காலக்கணக்குகள்...
ஹரணி
காலையில் எழுந்ததுமே
கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு
குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின் அடையாளமல்ல. ஆனாலும் பெரும்பாலான
குடும்பங்கள் அப்படித்தான் இப்போது. எனவே தவறான ஒரு பாதைக்குச் சமுகம்
திருப்பப்பட்டு அதைநோக்கிப் பயணப்படுகிறது என்பதை நினைக்கவே வருத்தமாகத்தான்
இருக்கிறது.
காலையிலேயே போய்
தேங்காய் பறிச்சிட்டு வாங்கன்னு சொல்றேன்.. அசமஞ்சம் மாதிரி உக்காந்திருக்கீங்க..
ஞாயிற்றுக்கிழமைன்னா எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு எழுதியிருக்கா.. என்றாள்.
இரு ஆள
வரச்சொல்லியிருக்கேன்..பத்து மணிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்.. வந்த்தும்
போறேன்.. என்றான் வேலு.
அப்ப இட்லிக்கு
பொடி வச்சு சாப்படுறீங்களா? தேங்காய் சட்னி இல்லாம ஐயாவுக்கு டிபன் இறங்காதே..
என்றாள் கேலியாக.
அவளைப் பார்த்தான். இந்த வயதிலேயே
இத்தனை கோபமும்.. பொறுமையின்மையும்.. பிடிவாதமும்.. மன இறுக்கமும் இருந்தால் வெகு
சீக்கிரம் நோய்களுக்கு ஆட்பட்டுவிடுவாள்.. வாழ்நாள் அதிகமென்றால் நெடுங்காலம்
படுக்கையில் கிடந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை
வந்துவிடும்.. அதை நினைத்து பயந்தான் வேலு.
சங்கரி..
எதுக்கும் பதட்டப்படாதே.. படபடன்னு வார்த்தைகளைக் கொட்டாதே.. நடக்கறது நடக்கும்.
எதையும் நிதானமா பேசு.. செய்.. உடம்ப கெடுத்துக்காதே..
எனக்கு எந்த கேடு
வந்தாலும் அது உங்களாலதான்.. எனக்குன்னு தனியா எதுவும் வராது.. ஒவ்வொரு நாளும்
உங்க்கிட்டே கத்திகத்தியே என் தொண்ட்டைத்ண்ணி வத்திப்போவுது..
சரி விடு..
வேலு குமரன் நகரில்
குடியிருக்கிறான். ஏற்கெனவே பாரதி நகரில் ஒருவீடு இருக்கிறது. அதன்
கொல்லைப்புறத்தில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. நன்றாக்க் காய்க்கின்றன.
மாத்த்திற்கு ஒருமுறை போய் ஆளைவிட்டு மரத்தில் ஏறச்சொல்லி தேங்காய்
பறித்துக்கொண்டு வருவான். இது வழக்கமாக நடைபெறுவது. அதைத்தான் தற்போது
நினைவுப்படுத்திப் படுத்துகிறாள். சங்கரி சேமிக்கிறேன் என்கிற பெயரில்
கருமித்தனம் மிக்கவள். இத்தனைக்கும் மருத்துவமனையில் வேறு வேலை பார்க்கிறாள்
நர்சாக. ஆனால் அதற்குரிய பண்புகள், இரக்க்க்குணம் எதுவும் கிடையாது. நோயாளிகளிடம்
கடுகடுவென்று பேசுவாள். ஊசி போடும்போது சரக்கென்று அழுத்தமாக்க் குத்துவாள்.
கேட்டால் வாய மூடிக்கிட்டு கிட.. நீ ஒரு பேஷ்ண்ட்தானா.. எத்தனை வந்து கெடக்கீங்க?
என்பாள். சக நர்சுகள் கூட ஏம்பா இப்படி பேசறே அவங்களே நோயாளிங்க.. நம்ப கோபத்தை
அவங்க்கிட்ட காமிக்காதே... அந்தப் பாவம் வேறயா நமக்கு என்பார்கள். எதையும் காதில்
வாங்கிக்கொள்ள மாட்டாள்.
