறங்க வரும் உறக்கம் கோடிக்கணக்கான சுகங்கள்..

                             நெடுநேரம் கழிக்கமுடியாமல்  அப்புறம் தனியான இடத்தில் யாரும் இடையூறு செய்யாதநிலையில் சிறுநீர் கழிக்கும் நிம்மதிக்கு எதையும் தரலாம்..

                              இன்னும் பத்துநிமிடத்தில் ரயில்வே நிலையத்திற்குள் புகுந்து,, டிக்கெட் எடுக்கப்போய் அங்கேயிருக்கும் சற்று நீண்ட வரிசையில் படபடத்து.. டிக்கெட் வாங்கிக்கொண்டு அவசரஅவசரமாய் மூச்சிறைக்கப் போய் ரயில் பெட்டியில் ஏறும்போது நமக்கென்று காத்திருந்தது போல கிடைக்கும் இருக்கையில் உட்கார்ந்து மூச்சுவாங்கும்போது பேசமுடியாது,, ரயில் புறப்பட்டதும் வெளியிலிருந்து சன்னலின் வழியாக உள்ளே நுழைந்து முகத்தில் தடவிப்போகும் காற்றை அனுபவிக்கும்போது கிடைக்கும் நிதானம்...

                              இவை அவ்ஸ்தையோடு கூடிய அற்புத சுகங்கள்..

                              அனுபவிக்கும் அந்தத் தருணம்வரை மனசும் உடம்பும் படும்பாடு இருக்கிறதே...

                                 அப்படித்தான் பட்டார்கள்.

                                 எல்லாவற்றிற்கும் நிம்மதியாய் சாரதா மீண்டுவிட்டாள்.

                                 கண்களைத் திறந்து முதலில் பார்த்தது அந்த ஐசியு வார்டில் இருந்த ஒரு சிரிக்கும் குழந்தையின் புகைப்படத்தை.. அப்புறம் சற்று தள்ளியிருந்த அன்னை தெரசாவின் அமைதியான புன்னகை தவழும் முகத்தை.

                                 எப்படிம்மா இருக்கே?

                                 கேட்ட மருத்துவரின் முகத்தைப் பார்த்து மெல்ல உதடுகளைத் திறந்தாள் சாரதா,

                                   நன்றி டாக்டர்.. நல்லாயிருக்கேன். என் பிள்ளங்க எங்கே?
அவரு எங்கே?

                                  எல்லாரும் வெளியே காத்துக்கிட்டிருக்காங்கம்மா,,,

                                  கதவு திறந்ததும்தான் தாமதம்,, உள்ளே ஓடிவந்தார்கள்  சங்கரியும் கோபாலனும்,,

                                    இருவரையும் பார்த்து கலங்கினாள் சாரதா.

                                   இருவரும் சாரதாவைப் பார்த்து அழுதார்கள் வாய்விட்டு

                                   என்னம்மா... இது... நீயில்லாம நாங்க ஏதும்மா?  என்று சங்கரி அழுதாள்.

                                  நீ அவ்வளவு சீக்கிரம் போகமாட்டேடி... இந்தப் பாசக்காரப் பைத்தியக்காரனைக் குணப்படுத்தாமப் போகமாட்டே... நிறைய இந்தப் புள்ளங்களுக்குப் பாடுபடணும்டி... கடைசிவரைக்கும் இதுங்கள கரைசேத்த்துடடு ஓய்ஞ்சுப்போய் இருக்கறப்ப சட்னு ரெண்டுபேரும் ஒரே நாள்ல கிளம்பிடணும்...சரியா... இனிமே இதுமாதிரி பயமுறுத்தாதே... விளையாட்டுக்கூட பயமுறுத்தாதே... ரொம்பப் பயந்துட்டேண்டி... சாரதா கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அரற்றிக்கொண்டிருந்தார் கோபாலன்..

                                 சாரதாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்கள்.

                                வாசலில் அவளின் மற்ற இருபெண் பிள்ளைகளும் அம்மா... என்றபடி ஓடிவந்து சாரதாவைக் கட்டிக்கொண்டன.

