Wednesday, July 8, 2020

குறுங்கதைகள் தொடர்... ஹரணி


கொரோனாக் காலம்…..
          தொடர்க்  குறுங்கதைகள்….  ஹரணி
000
கதை 1
                        அம்மா வயது 83

             அம்மாவிற்கு இப்போது 83 வயது நடக்கிறது. எந்த நோய்க் கோளாறுமில்லை அவளுக்கு. அப்பா பற்றிய நினைவுதான். இன்னமும் கண் பார்வை நன்றாகத் தெரிகிறது. கொல்லையைக் கூட்டிப் பெருக்குகிறாள். மரத்தில் நார்த்தங்காயும் எலுமிச்சைப் பழமும் பறித்து வைக்கிறாள். அக்கா வீட்டிற்கு என் வீட்டிற்கு என்று பிரித்து ஊறுகாய் போட்டு வைக்கிறாள்.
           அம்மா போட்ட ஊறுகாய் என்று நினைத்தாலே வாயில் எச்சில் ஊறுகிறது.
             தானாக சமைக்கிறாள். அடிக்கடி அவள் வைக்கும் குழம்புகள் வாழைக்காய் மொச்சைக்காய் நெத்திலி கருவாடு தேங்காய் துண்டுகள்  போட்டு வைக்கும் கருவாட்டுக்குழம்பு.
             கத்தரிக்காய் அப்படியே நான்காகப் பிளந்து ஒட்டு மாங்காய் துண்டுகள் போட்டு வைக்கும் பருப்புக்குழம்பு. தொட்டுக்கொள்ளப் புடலங்காய்ப் பொரியல் அல்லது முருங்கைக் கீரைப் பொரியல்.. இதுதான்.
              சாப்பிட வா என்பாள். வரவில்லை என்றாள் அதை சுடச்சுடத் தூக்கிக்கொண்டு வருவாள்.
              ஐந்து குழந்தைகளைப் பெற்று எல்லாருக்குமான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்து இப்போது வாழும் பூர்வீக வீட்டில் அவளும் தனிமையும்தான். அந்த வீடு அவளின் ராஜ்ஜியம். அதில் அவள்தான் இன்றைக்கும் ராணி. அப்பாவின் பென்ஷன்தான் ராஜ்ஜிய நிருவாகத்திற்கு.
              கொரோனா அதிகம் வயதானவர்களைப் பாதிக்கும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதால் அவளுக்கு நிறைய சோப்புகள், சானிடைசர்கள், கையுறைகள் போன்றவை வாங்கித் தந்து எப்படி எப்படிப் பயன்படுத்தவேண்டுமென்று நானும் அக்காவும் அக்காவின் பிள்ளைகளும் தினமும சொல்லிக்கொடுத்து வந்தோம்.
             ஆனால் ஒன்றைக்கூடப் பயன்படுத்தவில்லை.
             எல்லாவற்றையும் ஒருநாள் ஒரு பையில் போட்டு வந்து என் மனைவியிடம் தந்தாள்.
               இங்கதான் இருக்கே?
               இருந்தா என்ன? இத்தன வயசு வரைக்கும் ஆண்டவன் கொடுத்ததே போதும்.. ஒரு நோய் நொடி இல்ல.. இனிமேலும் வராது. அந்தக் காலத்திலேர்ந்து ரெண்டு வேளை குளிப்பேன். எந்த வேலை செஞ்சாலும் உடனே கை, கால் சோப்பு போட்டுக் கழுவிட்டுதான் துடைப்பேன். பசிக்குதோ பசிக்கலையோ நேரத்துக்கு ரெண்டுவாய் சாப்பிட்டுடுவேன்.. உங்க மாமா என்னைவிட குறச்ச வயசுலேயே போய்ட்டாங்க.. எல்லாமும் அவங்க சொல்லிக்கொடுத்ததுதான்.. அவங்க வயசத் தாண்டி நான் வாழறது கூடுதல்தான்.. என்னா மகமாயிகிட்ட வேண்டறேன்.. அப்படியே படுத்தமான்னு போயிடணும்.. யாருக்கும் தூக்குனேன் கழுவினேன்.. சுத்தம் பண்ணேன்னு சொல்லக்கூடாது.. எனக்கு எதுவும் வராது. சுத்தமா இருக்கறேன்.. சுத்தமாத்தான் சாவேன்..என்றபடி படியிறங்கி வேகமாய் நடந்தாள்.
             
             (நாளை இன்னொரு கதையில் சந்திக்கலாம்)
         

Monday, July 6, 2020


என்னமோ நடக்குது…. குறுந்தொடர்…
               அத்தியாயம் 7
       விடியற்காலை 3 மணிக்கு ஏனோ விழிப்பு வந்துவிட்டது. கோபிக்கு. கொல்லைப்புறம் சத்தம் கேட்டது. குரல்களில் கோபமும் ஆதங்கமும் தெரிந்தன. மெல்ல நடந்துபோய் கொல்லைப்புறம் எட்டிப் பார்த்தான். ராகவன் கோபியின் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
             கல்யாண வயசுல பையன் இருக்கான். அவனுக்கொரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும். அதுலயும் இப்போ மண் விழுந்துடீச்சி.. முதமுதலப் பாக்கப்போகையிலே கெட்ட சகுனமாயிடிச்சு. யாராச்சும் பெண்ண கொலை பண்ணுவாங்களா?  இதுல நீங்க செய்யற காரியம் சொல்லவே அசிங்கமா இருக்கு..
             இதுல என்னடி அசிங்கம்? நான் ஆம்பிள.. ஆயிரம் பண்ணுவேன். அதனால உங்களுக்கு நம்ப குடும்பத்துக்கு ஏதும் கஷ்டம் வந்துடுச்சா.. மாசம் பொறந்தா முள்ளிங்கி பத்த மாதிரி பணம் கொடுக்கறேன். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கறேன்.. எந்தக் கடனும் இல்ல. அப்புறம் ஏன் என் வழியிலே குறுக்கே வரே..
           அடக் கண்றாவியே.. ஒரு பையன் இருக்கான். பொண்ணு இருக்கா. இந்த வயசுல இன்னொரு பொம்பள சுகம் தேடி அலையறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா..
            என்னால முடியுது.. செய்யறேன்..
            கோபிக்குப் புரிந்துவிட்டது. அவர்களிடையே போனான்.
            சே.. அசிங்கமா இருக்குப்பா.. என்ன காரியம் பண்ணறீங்க? அம்மாவுக்கு துரோகம் பண்ணலாமா?
             நீ எதுக்குடா குறுக்கே வரே.. உன் வேலைய பாரு… எனக்குப் புடிச்சிருக்கு.. செய்யறேன்.
