என்னமோ நடக்குது…
குறுந்தொடர்… அத்தியாயம் 4
அழகான வடிவமைப்பில் வண்ணப்பெட்டி ஒன்றைக்
குப்புறக் கவிழ்த்ததுபோல் இருந்தது அந்த தனியார் மருத்துவமனை. நாலைந்து ஆங்கிலஎழுத்துகள்
இடையிடையே புள்ளிகள் பெற்றிருக்க குரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ் என்று பெயரிட்டு மயில் தொண்டைவரையிலான
உருவத்தின் வரைகோடாய் அந்த மருத்துவமனையில் சின்னமும் அமைந்திருந்தது. அந்த மருத்துவமனையின்
உரிமையாளர் குடும்பத்தில் யாருக்கோ மயில் பிடித்திருக்கிறது. அதற்காக மயில்போன்ற குணமுடையவர்கள்
என்று கணித்துவிடமுடியாது.
ஐந்து மாடிகளும் ஒரு மொட்டைமாடியும் அந்த
மொட்டை மாடியில் தனியார் நிறுவன செல்போன் டவரும் உயர்ந்திருக்கும் மருத்துவமனை அது.
உரிமையாளர் ஒரு டாக்டர். அவர் மகனும் மருமகளும் டாக்டர்கள். அவர்களுக்கென்று ஆளுக்கொரு
மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் உள்ளன. இதுதான் தலைமை மருத்துவமனை. மற்றவை இதன்கிளைகள்.
இங்கு அனுமதிபோட்டு அங்கே மருத்துவமும் அறுவையும் செய்வார்கள். கிளைகளில் அனுமதி போட்டு
இங்கு வசதிக் குறைவு தலைமை மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும் என்று ஒரு மருத்துவக்கதையை
ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசி அனுப்புவார்கள்.
இத்தகைய மருத்துவமனையின் மூன்றாம்
தளத்தில் உள்ள 303 ஆம் எண் அறையில் படுத்திருக்கிறார். இல்லை படுக்க வைத்திருக்கிறார்கள்
கோபாலகிருஷ்ணனை. சாலையில் போய்க்கொண்டிருந்தவர் திடீரென சாலையோரத்தில் மயங்கி விழுந்தார்.
உடன் உதடுகள் கோணி வலதுகை இழுத்தது. உடன் செய்திகள் செல்போனில் பறந்து இங்கே கொண்டுவந்தார்கள்.
கொண்டு வந்து சேர்த்தவன் லோகு என்கிற லோகநாதன்.
அவன் தந்தையார்தான் கோபாலகிருஷ்ணன்.
மூன்றாம் தளத்தின் அறைக்கு வெளியே
வராண்டாவில் உட்கார்ந்திருக்கிறான் லோகு. அவனோடு சில உறவுகள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது? அவர்
யாருக்கு என்ன கெடுதல் செஞ்சாரு.. இப்படிக் கெடக்கறாரு.லோகுவின் அம்மா சாவித்திரி அழுதுகொண்டிருந்தாள்.
சர்க்கரை அதிகமாகிவிட்டது.கூடவே இரத்த
அழுத்தமும். கொண்டுவந்ததிலிருந்து மயக்கத்திலிருக்கிறார். லேசாக கோமா தாக்கும் வாய்ப்பு
இருப்பதாக மருத்துவர் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்.
எப்படியும் நாலைந்து மணிநேரங்கள் கடக்கவேண்டும் என்கிறார்கள். இவர்கள் அழுதபடியே காத்திருக்கி‘றார்கள்.
எதிர்பாராமல் தலையில் கல்விழுந்ததுபோல லோகு கவிழ்ந்துகிடக்கிறான்.
தம்பி லோகு ஏதாச்சும் சாப்பிடுப்பா..
அப்பாவுக்குச் சரியாயிடும். சுகர் லெவல் குறைஞ்சா எழுந்திரிச்சு உக்காந்துடுவார்..
எனக்கு வேணாம் சித்தி எதுவும்? அப்பா
எழுந்து வரணும்..
கண்டிப்பா அவருக்கு ஒண்ணும் ஆகாது..
அதுக்காக நேத்துலேர்ந்து நீ வெறும் வயிறா இருக்கக்கூடாது.. ஏதாச்சும் சாப்பிடு.. வெறும்
வயித்துல ஆசுபத்திரியில இருக்கக்கூடாது.. ஏதாச்சும் கோளாறு ஆயிடும்..
வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள்.குடித்தான்.
இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றன.
லோகு கல்யாணத்திற்கு. எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது லோகு அப்பா
மருத்துவமனையில் மயக்கமாய்..
பெண்ணின் அப்பா வந்திருந்தார் மருத்துவமனைக்கு.
