குறுங்கதை 18
எண்ணம் போல் எல்லாம்
ஹரணி
அன்றைக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு
வந்துவிட்டிருந்தான் பரசுராமன். வந்தவுடன் அவன் மனைவி வேணி சூடாக காபி போட்டு எடுத்துவந்தாள்.
வேணிபோல ஒரு மனைவி அமைவதற்கு முன்பிறபி புண்ணியம் என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வான்
பரசுராமன். அடுத்தவர் பற்றி புறணி பேசமாட்டாள். எப்போதும் கடினமாக உழைப்பதையே விரும்புவாள்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டால் அவள் சாப்பிட்டு சற்றே கண்ணசர இரண்டு மணியாகிவிடும்.
அத்தனை வேலைகள் பார்ப்பாள். மனதுக்குள்ளேயே நாட்குறிப்பு வைத்திருப்பாள். அப்படியே
ஒவ்வொரு வேலையாய் பார்ப்பாள். பார்த்துக்கொண்டேயிருப்பாள். வீட்டை சுத்தமாக பெருக்குவாள்,,
சாமானகள் துலக்குவாள்.. செடிகள் வைப்பாள், அதனை அத்தனை சுத்தமாகப் பராமரிப்பாள்.. சின்ன
சின்ன பொருட்களை எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவாள். உதாரணத்திற்கு காளான் வாங்கி
வரும் பிளாஸ்டி டப்பாவில் மண்நிரப்பி வெந்தயம் அழுத்தி வைத்து வெந்தயம் செடி வைப்பாள்.
வளர்ந்ததும் முடிவெட்டுவதுபோல அதனை வெட்டி கூட்டு வைத்து அன்றைக்குக் காலை இட்லிக்குச்
சாப்பிடத் தருவாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அவளின் திறமையால்தான் பரசுரரமன் ஐந்து
சின்ன சின்ன வீடுகளாகக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான். அந்த வீடு கட்டிய கதையே வெகு
சுவாரஸ்யமானது. அதைச் சொன்னால் இக்கதை குறுங்கதையிலிருந்து நீண்ட கதையாகிவிடும்.
வாடகைக்குக் குடி வருபவர்கள் அத்தனை
சாமானியமாகக் காலி செய்துபோகமாட்டார்கள். வருடக் கணக்கில் இருப்பார்கள். காரணம் வேணிதான்.
வாடகைக்கு வந்து குடியேறும்போது வீட்டைக் காண்பிப்பாள். அத்தோடு சரி. உங்கள் வீடு போலப்
பார்த்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்வாள். அப்புறம் அவர்கள் வீட்டுப் பக்கமே தலைவைத்துப்
படுக்கமாட்டாள். வாடகை கொடுக்கும்போது வாங்கிக்கொள்வான்.
நீ வீடு வாடகைக்கு விடவே லாயக்கில்லை என்பான்
பரசுராமன்.
எதுக்கு சொல்றீங்க? என்பாள் வேணி.
ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் வாடகையை அவங்க
இஷ்டத்துக்குத் தராங்க வாங்கிக்கறே.. ஒரு வரைமுறை வேண்டாமா?
இருக்கட்டுங்க.. ஒருத்தங்க வாரக்கூலி.
வாரக் கடைசியில தருவாங்கள்.. ஒருத்தர் பிசினஸ்.. பதினைஞ்சாம் தேதி தருவாரு.. ஒருத்தரு
முடியாதவரு.. ஆனா ரெண்டு மாசம் சேர்த்து தருவாரு.. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம்
ஆனாலும் வாடகை வந்துடும்.. அவங்க கொடுக்கற நாளுக்கு ஏற்றமாதிரி நான் என் பட்ஜெட்ட வச்சிருக்கேன்.
எனக்குப் பிரச்சினையில்ல.. என்பாள்.
இதான் வேணி.
அப்புறம் வாடகைக்குக் குடி வருபவர் இடத்து
எல்லாம் ஒரு வார்த்தை சொல்வாள்.
எங்க வீட்டுக்கு வாடகைக்குக் குடி வர்றீங்க..
இதுதான் உங்களுக்குக் கடைசியா இருக்கணும்..அப்புறம் வீடு காலிப்பண்ணிட்டுப் போனா நீங்க
எல்லாரும் சொந்த வீடு கட்டிக்கிட்டுப்போகணும்.. மனசார வாழ்த்துகிறேன் என்பாள்.
