Thursday, August 27, 2020

 

குறுங்கதை 19

                      அப்பாவின் நண்பர்கள்

                                          ஹரணி

 

            இந்த மாதம் பதினைந்தாம் தேதிதான் திதி ராகவனுக்கு. இரண்டாண்டுகள் ஆகிவிட்டன ராகவன் இறந்துபோய். ஆனால் நட்சத்திரப்படி முன்கூட்டியே வந்துவிட்டது. ஐந்தாம் தேதி திதி என்பதால் முன்கூட்டியே ஐயரிடம் சொல்லியாகிவிட்டது.  கொரோனா காலம் என்பதால் ஐயர் கொஞ்சம் கூடத்தான் தொகை கேட்டிருந்தார். அவர் கேட்ட காய்கறிகள் மற்றும் எல்லாமும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தன.

            ராகவனின் மகன் கோபி சொன்னான் அம்மா.. இதையெல்லாம் பார்க்கவேண்டாம்… அப்பாவின் திதி நன்றாக நடக்கவேண்டும். அப்பா உயிருடன் இருந்தவரைக்கும் தாத்தாவுக்குக் குறைவின்றிச் செய்தார். நானும் அதை அப்படியே செய்வேன் என்றான்.

            சரி என்றாள் ராகவனின் மனைவி.

           ராகவன் போனபிறகு பொருளாதார ரீதியாக கொஞ்சம் அடி வாங்கியிருந்தது குடும்பம் என்றாலும். சமாளிக்கும் வருமானமும் கிடைத்தது.

            ராகவன் பெருந்தன்மையானவன். உயிருடன் இருந்தபோது பலருக்கு உதவி செய்திருக்கிறான். அவன் இறந்தபோது அவனிடம் கடன் வாங்கியவர்கள் ஒருவர்கூட வரவில்லை. ஏமாற்றுவேலைதான்.

             எப்படிப் போய் கேட்கமுடியும்? ராகவனிடம் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் கொடுத்திருப்பதை வாய்மொழியாகச் சொல்லி வைத்திருந்தான்.

              அதைக் கேட்டபோது சொல்லி வைத்தாறபோல வாங்கிய அத்தனைபேரும்.. தம்பி.. அப்பா உயிருடன் இருந்தப்பவே கொடுத்திட்டோம்பா.. என்றார்கள்.

                 கோபி எதுவும் பேசாமல் திரும்பி வந்தான்.

                திதி அன்று ஐயர் சொன்னபடி எல்லாமும் இருந்தன. உருண்டை தக்காளிபோல ஐயர் வந்து இறங்கினார் ஆக்டிவாவில்.

                எல்லாரும் வந்துட்டாளா என்றார்.

               இல்ல சாமி.. கொரோனா யார்கிட்டயும் சொல்ல முடியல.. எங்க குடும்பம்.. எங்க வீட்டுக்காரரோட தம்பி குடும்பம் அவ்வளவுதான்.. நீங்க ஆரம்பிங்க என்றாள் ராகவன் மனைவி.

               ஐயர் ஆரம்பித்தார்.

              அப்போது வாசலில் வண்டிகள் சப்தம் கேட்டது. நாலைந்து இளைஞர்கள் ஆளுக்கொரு வண்டியில் வந்திருந்தார்கள். எல்லோரும் கோபி வயதொத்தவர்கள். ஆளுக்கொரு பை வைத்திருந்தார்கள்.

               உள்ளே வந்தார்கள்.

              யார் நீங்க?

              சொல்றோம் என்றபடி தாங்கள் வைத்திருந்த பையில் இருந்து பணக்கட்டுகளை எடுத்து தரையில் வைத்தார்கள். கோபியும் அவன் அம்மாவும் அதிர்ந்துபோனார்கள்.

               என்ன இது?