தம்பி.. இந்த நேரத்துல கேக்கறேன்னு தப்பா
நெனக்காதீங்க. நல்ல காரியம் தள்ளிப்போடக்கூடாது. நாம நிச்சயித்த நாள்ல திருமணத்த முடிச்சுடலாம்..
மன்னிச்சுக்கங்க அங்கிள்.. எங்கப்பா வராம
நான் தாலி கட்டமாட்டேன். இது அவரோட கனவு.. அவர் நினைச்சபடிதான் நடக்கணும் இந்தக் கல்யாணம்.
அவர் எப்ப எழுந்து வர்றாரோ அப்பத்தான் என் கல்யாணம்.. என்ன வற்புறுத்தாதீங்க.. அப்படின்னா
இந்தக் கல்யாணத்த நிறுத்திடலாம்.. எங்கப்பாவிட எதுவும் முக்கியமில்ல.. லோகு தெளிவாக
அதேசமயம் வருத்தமுடன் பேசினான்.
என்ன லோகு இப்படிப் பேசறே? நல்ல காரியத்த
நடத்திடலாம். அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது..
வேணாம் சித்தப்பா.. எங்கப்பா வந்தாதான்
எனக்குக் கல்யாணம் இல்லாட்டி எனக்கு எதுவும் வேணாம்.
பிடிவாதம் பிடிக்காதே… கல்யாணம் நின்னுட்டா..
கல்யாணப் பொண்ண தப்பா பேசுவாங்க.. அவ வந்த நேரம்னு..
அப்ப அதுக்காக எங்கப்பா இல்லாம கல்யாணம்
பண்ணப் பாக்கறீங்களா?
இல்ல லோகு…
சித்தப்பா.. எங்கப்பா.. உங்க அண்ணன் பத்தி
உங்களுக்குத் தெரியும்.. தயவுசெஞ்சு கட்டாயப்படுத்தாதீங்க.. அப்பா இல்லாம அவர் வாழ்த்தாம
எந்த ஒரு வாழ்க்கையும் எனக்கு வேணாம்..
மருத்துவர் வந்து சொன்னார்..
சாரி.. உங்கப்பா கோமாவுக்குப்போயிட்டார்..
நாங்களுக்கும் முயற்சிப் பண்ணறோம்.. கொஞ்சம் நாளாகும்.. ஏன் நாளைக்கே எழுந்து வரலாம்..
தொடர்ந்து சிகிச்சை நடந்தாதான் இது சாத்தியம்..
வேறு வழியில்லை.. விதியின் திட்டமிட்ட
செயல்.
உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் லோகுவிடம்..
லோகு உங்கப்பா போன்ல யார்கிட்டயே பேசியிருக்காரு..
அதுக்கப்புறம்தான் கீழே விழுந்திருக்காரு.. அங்கே பக்கத்துலேயே செல்போன் கெடந்துச்சி..
அப்பாக்கிட்ட பேசினவரு குரல் செல்போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கு.. அப்பா எந்த காலையும்
ரெக்கார்ட் பண்ணித்தானே பேசுவாரு..
கொடுங்க மாமா.. என்று தாவி வாங்கினான்
லோகு.
செல்போனில் ரெக்கார்ட் ஆகியிருந்ததைக்
கேட்டார்கள்.
டேய் கோபாலகிருஷ்ணா ஒரு தடவ சொன்னா கேக்க
மாட்டீயா? உனக்கு அறிவில்லியா? எத்தன தடவ சொல்றது.. உம் பையனோட கல்யாணத்த நிறுத்து..
கல்யாணப்பொண்ணு எனக்குச் சொந்தம்..
நான் நிறுத்தமுடியாது.. உன்னால ஆனதப்
பாத்துக்கோ..
சரி.. நல்லா போய் உம் பையன தாலிக்கட்டச்சொல்லு..
அட்சதைப் போடற ஒவ்வொருத்தர் கையிலும் நான் போட்டோவ கொடுத்துடறேன்.. கல்யாணப்பொண்ணோட
காதல் லீலைகள் போட்டோவை.. எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்து பாத்துட்டு ஆசிர்வாசம் பண்ணட்டும்..
அடப்பாவி.. அய்யோ…
அப்புறம்தான் கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தது.
லோகு.. டேய் யாருடா நீ? என்று மருத்துவமனை
வளாகத்தில் கத்திவிட எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஒரு நர்சு ஓடிவந்தாள்.. என்ன சார் இது ஹாஸ்பிட்டல்…
கத்தக்கூடாது. பேஷண்ட்ஸ்ங்க டிஸ்டர்ப் ஆகியிடுவாங்க.. டாக்டரு சத்தம்போடுவாங்க.. அமைதியா
இருங்க சார்..
யாராக இருக்கும் என்று லோகு யோசிக்க
ஆரம்பித்தான். மனதுக்குள் கோபி வந்து நின்றான். கோபி… என்று பல்லைக்கடித்தான் லோகு.
(இன்னும்
நடக்கும்)