                                 காட்டுக்குள் வழிதவறிய பெண் மான் ஒன்று சிங்கங்கள் துரத்த ஓடிஓடி... அப்புறம் தப்பியதோடு தன்னுடைய கூட்டத்தை வந்து சேர்ந்ததுபோல தன்னுடைய வீட்டிற்குள் நுழையும்போது உணர்ந்தாள் சாரதா.

                                     சங்கரி சாமி விளக்கை ஏத்து... என்றாள்.

                                     சங்கரி கொல்லைப்புறம் போய் முகம். கை. கால்கள் கழுவி வந்து விளக்கேற்றினாள்.

                                      சாரதா நான் குளிக்கணுங்க... என்றபடி கொல்லைப்புறம் போய் மெதுவாக சங்கரி உதவியுடன் குளித்துவிட்டு வந்தாள். நேராக சாமிப் படத்திற்கு முன்நின்று காமாட்சியம்மன் புகைப்படத்தைப் பார்த்து சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். பின் திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு வந்து அப்படியே தரையில் உட்கார்ந்து எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாள்.

                                     ரொம்ப படுத்திட்டேனா?

                                     பழைய சாரதாவாகியிருந்தாள் அந்த நிமிடம்..


                                      0000000


                                   லோகநாதன் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.

                                    சற்று நேரம் கழித்துக் கதவைத் திறந்தாள்.

                                     இவனைப் பார்த்ததும் எதுவும்  பேசவில்லை. உள்ளே போனாள். பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தான். அவளின் குழந்தை சற்று தள்ளி கூடத்தின் ஓரமாய் துர்ங்கிக்கொண்டிருந்தது.

                                     நாற்காலி எடுத்துப்போட்டாள்.

                                     நாற்காலியைத் தள்ளிவிட்டு  தரையில் உட்கார்ந்துகொண்டான். அவள் சற்று தள்ளி எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                     சட்டென்று அழ ஆரம்பித்தான்.

                                    அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

                                    அதிர்ந்துபோனாள். உடனே பதறியபடி அவனருகே  போய் உட்கார்ந்து என்னாச்சுய்யா? எதுக்கு இப்படி அழறே? என்றாள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு.

                                     இன்னும் கேவிகேவி அழ ஆரம்பித்தான். அழுகை அதிகரித்தது.

                                      எதுக்குய்யா அழறே...நான் உங்க வீட்டுக்கு வந்து கத்தினேன்னா,,, என் நிலைமையை நினைச்சுப் பர்த்தீங்களா?

                                        இல்லையென்று தலையாட்டினான்.

                                        அப்புறம் என்னன்னு சொல்லுய்யா.. எதுக்கு அழறே?  எதாச்சும் வேற பிரச்சினையா,,, என்னால பிரச்சினையா?... எனக்கும் என் புள்ளக்கிம் ஒரு வழிய சொல்லு நாங்க உன்னை விட்டுட்டுப் போயிடறோம்,, என்று உடன் அவளும் அழுதாள்.

                                         லோகநாதன் அழுகையை நிறுத்தினான்.

                                          இல்லே.. ஸ்வேதா...நான் எப்படி வாழணும்னு ஒரு கொள்கை வச்சிருந்தேன். அதுக்கான வழியிலே ஒழுங்காப் போயிட்டிருந்தேன். எதிர்பார்த்தது எப்பவும் நடக்காதும்பாங்க... ஆனா கிடைச்சத ஏத்துக்கணும்பாங்க.. ஆனா இது எதுவும் நடக்கல்லே,, எதிர்பார்த்ததுபோல நடக்கும்,, சரின்னு போன்னா,, அது வேற மாதிரி சகதிக்குள்ள தள்ளிவிட்டமாதிரி செஞ்சுட்டுப்போயிடும்... எங்கப்பா இறக்கற வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லே... அந்த ராத்திரிய என்னால மறக்கமுடியாது ஸ்வேதா..

                                           எந்த ராத்திரி?

