இருவரும் ஒரே இடத்தில்
நிற்கிறோம் வெவ்வேறு
நேரத்தில் புறப்பட்டு....
இருவருக்கும் ஒரேபிரச்சினை
ஆனால் அளவு வேறுவேறு
குழந்தைகள் விளையாட்டில்
சிதறிக்கிடக்கும் பொம்மைகளைப்போல,,,
ஞாயிற்றுக்கிழமைகளில்
இதுதான் ஒரே சாத்தியம்....
என்னுடையது சட்டைப் பைக்குள்
அடக்கமாய்,,,
அவளுடையது சாக்குப்பைக்குள்
அடங்கமாட்டாமல்,,,,
யாருமில்லையெனில் கொஞ்சம் கூடுதலாய்
கேட்கலாம் என்று நினைத்து நான் வந்ததுபோல்
அவளும் வந்திருக்கவேண்டும்,,,
எனக்குப் படபடப்பில்லை
வியர்வை வழியும் முகத்தைப்
படபடப்பில் துடைக்கிறாள்....
நான் எல்லாம் மறைத்து
அவளுக்கு வழிவிடுதல் என்பதைவிட
சுய கௌரவத்துடன் செட்டியாரிடம்
அவள் காதுகளுக்கு மட்டும் கேட்டால்
போதுமென்று கத்துகிறேன்,,,
பழைய மோதிரம் ஏதும் அரைபவுனில்
இருக்கா செட்டியாரே?.... பாலிஷ் போட்டுக்கலாம்,,,
செட்டியார் சொல்லும் இல்லையெனும்
பதிலைக் கம்பீரமாய் ஏந்தி வெளியேறுகிறேன்,,,
பையில் வைத்த அடகுபொருள் கணக்க,,,