அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், எனத் தொடங்கிய எழுத்துலகில் தஞ்சை ப்ரகாஷின் தரிசனம் கிடைத்தபின் நவீன இலக்கியப்பக்கம் - தரமான இலக்கியப் பக்கம் - உண்மையான இலக்கியப் பக்கம் என்னுடைய பயணம் திசைமாறியது. அப்போது அவர் வாசிக்கச் சொன்ன பட்டியல் மிக நீண்டது. இருப்பினும் நானும் நண்பன் மதுமிதாவும் தேடித்தேடி வாசித்தோம். மணிக்கணக்கில் பேசி களிப்புற்றும் அவை தீராத பக்கங்கள்..
இன்றைக்கு ஓரளவு எனக்கிருக்கும் அடையாளத்திற்கு நான் வாசித்த முன்னவர்கள்தான் முழுமுதல் காரணம்.
அவர்களுள் இருப்பவர்கள்தான்
மதிப்புமிகு கல்யாண்ஜி என்றழைக்கப்படும் வண்ணதாசனும்..
மதிப்புமிகு வண்ண நிலவனும்..
இருவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் படைப்புலகம் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வு மட்டுமல்ல. படைப்புலகம் விமோசனம் பெற்றதுபோலவும் எனவும் சொல்லலாம்.
இன்றைக்கும் அவர்களின் எழுத்து மனக்கண்ணில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிறது..
கல்யாண்ஜியின் கவிதைகளையும்... வண்ணதாசனின் சிறுகதைகளையும் மனசு புதையல்போல சேமித்து வைத்திருக்கிறது..
கடல்புரத்தில் தொடங்கி...ரெயினிஸ் ஐயர் தெருவில் வளர்ந்து போய்க்கொண்டிருந்த வண்ணநிலவன் இன்றைக்கும் ஒரு பிரமிப்பின் பிரமிப்புதான் எனக்கு.
அவர்களுக்கான விருது தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும்.. இப்போதாவது தரமறிந்த பான்மைக்குப் பாராட்டுக்கள்.
எப்போதும் இந்த படைப்பாளிகள் விருதுகளைத் துரத்தியதில்லை. படைப்புக்களில் ஒருபோதும் துர்ர்ந்துபோவதுமில்லை...
இவர்களுக்காக இந்தத் தனிப்பதிவு..
ஓரளவுக்கு நான் எழுதியிருக்கிற எனது படைப்புக்களை இவர்களுக்கு சமர்ப்பித்து தலை வணங்குகிறேன்...
வண்ணதாசன்
வண்ணநிலவன்
தமிழ்ப் படைப்புலகின் வண்ணப்பக்கங்கள். வசீகரப் பக்கங்கள். வளமான பக்கங்கள். மதிப்புறு பக்கங்கள். மாண்புறு பக்கங்கள்.
வாசியுங்கள் அவசியம் இவர்களை.
0000000000000000000
ஆளுமை என்பது
ஆள்வது அல்ல
ஆளப்படுவது...
கடல் ஒருபோதும்
தன்னைக் கடலென்று
அறிவித்தது இல்லை..
வான் ஒருபோதும்
தன்னை வானென்று
அறிவித்தது இல்லை...
ஆளுமைகளும்
இப்படித்தான்....
000000
ஒரு சிறுசுள்ளியை
நாம் அலட்சியப்படுத்துகிறோம்
உதறி எறிகிறோம்..
ஒரு பறவைதான்
அதில் ஒரு கூட்டை
வடிவமைக்கிறது...
நாம் உதறுகிறோம்
அவர்கள் கூடமைக்கிறார்கள்...
00000