              ராகவன் அங்கிள்கிட்ட எங்கப்பாக்கள் வாங்கினது..  எங்க மூணு பேரோட அப்பாவும் ஒண்ணா ஆக்சிடெண்ட்ல இறந்துபோயிட்டாங்க.. எங்கம்மா சொன்னாங்க… உங்கப்பா ராகவன் அங்கிளை ஏமாத்துனதோட பலன்.. நமக்குப் போதுமான பணம் இருக்கு.. அவரோட பணத்தைக் கொண்டுபோய் கொடுத்திட்டு வந்துடுங்க.. நீங்களாச்சும் மிஞ்சி இருக்கணும்னாங்க.. அதான் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார்கள்.

               கோபியும் அவன் அம்மாவும் ராகவன் போட்டோ பார்த்து அழுதார்கள்.

 

           

 

           

 

 

Tuesday, August 18, 2020

 

குறுங்கதை 18

                        எண்ணம் போல் எல்லாம்

 

                                                ஹரணி

 

      அன்றைக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டிருந்தான் பரசுராமன். வந்தவுடன் அவன் மனைவி வேணி சூடாக காபி போட்டு எடுத்துவந்தாள். வேணிபோல ஒரு மனைவி அமைவதற்கு முன்பிறபி புண்ணியம் என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வான் பரசுராமன். அடுத்தவர் பற்றி புறணி பேசமாட்டாள். எப்போதும் கடினமாக உழைப்பதையே விரும்புவாள். காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டால் அவள் சாப்பிட்டு சற்றே கண்ணசர இரண்டு மணியாகிவிடும். அத்தனை வேலைகள் பார்ப்பாள். மனதுக்குள்ளேயே நாட்குறிப்பு வைத்திருப்பாள். அப்படியே ஒவ்வொரு வேலையாய் பார்ப்பாள். பார்த்துக்கொண்டேயிருப்பாள். வீட்டை சுத்தமாக பெருக்குவாள்,, சாமானகள் துலக்குவாள்.. செடிகள் வைப்பாள், அதனை அத்தனை சுத்தமாகப் பராமரிப்பாள்.. சின்ன சின்ன பொருட்களை எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவாள். உதாரணத்திற்கு காளான் வாங்கி வரும் பிளாஸ்டி டப்பாவில் மண்நிரப்பி வெந்தயம் அழுத்தி வைத்து வெந்தயம் செடி வைப்பாள். வளர்ந்ததும் முடிவெட்டுவதுபோல அதனை வெட்டி கூட்டு வைத்து அன்றைக்குக் காலை இட்லிக்குச் சாப்பிடத் தருவாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

            அவளின் திறமையால்தான் பரசுரரமன் ஐந்து சின்ன சின்ன வீடுகளாகக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான். அந்த வீடு கட்டிய கதையே வெகு சுவாரஸ்யமானது. அதைச் சொன்னால் இக்கதை குறுங்கதையிலிருந்து நீண்ட கதையாகிவிடும்.

 

              வாடகைக்குக் குடி வருபவர்கள் அத்தனை சாமானியமாகக் காலி செய்துபோகமாட்டார்கள். வருடக் கணக்கில் இருப்பார்கள். காரணம் வேணிதான். வாடகைக்கு வந்து குடியேறும்போது வீட்டைக் காண்பிப்பாள். அத்தோடு சரி. உங்கள் வீடு போலப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்வாள். அப்புறம் அவர்கள் வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டாள். வாடகை கொடுக்கும்போது வாங்கிக்கொள்வான்.

           நீ வீடு வாடகைக்கு விடவே லாயக்கில்லை என்பான் பரசுராமன்.

           எதுக்கு சொல்றீங்க? என்பாள் வேணி.

          ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் வாடகையை அவங்க இஷ்டத்துக்குத் தராங்க வாங்கிக்கறே.. ஒரு வரைமுறை வேண்டாமா?