              ஒரு தகப்பன் பேசற பேச்சாப்பா இது?  யாரும் கேட்டா காரி துப்புவாங்க.. எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்கமாட்டான்…
              இந்த பாரு.. தகப்பனா இருந்தாலும் புள்ளயா இருந்தாலும் பொண்டாட்டியா இருந்தாலும வாயும் வயிறும் வேற.. எனக்குப் பசிச்சா நீ சாப்பிட்டா என் பசி அடங்காது.. அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க வாழணும்.. நீ உன் வாழ்க்கை வாழறே.. நான் என் வாழ்க்கைய வாழறேன்.. இதுல என்ன தப்பு? நாளக்கி நீ இன்னொரு பொண்ண விரும்புனா நான் அதுல தலையிடமாட்டேன்.. அது உன்னோட வாழ்க்கை. நல்லது கெட்டது உன்னோட சேர்ந்தது…
              சே.. எவ்வளவு கேவலமா நடந்துக்கறீங்கப்பா என்றான் கோபி.
              உனக்குக் கேவலமா இருந்தா விட்டுட்டுப்போ..
              என்னம்மா இது? விட்டும்மா.. எனக்கு எதுவும் வேண்டாம். நான் அமெரிக்காவேப் போயிடறேன்..
               கோபி கோபமாகப் பேசிவிட்டு வெளியே போய்விட்டான். போன சற்று நேரத்திலேயே திரும்பி வந்தான். நேரே ராகவனிடம் போனான்..
               யோவ் நீ மனுஷனாய்யா.. பொம்பளப் பொறுக்கி… என்றான்.
               யேய்.. ஒழுங்காப் பேசு.. போனாப் போவுதுன்னு விடுறேன்..
            கோபியின் அம்மா பதறி ஓடிவந்தாள் உள்ளிருந்து. ஏண்டா என்னடா ஆச்சு?
            அம்மா. இவரு பண்ண காரியத்தப் பாரும்மா.. ,இவரு பிரெண்ட் அதான் கோபாலகிருஷ்ணன் அங்கிள்.. அவரு இப்போ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு.. அதுக்கு இவர்தான் காரணம். என் போன எடுத்து என்னமோ பேசியிருக்காரு.. அவரோட பையன் போன் பண்ணி என்னக் கத்தறான்.. உன்னை சும்மா விடமாட்டேன்.. போலிசுக்குப் போவப்போறேங்கறான்..
            அய்யோ..அய்யோ.. எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள் கோபியின் அம்மா. ராகவனுக்கு விஷயம் இன்னும் விபரீதமாகப் போவதை உணர்ந்து ஏதேனும் செய்யவேண்டும் இல்லையெனில் தாம் ஜெயிலுக்குப் போவது உறுதியாகிவிடும் என்று நினைத்து அதிர்ந்தார். உடன் கிளம்பி வெளியே போனார்.
000
            அங்கே அந்த 25 ஆம் எண் பங்களாவில்..
            உனக்கு என்ன குறை வச்சேன்?.. சின்ன வயசுலேர்ந்து எங்க குடும்பம் கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு முட்டையை வாங்கி அவிச்சு ஆறுபேர் சாப்பிடுவோம். நீங்க எல்லாம் இத மனசுல வச்சிக்கிட்டு நல்ல வரணும்.. நல்லாப் படிக்கணும் எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. இன்னிக்கு நல்ல வந்துட்டேன். உன் மனசு போலத்தான் செய்யறேன். நாம் சேத்து வச்சிருக்கிற சொத்து பல கோடி பெறும். ஒண்ணுகூட என் பேர்ல இல்ல.. உன் பேர்லதான் எழுதி வச்சிருக்கேன். இரவும் பகலுமாக நான் உழைக்கறது நமக்குத்தான் உனக்குத்தான் வெளிநாட்டுல படிக்கற நம்ப புள்ளங்களுக்குத்தான்.. உனக்கு எந்தவிதத்துலேயும் குறை வக்கலே.. ஆனா நீ யாரோடவே.. உனக்குப் பிடிக்கும்னு ஒவ்வொண்ணையும் நினைச்சு செய்யறேன்.. அன்னிக்குக்கூட உனக்குப் பிடிக்கும்னுதான் சுடச்சுட வாங்கி காயத்ரிகிட்ட கொடுத்து அனுப்பிச்சேன்.. நல்ல பொண்ணு அவ.. நல்ல குடும்பத்துப் பொண்ணு.. அவளுக்குக் கல்யாணம் ஆகப்போவுது.. தப்பா நடந்தது உன் குற்றமா? அத அவப் பார்த்தது குற்றமா? என்கிட்ட சொல்லி அழுதா.. சார்.. எங்களுக்கு எவ்வளவோ செய்யறீங்க? ஆனா உங்க வாழ்க்கை இப்படி ஆயிடிச்சேன்.. ஆனா அவள நீ கொலை செஞ்சுட்டே.. அந்த அளவுக்கு உனக்கு உடம்பு சுகம் கண்ண மறச்சிடிச்சி.. இனிமே நீ தப்பிக்க முடியாது.. உனக்கு தண்டனை கெடச்சாகணும்..
           என்று பேசியபடியே கையில் துப்பாக்கியை எடுத்து அவளை (தன் மனைவியை ) குறிப்பார்த்தான்.. குறி பார்த்தபடியே பேச ஆரம்பித்தான்… உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்டி.. இப்படிச் செஞ்சுட்டியே.. பாவி.. நான் என்னடி பாவம் பண்ணேன்? நான் ஏதும் தப்பு பண்ணேனா.. என்றபடி அழுதான். ஆனால் அவளை நோக்கியிருந்த துப்பாக்கி விலகவில்லை.
            என்ன மன்னிச்சிடுங்க.. புத்திகெட்டுப் பண்ணிட்டேன்.. என்ன விட்டுடுங்க.. புள்ளங்க இருக்கு.. இனிமே பண்ணமாட்டேன்.. என்ன விட்டுடுங்க..
            இல்ல உனக்குத் தண்டனை கொடுத்தே தீருவேன்.. உன்ன மாதிரி ஆளுங்களாலதான் என்ன மாதிரி உண்மையான ஆம்பளங்க வாழ்க்கை முடிஞ்சிப்போயிடுது.. உனக்கு மன்னிப்பே கெடயாது…
            கெஞ்சினாள்.
        அப்போதுதான் ராகவன் அந்த பங்களாவின் வெளிக் கேட்டில் கைவைத்துத் தள்ளவும் உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அம்மா என்று ஒரு பெண் அலறினாள்.
                                                      (இன்னும் நடக்கும்)
         
