Tuesday, June 18, 2013

ஜால்ரா....குறுந்தொடர் 4

ஜால்ரா.....குறுந்தொடர்...4



                              அந்த செவ்வாய்க்கிழமை நல்ல கிழமையாக விடியவில்லை தனலெட்சுமிக்கு.

                             காலையிலேயே தகவல் வந்துவிட்டது.

                              அவளுடைய மருமகனுக்கு ஏதோ விபத்து என்று. கோயில் வாசலில் நீர் தெளித்துக் கூட்டிவிட்டு கோயிலுக்கு உள் பிரகாரம்தான் கூட்டியிருப்பாள் அதற்குள் செய்தி வந்துவிட்டது.

                                புள்ளயாரப்பா இது என்ன சோதனைப்பா,, என்றபடி பதறி ஓடினாள் ஆட்டோவில்.

                                பக்கத்தில் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.

                                வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது திருப்பத்தில் வந்த மினி வேனைக் கவனிக்கவில்லை. கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. ஆள் ஏற்கெனவே மெலிதான தேகம். இப்போது இதுவேறு.

                                எதுவும் செய்யாமல் அப்படியே போட்டிருந்தார்கள்.

                                வலி தெரியாமலிருக்க ஊசி போட்டிருந்தார்கள்.

                               தனலெட்சுமி வார்டிற்குள் நுழைந்தோடினாள்.

                               அய்யய்யோ தெய்வமே... என்னப்பா ஆச்சு?   மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
                               அம்மா...அம்மா... என்று பேசமுடியாமல் கணவனைக் காட்டியபடி அழுதாள்.
                                மல்லாக்கப் போட்டிருந்தார்கள்.
                                ஊசிபோட்டதையும் மீறி வலியிருப்பதை அவனின் முக அசைவுகள் காட்டிக்கொண்டிருந்தன.
                               டாக்டர் வந்ததும் தனலெட்சுமி கதறினாள்.
                               டாக்டர் அய்யா.. எப்படியாச்சும்  என் மருமகனக் காப்பாத்துங்கய்யா... எனக்கும் என் மகளுக்கும் வேற நாதி கிடையாது.. ஜாதி சனம் கிடையாது டாக்டர் அய்யா..
                               அழக்கூடாதும்மா. பயப்படறமாதிரி இல்லே.. இடுப்பு எலும்பு முறிஞ்சிருக்கு. அத ஆபரேசன் பண்ணித்தான் சரிப்பண்ணணும்.. ஆனா..
                                 சொல்லுங்க டாக்டர் அய்யா..
                                  ஸ்கேன் எடுத்துப் பாத்துட்டுதான்  இன்னும் தெளிவா சொல்லமுடியும்.. ஆனா உயிருக்கு ஆபத்து இல்லே..
                                  என்றபடி டாக்டர் போய்விட்டார்.
                                  அவர் போனதும் ஒரு நர்சு வந்தாள். அவள் தனலெட்சுமியிடம் சொன்னாள்.
                                  இந்த பாரும்மா டாக்டர் சொல்லமாட்டாரு.. இங்க அத்தனை வசதியில்லே... வெறும் மாவுக்கட்டுத்தான்..பேசாம பிரைவேட் கொண்டுபோயிடுங்க.. கொஞ்சம் பணம் செலவாகும். ஆனா சரியாயிடும்.. இங்க மாவுக்கட்டுதான் ரொம்ப நாளாகும்.. அப்புறம் காலம் முழுக்கப் படுக்கையிலே இருக்கறமாதிரி ஆயிடும்.. நல்லா யோசிச்சு முடிவெடு..
                                   போய்விட்டாள்.
                                   தனலெட்சுமி மகளைப் பார்த்தாள்.
                                    மகள் தனலெட்சுமியைப் பார்த்தபடியும் அடிக்கொருதரம் கணவனைப் பார்த்தபடியும் அழுதுகொண்டிருந்தாள்.
                                    கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
                                    அன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்து பிரைவேட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தார்கள்.
                                     அவர்கள் சொன்ன தொகை தனலெட்சுமியை அதிர வைத்தது. இருப்பினும் யோசித்தாள்.
                                      ஆபரேசன் செய்துடுங்க டாக்டர் என்றாள்.
                                      அம்மா.,. அவ்வளவு பணத்துக்கு எங்கம்மா போவே? என்றாள்.
                                     எல்லாம் வலம்புரி ஐயா பார்த்துக்குவார்.
                                     சரி.. பாத்துக்க.. நான் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடறேன் என்று கிளம்பி ஆட்டோ எடுத்துக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தாள்.
                                     ஆட்டோவை அனுப்பிவிட்டு நேராக வேணுகோபால் வீட்டுக்குப் போனாள்.
                                     வா தனம் என்றார் வேணுகோபால்.
                                     என்ன விஷயம்? என்றார்.
                                     என் வீட்டை எடுத்துக்கிட்டு பணம் கொடுங்க என்றாள் நேரடியாக.
                                     என்னது வீட்டை வித்துடறியா?
                                   ஆமாய்யா எனக்கு வேறுவழி தெரியலே என்றாள். சொல்லிவிட்டு மருமகனுக்கு ஏற்பட்ட விபத்தைச் சொன்னாள்.
                                    இப்ப அவ்வளவு பணம் இல்லியே,,, ரெண்டு மூணு நாளாகும்.
                                    பரவாயில்லைங்கய்யா.. இப்ப கொஞ்சம் பணம் கொடுங்க. ஆஸ்பத்திரிக்குக் கட்டறதுக்கு.
                                     உடனே வேணுகோபால் எதுவும் பேசாமல் உள்ளேபோய் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே ஒரு பத்திரத்தையும் கொண்டு வந்து

                                  தனம் உன்னை நம்பறேன். .. பேச்சு மாறமாட்டே,, ஆனா எனக்கு நேரம் சரியில்லே,,  அதனால இந்தப் பேப்பர்லே ஒரு கைநாட்ட வச்சிடு எனக்கு வீடு விக்கறதா,,,

                                 தனலெட்சுமி எதுவும் பேசாமல்  செய்தாள்.
                                பணத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனாள்.
                                பணத்தைக் கட்டினாள்.
                                ஏதும்மா இவ்வளவு பணம்? என்றாள் மகள்.
                                சொன்னாள்.
                                என்னம்மா?  என்று அதிர்ந்தாள்.
                                விடு.. அத நானா எடுத்திட்டுப்போவப்போறேன். உங்களுக்குத்தான்.. மாவா கொடுத்தா என்ன சுட்டுப் பணியாரமா கொடுத்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான். என்றாள்.

                                                                                                          (ஜால்ரா ஒலிக்கும்).