Sunday, July 11, 2010

அஞ்சலி


மஉறாத்மாவுக்கு ஒரு மானசீகக் கடிதம்

வணக்கம் மஉறாத்மாவே. இன்று உங்கள் பிறந்த தினம். ஒரு தேசத்தின் விடியலுக்காக இருளோடு போராடியவர் நீங்கள். எல்லோரும் வசதியும் வாய்ப்புமாக இருக்க நீங்கள் எளிமையைப் போர்த்தியவர் நீங்கள். எத்தனையோ தியாகங்களைச் செய்து இந்த தேசத்தைக் காத்தவர் நீங்கள். வன்முறை வேண்டாம் என்று சத்தியத்தையும் அஉறிம்சையையும் கடைசிவரை சுவாசித்த நீங்கள் ஒரு வெறியாளனின் வன்முறைக்கு உயிர் நீத்தீர்கள். உலக நாடுகளில்கூட மரியாதைக்குரிய மனிதராக இன்றும் போற்றப்படும் ஒரு மேன்மையாளராக வாழ்ந்தவர் நீங்கள். பணத்தாள்களிலும், காசுகளிலும் என அரசின்
பலவற்றில் கருப்பு வெள்ளையிலும் வண்ணங்களில் பொக்கைவாய் சிரிப்போடு இருக்கிறீர்கள்.
உங்களைப் புறத்தோற்ற அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிற தேசம் அகத்தளவில் உங்கள் கொள்கைளை மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அன்றைக்குவிட இன்றைக்குத்தான் வன்முறை பல்லாயிரம் கரங்களைக்கொண்டு அப்பாவி மக்களை வதம் செய்துகொண்டுகிறது. வீசியெறியப்பட்ட காய்ந்த மலர்க்கொத்துக்களைப் போல கொத்துகொத்தாக மக்கள் உடல் சிதைந்து இறந்துபோகிறார்கள். பொதுவிடங்களிலும், ரயில் பயணங்களிலும், மகிழ்ச்சியான குடும்பத் தருணங்களிலும். பெரும்பாலும் குழந்தைகளும், வயதானவர்களும், பெண்களும் என அப்பாவிமக்களையே உயிர்குடிக்கிறது வன்முறை. இங்கே அரசியல் என்பது பலவித மாய வலைகளாலும் சூதுக்களாலும் நேர்மையற்ற முறைகளாலும் இரக்கமற்றும் அமைந்து இருக்கிறது. அறம், சத்தியம், தர்மம், நீதி என்று எந்தப் பெயரில் கூவி நின்றாலும் கேட்பாரில்லை. தேசம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது நெருப்பில் விழுந்த புழுபோல.

வேலை பார்ப்பவனுக்கு வேலை இல்லை, நியாயம் பேசுபவன் தாக்கப்படுகிறான், பணம் இருந்தால்தான் எல்லாமும் நடக்கிறது, பணம் வாங்கிக்கொண்டவன் இல்லையென்கிறான், கல்வி கொள்ளையர்களின் கைப்பொருளாக இருக்கிறது, இளையவர்களின் மனங்களில் பல்வகை விஷங்கள் துர்வப்பட்டிருக்கின்றன..யாரிடமும் ஒழுக்கமில்லை, ஒழுக்கமாயிருப்பவன் கேலிக்குரியவனாகிறான், சாதிவெறியை சுவாசித்தபடியே எழுகிறார்கள், இயங்குகிறார்கள், உறங்குகிறார்கள், அப்படியே வாழ்ந்து சாகிறார்கள், எல்லாமும் உச்சமாகவே இருக்கிறது..யாரிடமும் நேர்மையில்லை..பேசுகிற வார்த்தைகளில் ஒழுங்கில்லை..பதவியில் இருப்பவர்கள் கோடிகோடியாய் சேர்த்து சுகம் கண்டு கிடக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு சூதாட்டக் காய்களாய். தகுதி என்பது தகாத சொல்லாய் இருக்கிறது. பரிந்துரையும், சாதியப் பின்னணியும், வன்முறையும் மிகச் சிறந்த தகுதியாய் இருக்கிறது. இந்த தேசம் இன்னும் விடுதலை பெறவேண்டியிருக்கிறது.