   


Friday, July 3, 2020

என்னமோ நடக்குது.. குறுந்தொடர்.. 6


என்னமோ நடக்குது…… குறுந்தொடர்…
           அத்தியாயம் 6
இதுவரை
            ராகவன் என்பவர் தன் மகனுக்குப் பெண் பார்க்கப்போகிறார். போகிற இடத்தில் பெண் கொலைசெய்யப்படுகிறாள். வளவன் என்பவன் படித்துவிட்டு சும்மா இருப்பதாக அவனின் பெற்றோர்கள் கண்டிக்க அவன் தன்னை ஒரு துப்பறிவாளனாக ஒரு வேலையை அமைத்துக்கொள்கிறான். கதிர் என்பவன் கிராமத்திலிருந்து சென்னைக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் வந்து கொலைக்குற்றம் சாட்டப்படுகிறான். லோகு என்பவனின் தந்தையார் அதிர்ச்சியான தகவலால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு கோமோ நிலைக்குப் போகிறார்.

இனி
          இரவு மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது. அந்த அகலமான தெருவில் இரண்டு பேருந்துகள் சேர்ந்து போகின்ற அளவுக்கு அகலமான தெரு. தெருவின் இருமருங்கிலும்  பெரிய பங்களாக்கள். அந்த தெருவில் காற்றுகூட அமைதியாக இருந்தது. ஒவ்வொரு பங்களா வாசலிலும் புங்க மரங்கள் காலிப்ளவர் பூவைப்போன்று தலைவிரித்து உயரத்தில் அகன்று நிழலைத் தரையில் கொட்டி வைத்திருந்தன. இடையிடையே மெர்க்குரி விளக்குக் கம்பங்களில் இருந்து ஒளி தெருவின் நீளவும் ஒளிப்பாயை விரித்திருந்தன. நடமாட்டம் முற்றிலுமாக இல்லாமல் இருந்தது. சில பஙகளாக்களின்  வெளியே பெரிய கார்கள் நிறுத்தப்பட்டு ஆடை போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தன. இடையில் துணி அயனிங் செய்யும் ஒருவன் எல்லாவற்றையும் முடித்து வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். இனி நாளைக்காலைதான் அவனுக்கு வேலை. நாலைந்து இரு சக்கர வாகனங்கள் ஒலியின்றிக் தெருவினூடாக சென்றன.
                எண். 25 யோகா நிவாஸ் என்ற பங்களாவின் கேட்டருகே வந்து நின்றார் அந்த மனிதர். கேட்டில் கைவைக்குமுன் ஒருமுறை அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தார். தெருவின் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் நீள்வாட்டில் கண்களில் யாரேனும் சிக்குகிறார்களா என்று அளந்து பார்த்தார். அப்பாடா.. யாரும் இல்லை. ஈ, கொசுக்கள் வண்டுகளுக்கு எதுவும் தெரியாது. அவைகள் பேசாது. இப்போது அந்தக் கேட்டை மெதுவாகத் தள்ளி உள்ளே போனார். உள்ளே போய் மறுபடியும் கேட்டை மூடினார். வீட்டின் கதவருகே போய் அழைப்பு மணியை அழுத்துவிட்டுக் காத்திருந்தார்.
            உடன் கதவு திறந்து ஒரு நடுத்தர வயது பெண் வெளிப்பட்டாள். வாங்க சீக்கிரம் உள்ளே என்று படபடத்தாள். பக்கத்துப் பங்களாவில் விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தபடியே.,
           இவர் உள்ளே நுழைவதற்குள் அவள் அவரை உள்ளே இழுத்துக்கொண்டாள் அவரின் சட்டையைப் பிடித்து. இழுக்கப்பட்ட பொருளாய் உள்ளே போனதில் தடுமாறினார்.
            நாளைக்கு தானே வரேன்னு சொன்னீங்க?
           ஏன் இன்னிக்கு வரக்கூடாதா?
           அதுக்கில்ல… நீங்க சொல்லலியே.. அதான் கேட்டேன்.
           சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்தார்.
           இருங்க.. உள்ளே சமைலறையில் பால் சுடவச்சேன். ஆப் பண்ணிட்டு வரேன்.
           உள்ளே போய் ஆப் பண்ணிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். உள்ளே விளக்கு அணைக்கப்பட்டிருந்தது.
           அவளருகே உட்கார்ந்து மறுபடியும் அவளைக்……
           இன்னிக்கு என்ன டிபன்?  என்றார்.
          நான் போட்டு காலிப்ளவர் குருமா வச்சிருக்கேன். அவருக்குச் சுத்தமா பிடிக்காது.. உங்களுக்குப் பிடிக்குமேன்னு செஞ்சேன்.. இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களுக்குப் பிடிச்சதுதான்.. கம்பெனி ஆடிட் நடந்துகிட்டிருக்கு.. இயர் எண்டிங் கண்க்கு  பார்க்கணுமாம்.. கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லேயே தங்கிட்டாரு வழக்கம்போல…
          ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது?
          நீ பண்ண காரியம் அப்படி.. உனக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா?
          என்னது?
          அந்த காயத்ரிய யாரோ கொன்னுட்டாங்க..
          என்ன சொல்றீங்க?
          கொன்னுட்டாங்களா?.. இருங்க வரேன்.. என்று படபடத்தபடி யாருக்கோ போன் செய்து பேசினாள்..
           முட்டாள் நாய்ங்களா.. லேசா தட்டுங்கடா உயிர்ப்பயம் வரும். யார்கிட்டயும் சொல்லமாட்டான்னா கொன்னுட்டிங்களா.. நாய்ங்களா..
            இல்ல மேடம்.. லேசாதான் இடிச்சோம்.. கீழே விழுந்ததுல பின் மண்டையில அடிபட்டு இறந்துட்டா… சாரி மேடம்..
            கொலை பண்ணிட்டு சாரியா.. அடப்பாவிங்களா நானும் உங்களோட சேர்ந்து மாட்டுவேனே.,, படபடப்படாய் பேசினாள்.
            இல்லமேடம் நாங்க டெல்லி வந்துட்டோம்.. எங்க வண்டிய பிடிச்சாலும் அதோட பிளேட் நம்பர் ஆந்திரான்னு மாத்தி வச்சிருந்தோம்.. எந்த சாட்சியும் இல்ல. நீங்க கவலைப்படாதீங்க.. மேடம். ..அப்புறம் கொஞ்சம் செலவுக்குப் பணம் கொடுங்க மேடம்..
               அதான் பேசின தொகை கொடுத்திட்டேனே..
              சரிங்க.. சும்மா தட்டறதுக்குக் கொடுத்தீங்க.. கொலையாயிடிச்சே.. ரிஸ்க் ஆயிடிச்சு மேடம்.. நீங்க கவலைப்படாதீங்கன்னு சொன்னோமே தவிர எங்கள நினைச்சுக் கவலைப்படுங்க மேடம்.. அக்கவுண்ட் நம்பர் அனுப்பறேன். தொகையையும் சொல்றேன்.. போட்டுவிடுங்க மேடம்.. ஆனா இது கடைசி மேடம் உங்கள தொந்தரவு பண்ணமாட்டோம்..
              போனை வச்சிச் தொலை. போடுடவிடறேன்.
              என்ன இப்படிப் பண்ணிப்புட்டே.. நான் இனிமே இங்க வரமாட்டேன்.. என்றார்.
               உங்களாலதான் நம்பள அவ பார்த்துட்டு என் புருஷன்கிட்ட சொல்லிடுவாளேன்னுதான்.. அப்படிச் செஞ்சேன்.. எப்படியும் மாட்டுனா ரெண்டுபேரும்தான்..
              பயத்தில் இறுக்கமாக அவளருகே நெருங்கி உட்கார்ந்தார்.. நாம மாட்டமாட்டோம்ல.. என்றார்.
               நிச்சயம் இல்ல.. உங்க பிரெண்ட்டுக்கும் தெரியுமே அவர என்ன பண்ணப்போறிங்க..
                அவன் கோமா ஸ்டேஜ்ல இருக்கான். ஏற்கெனவே பைபாஸ் பண்ணவன்.. கண் விழிக்கறது கஷ்டம்னு சொல்லியிருக்காங்க.. என் பையன வச்சித்தான்.. அவனை ஆசுபத்திரில படுக்கவச்சேன்.
                உங்க பையன வச்சியா..
               ஆமாம். அவன் ரொம்ப சென்சிடிவ்.. எதுக்கெடுததாலும் உணர்ச்சி வசப்படுவான். ரொம்பப் பயப்படுவான்.. அத வச்சித்தான். ஒரு போன்கால்..
               போன்ல என்ன பண்ணிங்க?
              அவன் பையனுக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருந்தான். அவனோட மருமகள் என் பையனோட லவ்வர்.. நிறைய போட்டோ இருக்குன்னு சொன்னதும் அதிர்ச்சியாயிட்டா.. கல்யாணமும் நின்னுப்போச்ச.. ஆளும் படுத்திட்டான். இப்போதைக்கு அவன் பேசமுடியாது. எப்படியும் ஒரு வருஷம் ஆகும்.. விழிப்பு வந்தாதான்.. வராமலேயேயும் போயிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு..
           அவர் நண்பனிடம் மாட்டிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார். அவரோடு படித்தவர். நல்லவர். ஒழுக்கமானவர். எங்கோ இருப்பார் என்று நினைத்தால் பக்கத்துவீட்டிலேயே இருப்பார் என்று அமைந்தது கெட்ட காலம்தான். படிக்கிற காலத்திலேயே அவர் மிக ஒழுக்கமும் பயந்தாங்கொள்ளியுமாக இருப்பார்.
               அன்னிக்கு இந்த பங்களாவுக்கு வந்துவிட்டு விடியற்காலை 5 மணிக்குக் கிளம்பி வெளியே வந்தார். கேட்டைத் திறந்து தெருவில் இறங்குமுன் அவரைப் பார்த்துவிட்டார்.
            டேய் ராகவா.. எங்கே இங்க வந்துட்டுப்போறே?
           தெரிஞ்சவங்க.. இந்த வீடு?
           தெரிஞ்சவங்களா.. ஒருமுறைகூட நான் உன்னை இங்க பார்த்ததில்லியே.. அவரு கம்பெனி வச்ச நடத்தறாரு.. பெரும்பாலும் கம்பெனிலேயே இருப்பாரு. அந்தம்மா மட்டும்தான் வீட்டுலே இருக்கும். அதப்பத்திகூட நல்ல பேரு இல்லியே.. நீ இங்கருந்து வரே-. என்று சந்தேகமாக இழுத்தார்
            ராகவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. படிக்கற காலத்திலேயே அவனின் குணம் தெரியும். இப்போ தன் விஷயம் தெரிந்துவிட்டதே என்று அதிர்ச்சியானார். மறைக்க முடியாது. கண்டுபிடித்துவிட்டார். ஒருவேளை அவள் கணவனிடம் போட்டுக்கொடுத்துவிட்டால்.. மேலும் அதிர்ந்தார்.
             வா.. நான் விவரமா சொல்றேன்.. தயவுசெஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாத..
             ச்சீ.. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. எப்ப தன்னோட மனைவியை விட்டு அடுத்தவன்  பொண்டாட்டிய மனசுல நினைக்கறோனோ அப்பவே அவன் மிருகம்தான்.. தயவு செஞ்சு இனிமே நாம இதுபத்தி பேசவேண்டாம்.. எக்கேடோ கெட்டுப்போ.. ஒழுக்கங்கெட்டவன் நீ.. உன்னோட என்னையும் பார்த்தா என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்.. என் மகனுக்குப் பெண் பார்த்திருக்கேன். அதுவும் கௌரவமான குடும்பம்.. உன்னால அது கெட்டுப்போயிடக்கூடாது. இனிமே நாம சந்திக்கவேண்டாம்.. உன்னோட படிச்சவன்னு யார்கிட்டயும் சொல்லிடாத.. கருமம்.. காலங்காத்தாலே இப்படி ஒரு சந்திப்பு.. தலையில் அடிததுக்கொண்டார்.
            டேய்.. யார்கிட்டயும் சொல்லிடாதடா..
           நீ யாருன்னே எனக்குத் தெரியாது இனிமே.. போய்த்தொல,., உன்ன பார்த்த பாவத்த எங்கபோய் கழுவுறது? அடக்கடவுளே.. ராமா.. இது என்ன இப்படி அபசகுனம்..
            விறுவிறுவென்று ராகவனை விட்டு விலகித் தூரமாய் போனார். திரும்பித்திரும்பிப் பார்த்து படபடத்தபடியே போனார்.
            அப்படிப்போனவர்.. லோகுவின் அப்பா.
                                            (இன்னும் நடக்கும்.)

