Sunday, October 26, 2014

அன்புள்ள...

                  இன்றைக்கு தினமணியில் ஒரு கவிதைபோன்ற செய்தியை வாசித்தேன்.

                    எந்த ஓர் உயிரையும்
                    அதிகம் நேசித்துவிடாதே
                    அவர்கள் பேசாத
                    ஒவ்வொரு நொடியும்
                    மரணத்தைவிட
                    கொடுமையாக இருக்கும்..

உண்மைதான். இந்த நேசிப்பு என்பது ஒருவரோடு காலம் முழுக்க அருகில் இருந்துதான் நேசிக்கவேண்டும் என்பதில்லை.  அது வாய்த்தவருக்குக் கொடுமையானது. அதைப்போன்றுதான் அவர்களின் எழுத்துக்களும். ஒரு படைப்பாளியைப் பார்த்துப் பேசாமலேயே அவரின் எழுத்துக்களோடு வாழ்வது அதனை நேசிப்பது என்பது அற்புதமானது.

               இந்த வாரம் முழுக்க மனம் கணத்திருக்கிறது.

               காரணம் மூன்று மரணங்கள். பேரிழப்புகள்.

               1. நடிகர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.
              2.  எழுத்தாளர்  பெருமைமிகு ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.

              3. எழுத்தாளர் கலை விமரிசகர் தேனுகா அவர்கள்.

              முதல் இரண்டுபேரோடு பழக்கமில்லை என்றாலும் படங்களின் வழியாக முன்னவரும் எழுத்துக்களின் வழியாகப் பின்னவரும் என் மனதை நனைத்தவர்கள். தெளிவான உச்சரிப்பில் வசனம் பேசி காட்சிக்கு உயிர்கொடுத்தவர் எஸ்எஸ்ஆர். அவரின் படங்கள் படங்களல்ல வாழ்க்கை. வாழ்க்கையாக அவரின் படங்களின் அவரின் நடிப்பு. அவரின் குடும்பத்திற்கு மனத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலியும் ஆறுதலும்.

              2. தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் எங்கள் குரு எங்களுக்கு நல்ல இலக்கியங்களுக்கான திசையில் வழிகாட்டி நின்றபோது எண்பதுகளில் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் படித்து நெகிழ்ந்தது உண்டு. காலந்தோறும் பெண் என்கிற அவரின் சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையிலான பெண் குறித்த சிந்தனைப் பதிவுகளான நுர்லை வாசித்தபோது நிறைவு. படைப்புலகிலும் ஆய்வின் பரப்பிலும்  அவரின் தேர்ந்த தெளிவும் எழுத்தும் நாளைவரையும் அழியாக கோலங்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமை செலுத்திய பெண் எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன். சூடாமணி அநுத்தமா அம்பை சிஆர் ராஜம்மா காவேரி வாஸந்தி என பெண் எழுத்துக்களில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர்கள். இதற்குக் காரணம் இவற்றை வாசிக்கச் சொன்ன குரு ப்ரகாஷ் அவர்கள்.

              பலர் பல எழுத்தாளர்களுடன் குறிப்பிடத்தக்க நினைவுகளில் கலநதுகொண்டு சரியாக அவர்களுட்ன் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் புகைப்படம் எடுத்துப் பரிமாறும்போது பொறாமையாக இருக்கிறது. எப்போதும் நம்மைவிட்டுப் போகமாட்டார் என்று ஒவ்வொரு மணிக்கணக்கில்அருகில இருந்தும் என் குரு ப்ரகாஷ்உடன் ஒரு புகைப்படம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு அணிந்துரை வாங்கமுடியவில்லை கடைசிவரை. எனவே ராஜம கிருஷ்ணன் போன்றவர்களை எப்படியேனும் ஒருமுறை சந்தித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது. இது என் ராசி போலும். ஒவ்வொருவரின் இழப்பின் பின்னேதான் இதனை உணரும் வாய்ப்பை எனக்களிக்கிறார் கடவுள்.

             இப்போது என் கண்களில் கரிப்பு மணிகள். அம்மாவின் ஆன்மா அமையுறட்டும்.

               மூன்றாவது கலை விமரிசகர் தேனுகா. வங்கிப் பணியில் இருந்துகொண்டு ஓவியங்களைப் புதுஉலகின் திரையில் தரிசிக்க வாய்ப்பளித்தவர். வண்ணங்கள் வடிவங்கள் வழியாகவே அவர்அறிமுகம். ஒவ்வொரு தஞ்சைக் கூட்டத்திற்கும் அவர் வருவார். ப்ரகாஷ் அழைத்திருப்பார். முதல் அறிமுகத்தில் ஹரணி என்று அறிமுகம் செய்துகொண்டேன். இனிமையாக ஓவியம் குறித்த புரிதலை உண்டாக்கினார்.

                அதற்கு சரியாக நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன் அவரை. நான்காவது முறை சமீபத்தில் தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய வாசகர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது நானும் நண்பர் அனன்யா அருள் அவர்களும் சென்று நலம் விசாரித்தோம். என்னுடைய சந்தேகப்புத்தி என்னைத் தெரிகிறதா சார் என்றேன். என்ன ஹரணி நன்றாகத் தெரிகிறது என்றார். உடல் தளர்ந்திருந்தது. பின் அவரிடம் கவிஞர் நா விச்வநாதன் அவர்கள் பேசத்தொடங்கப் பிரிந்தோம் நானும் அருளும். வழக்கமாகப் பேசுகிற பேச்சிலிருந்து மாறுபட்டிருந்தது தேனுகாவின் பேச்சு. மாறுபட்ட பேச்சு. உணர்ச்சி இழையோட இந்துவின் தன்மைகுறித்து தேவை குறித்து மிக அழகாகப் பேசினார். என்ன இது தேனுகா இன்றைக்கு மாறுபட்டிருக்கிறார் பேச்சில் என்றுகூட நானும் அருளும் நினைத்தோம். கூறிக்கொண்டோம் பரஸ்பரம். கடைசிப் பேச்சு என்றாலும் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் சுவை குறையாத தளராத பேச்சு அது.

                 இன்றைக்கு அவர் இவ்வுலகிலிருந்து உடல் வழியாகவும் விடைபெறுகிறார். அவரின் எழுத்துக்கள் அவரின் முகம் இன்றைக்கும் முகத்தில் ஓர் ஓவியம்போல மனத்திரையில் விரிந்துகொண்டேபோகிறது.

                 தி இந்து வாசகர் விழாவில் அவரிடம் கைகுலுக்கம்போது  சிறுபிள்ளைகளின் கழற்றிப்போட்ட சட்டைகளைக் கையில் எடுப்பதுபோது மிருதுவாக இருந்தது அவரின் குலுக்கல். அது தளர்வு என்றாலும் ஓர் ஓவியத்தைத் தொடடுத் தடவுவதுபோலிருந்தது.

                  தேனுகா சார்...