                                           எங்கப்பா இறந்துபோறதுக்கு ஒரு வாரத்துக்கு முந்திய தினம். அன்னிக்கு சங்கடஉறர சதுர்த்தி.. எல்லோரும்  துர்ங்கிப் போயிருந்தாங்க...அப்பா மட்டும்தான் துர்ங்காம இருந்தார்...ரூமுக்குள்ளே போனேன். அப்பா ஒருமுறை என்னைப் பார்த்தார். அந்தப் பார்வை வழக்கமான பார்வையா இல்லே..

                                      அதற்குமேல் பேசமுடியாமல் லோகநாதன் அழுதான்.

                                     அவளுக்கும் என்னவோ போலிருந்து அவனது அழுகை. நாம் அவன் வீட்டுக்குப் போய் தெருவில் நின்று கத்தி அவமானப்படுததியது அவனை ரொம்பக் காயப்படுத்திவிட்டது போலும்..தன்னை நினைத்துப் பார்த்தாள். அருவருப்பாக இருந்தது. இப்படியொரு வாழ்க்கை தனக்குத் தேவையா என்று நினைத்தாள். பேசாமல் எதையாவது தின்றுவிட்டு இறந்துபோய்விடலாம் என்று தோணியது. ஆனாலும் அவளும் விரும்பி வரம் வாங்கி வந்த வாழ்க்கை இதுவல்ல.. எல்லாமே தலையெழுத்துதான்.. பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய பெண்ணைப் பார்த்தாள். அவளுக்காக வாழவேண்டிய கட்டாயத்தை எண்ணி மறுபடியும் அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. துடைததுக்கொண்டு அவன் தோளைத் தொட்டு உலுக்கி

                                   சொல்லுய்யா... மனச தளரவிடாதே,,, நானிருக்கேன்.. என்றாள்.

                                   அந்த இரவில் அவனுக்கும் அப்பாவுக்கும் நிகழ்ந்தஉரையாடல் மனக்கண் முன்னே ஒரு திரைப்படத்தில் உச்சக்கட்ட காட்சிபோல ஓடத்தொடங்கியது.

                                      வாப்பா லோகு உக்காரு...

                                      என்னப்பா துர்ங்கலியா? என்றான்.

                                      இல்லேப்பா. இனிமே நிரந்தர துர்க்கம்தான். அதுக்கான நேரம் வந்துடிச்சி. பதட்டப்படாதே சில உண்மைகளை நாம ஏத்துக்கத்தான் வேணும்.. என்னோட உடம்பு பத்தி எனக்குத் தெரியும்... ஆனாலும் அதுக்குள்ள உன்கிட்டே சில விஷயங்களைப் பேசிடலாம்னு நினைக்கிறேன்..

                                     சொல்லுங்கப்பா... என்றான்.

                                     இன்னிவரைக்கும் உன்மேல வச்ச பாசம் உண்மையானது. மாசு மருவற்றது. ரொம்ப ஒழுக்கமா உன்னை வளர்த்திருக்கேன். உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. உனக்கான வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்துக்க. உங்கம்மா அமைச்சுகொடுகக்ற வாழ்க்கை உனக்கு வேணாம்.. அவளோட நான் 56 வருஷம் குடும்பம் நடததியிருக்கேன். ஆரம்பத்துலே தெரியலே.. ஆனா இன்னிவரைக்கும் அவளோட வாழ்ற வாழ்க்கை ஒரு நடைப்பிணமான வாழ்க்கை. மனசொத்து வாழ்ந்த்து எலலாம் போச்சு. அவ நல்லவ இல்லை.

                                      என்னப்பா சொல்றீங்க? அதிர்ந்துபோனான்.

                                      ஆமாப்பா.. யார்கிட்டயாவது சொல்லாமப் போனா மனசு ஆறாது. காலம் முழுக்கப் பாவம் செஞ்சவன் சாவறப்பவாவது விமோசனம் தேடணும்.. பரிகாரம் செய்யணும்..உன்கிட்ட சொல்றதுகூட பரிகாரம்தான்..

                                      அதிர்ச்சியிலிருந்து மீளாமல அப்படியே அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான் லோகநாதன்.