Saturday, June 27, 2020

என்னமோ நடக்குது.... அத்தியாயம் 5
                       கோபி மனதுடைந்து போயிருந்தான். அமெரிக்காவில் படித்தாலும் அவன் இந்திய குணாதிசயங்களுடன்தான் இருந்தான். அவனையும் நிறையபேர் அணுகியிருந்தார்கள். அவன் யாரையும் தேர்வு செய்யவில்லை. அன்பாக மறுத்திருந்தான்.
                        மன்னிததுவிடுங்கள். எனக்குக் காதல் பிடிக்காது. காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. எனக்குப் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்தான் மனைவியாக வரவேண்டும். என்னை நம்பிக்கையோடு வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நான் மண்ணள்ளிப் புதைக்கமாட்டேன். பெற்றெடுத்தது முதல் இன்றுவரை பார்த்துப் பார்த்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் என் வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று. காதல் மேல் நம்பிக்கையுள்ளவர்கள் விரும்புகிறவர்கள் இவர்களை அணுகுங்கள்.. நான் பொருத்தமானவன் இல்லை. பழமைவாதி என்று முத்திரை குத்தலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.  அவர்கள் இல்லையென்றால் எனக்கு இந்த அமெரிக்க வாழ்க்கை இல்லை.  நவீனமாக வந்துவிட்டால் எல்லாமும் மாறிவிடுமா? என்னுடைய நண்பர்கள் பலர் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் வாழ்வதுபோல நடிக்கிறார்கள். என்னுடைய உறவுப்பெண் ஒருத்தி கல்யாணத்திற்கு முதல்நாள் வரை மறைத்து வைத்து மறுநாள் அவளுக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய்விட்டாள். அவளுடைய தந்தை மனம் வெடித்துச் சிதறிப்போனார். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று பதறினார். மாப்பிள்ளை பார்த்தபோது, பெண் பார்க்க வந்தபோது, நிச்சயம் நடந்தபோது, பத்திரிக்கை அடித்தபோது, எல்லோருக்கும் விநியோகம் செய்தபோது, முதல்நாளில்  ஏன் இப்படி செய்தாள் என்று அப்படியே நொந்து அவமானப்பட்டு இறந்துபோனார். இப்போது அந்தப்பெண்ணுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவன் சொல்கிறான் அப்பா  தினமும் மாமா ஒருத்தர் வீட்டுக்கு வர்றாறு.. அம்மா எனக்கு எதுவுமே தரமாட்டேங்குது.. சாப்பிட.. ஆகவே எனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கைஇல்லை. ஆயிரம் விவேகம் புரட்சிப் பேசலாம்.. எனக்கு வேண்டாம். எனக்கு என் அப்பாவும் அம்மாவும் மிக முக்கியம்.. ஆகவே அவர்கள் பார்க்கிற பெண்தான் இந்த ஜென்மத்தில் மனைவி...
                  ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
                 இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்கும் நடக்காத அதிசயம்.
                 பெண் பார்க்கப்போன பெண் கொலைசெய்யப்படுவாளா?
                  யாருக்கும் நேரக்கூடாது.
                  பெண்ணைப் பெற்றவருக்கு எப்படி இருக்கும்?
                  ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் நேரும் சங்கடங்கள்?
                   எம் பொண்ணுக்கு இத்தனை வயசாகுது இன்னமும வயதுக்கு வரவில்லை... டாக்டருகிட்ட  ட்ரீட்மெண்ட் நடக்குது சார்..
                   இல்ல சார்.. கொஞ்சம் மனவளர்ச்சி இல்ல சார்.. பிறந்ததுலேர்ந்து இப்படித்தான்.. எத்தனை காலத்துக்கு இப்படி படப்போறோமோ.. நாங்க போயிட்ட அவ கதி.. யார் கிட்ட ஒப்படைக்கமுடியும்?  நாங்க ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கோம்...
                     நல்லாத்தான் படிக்கிருக்கா.. கேம்பஸ்ல கெடக்கலே... சார்..
                     கேம்பஸ்ல கெடச்சு வேல பாக்கறா சார்.. மாசம் சுளையா எம்பதாயிரம் சம்பளம் சார்.. நாக தோஷங்கறாங்க.. மாங்கல்யத் தோஷங்கறா.. ஒரு வரன் அமைய மாட்டேங்குது.. வயசு வேற ஏறிக்கிட்டே போவுது எங்க கவலையபோல..
                      கல்யாணம் பண்ணிக்கொடுத்த விதவிதமா பிரச்சினை..
                      கல்யாணம் பண்ணி எல்லாமும் நல்லா அமைஞ்சவங்க எத்தனை விழுக்காடுன்னு கணக்கு எடுக்கணும் சார்..
                      ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும்.. எம் பொண்ணுகூட ரொம்பக் கஷ்டப்பட்டா மாமியார் கொடுமை.. இப்ப சரியாயிடிச்சு.. சார்..
                      இதுமாதிரி சொல்றதுக்கு இல்லாம பெண் அதுவும் நல்ல குடும்பத்துப் பெண்ண கொலை செய்யற அளவுக்கு என்ன பிரச்சினையா இருக்கும்?
                      கோவி காயத்ரி குடும்பத் நினைச்சுக் கலங்கினான்.கூடவே தன் முதல் பெண் பார்க்கும் படலம் இப்படி திடுக்கிடும் சம்பவமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை..

                     காயத்ரி அப்பா எம்பொண்ணு அப்படி இல்ல தம்பி.. அத்தனை திறமைசாலி.. அவ உண்டு அவ வேலையுண்டுன்னு இருப்பா.. அவளுக்கு எதிரிங்களே கெடயாது.. சாது.. புள்ளப்பூச்சி... தம்பி நீங்க மாப்பிள்ளையா வர எனக்குக் கொடுத்து வைக்கலே.. எம் பொண்ணுக்கும் கொடுத்து வைக்கலே.. ஆனா இத சும்மா விடமாட்டேன்.. எவனோ சினிமாக்காரன் கொன்னுட்டான்னு கேஸ முடிக்கப் பாக்கறாங்க.. நான் டெல்லி வரைக்கும் போவேன்..  எனக்குத் தம்பி முறை ஒருத்தன் டில்லியில இருக்கான்.. பெரிய பதவி.. அவனுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.. அடுத்த வாரத்துல வரேன்.. நான் வந்து பார்த்துக்கறேன்னுட்டு சொல்லியிருக்கான்.. தம்பி..
                         கோபிக்கும் இதில் அக்கறையும் கவலையும் வந்தது.
                         காயத்ரி கொல்லப்படுவதற்குக் காரணம் யாராக இருக்கும்?
                         எப்படியும் கண்டுபிடிப்பதில் தன்னுடைய பங்கும் இருக்கவேண்டும என்று நினைத்தான். அவனுடைய நண்பன் வளவன் நினைவுக்கு வந்தான். கோபியைப் போல நன்றாகப் படிப்பவன். ஆனால் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கிறான்.. எதையும் புத்திசாலித்தனமாக யோசிப்பான். எல்லோரும் ஒரு வழியை யோசித்தால் அவன் வேறு வழியை யோசித்து சொல்வான். அது வித்தியாசமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கவும் செய்யும்.  அவனைப் பார்த்தே வெகு ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது எப்படி இருப்பான் என்று தெரியாது. ஆனால் அவன் வீடு தெரியும். போய் பார்க்கலாம்..
                         வளவன் இருக்கும் தெருவிற்கு வந்தான். வீடு பூட்டிக் கிடந்தது.
                         பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்தார். யார தம்பி தேடறீங்க?
                         வளவன்னு என்னோடு படிச்சாரு...
                         அவங்களா தம்பி.. வீட்டை க் காலி பண்ணிட்டு போயிட்டாங்களே...
                        சட்டென்று மூடு அவுட்டானான் கோபி.
                        அப்படியா?
                        எதிர் புறத்திலிருந்து ஒருவன் வந்தான்... சார்.. வளவன்  வீடு மாறினது எனக்குத் தெரியும் சார்? என்றான்.
                        சொல்லுங்களேன்.
                         நம்ப புது பஸ்டாண்ட் இருக்குதுல்ல..
                         ஆமாம்..
                          அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு சார்.. அதுக்குப் பக்கத்துல காத்தபெருமாள் தெருன்னு பேரு சார்.. அந்தத் தெருதான்.. அவங்க அப்பா ஆசாரி.. அம்மா சித்தாள் வேலை பாக்கறாங்க..
                             ரொம்பத் தேங்க்ஸ்  என்றபடி புதிய பேருந்துநிலையம் வந்து குறிப்பிட்ட தெருவிற்குப் போனான்..
                              வளவன் வீட்டில் இல்லை. அவன் பெற்றோர் இருந்தார்கள்.
                              விவரம் சொன்னான்.
                              இருங்க தம்பி.. அவனோட படிச்சவங்களா.. இப்ப வந்துடுவான்.. கொஞ்சம்புத்தி மதி சொல்லுங்க.. காலா காலத்துல ஒரு வேலைக்குப் போவச்சொல்லுங்க..
                             எங்க போயிருக்கான் இப்போ?
                             என்னமோ கண்டுபிடிக்கறானாம்.. போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கான்.. வயித்துல புளிய கரச்சிட்டு உக்காந்திருக்கோம் தம்பி என்றார்கள்.
                              போலிஸ் ஸ்டேஷனுக்கா.. வளவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

                                                                                   (இன்னும் நடக்கும்)

Friday, June 26, 2020


அன்புள்ள

              ஹரணி வணக்கமுடன்.

              என் மடிக்கணினி பழுது. இனி பயன்படுத்த முடியாது.