            இருக்கட்டுங்க.. ஒருத்தங்க வாரக்கூலி. வாரக் கடைசியில தருவாங்கள்.. ஒருத்தர் பிசினஸ்.. பதினைஞ்சாம் தேதி தருவாரு.. ஒருத்தரு முடியாதவரு.. ஆனா ரெண்டு மாசம் சேர்த்து தருவாரு.. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம் ஆனாலும் வாடகை வந்துடும்.. அவங்க கொடுக்கற நாளுக்கு ஏற்றமாதிரி நான் என் பட்ஜெட்ட வச்சிருக்கேன். எனக்குப் பிரச்சினையில்ல.. என்பாள்.

             இதான் வேணி.

            அப்புறம் வாடகைக்குக் குடி வருபவர் இடத்து எல்லாம் ஒரு வார்த்தை சொல்வாள்.

             எங்க வீட்டுக்கு வாடகைக்குக் குடி வர்றீங்க.. இதுதான் உங்களுக்குக் கடைசியா இருக்கணும்..அப்புறம் வீடு காலிப்பண்ணிட்டுப் போனா நீங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிக்கிட்டுப்போகணும்.. மனசார வாழ்த்துகிறேன் என்பாள்.

             இதனாலேயே பலபேர் காலி பண்ணாமல் வருஷக்கணக்கில் இருக்கிறார்கள்.

              அன்றைக்கு அப்படித்தான் பரசுராமன் சீக்கிரம் வேலை விட்டு வந்திருந்தான். வேணி குடித்த காபியைச் சாப்பிட்டு முடிக்கவும் சாருமதி அவள் குழந்தையுடன் ஆக்டிவாவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

            மாமா.. வணக்கம் மாமா என்றாள் சாருமதி. யேய் தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு என்று தன்பிள்ளையையும் சொல்ல வைத்தாள்.

             வாப்பா சாரு என்ன விஷேசம்? என்றான் பரசுராமன்.

           சாருமதி முன்னால் பரசுராமன் வீட்டில் குடியிருந்தவள். இப்போது கல்யாணம் ஆனவுடன் காலி பண்ணிவிட்டுப் போய்விட்டாள். இன்னமும் அதே மரியாதை அன்பும் வைத்திருக்கிறாள்.

             மாமா.. ஒரு சந்தோஷமான செய்தி  சரி வேணி அத்தை எங்கே? என்றாள்.

           உள்ளதான் இருக்காள்.. எனக்குக் காபி கொடுத்தாள். பாத்திரத்தை உடனே கழுவி வைக்கப்போயிருக்காள்.

             அத்தை மாறவேயில்லை மாமா.. எதிலும் பர்பக்ட்.

            வேணி உள்ளிருந்து வந்தாள்.. யேய்.. சாருமதி.. வாடாம்மா.. என்னடா பாப்பா விஷேசம்..

           அத்தை , மாமா உங்ககிட்ட முதல்முதல்ல ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்திருக்கேன் என்றாள் படபடப்புடன்.

           சொல்லுடா சாரு.. என்றார்கள்.

          உங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்கும் அடுத்த பிளாட்ட நான் வாங்கிட்டேன்.. இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்திட்டு வரேன்.. நீங்க அடிக்கடி சொல்வீங்களே.. எங்க வீட்டைக் காலிப் பண்ணிட்டுப்போனா.. சொந்த வீட்டுக்குத்தான் போவணும்.. இப்ப பிளாட் வாங்கிட்டேன். இனிமே சொந்த வீடுதான்.. உங்க மனசுக்கு முதல்ல உங்ககிட்டதான் சொல்லிட்டுப் போகவந்தேன்.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அப்படியே தெரு என்று பார்க்காமல் காலில் விழுந்து  வணங்கினாள்.

            நல்லாயிருப்பா.. மேன்மேலும் வளரணும்.. சீக்கிரம் கிரஹப்பிரவேசம் நடத்தணும் என்றாள் வேணி.

              அதுல முன்பகுதியில மாட்டறதுக்கு நான்தான் விநாயகர் படம் வாங்கித்தருவேன் என்றான் பரசுராமன்.

