Saturday, July 13, 2013

குழந்தை இலக்கியம்......... காந்தியும் குமரேசனும்
 அறிமுகம்


                              நான் எழுத்துலகில் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு குழந்தைகள் என்றால் அளவுக்கதிகமான உணர்வுகளை வெளிப்படுத்துவது உண்டு. எனவே குழந்தை இலக்கியம் என்பது குறித்த உணர்வு எப்போதும் என்னுள்  அணையாத நெருப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது.

                                 1. குழநதைப் பாடல்கள்
                                 2. குழந்தைக் கதைகள்
                                 3. குழந்தைகள் தொடர்பான விளையர்ட்டுப்பொருட்கள்
                                 4. குழந்தை இலக்கியங்களை ஆவணப்படுத்துதல்
                                 5. குழந்தைகளுக்கான நாவல்கள்
                                 6. குழந்தைகளுக்குப் படக் கதைகள்
                                 7. குழந்தைகளுக்கு அறிவியலைக் கதையாகக் கூறல்.
                                 8. குழந்தைகளுக்கான நாடகங்கள்
                                 9. குழந்தைகளுக்காக உலகக் குழந்தை இலக்கியங்களை
                                     மொழிபெயர்த்தல்
                                10. குழந்தைகளுக்கான அகராதி உருவாக்கம்

எனப் பன்முகத் தளங்களில் என்னுடைய திட்டங்கள் திட்டமிடப்பட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். இதன் ஒவ்வொரு பிரிவையும் ஒரு மாதிரியாகத் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கே இந்த அறிமுகம்.

                              மைசூர் இந்திய  மொழிகள் நடுவண் நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்துடன் இணைந்து நடத்திய குழந்தைகளுக்குக் கதை எழுதுதல் எனும் பயிற்சிப்பட்டறையில் 15 நாள்கள் கலந்துகொண்டு சுமார் 50 கதைகளை எழுதித் தந்துள்ளேன். அந்த 50 கதைகளும் தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் படங்களுடன் கூடிய புத்தகங்களாக இந்திய மொழிகளில் உலவ விருக்கிறது. அதற்கான படிகளைப் புத்தககம் வெளிவந்ததும் எழுதிய ஆசிரியர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள். அவை வந்ததும் அறிமுகப்படுத்துவேன்.

                              தற்போது 2008 இல் யுரேகா புக்ஸ நிறுவனத்தாரால் நண்பர் எழுத்தாளர் ஜாகீர் ராஜா அவர்களின் முயற்சியால் என்னுடைய 5 கதைகளைக் கேட்டுப் பெற்று அவை புத்தகமாக வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றைத் தற்போது வெளியிடுவதற்குக் காரணம் குழந்தை இலக்கியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான அவசியத்திற்காகத்தான்.

                             புத்தகத்தின் தலைப்பு..... காந்தியும் குமரேசனும் என்பதாகும். இதில் உள்ள 5 கதைகளில் ஒரு கதை உங்கள் பார்வைக்காக மகிழ்ச்சியுடன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                       காந்தியும் குமரேசனும்.


               குமரேசன் அவன் அப்பா மாரியுடன் மார்க்கெட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் அப்பா ஒவ்வொரு மீன் வகைகளையும் கூறுகளாகப் பிரித்துக்கொண்டிருந்தார்.

                      டேய் குமரேசு போய் ஒரு கட்டு காஜா பீடி வாங்கிட்டு வாடா என்றான் .

                       போப்பா முடியாது... நீ போய் வாங்கிக்க... புகை பிடிச்சா கேன்சரு
வந்துடும்னு வாத்தியாரு சொல்லியிருக்காரு.

                         கம்னாட்டி பெரிய கலெக்டரு மவன்.. கேன்சரு எனக்குத்தானே
வரும்... போய் வாங்கிட்டு வாடா... என்றான் மாரி மறுபடியும்.

                          முடியாதுப்பா.. இத எல்லாம் பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு
உறுதிமொழி எடுத்திருக்கோம்.

                           மாரிக்குக் கோபம் வந்தது. திரும்பவும் கேட்டான்.
நான் வியாபாரத்த பாக்கணும் போறியா.. மாட்டியா...

                             முடியாதுப்பா.. என்றதும் சட்டென்று குமரேசனை காலால் உதைத்தான். இதை எதிர்பார்க்காத குமரேசன் நிலைதடுமாறி அப்படியே குப்புற விழுந்து அம்மா என்று கத்தினான்... பெயர்ந்த சிறுசிறு ஜல்லிகள் முளைவிட்டிருந்த தரை அது... அதில் குமரேசன் முகம் மோதி கண்ணுக்கு அருகில் உதட்டில் எனக் கிழிந்து ரத்தம் கொட்டியது..

                            என்னய்யா மனுஷன் நீ...? இப்படியா உனக்கு கோவம் வரும்? என்று காய்கறிகடை போட்டிருந்த ஒரு பெண் ஓடிவந்து குமரேசனைத் துர்க்கினாள்.

                           முகமெங்கும் ரத்தம் வழிந்தது.