              ஆகவே புதிது வாங்க  ஒரு வாரமாகும்.

              அன்புக்கூர்ந்து பொறுத்துக்கொள்க.

              நன்றி வணக்கம்.

              அன்புடன் 
              ஹரணி 

Thursday, June 18, 2020


என்னமோ நடக்குது… குறுந்தொடர்… அத்தியாயம் 4

            அழகான வடிவமைப்பில் வண்ணப்பெட்டி ஒன்றைக் குப்புறக் கவிழ்த்ததுபோல் இருந்தது அந்த தனியார் மருத்துவமனை. நாலைந்து ஆங்கிலஎழுத்துகள் இடையிடையே புள்ளிகள் பெற்றிருக்க குரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ் என்று பெயரிட்டு மயில் தொண்டைவரையிலான உருவத்தின் வரைகோடாய் அந்த மருத்துவமனையில் சின்னமும் அமைந்திருந்தது. அந்த மருத்துவமனையின் உரிமையாளர் குடும்பத்தில் யாருக்கோ மயில் பிடித்திருக்கிறது. அதற்காக மயில்போன்ற குணமுடையவர்கள் என்று கணித்துவிடமுடியாது.

            ஐந்து மாடிகளும் ஒரு மொட்டைமாடியும் அந்த மொட்டை மாடியில் தனியார் நிறுவன செல்போன் டவரும் உயர்ந்திருக்கும் மருத்துவமனை அது. உரிமையாளர் ஒரு டாக்டர். அவர் மகனும் மருமகளும் டாக்டர்கள். அவர்களுக்கென்று ஆளுக்கொரு மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் உள்ளன. இதுதான் தலைமை மருத்துவமனை. மற்றவை இதன்கிளைகள். இங்கு அனுமதிபோட்டு அங்கே மருத்துவமும் அறுவையும் செய்வார்கள். கிளைகளில் அனுமதி போட்டு இங்கு வசதிக் குறைவு தலைமை மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும் என்று ஒரு மருத்துவக்கதையை ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசி அனுப்புவார்கள்.

                இத்தகைய மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் உள்ள 303 ஆம் எண் அறையில் படுத்திருக்கிறார். இல்லை படுக்க வைத்திருக்கிறார்கள் கோபாலகிருஷ்ணனை. சாலையில் போய்க்கொண்டிருந்தவர் திடீரென சாலையோரத்தில் மயங்கி விழுந்தார். உடன் உதடுகள் கோணி வலதுகை இழுத்தது. உடன் செய்திகள் செல்போனில் பறந்து இங்கே கொண்டுவந்தார்கள்.

                 கொண்டு வந்து சேர்த்தவன் லோகு என்கிற லோகநாதன். அவன் தந்தையார்தான் கோபாலகிருஷ்ணன்.

               மூன்றாம் தளத்தின் அறைக்கு வெளியே வராண்டாவில் உட்கார்ந்திருக்கிறான் லோகு. அவனோடு சில உறவுகள்.

              எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது? அவர் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சாரு.. இப்படிக் கெடக்கறாரு.லோகுவின் அம்மா சாவித்திரி அழுதுகொண்டிருந்தாள்.

                சர்க்கரை அதிகமாகிவிட்டது.கூடவே இரத்த அழுத்தமும். கொண்டுவந்ததிலிருந்து மயக்கத்திலிருக்கிறார். லேசாக கோமா தாக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லி  பயமுறுத்தியிருக்கிறார். எப்படியும் நாலைந்து மணிநேரங்கள் கடக்கவேண்டும் என்கிறார்கள். இவர்கள் அழுதபடியே காத்திருக்கி‘றார்கள். எதிர்பாராமல் தலையில் கல்விழுந்ததுபோல லோகு கவிழ்ந்துகிடக்கிறான்.

                தம்பி லோகு ஏதாச்சும் சாப்பிடுப்பா.. அப்பாவுக்குச் சரியாயிடும். சுகர் லெவல் குறைஞ்சா எழுந்திரிச்சு உக்காந்துடுவார்..

                 எனக்கு வேணாம் சித்தி எதுவும்? அப்பா எழுந்து வரணும்..

                கண்டிப்பா அவருக்கு ஒண்ணும் ஆகாது.. அதுக்காக நேத்துலேர்ந்து நீ வெறும் வயிறா இருக்கக்கூடாது.. ஏதாச்சும் சாப்பிடு.. வெறும் வயித்துல ஆசுபத்திரியில இருக்கக்கூடாது.. ஏதாச்சும் கோளாறு ஆயிடும்..

            வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள்.குடித்தான்.

             இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றன. லோகு கல்யாணத்திற்கு. எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது லோகு அப்பா மருத்துவமனையில் மயக்கமாய்..

            பெண்ணின் அப்பா வந்திருந்தார் மருத்துவமனைக்கு.

           தம்பி.. இந்த நேரத்துல கேக்கறேன்னு தப்பா நெனக்காதீங்க. நல்ல காரியம் தள்ளிப்போடக்கூடாது. நாம நிச்சயித்த நாள்ல திருமணத்த முடிச்சுடலாம்..

            மன்னிச்சுக்கங்க அங்கிள்.. எங்கப்பா வராம நான் தாலி கட்டமாட்டேன். இது அவரோட கனவு.. அவர் நினைச்சபடிதான் நடக்கணும் இந்தக் கல்யாணம். அவர் எப்ப எழுந்து வர்றாரோ அப்பத்தான் என் கல்யாணம்.. என்ன வற்புறுத்தாதீங்க.. அப்படின்னா இந்தக் கல்யாணத்த நிறுத்திடலாம்.. எங்கப்பாவிட எதுவும் முக்கியமில்ல.. லோகு தெளிவாக அதேசமயம் வருத்தமுடன் பேசினான்.

              என்ன லோகு இப்படிப் பேசறே? நல்ல காரியத்த நடத்திடலாம். அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது..

              வேணாம் சித்தப்பா.. எங்கப்பா வந்தாதான் எனக்குக் கல்யாணம் இல்லாட்டி எனக்கு எதுவும் வேணாம்.

            பிடிவாதம் பிடிக்காதே… கல்யாணம் நின்னுட்டா.. கல்யாணப் பொண்ண தப்பா பேசுவாங்க.. அவ வந்த நேரம்னு..

             அப்ப அதுக்காக எங்கப்பா இல்லாம கல்யாணம் பண்ணப் பாக்கறீங்களா?

            இல்ல லோகு…

            சித்தப்பா.. எங்கப்பா.. உங்க அண்ணன் பத்தி உங்களுக்குத் தெரியும்.. தயவுசெஞ்சு கட்டாயப்படுத்தாதீங்க.. அப்பா இல்லாம அவர் வாழ்த்தாம எந்த ஒரு வாழ்க்கையும் எனக்கு வேணாம்..
             மருத்துவர் வந்து சொன்னார்..

            சாரி.. உங்கப்பா கோமாவுக்குப்போயிட்டார்.. நாங்களுக்கும் முயற்சிப் பண்ணறோம்.. கொஞ்சம் நாளாகும்.. ஏன் நாளைக்கே எழுந்து வரலாம்.. தொடர்ந்து சிகிச்சை நடந்தாதான் இது சாத்தியம்..

            வேறு வழியில்லை.. விதியின் திட்டமிட்ட செயல்.

           உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் லோகுவிடம்..

           லோகு உங்கப்பா போன்ல யார்கிட்டயே பேசியிருக்காரு.. அதுக்கப்புறம்தான் கீழே விழுந்திருக்காரு.. அங்கே பக்கத்துலேயே செல்போன் கெடந்துச்சி.. அப்பாக்கிட்ட பேசினவரு குரல் செல்போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கு.. அப்பா எந்த காலையும் ரெக்கார்ட் பண்ணித்தானே பேசுவாரு..

             கொடுங்க மாமா.. என்று தாவி வாங்கினான் லோகு.

            செல்போனில் ரெக்கார்ட் ஆகியிருந்ததைக் கேட்டார்கள்.

            டேய் கோபாலகிருஷ்ணா ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீயா? உனக்கு அறிவில்லியா? எத்தன தடவ சொல்றது.. உம் பையனோட கல்யாணத்த நிறுத்து.. கல்யாணப்பொண்ணு எனக்குச் சொந்தம்..

             நான் நிறுத்தமுடியாது.. உன்னால ஆனதப் பாத்துக்கோ..

            சரி.. நல்லா போய் உம் பையன தாலிக்கட்டச்சொல்லு.. அட்சதைப் போடற ஒவ்வொருத்தர் கையிலும் நான் போட்டோவ கொடுத்துடறேன்.. கல்யாணப்பொண்ணோட காதல் லீலைகள் போட்டோவை.. எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்து பாத்துட்டு ஆசிர்வாசம் பண்ணட்டும்..

             அடப்பாவி.. அய்யோ…

            அப்புறம்தான் கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தது.