                                      அடுத்த பெரிய குண்டை அவன்மேல் போட்டு வெடிக்கச் செய்தார்.

                                      ஆரம்பத்துலே தெரியலே... வருஷாவருஷம் திருவையாத்துலே நடக்கிற ஏழுர் திருவிழாவுக்கு போவா. அத்தனை பக்தியோட இரவெல்லாம் ஏழுரும் சுத்துவா. அதை பக்தின்னு ஏமாந்துபோனேன். பின்னாடிதான் தெரிஞ்சது அது பத்தி வேறு சுகத்துக்காக அலையறான்னு.. என்னால எதுவும் செய்யமுடியல்லே.. ஊருக்குத் தெரிஞ்சா மானம் மரியாத எல்லாம் போயிடும். அப்படிப்பட்ட குடும்பத்துலே பொறந்தவன் நான். அப்படி அவ நடந்துக்கிட்ட முறையிலேதான் நீ பொறந்தே.. அன்னிக்கு அவள தொடறத விட்டுட்டேன். ஊரு ஒப்புக்கு புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தோம்.. ஆனா அவ அதைப்பத்தி கவலையே படலே,,, உடம்புல வலு வத்துனப் பொறவுதான் விட்டா... ஆனாலும் உன்னை என் ரத்தமாக நினைச்சுதான் இத்தனை வயசு வரைக்கும் வளர்த்தேன்.. ரொம்ப ஒழுக்கமா வளர்ந்தே. என் சொத்துல முதல் பாகம் உனக்குத்தான். அதை நல்லபடியா வச்சுக்க. உனக்கான வாழ்க்கைய நீ தேடிக்க... உன்னை நம்பி வர்றவ நல்லவளா இருக்கணும்.. அவ உனககாகவும் நீ அவளுக்காகவும் வாழணும்.. அதான் வாழ்க்கை.. சாவும்போது நிம்மதியா சாவணும்... எதையும் காட்டிக்காதே.. எப்போதும்போல இரு...இது என் மேல சத்தியம்.. என்று சத்தியம் வாங்கினார்.

                                 லோகநாத்னுக்குள்  பொங்கிப் பொங்கி வழிந்தது ஆற்றாமை.

                                 நான் யாருக்கோ பிறந்தவனா?

                                 அடக்கடவுளே...

                                 எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டிருந்தேன். அப்படியே அபபாவைக் கட்டிக்கொண்டு அழுதான்.

                                அப்பா அவன் தலையை வருடிக்கொடுத்தார்.

                                அப்பா சொன்னார்..

                                 இதை சொல்லாம விட்டா உன்னோட அம்மா உன் வாழ்க்கையை சிதைச்சிடுவா.. எனக்குத்தெரியும்.. அவ உடம்பால தளர்ந்து போயிருக்கிறா.. ஆனா மனசால அவ அப்படியேதான் இருக்கா... மூர்க்கனும் முதலையும் கொண்டது விடான்னு படிச்சிருக்கேன்.. அவ அபபடித்தான்.. நீ உன்னப் பாத்துக்கோ.. நல்லா இரு...

                                     உள்ளம் முழுக்க துயரம் அடைக்க நெஞ்சடைத்து வாய் பேசமுடியாமல் கண்ணீர் வழிய வெளியே வந்தான்.

                                     அவனிடத்தில் பேசிய ஏழாம் நாள் இறந்துபோனார்.

                                    எல்லாக் காரியங்களையும் செய்தான்.

                                    காட்டுக்குப் போய்விட்டுவந்த அன்றைககு இரவு சொர்ணத் தாயி புலம்ப ஆரம்பித்தாள்.

                                    சந்தனப்பொட்டு வச்ச மகராசன்..
                                    சத்தமிலலாமப் போனாரே
                                    தவிச்சு நிக்கறேன்..
                                    தாமர இல தண்ணீரா நான்
                                    ஒட்டாம ஒடுங்கறேனே...
                                    வாழ்ந்தத நினைப்பேனா மனுஷன்
                                    வாசனையை நினைப்பேனா
                                    கள்ளிச் செடியாட்ட்ம் கனமான
                                   முள்ளாட்டம் வாழ்ந்தேனே,,,
                                     என் ராசா...தேசமெங்கும்
                                    என் கதைதான் ஓடுமய்யா...