                            சாவட்டும் கம்னாட்டி பயபுள்ள... ஒருவேலை சொன்னா கேக்க மாட்டேங்குது... எதுத்து எதுத்து பேசுது.. பெரிய  மயிறு படிப்பு படிக்குது... ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே அப்பனை மதிக்கமாட்டேங்குது..

                              எல்லோரும் மாரியைத் திட்டினார்கள்.

                              புள்ள முகத்தப் பாரு... ரத்தமா வழியுது.. ஆசுபத்திரிக்கு
அழைச்சிட்டுப் போங்க... குமரேசனை யாரோ அழைத்துக்கொண்டு போனார்கள்.

                                 டாக்டர கேட்டார்

                                 எங்கடா விழுந்தே?

                                 எங்கப்பா உதைச்சு தள்ளிப்புட்டாரு.. அடிபட்டுடுச்சு...
என்றான்.

                                  உங்கப்பா என்ன வேலை செய்யறாரு?

                                 மீன் புடிச்சி விக்கிறாரு.. மார்க்கெட்ல

                                 நீ ஏன் மார்கெட்டுக்கு வந்தே? அவனுக்கு ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டுக்கொண்டே கேட்டார்.

                                  ஸ்கூல்ல கட்டுரை நோட்டு சாரு கேட்டாரு... மீன் வித்து வாங்கித்தாரேன்னு எங்கப்பாதான் அழைச்சிட்டு வந்தாரு... என்றான்.

                                 எதுக்கு உங்கப்பாரு உதைச்சாரு?

                                 பீடி வாங்கிட்டு வரச்சொன்னாரு.. முடியாதுன்னேன்.. அதுக்காக ஒதச்சாரு.. பீடி பிடிச்சா கேன்சரு வரும்னு எங்க சார் சொன்னாரு.. அவங்க அப்பா அப்படித்தான் செத்தாருன்னு சார் சொன்னாரு.. பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கோம் பசங்க எல்லோரும்..

                                  வெரிகுட்.. என்று அவனைத் தோளில் தட்டியபடி டாக்டர்
போய்விட்டார்.

                                  வெளியே வந்தார்கள்.

                                   விசயம் கேள்விப்பட்டு குமரேசனின் அம்மா தனம் ஓடிவந்தாள்.

                                     என்னடா ஆச்சு? பதறிப்போய் கேட்டாள்.

                                     ஒண்ணும் இல்லம்மா.. அப்பா ஒதச்சிட்டாரு..

                                      சரி நீ ஸ்கூலுக்குப் போ.... என்றாள்.

                                      கட்டுரை நோட்டு வாங்கணும்மா.. என்றான்.

                                      தனம் மாரிக்கு அருகில் போய் மீன்கள் கிடந்த ரெக்சின் சீட்டைத் துர்க்கி அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.

                                     எதுக்குடி பணத்தை எடுக்கிறே என்றான் மாரி கோபமாய் புகையை விட்டபடி...

                                     அவனுக்கு நோட்டு வாங்க என்றாள் தனம்.

                                     பெரிய கலக்டரு படிப்பு படிக்குது..போ.. நோட்டை வாங்கிக் குடு என்றான்.

                                      கலக்டருக்குத்தான் படிக்கப்போறான். உன்ன மாதிரி பீடி வலிச்சிக்கிட்டு மீன் விக்க சொல்றியா? என்று கேட்டபடி பணத்தை குமரேசன் கையில் கொடுத்து ...நோட்டு வர்ங்கிட்டுப் போ.... என்றாள்.

                                     வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லோரும் கேட்டார்கள்.

                                      என்னடா குமரேசு ஆச்சு?

                                       கீழே விழுந்திட்டேன் என்றான்.

                                       வகுப்பு தொடங்கியதும் வாத்தியார் வந்து வருகைப் பதிவேடு எடுக்கையில் குமரேசன் பெயரைக் கூப்பிட்டதும் எழுந்து வணக்கம் சொன்னான். நெற்றி வலித்தது. முகமெங்கும் வீங்கிக் கிடந்தது. முனகியபடி உள்ளேன் ஐயா..

                                       குரல் சரியாக விழாததால் வாத்தியார் நிமிர்ந்து குமரேசனைப் பார்த்தார்.

                                       இங்க வாடா என்றார்.

                                      அருகே போனான்.

                                       என்னடா ஆச்சு?

                                       அடிபட்டுடிசசி சார்.. என்றான்.

                                       எப்படி அடிபட்டுச்சி?

                                       விவரம் சொன்னான். கேட்டதும் வாத்தியார் முகம் மலர்ந்தது.

                                    உடனே மாணவர்களைப் பார்த்து சொன்னார்.

                                    குமரேசன் மாதிரித்தான் இருக்கணும். உறுதிமொழிப்படி நடந்திருக்கான்.. இப்படித்தான் தீய செயல்களை எதிர்த்து நிக்கணும்.. யார் செஞ்சாலும் தப்புத்தான்... அப்பாவாக இருந்தாலும் சரிதான்.. காந்தி இப்படித்தான் போராடினாரு.. நான் குமரேசனைப் பாராடட்றேன். ..எல்லாரும் கை தட்டுங்க என்றர்ர்.

                                   எல்லாரும் கைதட்டினார்கள். குமரேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வலி குறைந்தது போலிருந்தது.