            லோகு.. டேய் யாருடா நீ? என்று மருத்துவமனை வளாகத்தில் கத்திவிட எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

              ஒரு நர்சு ஓடிவந்தாள்.. என்ன சார் இது ஹாஸ்பிட்டல்… கத்தக்கூடாது. பேஷண்ட்ஸ்ங்க டிஸ்டர்ப் ஆகியிடுவாங்க.. டாக்டரு சத்தம்போடுவாங்க.. அமைதியா இருங்க சார்..

             யாராக இருக்கும் என்று லோகு யோசிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் கோபி வந்து நின்றான். கோபி… என்று பல்லைக்கடித்தான் லோகு.
                                                       (இன்னும் நடக்கும்)

      
           

         

Monday, June 15, 2020


என்னமோ நடக்குது…
                          குறுந்தொடர்  - அத்தியாயம் 3

முன்னிரு அத்தியாயச் சுருக்கம்
              ராகவன் என்பவர் தன் மகனுக்குப் பெண் பார்க்கப்போன இடத்தில் அந்தப் பெண் கொலைசெய்யப்படுகிறாள். படித்த பட்டதாரியான வளவன் என்பவன் தன்னைத்தானே துப்பறிவாளன் என்று சொல்லிக்கொள்கிறான்.
இனி……
             நொந்துபோய் உட்கார்ந்திருந்தான் கதிர். எதிரே அவனுக்குப் பிடித்தமான உணவு ரவா தோசை ஆறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சின்ன வெங்காயம் மிதக்கும் சாம்பாரின் மேல் முட்டை உள் ஓட்டுச் சவ்வு போலப் படலம் படர்ந்துகொண்டிருந்தது.
              ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து யார் துணையுமில்லாமல் வாழ்வது சவால்தான். அப்படியும் அவன் தன்னை எல்லோருக்கும் அறிய வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுதைகயில் அதைக் கலைத்து விளையாட ஒரு கூட்டம் எப்போதும் கண்கொத்திப் பாம்பாகவே இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெல்லமுடியும் நம்பிக்கை வை என்று அறிவுரை மழை பொழிய ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நாக்கைத் தொங்க வைத்துக்கொண்டு.
                கரும்புக்கொல்லையும் வாழைத்தோப்பும் அகத்திகீரையும் என பச்சை செழிக்கும் கிராமத்தின்  மண்ணில் பிறந்தவன் கதிர். ஒரு பட்டப்படிப்பு மட்டுமே அவனால் படிக்கமுடிந்தது. இளம் அறிவியல் வேதியியல் சிறப்புநிலையில் படித்திருந்தான். அதற்குமேல் படிப்பதற்கு விதி அனுமதிக்கவில்லை. ஆனால் ஏராளமான அறிவையும் அதை சமயோசிதமாகப் பயன்படுத்தும திறனையும் ஆண்டவன் அவனுக்கு அள்ளிக்கொடுத்திருந்தான்.
                 எப்படி முளைவிட்டது அந்த ஆசை அவனுக்குள் என்று தெரியாது. சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான். அப்படியே புறப்பட்டு சென்னைக்கு வந்துவிட்டான். இரண்டு பெரிய இயக்குநர்களைப் படாதபாடு சந்தித்து ஒரு கதையை இரண்டு விதமாகச் சொன்னான். அவர்கள் முகத்தில் சரவிளக்குகள் பளிச்சென்று எரிவதைக் கண்டு இவன் கனவுலகத்தில் மிதந்தான்.
                  யேய்… தம்பி.. என்ன பெயர் சொன்னே? கதிரா? உண்மையிலே நீ சூரியக் கதிர்தாண்டா.. இத்தனை நாளா எங்கடா இருந்தே.. இதுவரைக்கும் இப்படியொரு கதையை எவனும் சொல்லிக் கேக்கலடா.. கேட்ட முதல் கதையிலே நெஞ்சுல ஓங்கி அறைஞ்சுட்டே.. இதைப் படமா எடுத்தா கோடிக்கோடியா பணம் கொட்டும்டா.. உன்ன என்ன லெவல்ல வைக்கிறேன் பாரு…
                 இரண்டு இயக்குநர்களும் யாருமறியாவண்ணம் சூழ்ச்சியாய் பொய்யைக் கரைத்து வெண்ணெய்யாய் கதிரின் நெஞ்சில் கரைத்தார்கள்.
                 அவர்கள் வாங்கிக்கொடுத்த அல்வாவும் ரவாதோசையும் இவனுள் அழுத்தமான நம்பிக்கையைத் தந்தது.
                 முடிந்தது.
                அதற்குப் பின் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. நொந்துபோனான் கதிர்.
                அவர்கள் இயக்கத்தில் புதுப்படம்  வந்தபோது கதிர் தியேட்டருக்குப் போனான். போனவன்  இதயம் வெடித்ததுபோல உணர்ந்தான். அந்தப் படம் இவன் சொன்ன கதை..
               ஆத்திரம் அடங்காமல் கையில் இருந்த மிச்சக்காசை ஆட்டோவுக்குத் தந்து போனான்..
               அந்த ஸ்டுடியோ வாசலில் தாக்கப்பட்டான் கதிர். முகம், கைகால் சிராய்ப்புகளுடன்  திரும்பி வந்து.. எங்கே செல்வது என்று தெரியாமல் சாலையோர்ப் பிளாட்பாரத்தில் எல்லாம் மறந்து தூங்கினான்.
              சென்னை வந்து பஞ்சம் பட்டினியாகக் கிடந்து ஒரு இளம் இயக்குநரிடம் எடுபிடியாக ஒரு வேலைக்குச் சேர்ந்தான். தன்னுடைய ஆசை இயக்குநராக ஆவது என்பதை மறைத்தான்.
              அதற்கான காலக் கொக்காய் காத்திருந்தான்.
             இன்றைக்கு செட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த இளம் இயக்குநர் சற்று முன்கோபக்காரன். ஒரு காட்சி எடுத்தார்கள். அது சரியாக அமையவில்லை.
              என்னதான் மறைத்துக்கொண்டாலும் இவனால் இவன் உள்ளத்தை அடக்கமுடியவில்லை.
              சார்.. நான் இந்தக் காட்சியை எப்படி எடுக்கலாம்னு சொல்லட்டுமா சார்.. என்றான்.
              நீ பெரிய புடுங்கியா? உன்னக் கேட்டனா.. மயிறு.. உன்னோட வேலைமயிறு என்னவோ அதைப்பாரு.. உன் யோசனை மயிறு எல்லாம் வேண்டாம்… போ சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வை…
             திரும்பி வந்தான்.
             மதியம் சற்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். இவன் ஸ்டுடியோ வாசலில் செக்யூரிட்டி அறையில் உட்கார்ந்திருந்தான். செக்யூரிட் சொன்னான்
              தம்பி கதிரு உனக்கு இதெல்லாம் தேவையா? இந்த சென்னையில பொழக்க வந்திருக்கே.. அறிவுரை சொல்லாதே.. இங்க உள்ளவனுக்கு எல்லாமும் தெரியும்னு சொல்லுவான்.. ஆனா எதுவும் தெரியாது.. கழுகு மாதிரி அடுத்தவன முழுங்கறது தெரியாம முழுங்கிப் பொழப்பான். ஆனா கௌரவம்.. தன்மானம்.. சொந்தத் திறமைம்பான்.. பொழக்கற வழிய பாரு கதிர் என்றான் அன்பாக.
          இல்லண்ணே இந்த இயக்குநர் ரொம்ப நல்லவரு.. கஷ்டப்பட்டுப் படம் எடுக்கறாரு.. நானும் சினிமா இயக்குநர் ஆவணும்னுதான் சென்னைக்கே வந்தேன்.. அவரு எடுத்தக் காட்சிய கொஞ்சம் ‘மாத்துனா போதும்.. படத்துலேயே அதுதான் பேசப்படற அளவுக்கு வ‘ரும்.. என்றான் கதிர்.
            சரி எதுக்கு இப்படி ஆதங்கப்படறே.. எங்கிட்டட அந்தக் காட்சிய சொல்லு.. நான் கேக்கறேன்..
              கதிர் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தான்.
             எதற்கோ சிகரெட் பிடிக்க வந்த அந்த இளம் இயக்குநர் கதிர் செக்யூரிட்டியிடம் சொல்வதைக் கேட்டு முடித்தான்.
              சட்டென்று போனான்.. அந்தக் காட்சிய எடுத்துடலாம் என்றான்.
              கதிர் சொன்னதுபோலவே எடுத்தான்.
              காட்சி பிரமாதமாக வந்திருந்தது. கதிர் பார்த்துக்கொண்டிருந்தான்.
             மாலையில் அந்த இயக்குநர் கூப்பிட்டான்..
             டேய் இங்க வாடா..
             என்ன சார்? என்றபடி அருகில் போனான் கதிர்.
            அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து நாளையிலேர்ந்து உனக்கு இங்க வேலை இல்ல. சொல்ற வேலய விட்டு மயிறுமாதிரி யோசனை சொல்லவருவே.. சுத்தப்படாது கௌம்பு..
             வாசலுக்கு வெளியே துரத்தாத குறைதான்.
              கதிர் வெளியே வந்தான்.
             என்ன உலகம்டா? திறமைக்கு மதிப்பே இல்லியா  வயிறு பசித்தது. கையில் பணம் இருந்தது. போய் ஒரு கையேந்திப் பவனில் போய் உட்கார்ந்து நாலு தோசை ரெண்டு ஆப் பாயில் ஒரு ஆம்லெட் என்று நிறைய சாப்பிட்டான். படுக்க இடம் தேடினான். எதிரே பிளாட்பாரம். அருகே புங்க மரம். இன்னிக்கு ராத்திரி இங்கதான்.. என்று அந்தப் பிளாட்பாரம் நோக்கிப் போனான்.
                 நள்ளிரவில் எழுப்பினார்கள். எழுந்தான்.
                போலிஸ்.. சார்..
                வாடா.. எழுந்திரு.. செய்யறவேலைய செஞ்சுட்டு பேசாமா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இங்க வந்து படுத்திருக்கே..
                நான் என்ன சார் பண்ணே?
               என்ன பண்ணியா? கொலை பண்ணிட்டு எவ்வளவு அமைதியா பேசறே.. அழுத்தமான கொலகாரன் ஏட்டு இவன்…
                 என்ன சார் சொல்றீங்க.. நான் ஸ்டுடியோவுல வேல பார்த்தவன் சார்.. என்னப் போயி..
                   என்ன வேலை பார்த்தே? டைரக்டரா? கேலியாகச் சிரித்தார்கள்.
                உண்மை சார்.. நான் டைரக்டர் ஆகத்தான் சார் கிராமத்துலேர்ந்து சென்னைக்கு வந்தேன் சார்..
                  நல்லா கதை சொல்றே?
                 எனக்கு கதை சொல்லத் தெரியும் சார்.
                கன்பார்ம்டு.. கௌம்பு.
                காவல் நிலையத்தின் உள்ளே போய் தரையில் உட்கார வைத்தார்கள்.
                 யோவ் இவன் பேர்ல காயத்ரி கொலை வழக்கு எப்ஐஆர் ரெடி பண்ணு.  சப்பை மேட்டரு.. அவளோட அப்பன் பெரிய ஆபிசர எல்லாம் பாப்பேன்னு மிரட்டிப் பாக்கறான்.. இவன்தான் கொன்னான்னு மேட்டர முடி. பேரு என்ன கதிரா. டைரக்டர் ஆசையில் சென்னை வந்த வாலிபர். பெண் மர்மக்கொலையில் தொடர்பு. கைது. பேப்பருக்கு செய்தி கொடுத்துடு. நாளைக்குக் கோர்ட்டுல புரடியூஸ் பண்ணிடலாம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா..
             வந்துடுச்சு சார்..
                                                 (இன்னும் நடக்கும்)
         

