கவிதைகள்.....கவிதைகள்.....
00
எப்போது குறையும்
டீ மாஸ்டரின்
முகச்சூடு.
000
00
ஒவ்வொரு நாளும்
பகலும் இரவும்
யார் யாருக்கு?
000
00
ரயில் ஓடாத
தண்டவாளத்தில் ஓடுகிறது
மன ரயில்
(நன்றி. சௌந்தர சுகன்.... அக்டோபர்...2013).
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பேரச்சம்....
அப்பா இறந்துபோனபின்
ஒரு மாலையில்
பிள்ளை கேட்டான்
நீ எப்போ தாத்தா ஆவே?
ஏனென்றேன்
நான் அப்பா
ஆவணுமே
என்றான்
இயல்பாகத்தான் கேட்டான்
பிள்ளையென்றாலும்
உள்ளுக்குள்
பெருக்கெடுக்கிறது
இயல்பற்ற
பேரச்சம்....
(நன்றி. ஆனந்தவிகடன்.....6.11.2013)
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இருளும் ஒளியும்...
- ஹரணி
தீபாவளி கூட்டம் சாலை முழுக்கத் தெரிந்தது.
இரு சக்கர வாகனங்களில் விரைந்தபடியும்... சைக்கிளில் மிதித்தபடியும்... நடந்துகொண்டும்.. அவரவர்கள் கைகளில் வாகனங்களில் பளபளப்பான பல வண்ண ஜவுளிக்கடை பைகள்...
சில இடங்களில் இருள் கவ்விக் கிடந்தது சாலையில்
அந்த இடங்களில் பேருந்து நிறுத்தங்களும்... அல்லது சிறு பாலங்களும் இருந்தன.
துர்ரத்து தெருவிளக்கின் ஒளியில் அவை தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன.
கீழவாசலில் இருந்து மெயின் சாலைக்கு ஏறும் சிஆர்சி அருகில் சாலையைக் கடந்து சைக்கிளைத் தள்ளினாள் தனலெட்சுமி... நெற்றி முழுக்க வியர்வை.. தலை எண்ணெய் காணாமல் பரந்து கிடந்தது.. காதுகளில் தன சுயம் இழந்த கவரிங் வளையங்கள்... கைகளில் ரப்பர் வளையல் போலத் தோற்றம் கொண்டிருந்த வளையல்கள்... சைக்கிளின் பின் கேரியரில் அந்த மரத்துர்ள் மூட்டை இழுத்தது சைக்கிளை முன்நோக்கி தள்ள முடியாமல்.. பெரிய மூட்டை சற்று கணத்தது.. மரத்துர்ள் அடுப்புத்தான் அவளுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை கீழவாசலுக்கு சைக்கிளில் ஏறிப்போய் மரப்பட்டறையில் வாங்கி வருவதும் நிற்கவில்லை.
சற்று களைப்பாக இருந்தது. வடவாற்றுப் பாலத்தின் ஓரமாக ஆஞ்சநேயர் கோயில் அருகில் சைக்கிளை சற்று நிறுத்தினாள்.. யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு தலையைக் குனிந்து பாவாடையின் கீழ்நுனியை உயர்த்தி முகத்தைத் துடைத்தாள்..பின் சட்டென்று கீழே விட்டாள். யாரும் பார்த்திருப்பார்களோ என்கிற அச்சத்தில்..
முகத்தைத் துடைத்த சில நொடிகளுக்குள் மறுபடியும் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் கொப்பளித்து பிரகாசித்தன..
எரிச்சலாக இருந்தது.
ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டமில்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தாள். அவள் காயத்ரி..
தன்னோடு படித்தவள் என்றதும் அவளைக் கூப்பிட்டாள்.
காயத்ரியும் இவளைப் பார்த்துவிட்டாள்.
ஏய் தனம் எப்படியிருக்கே?
நல்லாயிருக்கேண்டி.. நீ எப்படி இருக்கே...
எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சுடி... என்று சொல்லி தன் கழுத்தின் மாறாத மஞ்சள் கயிற்றைக் காட்டினாள்.
தனலெட்சுமிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கல்யாணம் ஆயிடிச்சா?
ஏண்டி எனக்கு சொல்லலே? என்றாள்.
கோவிச்சுக்காதடி... மறந்துபோயிடிச்சி....ஆமா இன்னமுமா
மூட்டை அடிககறத விடலியா நீ? என்றாள் சிரிப்பை நிறுத்தி.
ஆமாண்டி. எரிச்சலா இருக்கு. ஆனா எங்க வீட்டுலே மரத்துர்ள் அடுப்புத்தானே ... நீதான் வந்திருக்கியே... இலவச கேஸ் கொடுத்ததகூட கொடுத்திட்டோம் வேண்டாம்னு... சிலிண்டர் வாங்க வருமானம் ஏது?
நீ பாவம்டி.. என்றாள்
சரி விடு..உன்ன பாத்ததும் நம்ப ஸ்கூல் ஞாபகம் வந்துடிச்சிடி..
எப்படி படிப்பே நீ? இங்கிலிசுலேயும் சமுக அறிவியல்லேயும் உன்ன யாருமே முந்த முடியாதுடி... என்றாள் காயத்ரி.
அதெல்லாம் முடிஞ்சுப்போச்சுடி காயத்ரி.. எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதிலேர்ந்து வண்டி ஓட்டறதில்லே... எங்கம்மாதான் அரவை மில்லுக்கு போவுது.. நானும் ஒரு கவரிங் கடைக்கு வேலைக்குப் போறேன்.. குடும்பம் ஓடுதுடி. . ஆமா உங்க வீட்டுக்காரரு என்ன பண்ணறாரு..
காயத்ரி பேசாமல் இருந்தாள்.
என்னடி பேசாம இருக்கே?
எங்கம்மா வேலை பாத்தாங்களே புளி முதலியார் வீடு...
ஆமா...
அவரு பொண்டாட்டி செத்துப்போச்சின்னு என்ன கேட்டாருன்னு எங்கம்மா எனன் அவருக்கு கட்டி வச்சிடிச்சி..
அடிப்பாவி.. அவரு உங்கப்பா வயசுல்ல..
வேற யாருடி என்ன கட்டிக்குவா...காது கழுத்த மூடக்கூட எதுவும் இல்லேன்னு அம்மா சொன்னா.. கட்டிக்கிட்டேன்.. மாடிவீடு.. நாலஞ்சு புளியந் தோப்பு இருக்கு.. அதுக்கு காவல் எங்கப்பாதான்.. அதுக்கு சம்பளம் தனியாதர்றாரு..நிம்மதியா மூணுவேளை திருப்தியா ஆசப்பட்டத சாப்பிடறோம்டி.. சரி.. வரட்டுமா.. அம்மா தேடுவா..
போயிட்டுவா..
வீட்டுக்கு வாடி... கொஞ்சம் புளி எடுத்திட்டுப் போகலாம்..
வரேன் காயத்ரி..
சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்துவிட்டு தள்ளியபடியே ஆஞ்சநேயர் கோயில் வாசலில் நிறுத்திஅப்படியே கும்பிட்டு மறுபடியும் சைக்கிளைத் தள்ளினாள்.. மரத்துர்ள் மூட்டை பின்னாலிருந்து இழுத்தது.
சற்று நிதானம் பண்ணி தள்ளினாள். சைக்கிள் நகர்ந்தது.
என்னவோ சைக்கிள் தள்ளுவது தனலெட்சுமிக்குப் பிடித்திருந்தது. தனக்கு
எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் ஆகட்டும். தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று தனலெட்சுமிக்கு தோணியது.
தெருவிளக்கின் ஒளி அவள் தலைமேல் விழுந்து பின்னால் நகர்ந்துபோனது. சைக்கிளை முன்னால் தள்ளியபடி போனாள் தனலெட்சுமி.
0000000