பத்துமணிக்கு ஆள் வர வேலு தேங்காய் பறிப்பவனை
தன்னுடைய டூவீலரில் ஏற்றிக்கொண்டு பாரதி நகர் போய் இறஙகினான்.
இவன் கொல்லைக்குப்
பக்கத்து பிளாட்டில் ஒரு குடிசை வீடு இருக்கிறது. அதில் யாரோ வாடகைக்கு
இருக்கிறார்கள் அதில் குடியிருக்கும் பெண் வேலுவைப் பார்த்த்தும் அருகில் வந்தாள்.
வேலு அண்ணே...
உங்ககிட்ட வருஷக்கணக்கா சொல்றோம் கேட்க மாட்டேங்குறீங்க... தேங்காய்
பறிக்கும்போதெல்லாம் காயும் மட்டையும் கூரைமேல விழுந்து பொத்து கிடக்கு.. மழை
பெஞ்சா.. டிவி, தையல்மிஷின் எல்லாம் நனைஞ்சு வீணாப்போவுது.. உங்க மரத்து மட்டை உரசியே
கீத்து எல்லாம் வீணாப் போயிடிச்சு.. சங்கரி அக்காக் கிட்டேயும் பலதடவை
சொல்லிட்டேன் கேக்க மாட்டேங்குறீங்க.. கீத்தயாவது மாத்திக்கொடுங்கண்ணே.. இந்தப்
பக்கம் வர்ற மட்டைகளை கழிச்சாவது விடுங்க..
வேலு அவளை
முறைத்துப் பார்த்துப் பேசினான்.. அதெல்லாம் முடியாது.. மரத்தை எதுவும்
செய்யமுடியாது.. கீத்து மாத்தறதா எவ்வளவு செலவு ஆவும் தெரியுமா?
எங்கப் பக்கம்
வருதே மரம்? என்றாள்.
உங்க வீட்டு
ஓனர்கிட்டே சொல்லுங்க.. அப்பவே சொன்னோம்.. வீட்டைத் தள்ளிக்
கட்டுங்கன்னு..கேக்கலே..
இது என்னண்ணே
நியாயம் பேசறீங்க? மனசாட்சி இல்லாம.. அவங்க அவங்க பிளாட்டுலே அவங்க
இஷ்டப்படித்தான் வீடு கட்டுவாங்க.. உங்க மரத்தை அடுத்த பிளாட்டுலே இடைஞ்சல்
பண்ணுதுன்னு சொன்ன கேக்கமாட்டேங்குறீங்க..
உங்க கீத்து
கொட்டகைக்காக மரத்த வெட்டமுடியுமா? நீ ஏறி பறிய்யா தேங்காயை... கயிறு கட்டி இறக்கு
கொலையா இருந்தா.. என்றான்.
அப்படியும்
நாலைந்து தேங்காய்கள் கீற்றின் மேல் விழுந்தன. அந்தப் பெண் ஓடிவந்து
சத்தம்போட்டாள்.
மனுஷ ஜென்மமா
நீங்க.. புள்ள குட்டியள வச்சிக்கிட்டிருக்கோம்.. இப்படி அநியாயம் பண்ணறீங்களே..
மாடிவீட்டுல இருக்கோம் எதுவும் ஆவாதுன்னு நினைக்கறிங்களா.. ஆண்டவன்
பாத்துக்கிட்டிருக்கான். உங்க தலையில விழும்..
மரியாதையா
போயிடு.. என்று பதிலுக்கு கத்தினான் வேலு.
அந்தப் பெண்
போய்விட்டாள்.
எத்தனை காய்
இருக்கு? என்றாள் தேங்காய் பறித்தவனிடம்.
நாப்பது காய்
இருக்கும்மா...
சரி.. அவருக்குக்
பறிகூலிய கொடுத்து அனுப்புங்க.. என்றாள்.
அவன் போனதும்
உடனே பத்து தேங்காய்களை எடுத்து வைத்துக்கொண்டாள். இது போதும் வீட்டுக்கு.