    லோகநாதனுக்குப் பொங்கி வந்தது அவளைப் பார்க்க. ஒப்பாரியைக் கேட்டதும் உடைந்தான். எழுந்தான். போய் அவள் முகத்தை நோக்கி ஓர் உதைவிட்டான். அப்படியே அய்யய்யோ என்றபடி மல்லாக்க விழுந்தாள்.

                                     எல்லோரும் அதிர்ந்தார்கள்.

                                     வெறி புடிச்ச சிறுக்கி... நடிகக்றியா? வாய மூடு... கொன்னு புதைச்சிடுவேன்.. களவாணி முண்ட... மறுபடியும் அவள் இடுப்பில் மிதித்தான்.

                                       அலறி நடுங்கினாள் சொர்ணத்தாயி. அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

                                      அய்யய்யோ இதை கேக்க நாதியில்லியா? செத்தும் எனக்கு கொள்ளி வச்சிட்டானே.. பாவி...

                                       என்னப்பா இது லோகு?  விடு.. உன் அம்மா அவ.. எதுக்கு இப்படி முரட்டுத்தனமா நடந்துக்கறே...?  எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.

                                    இல்ல மாமா.. இவ திருட்டுச் சிறுக்கி மாமா.. எங்கப்பா சத்தியவான் மாமா.. அப்படிப்பட்ட மானஸதனுக்கு இவ சாபக்கேடு மாமா...

                                       சொர்ணத்தாயி ஒடுங்கினாள் சுவரோரம்.

                                        சட்டையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அதுவரை குடிக்காதவன் உள்ளே போனான். முட்ட முட்டக் குடித்தான். பழக்கமில்லையாதலால் தடுமாறினான். ஏதோ ஒரு வீட்டு வாசலுக்கு வரும்போது மேலும் நடக்கமுடியாமல் போதையேறி அப்படியே அந்த வீட்டு வாசலில் மயங்கி விழுந்தான்.

                                         நினைவு கலைந்தான். உன் வீட்டு வாசல்ல அப்ப விழுந்ததுதான் என்று மறுபடியும் அழுதான்.

                                       அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

                                       எப்படிப்பட்டவன்.அவனை அப்படியே இறுக அணைத்துக் கொண்டாள்.

                                       மறுபடியும் கேவினான்.

                                      கேவியபடியே  சொன்னான் அவளிடம்..

                                     நான் எப்படி வாழணும்னு நினைச்சேன் தெரியுமா,,,?  படிப்புல நான் கோல்ட் மெடல் வாங்கினவன்.. காலேஸ் பர்ஸ்ட் தெரியுமா-. எல்லாம் போயிடிச்சி... என்னோட அம்மா ஒழுக்கமிலலாதவ.. அவளால எப்படி எனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.. அதான் அப்பா வேணாம்னு சொல்லிட்டாரு... உண்மையிலே எவ்வளவு பெரிய மனுஷன் அவர்... யாருக்கோ பொற்ந்த என்னை கடைசிவரைக்கு மகனா வளர்த்து எனக்கும் வாரிசு உரிமை கொடுத்து..சொத்து கொடுத்து...அந்த சத்தியவானுக்கு புள்ளயா பொறக்க முடியாமப்போச்சே.. என்று மறுபடியும் புலம்பியடியே வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

                             அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப்போய் பார்த்தான். அவனை விட்டு தள்ளி நின்றாள். ஏனோ அவனை நெருங்க அவளுக்குப் பயமாக இருந்தது. அச்சப்பட்டாள் முதன்முறையாக அவனைப் பார்த்து. ஒருமுறை திரும்பிப் பாயில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய மகளையும் பார்த்துக்கொண்டாள். அவளுள் மேலும் அந்த பயம் படமெடுத்தாடியது.

                                                                                                    (மீன்கள் துள்ளும்)