இதனாலேயே பலபேர் காலி பண்ணாமல் வருஷக்கணக்கில்
இருக்கிறார்கள்.
அன்றைக்கு அப்படித்தான் பரசுராமன் சீக்கிரம்
வேலை விட்டு வந்திருந்தான். வேணி குடித்த காபியைச் சாப்பிட்டு முடிக்கவும் சாருமதி
அவள் குழந்தையுடன் ஆக்டிவாவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.
மாமா.. வணக்கம் மாமா என்றாள் சாருமதி.
யேய் தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு என்று தன்பிள்ளையையும் சொல்ல வைத்தாள்.
வாப்பா சாரு என்ன விஷேசம்? என்றான் பரசுராமன்.
சாருமதி முன்னால் பரசுராமன் வீட்டில் குடியிருந்தவள்.
இப்போது கல்யாணம் ஆனவுடன் காலி பண்ணிவிட்டுப் போய்விட்டாள். இன்னமும் அதே மரியாதை அன்பும்
வைத்திருக்கிறாள்.
மாமா.. ஒரு சந்தோஷமான செய்தி சரி வேணி அத்தை எங்கே? என்றாள்.
உள்ளதான் இருக்காள்.. எனக்குக் காபி கொடுத்தாள்.
பாத்திரத்தை உடனே கழுவி வைக்கப்போயிருக்காள்.
அத்தை மாறவேயில்லை மாமா.. எதிலும் பர்பக்ட்.
வேணி உள்ளிருந்து வந்தாள்.. யேய்.. சாருமதி..
வாடாம்மா.. என்னடா பாப்பா விஷேசம்..
அத்தை , மாமா உங்ககிட்ட முதல்முதல்ல ஒரு
சந்தோஷமான செய்தி சொல்ல வந்திருக்கேன் என்றாள் படபடப்புடன்.
சொல்லுடா சாரு.. என்றார்கள்.
உங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்கும்
அடுத்த பிளாட்ட நான் வாங்கிட்டேன்.. இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்திட்டு வரேன்.. நீங்க
அடிக்கடி சொல்வீங்களே.. எங்க வீட்டைக் காலிப் பண்ணிட்டுப்போனா.. சொந்த வீட்டுக்குத்தான்
போவணும்.. இப்ப பிளாட் வாங்கிட்டேன். இனிமே சொந்த வீடுதான்.. உங்க மனசுக்கு முதல்ல
உங்ககிட்டதான் சொல்லிட்டுப் போகவந்தேன்.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அப்படியே
தெரு என்று பார்க்காமல் காலில் விழுந்து வணங்கினாள்.
நல்லாயிருப்பா.. மேன்மேலும் வளரணும்..
சீக்கிரம் கிரஹப்பிரவேசம் நடத்தணும் என்றாள் வேணி.
அதுல முன்பகுதியில மாட்டறதுக்கு நான்தான்
விநாயகர் படம் வாங்கித்தருவேன் என்றான் பரசுராமன்.
சாருவுக்குக் கண்கள் கலங்கின. எத்தனை மனசு மாமா உங்களுக்கும் அத்தைக்கும்.. நல்லாயிருப்பேன்..
என்றபடி கிளம்பினாள்.
இரு வரேன் என்று உள்ளே போய் ஒரு பிஸ்கட்
பாக்கெட்டை எடுத்துவந்து சாருமதி குழந்தை கையில் கொடுத்து நீ ரொம்ப சந்தோஷமான செய்தி
சொன்னதுக்காக என்றான் பரசுராமன்.
குழந்தை வாங்கிக்கொண்டு தேங்ஸ் தாத்தா
என்றது.
நல்ல மனம் வாழ்க! இது போன்ற நல்ல மனிதர்கள் இன்றைய தேவை மட்டுமல்ல! என்றைக்கும் தேவை.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை... இப்படித்தான் இருக்க வேண்டும்...
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteநல்ல மனதுக்குச் சொந்தக்காரர்கள் அருகிப்போய்க்கொண்டே இருக்கிறார்கள்
ReplyDeleteகதையினைப் படித்ததில் ஒரு மன நிறைவு
நன்றி ஐயா
நன்றி ஜெயக்குமார்.
Delete