             சாருவுக்குக் கண்கள் கலங்கின.  எத்தனை மனசு மாமா உங்களுக்கும் அத்தைக்கும்.. நல்லாயிருப்பேன்.. என்றபடி கிளம்பினாள்.

           இரு வரேன் என்று உள்ளே போய் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துவந்து சாருமதி குழந்தை கையில் கொடுத்து நீ ரொம்ப சந்தோஷமான செய்தி சொன்னதுக்காக என்றான் பரசுராமன்.

            குழந்தை வாங்கிக்கொண்டு தேங்ஸ் தாத்தா என்றது.

 

Sunday, August 16, 2020

 

குறுங்கதை 17

சத்தியங்கள்

                                                        ஹரணி

      இரவு எட்டுமணிக்கு கனகத்தின் மகன் வேலு பேசினான் கோபியிடம்.

       மாமா… நம்ப வள்ளிக்கு ரொம்ப முடியாம ஆசுபத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க.. மூச்சுத் திணறலாம். டாக்டர்கள் முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்..

          அதிர்ச்சியாக இருந்தது.

           வள்ளி கோபியின் அண்ணன் மகள் (கோபியின் சித்தப்பா பேத்தி) வாழ்க்கை முழுக்க வறுமை அனுபவித்தவள். அவளுக்குத் திருமணமான நிகழ்வு அப்படியே மனத்தில் நிற்கிறது. அந்தத் தருணம் கோபி வெளியூர் போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவன் மனைவி போன் செய்தாள்.

            என்ன சங்கரி?

            ஏங்க நம்ப வள்ளிக்கு நாளைக்குக் கல்யாணம்.

            அதான் தெரியுமே. நாளைக்கு நான் லீவு போட்டுட்டேன்.

            அதுக்கில்லீங்க… என்று இழுத்தாள் சங்கரி.

            தெளிவா சொல்லு. இழுக்காதே என்றான் கோபி.

            இல்லங்க.. கட்டில் பீரோ மெத்தை வாங்கித் தரேன்னு சொன்னவங்க கழுத்தறுத்துட்டாங்களாம்.. அந்த அக்கா வந்து அழுதுகிட்டிருக்காங்க.. எப்படியாச்சும் எம்பொண்ண கரையேத்திடுங்கன்னு.. என்றாள்.

               தெளிவாகப் புரிந்துவிட்டது கோபிக்கு. ஒருவகையில் அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தான். வள்ளியின் அப்பா டிரைவர். குடிகாரன். எல்லாம் செயலிழந்த நிலையில் வீட்டில் இருக்கிறான். வலிமையற்றவனிடம் வாதம் செய்வது பலனற்றது. கோபி வந்து கடைத்தெருவிற்குப் போய் கட்டில்,பீரோ, மெத்தை எல்லாமும் வாங்கி வந்து கொடுத்தான். கைச்செலவுக்கு என்று வள்ளி அம்மா கேட்டதற்கு எட்டாயிரம் பணத்தையும் கொடுத்தான். என் மகளாக இருந்தால் செய்யமாட்டேனா என்று..

              நினைவுக்கு வந்ததை எண்ணி கலைத்தான். இப்போது உயிருக்குப் போராடுகிறாள் வள்ளி. காரணம் அவள் கணவன். ஆண் குழந்தை வேண்டுமென்று இதுவரை 12 முறை கலைத்து தற்போது இரண்டு பெண்குழந்தைகள் ஒன்றரை வயதில் ஆண்குழந்தை இருக்கிறது. வள்ளிக்கு முதல் பிரசவத்தின்போதிருந்தே அனிமிக். இரத்தச் சோகை. அடுத்தடுத்த குழந்தை பெறுவது ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

          கிராமத்தில் வாக்கப்பட்டவள் வள்ளி. வறுமையும் கூட. பலனற்றுபோனது மருத்துவர்களின் எச்சரிக்கைகள்.