மற்றவைகளை மட்டையோடு தேங்காய் 12 ரூபாய் என்று சொல்லி கொஞ்சங்கொஞ்சமாக
எடுத்துக்கொண்டுபோய் அக்கம்பக்கம் வீடுகளில் கொடுத்துவிட்டு கையோடு பணத்தை
வாங்கிக்கொண்டு வந்தாள். 360 ரூபாய் லாபம் தேங்காயால் என்றாள் சங்கரி.
அந்த பக்கத்து
பிளாட் கண்டபடி பேசறா.. என்றான் வேலு.
மரத்தை எல்லாம்
வெட்டமுடியாது. அது செண்டிமெண்டா வச்சிருக்கோம். அப்பவேதான் சொன்னோம்ல தள்ளி
கட்டிக்கங்க வீட்டைன்னு கேக்கலே...அதுக்கு நாம என்ன பண்ணமுடியும்? இது ஒரு
பிரச்சினையா...? தேங்கா பறிக்கறப்ப பேசுவாங்க.. அப்ப வாயை மூடிக்கிட்டு
வந்துடுங்க.. மறந்துடுவாங்க..
அன்று மாலை
கூட்டமாய் வந்தார்கள் தெருப்பசங்க. எல்லாரும் சங்கரியின் மகன் மகேசின் தோழர்கள்.
மகேசைத்
தாங்கிப்பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
அய்யய்யோ
என்னடா ஆச்சு? என்று பதறியபடி வாசலுக்கு ஓடினாள். வேலுவும்.
ஒண்ணுமில்லே..
ஆண்டி.. சைக்கிள் ஓட்டிக்கிட்டு திரும்பும்போது எதிரே ஒரு பைக்காரன் வந்துட்டான்..
இவனால பாலன்ஸ் பண்ணமுடியா வாய்க்கால்ல விழுந்துட்டான்.. முழங்கால் அடி.. வாயிலே
அடி..
உதடு
கிழிந்து ரத்தம் கொட்டியது. முழங்காலில் பழைய இரும்பு ஒருரூபாய் நாணயம் அளவுக்கு
சிராய்ப்பு இருந்தது சிவந்து.
நடக்க
முடியாமல் கால்கள் மடக்கி வலிக்குதும்மா.. தாங்க முடியலே என்றான்.
டாக்டர்
கிளினிக்கு ஆட்டோபிடித்து கொண்டுபோனார்கள். உதடு கிழிந்திருந்ததை தையல் போட்டு
ஊசி போட்டுவிட்டார். முழங்கால் சிராய்ப்புக்கு மருந்து போட்டார். மாத்திரைகள்
எழுதித் தந்தார். வெந்நீர் ஒத்தடம் கொடுங்க..ரத்தக் கட்டு இருக்கு நாலைந்து
நாளைக்கு படுக்கையிலதான் இருக்கணும்.. வேற ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லே..
மறுபடியும் ஆட்டோ பிடித்து வீட்டிற்குத் திருமபிவந்தார்கள்.
உள்ளே கொண்டு
வந்து அவனை படுக்க வைத்தார்கள். உடனே வேலுவிடம் கேட்டாள் எவ்வளவு செலவாச்சு?
ஆயிரம் ரூபாய்
ஆச்சு.. ப்ச்.. என்றான் வேலு உதட்டைப் பிதுக்கியபடி. ஆயிரம் ரூபாய் என்றதும்
வருத்தம் வந்தது. முகம் இருண்டுபோனது. அப்போது அவளின் மகள் சொன்னாள்.. அம்மா...
பயமா இருக்கும்மா?
எதுக்கு பயம இருக்கு? என்றாள்
சங்கரி.
நாளைக்கு ப்ளஸ் டூ ரிசல்ட்ம்மா..
பயமா இருக்கும்மா..
சங்கரிக்குள்ளும் அந்தப் பயம்
பாம்பாய் மாறி படமெடுத்து ஆடத்தொடங்கியது.
//////////////////////////////////////////////////////////////////////////////////
.