மஉறாத்மாவே நீங்கள் நினைத்த தேசம் வேறு. இன்று இயங்கும் தேசம் வேறு. தேசத்தைக் காக்கவேண்டியவர்களே பயிர் மேய்கிறார்கள். ஜனநாயகம் என்பது முழுக்கப் புதைக்கப்பட்டுவிட்டது. அரசு அலுவலகங்களில் இன்றும் வயதானவர்களின் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது மிகச் சாதாரணமான கோரிக்கைகளைகூட நிறைவேற்றிக்கொள்ளமுடியாமல்..மனுக்கள் பிணங்களைப்போல எரிக்கப்படுகின்றன.
லஞ்சம் என்பது முறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் நேர்மையும், முறைமையும், எளிமையும் ஆங்காங்கே நெரிசலான மக்கள்கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையைப் போல இன்னும் திணறிக்கொண்டிருக்கின்றன. உங்களுடைய பிறந்த நாளில் உங்கள் ஆன்மாவோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன். இந்த தேசம் முழுக்க எத்தனையே மனங்கள் உங்களோடு இன்று பகிர்ந்துகொள்ளலாம். அத்தோடு இதுவும்.

வணக்கம் மஉறாத்மா. வாழ்க நீ எம்மான்.
அக்டோபர் அஞ்சலிபேருந்து நடத்துநர்கள் என்றால் நமக்கு பின்வருவனவே நினைவிற்கு வரும்.

1. சொன்ன இடத்தில் நிறுத்தாதவர். இறக்கிவிடாதவர்.
2. பாக்கி சில்லரை தராதவர்.
3. கடுகடுவென்று பேசுபவர்.
4. இலவச பாஸ் கொண்டு வரும் மாணவர்களை அலைக்கழிப்பவர்.
5. மரியாதையில்லாமல் சமயங்களில் பேசுபவர் (பல சமயங்களில்)

இதையெல்லாம் தாண்டி ஒரு சம்பவம். கோயம்புத்துர்ரில் ஒரு பேருந்து
நடத்துநர் மனைவிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட கணவரும் பொறியியல் பட்டப்படிப்பு
படிக்கும் அவரது மகனும் மனமொத்து உடல் உறுப்புக்களைத் தானமாகத தர சம்மதித்துள்ளனர். இதன்படி இறந்துபோன பெண்ணின் உறுப்புக்கள் நான்கு பேருக்கு வாழ்வை மீட்டுக்கொடுத்திருக்கிறது. தானமாகப் பெற்றதில் ஒருவரின் மனைவி நெகிழ்ந்துபோய் என் உயிருள்ளவரை உங்களை மறக்கமாட்டோம். என் பெண்ணின் திருமணம் நடைபெறவுள்ளது. இனி எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் என்று அழைத்திருக்கிறார் கலங்கிய கண்களுடன்.
அந்த பேருந்து நடத்துநரின் மனைவியின் உறுப்புக்கள் தமிழ்நாடெங்கும் முகந்தெரியாத நான்கு பேரை வாழவைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன தமிழின் மேன்மை / தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது. பெருமை கொள்ள வைக்கிறது. ஒருபுறம் ஜாதி வெறிபிடித்துபோய் சங்கம் வைத்தும் இன்னும் பல வன்முறைகளை கடை பரப்பிக்
கொண்டாடும் சமூகத்தில் இப்படியும் நிகழ்வுகள் மனிதன் தொலைந்துவிடவில்லை. மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை. உயிரிரக்கம் பேசிய ராமலிங்க சுவாமிகள் இன்னும் பல சான்றோர்கள் வாழ்ந்த தேசம் இன்னும் பாழ்பட்டுவிடவில்லை என பல நம்பிக்கைகளை இச்சம்பவம் மனவயலில் விதைகளாகத் துர்விப் போகிறது.

பேருந்து நடத்துநர்கள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்த இச்சம்பவம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அந்த பேருந்து நடத்துநருக்கும் அவரது மகனுக்கும் ஈடு கட்ட முடியாத இழப்பென்றாலும் அதனையும் மீறி அவர்கள் செய்திருக்கும் தியாகம் விலை மதிப்பற்றது. ஈடு செய்யமுடியாத மேன்மை மிக்கது. அவர்களை வணங்குவோம். அவரின் மனைவி சித்திராதேவியின் ஆன்மா இறைவன் திருவடிக்கு நிச்சயமாக சென்று சேர்ந்திருக்கும் அந்த இறையான்மாவை வணங்குவோம்.