           மருத்துவமனைக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று வேலு ஏற்பாடு செய்திருந்தான்.

           மாமா.. இப்ப இரத்தம் கேட்டாங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

யாரும் கொரோனான்னு ரத்தம் குடுக்கப் பயப்படறாங்க.. ஆசுபத்திரிக்கே வர யோசிக்கிறாங்க..

           எல்லாம் முடிந்துவிட்டது.

           இரவு பத்துமணிக்கு பக்கத்துப் பெட்காரர் போன் செய்ததாக வேலு சொன்னான். வள்ளி இறந்துப்போயிட்டா மாமா.. கொரோனா டெஸ்ட் பாத்துட்டுதான் பாடியத் தருவாங்களாம். டெஸ்ட்க்காக அடுத்தநாள் காலை வரை காத்திருந்தார்கள். நெகடிவ் என்று வந்து பாடியைத் தந்தார்கள். அதற்குள் வள்ளியின் அம்மா காவல் நிலையம் போய்விட்டாள். என் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. கணவன்தான் அடித்துக்கொண்டுவந்து என் வீட்டில் விட்டுவிட்டுப்போனான். ஆகவே என் மகள் இறப்புக்கு அவன்தான் காரணம்.

          காவல்நிலையத்தில் பஞ்சாயத்துபோனது. கடைசியில் வள்ளியின் தாய் பிடிவாதமாக இருந்ததால் பாடி போஸ்ட்மார்ட்டம்போய் வந்தது.

           கோபி, வேலு எல்லோரும் போனார்கள்.

           தெருவில் கிடத்தியிருந்தார்கள். நாலைந்துபேர்கள் மட்டுமே ஆண்களும் பெண்களுமாக இருந்தார்கள். தள்ளி தள்ளி நின்றார்கள்.

           வள்ளியின் தாய் கோபியிடம் மாரில் அடித்துக்கொண்டு அழுதாள். உங்க மவள பாத்திங்களா என்று…

           இறந்துபோன மகளிடம் போய்  பாருப்பா.. உன்ன பாக்க எல்லா சித்தப்பாவும் மாமாவும் வந்திருக்காங்க.. என்று சொல்லி அழுதாள்.

           எல்லாம் முடிந்து வேனில் ஏற்றிக்கொண்டு சுடுகாடு போனார்கள்.

            அன்று இரவு வேலுவின் அம்மா ஒரு செய்தி சொன்னாள். வள்ளி இறந்துபோய்விட்டாள். ஆனால் அவள் உயிருடன் இருந்தபோது சம்பாதிக்க வக்கில்ல என்று அவள் அப்பாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டாள். என்று. ஒருவேளை அதன் பலனோ என்று சொல்லாமல் நினைக்க வைத்தது. எப்படியாயினும் சிறிய வயதில் கணவன்வராமல் பிள்ளைகள் வந்து அம்மா வென்று சொல்லி அழாமல் ஒரு பிணம் அனாதைபோல வள்ளியின் உடல் சுடுகாட்டிற்குச் சென்றதே ஊழ்வினைதான்.

         குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு ஆண்மகன் குடித்துவிட்டு உடல்நிலை கெட்டு இயங்கமுடியாத சூழலில் மனைவியும் மகளும் என்ன செய்வார்கள். கோபத்தைக் காட்டத்தானே செய்வார்கள். மாடிப்படியில் தள்ளிவிடுமளவுக்கு கொடுமைக்காரிகள் அல்ல ஆனால் தொட்டுப் பேசியதில் தடுமாறியிருக்கலாம். எல்லாமும் வறுமையின் நாடகங்கள். இனி வழக்கு நடந்து எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் வள்ளியின் உறவுகள் அத்தனைபேர் இருந்தும் தனித்தவளாய் அனாதைப்போல அவள் உடல் வண்டியில் சென்றது கோபிக்கு உறுத்தலாகவே இருந்தது. அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தானே? இறைவனின் கணக்குகள் சிலவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியாதுதான்.