Friday, June 12, 2020

என்னமோ நடக்குது... அத்தியாயம் 2

என்னமோ நடக்குது.....

                                  (குறுந்தொடர்... அத்தியாயம் 2)


முதலின் சுருக்கம்

                ராகவன் என்பவரின் குடும்பம் அவரின் மகனுக்காகப் பெண் பார்க்கப் போகிறார்கள். அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுப் பேருந்து நிலையத்தில் கிடக்கிறாள். எல்லோரும் ஓடுகிறார்கள்.

                                           000


              மணி ஒன்பதாகியும் வளவன் எழுந்திருக்கவில்லை.  அவன் உறங்கிக்கொண்டிருக்கும் வீட்டில் இனிதான் எல்லாமும் ஆரம்பிக்கும். சொல்லி முடிப்பதற்குள் ஆரம்பித்துவிட்டது
                      அஞ்சு பைசாவுக்குப் பிரயோசனப்படாது.. எப்பப் பாரு தூக்கம் தூக்கம்.. எப்படித்தான் தூக்கம் வருதோ.. படிச்சு முடிச்சு அதது வேல வெட்டிக்குப் போய் நாலுகாசு கொண்டாந்து குடுத்து அப்பனயும் ஆயியயும்  காப்பாத்துது.. இங்க எல்லாம் தலகீழதான்.. வடிச்சுக் கொட்டியே என் வாழ்க்கை முடிஞ்சிடும்போல..
                      செல்லம் குடுத்தில்லடி.. அனுபவி.. இது உருப்படற நாயியா இருந்தா இந்நேரம் உருப்புட்ருக்காது.. எல்லாம் என் தாலிய அறுக்க வந்துருக்கு.. நல்லா மூணு வேளையும் கொட்டிக்குது.. பொழுதன்னிக்கும் செல்லு நோண்டுது.. என்னதான் இருக்குமோ.. அந்த செல்லு வெடிக்கவும் மாட்டேங்குது.. ஒரேடியா முடிச்சிடலாம்..
                       சரி வாங்க.. சாப்பிட்டு நீங்க கௌம்புங்க..
                        வளவனின் தாய் சித்தாள் வேலைக்குப் போகிறாள். தந்தை ஆசாரி.  இருவருக்கும் எப்போதாவதுதான் வேலை இருக்கு.. லாக்டவுனில் வயிற்றுப் பிழைப்பு காய்ந்துபோய் கிடக்கிறது.
                        ஆகவே வேலை கிடைக்கும்போது ஓடிவிடவேண்டும்.
                         கட்டிட வேலையில் சித்தாள்கள் அதிகம்.. ஆகவே வளவனின் அம்மாவிற்கு டோக்கன் சிஸ்டப்படி இன்னும் இரண்டுநாட்கள் கழித்துதான். ஆனால் ஆசாரிக்கு வேலை நிற்காது. வளவனின் அப்பா வளவன் தூங்கும் அறையைப் பார்த்து.. தூ.. கம்மனாட்டி.. இதுக்கு எல்லாம் ஒண்ணும் வரமாட்டேங்குது..
                           வளவன் எழுந்தபோது மணி பத்தாகிவிட்டிருந்தது.
                           அம்மா.. என்றான்.
                           என்ன அம்மா?  வந்து கொட்டிக்க எல்லா வச்சிருக்கேன் சூடா.. என் வயித்தெரிச்சலோட..
                           ஏம்மா.. நீயும் அப்பாவும் இப்படி கரிச்சுக் கொட்டறீங்க?  தினமும வேலைதேடிதான் போறேன்.. ஒண்ணும் அமைய மாட்டேங்குது.. காசு வேணும்..இல்லாட்டி நாலுபெரிய மனுஷன் சிபாரிசு வேணும்.. ஆசாரி க்கும் சித்தாளுக்கும் பொறந்தவனுக்கு யார் வருவா? உங்க ரெண்டுபேருக்கும் புரிய மாட்டேங்குது. சொன்னாலும் கேக்க மாட்டேங்குறிங்க.. ஆனா நிச்சயம் வேலை தேடிடுவேன். கிடைக்கும்.. எம் மனசுல ஆயிரம் இருக்கும்மா.. உன்னயும் அப்பாவையும் நல்லா வச்சுக்கணும்.. தினமும் வெளியே போகும்போது முக்குல உள்ள கோயில்ல வேண்டிக்கிட்டுதான் போறேன்.. என்ன பண்றது? உங்கள மாதிரியே அந்த ஆண்டவனும் என்னப் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்..
                      சொல்லியபடியே அந்த ஆறிப்போன டீயை எடுத்து வாயில் வைத்தான்.
                        கொண்டா.. அது ஆறி அவலாச்சு.. சுட வச்சுத் தரேன்..
                        சூடு பண்ணிய டீயை உறிஞ்சினான்.
                         வளவா.. இல்லாத கொடுமை கத்தறேண்டா.. ஒன்ன பத்தி தெரியும்டா.. ஏதோ ஆத்தாமை வார்த்தைய கொட்டிப்புடுறேன்.. மனசுல வச்சுக்காத.. மகமாயிய வேண்டி மஞ்சத் துணியில காசு முடிஞ்சு வச்சிருக்கேன். அது வீணாகப் போவாது..
                       குளித்து உடை மாற்றி டிபன் சாப்பிட்டுவிட்டு  வெளியே வந்தான் வளவன்.
                         தெரு முக்கு கோயிலில் ஒரு கும்பிடு போட்டான்.
                         வெள்ளாளத்தெருவைத்தாண்டும்போது யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தான். அவன் நண்பன் ஒருவன்.
                           என்னடா வளவா எங்க கிளம்பிட்டே?
                           ஒங்கயும் இல்லடா.. நான் என்ன ஆபிசுக்கா போறேன்..
                           ஒருநாள் நாம போவோம்டா..
                          அதுக்குத்தாண்டா அலையறேன்.. வீட்டுலேயும் படிச்சுட்டு இருக்கறதால பிரச்சினையா இருக்கு..
                           எங்க வீட்டுல நீ புள்ளயே இல்லங்கறாங்க என்னோட அம்மாவும் அப்பாவும் வளவா..
                           என் வீட்டுலே சொல்லுலே கிட்டத்தட்ட அப்படித்தான்.
                             இருவரும் டீக்கடைக்கு வந்து டீ சொன்னார்கள்.
                             வளவா.. பாக்கி இருக்குப்பா..
                             சாரிண்ணே.. அப்ப டீ வேண்டாம்.. என்றபடி எழுந்தான்.
                             என்னப்பா படிச்ச புள்ள பொசுக்குன்னு கோவிச்சுக்கறே.. இந்த கோவம்தான் உன்னோட நேர்மைய எனக்குச் சொல்லுது.. குறிச்சு வச்சுக்கறேன்.. டீய குடி.. வேலக்கிப் போய் மொத்தமா கொடு.. எல்லார்கிட்டயும் சொல்லி சொல்லி உன்கிட்டயும் சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காதப்பா..
                              டீ குடித்தார்கள்.
                              ஏதும் பிசுனஸ் பண்ணக்கூடாதா?
                               எந்தப் பிசினஸ்ம் பண்ணலாம். அதுக்கு கொஞ்சமாவது முதல் வேணும்..
                                முதலுக்காக ஒரு வேலைக்குப் போவணும் என்றான் வளவன்.
                                என்ன வேலை ?
                                யாருக்குத் தெரியும்? யாரு என்ன வேலை கொடுக்கறாங்களோ அதை  செய்யவேண்டியதுதான்.
                                யாரு கொடுப்பாங்க வளவன்?
                                தெரியலியே?
                                அவங்கள தேடணும்..
                                 அவங்கள எப்படித் தேடறது?
                                 நம்ப கண்ணுல வந்து படுவாங்க..
                                 இது என்னடா வளவ்ன் லாஜிக்..புரியலியே.
                                 புரியாதுடா.. இப்போதைக்கு விடு.. பார்த்துக்கலாம்.
                                அப்படியே மெல்ல நடந்தார்கள் கடைத்தெரு நோக்கி.
                                சில அடிகள் எடுத்து வைத்திருப்பாரகள். அவர்களை நோக்கி ஒருவர் வந்தார். பார்க்க நாகரிகமாக இருந்தார்.
