Sunday, December 31, 2017

ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும்
நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள்.
மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும்
அல்லது
விளக்கைத் தேய்த்தவுடன் பூதம் வந்து கேட்டதை எல்லாம்
நிறைவேற்றித்தருவது ஒருபோதும் வேண்டாம்
அவை வாழ்வின் சுவையல்ல…சுவைக்காது..
அது வாழ்க்கையுமல்ல
கடந்துபோன ஆண்டுகளில்
நிகழ்ந்ததுபோன்றே நிகழ்ந்தாலும்
கவலையில்லை
எதனையும் எதிர்கொள்ளும் திறனும்
எல்லாவற்றிலும் வென்றெடுக்கும்
நம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கடின உழைப்பும்
ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும்
இவ்வாண்டிலும்
குறையாது
நமக்கு நிறைந்திருக்கட்டும்
இதனைப் போராடிப் பெறுவோம்
                                                பூவின் உன்னதமான ரகசியமான தேனை
எடுப்பதற்கு ஒரு தேனீ ஒருநாளைக்குத் தொடர்ச்சியாக ஆறு மைல்கள் பறக்குமென்று
அறிவியல் சொல்கிறது..
நம் கண்முன்னே பிருமாண்டம் காட்டும் மிகப்பெரிய தேன்கூட்டையும் அதில் சேகரிக்கப்பட்ட
தேன்துளிகளையும் எண்ணிப்பாருங்கள்..
எத்தனை தேனீக்கள்.. எத்தனை மைல்கள்.. சிறகடிப்பென்று..
நம் வாழ்க்கையும் உறவுகளும் தேன்கூடுதான்
உழைப்போம் உயர்வோம்
அதற்கெனப் போராடும் வாழ்வே அமையட்டும்
ஒவ்வொரு புத்தாண்டிலும்
அதுதான் வாழ்வதன் அடையாளம்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday, July 14, 2017

ஊட்டும்.... (நாவல்)

அத்தியாயம் 3   ஊழ்வினை 1

காவேரியில்  நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்குப்பயன்படும். கரையோரங்களில் பச்சை இழைந்து கிடந்தது. எல்லாவகை கீரைகளும் பயிரிடப்பட்டு மண்டிக் கிடந்ததன. பாலத்தின்மீது நின்று நுரைத்தோடும் காவிரியை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். மேற்கில் சூரியன் மஞ்சள் நதிக்குள் இறங்கிக்கொண்டிருந்தான். சில பறவைகள் வரைந்து உயிர்பெற்றதுபோல பறந்துபோயின வடக்கிருந்து தெற்காக. வயல் வேலை முடித்தவர்கள் கொல்லை வேலை முடித்தவர்கள் தங்கள் மண்வெட்டிகளை.. கடப்பாரைகளைக் காவிரியில் கழுவி கரையில் போட்டுவிட்டு வேட்டியை அவிழ்த்துக்கொண்டு கோமணத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கழுத்தளவு மூழ்கிக்கொண்டு அப்படியே வாயால் தண்ணீரை விழுங்கி அண்ணாந்து உமிழ்ந்துகொண்டார்கள். சிலர் முழங்காலளவு தண்ணீரில் துண்டைப் பிழிந்து உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தார்கள்.

           என்ன மாமா.. வேலை முடிஞ்சிடிச்சா..?

           எங்க.. இன்னும் ரெண்டு மா கெடக்கு.
.
           மேற்கே போயிட்டு வந்திட்டியா..

           எங்க?

           உன் மாமியார் வழில யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு உம் பொண்டாட்டிதான் சொல்லிட்டுபோச்சு.. பிள்ளைகளை தரதரன்னு இழுத்துக்கிட்டுப்போனா.

           ஏம்மான்னே.. பஸ் போயிடும் பெரியப்பான்னுட்டு  பதில்பேசிக்கிட்டே போச்சு. நீ போவலியா..?

           நாந்தான்.. வயல்ல ஆள இறக்கிவிட்டுட்டேன்.. நடுறதுக்கு. நா போனா அவ்வளவுதான்.. பொழப்பு கெட்டுடும்.. மாமியாளுக்கு அத்தை மவளோட புருஷனாம்.. யாரு பாத்தா முன்னேர பின்னேர.. வயசானா சாவ வேண்டியதானே.. நாம போவாட்டி என்ன பொணம் வெந்துபோவாதா என்ன?
           அப்படியெல்லாம் பேசாதப்பா..  யாரு சாவ யாரு நிறுத்தி வைக்கமுடியும்? நாலு ஒறமுறை, சாதி, சனம் சொந்தப் பந்தம் வேணுமுன்னா அப்படித்தான் இருக்கும்.

           என்னங்கடா..பொழுதுபோயிடிச்சி.. உங்க அலப்பற முடியல்ல.

           இது வேற கதை மாமா..

           லேசாக இருள் கவியத் தொடங்கியது.

