எப்படியும் வாழத்தானே வேண்டும்....
விருப்பமில்லாமல்தான்
கலைத்தாளாம்
நான்குமாதக் கருவைக் கலைப்பது
கடினமாகத்தானிருந்தது
ஒருசேர உடலுக்கும்
மனத்திற்கும்....
அம்மாவைப் பார்த்துவிட்டு
வருகிறேன் என்று விட்டுவிட்டு
வந்தவன்தான்...
ஒவ்வொரு பாக்கிக்காய்
ஒவ்வொருத்தரும் வாசலில் கூவ
பொறுமையாய் பதில் சொல்லிக்
கொண்டிருந்தேன் அம்மாவைப்
பார்க்கப் போயிருப்பவன் வந்துவிடுவான்
பொறுங்கள் என்று...
பொறுத்தவர்கள் திரும்பிப்போனார்கள்
பொறுக்காதவர்கள் கத்திக்கொண்டிருந்தார்கள்..
எனக்குக்கூட நாலுமாசம் வாடகை பாக்கித்தான்
என்ன பண்ணறது..தம்பி ஊருக்குப் போயிருக்கு
உங்களுக்கு வாவு வழி பண்ணத்தான்
வயித்துல சுமந்துகிட்டிருக்கிறவகிட்ட
கத்தாதீங்கப்பா...
உரிமையாகப் பேசிவைத்தாள் வீட்டின்
உரிமையாளினி.. ஆறுதலாக இருந்தது.
அடுத்தநிமிடம் கைப்பேசியில் வந்தது
அம்மாவீட்டுக்குப் போனவன் அப்படியே
போய்விட்டான் நெருப்பு மூட்டியென்று..
எல்லாமும் கலைந்துவிட்டது
மிச்சமாய் இருக்கிற பிள்ளைகள் போதும்
இன்னும் இம்சைப்பட வயிற்றிலிருப்பதை
வரவழைக்கவேண்டாம்..
கலைத்துவைத்த பெண் மருத்துவர்
உடம்ப பாத்துக்கம்மா என்றார் அன்பாய்
உடம்பைப் பார்த்துக்கொள்வது எளிதுதான்
ஆனால் கலைந்துவிட்ட மனத்தை...
0000000000000