                                 ஔவையார தெரு எங்க இருக்கு?
                                  வளவன் சொன்னான்.
                                 அங்க யார சார் பாக்கணும்? வளவன் நண்பன் கேட்டான்.
                                 ஒரு நண்பரை. ஒருவகையில அவர் என்னோட சொந்தக்காரர்.
                                  பேரு தெரியுமா?
                                   கோவிந்தராஜன்.
‘                                  ஓ அந்த ரிட்டயர்டு பார்ட்டியா.. அவரு மாடர்ன் ரை மில்லுல வேலப்பாத்து ரிட்டயர்டு ஆனவரு சரியா என்றான்.
                                   முகவரி கேட்டவர் சரிதான். அவரேதான்.
                                   வாங்க நான் வீடு காட்டறேன். வளவா வாடா போகலாம்.
                                  எனக்கு வேலை இருக்குடா?
                                   அட வாடா.. பெரிய வேலை... சாரை கொண்டு போய் விட்டுட்டு அப்படியே குறுக்கு சந்து வழியா பஸ் ஸ்டாண்ட் போயிடலாம்.
                                    கூடவே போனார்கள்.
                                     வளவனின் நண்பன் கேள்விகளை அடுக்கினான். எங்கருந்து வர்றீங்க சார்?  இங்க அடிக்கடி வந்திருக்கீங்களா?  உங்கள நான் பாத்ததில்லியே? ஏதும் பிசினஸ் விஷயமா சார்?  கோவிந்தராஜ் ரொம்ப நல்ல மனுஷன் சார்... எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டாரு சார்.. ஒரு பொண்ணு ஒரு பையன் இரண்டும் தங்கக்கட்டிங்க.. இருக்கற இட ம் தெரியாதுசார்..
                                ஏன் தம்பி இத்தன கேள்வியும் விவரமும் சொல்றீங்க.. நீங்க என்ன டிடெக்டிவா?
                                அப்படியா சார் என்றான் அப்பாவியாக.
                                டிடெடிக்டிவா..
                                வளவனுக்கு முகத்திற்குத் தெரிந்துவிட்டது. வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சுடிச்சு...
                                 அவரை கோவிந்தராஜ் வீட்டுத் தெருவில் விட்டுவிட்டுத் திரும்புகையில் வளவன் சொன்னான்.
                                டேய் முருகா.. நமக்கு வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சாச்சு?
                                என்னடா சொல்றே?
                                ஆமாண்டா.. இப்ப முகவரி கேட்டுப்போனாரே அவர் வேலக்கி வழி காமிச்சிட்டார்..
                                என்ன வழிடா காமிச்சார்?
                                 எனக்கான வேலைய நான் தீர்மாசிச்சுட்டேன்.. எனக்குவேல கெடச்சுடிச்சி..
                                 என்னடா சொல்றே? என்ன வேலைடா?
                                  வளவன் எம்காம்.. டிடெக்டிவ்
                                  டிடெக்டிவா?
                                  நான் இனிமே துப்பறிவாளன்.. சமூகத்தில் எந்த குற்றம் நடந்தாலும் அதைக் கண்டுபிடிக்கற வேலை.. இனி வளவன் துப்பறிவாளன்.. என்றபடி சிரித்தான்.
                                 என்னடா ஆச்சு?
                                  ஆமாண்டா இனி இந்த ஊர்லே நான் துப்பறிவாளன்.
                                  என்னடா பண்ணுவே?
                                   வா. சொல்றே... என்றபடி வளவன் அவனை ஒரு  ஜாப் டைப்பிங் சென்டருக்கு அழைத்துககொண்டுபோனான்.
                                   வாங்க என்ன வேணும்?
                                   ஒரு துண்டு பேப்பர் தாங்க..
                                    கொடுதத துண்டு சீட்டில்  வளவன். எம்காம் டிடெடிக்வ்
மகா டிடெக்டிவ் ஏஜன்சி. அதனைத் தொடர்ந்து வீட்டு முகவரி. கீ ழே செல் நம்பர். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு.. சார்.. இதை அப்படியே விசிட்டிங் கார்டு சைசுக்கு டைப் பண்ணி ஒரு இருவது காபி எடுத்துக் கொடுங்க.. சார்.. என்றான் வளவன்.
                                      அவன் வாங்கி முகவரியைப் படித்துவிட்டு வளவனைப் பார்த்து.. சார்.. உக்காருங்க.. இதோ அடிச்சு தரேன் என்றான். வளவனின் நண்பன் முருகனுக்கு ஆச்சர்யம் சாரா....அது என்னடா சாரா...
                                     அடித்துக்கொடுத்து செராக்ஸ் எடுத்துக் கொடூத்தார்.
                                      எவ்வளவு சார்?
                                        பணம் வேண்டாம் சார்.. அடிக்கடி வாங்க நம்ப கடைக்கு எது வேணாலும் செஞ்சுதரேன்.
                                      முருகனுக்கு ஆச்சர்யம் பறவைகளாயின.
                                       என்னடா வளவா?
                                        இதுதாண்டா உலகம். இதுதான் நம்ப வேலை. அதாவது என்னோட வேலை.. இனிமே பாரு...
                                        அது சரி.. வேல சம்பளம்..
                                        அது எல்லாம் தானா வரும.
                                        பேருந்து நிலையம் வந்திருந்தார்கள்.
                                         அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் வளவன் கேட்டான்..
                                            என்ன சார் கூடடம்?
                                           அங்க ஒரு பொண்ண கொன்னுப் போட்டிருக்காங்க சார்.. பாவம் சார்.. சின்ன வயசு.  நம்ப ஏரியா பொண்ணு சார்..
                                            முருகா.. என்றான் வளவன்.
                                             என்னடா வளவா?
                                             சரி வா.. நமக்கு வேலை வந்துடுச்சி...
                                             விறுவிறுவென்று போய் கூட்டத்தை விலக்கி.. ஒரு போலிஸ்காரரிடம் என்ன சார்? யார் சார் இப்படி பண்ணாங்க? என்றான்.
                                             கேள்வி கேட்ட வளவனை போலிஸ்காரர் ஒரு பார்வை பார்த்தார்.. யாரு நீ?
                                              சட்டென்று பையிலிருந்து அந்த துண்டு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினான்.
                                            வாங்கிப் பார்த்தவர்.. சட்டென்று ஒரு சல்யூட் அடித்தார்.. சாரி சார் என்றார். முருகன் ஆச்சர்ய மலையுச்சிக்குப் போனான்.
                                                                                            (இன்னும் நடக்கும்)
                             
                               


Follow by Email