           பாலத்து முக்குக் கடையில.. குண்டு பல்பு உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்னு மினுக்குமினுக்குன்னு எரிய ஆரம்பித்தது.  பாய்லர் கிட்ட  வேலு டீ போட்டுக்கிட்டிருந்தான்..

           என்னா போட்டிருக்க வேலு இன்னிக்கு?

           காலிப்ளவர் பக்கடா போட்டேங்.. முடிஞ்சிடிச்சி.. காராச்சேவுதான் இருக்கு.  தூள் பக்கடா ஒரு ஆளு சாப்பிடலாம்.

           கொடு..

           இருள் அடர அடரக் குண்டு பல்பு வெளிச்சத்தில் சுவற்றில் வரைந்த ஓவியங்கள்போல இருந்தார்கள். கருப்பு உடம்பில் கட்டியிருந்த வெள்ளை வேட்டிதான் ஆளு கணக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

           தெருவுக்குள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

           மாப்ள.. நம்ப மாரிமுத்து சித்தப்பா வேஷங்  கட்ட ஆரம்பிச்சுடிச்சி.. ஒருமணிநேரம் கச்சேரிதான்.

           மாரிமுத்து கையில் அரிவாளுடன்..  யாரா இருந்தாலும் வெட்டுவேன்.. பாக்கறியா.. ஒரே வெட்டு ஓடிப்போயிடும் தலை கண் காணாம.. வா.. வா..

           நீ யாரு?

           மாணிக்கத்து மவன்.

           நீ போ.. உனக்கும் எனக்கும் பகையில்ல..  வா.. வெட்டுனா ஒரே வெட்டுதான்.. மாரிமுத்து குரல் அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும் பட்டு திரும்பி வந்து தெருவை நிறைத்து அதிரடித்தது.

           மாரிமுத்து கதை ஒரு தனிக்கதை.

           காலம் கண்ணுக்குத் தெரியாதது என்பதால் அதுகுறித்த அச்சம் நம்மிடம் இல்லை. காலம் தன் வேலையைக் காட்டுகிறபோதுகூட அதுபற்றி சிந்தனையும் குறை கூறுவதும் இல்லை.

           ஆனால் காலம் பொல்லாதது. அது யாரை  வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் செய்வது தெரியாமல் செய்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் தன் விளையாட்டின் விளைவுகளை.

           மாரிமுத்துவின் கதையும் அப்படித்தான்.

           ஒல்லியான உடலமைப்பு. அதில் ஆங்காங்கே எலும்புகள் துருத்திக் கிடந்தாலும் அதில் ஓர் அழகு மண்டிக்கிடக்கும். நெஞ்செல்லாம் புதர்போல முடி நிறைந்திருக்கும். கை, கால்களிலும் விளைந்த வயலின் கதிர்களைப்போல மடித்தபடி மயிர்க்கற்றை மாரிமுத்துவிற்கு ஓர் தனித்த அடையாளத்தையும் அழகையும் தந்திருந்தது. நன்றாகத்தான் இருந்தார்.

           மூன்று மகன்களும் மூன்று மகள்களும் என ஆறுபிள்ளைகள் 
பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

           அப்படி நினைத்துக்கொண்டுதான் வாழ்ந்தார்.

           உள்ளூரிலேயே மாரிமுத்து மனைவியின் இரண்டு தங்கைகளும் வாக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் யாருடனும் ஒட்டாது. ஒட்டிய குடும்பத்தின் சகலை கோவிந்தன் மாரிமுத்துவுடன் அந்நியோன்ய சிநேகம்.

           அதுதான் செய்யக்கூடாத செயலை செய்ய வைத்தது.

           யாரறிவார் என்று அவர்கள் துணிந்து அந்த காரியத்தைச் செய்தார்கள்.

           அவர்கள் செய்த செயலை யாருந்தான் அறியவில்லை. ஆனால்  இருவருக்கு மட்டும் இவர்களின் செயல் தெரியும்.

           ஒன்று ஒரு பெண்.

           இன்னொன்று கடவுள்.

           பெண் என்ன செய்வாள். தவித்து அடங்கினாள். பதறிக் கலங்கினாள். பரிதவித்துப் புலம்பினாள்.

           ஆனால் மனதுக்குள் கோபம் நெருப்பாய் வளர்ந்து கிடந்தது.

           வளர்ந்து கிடந்த நெருப்பில் சொற்களைக் கொண்டி அள்ளி மனங்கொண்ட மட்டும் வீசினாள்.

           மாரிமுத்துவும் கோவிந்தனும் அதில் நனைந்தார்கள்.

           கவலையின்றிப் பேசி மறந்தார்கள்.

           கடவுள் மறக்கவில்லை என்பதை மாரிமுத்துவின் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வில் உணர்த்தினார்.

           கீரைக் கூடையில் கீரை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குப் போன மாரிமுத்துவின் மனைவி வேலாயி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்கையில் அடிபட்டுத் துண்டுதுண்டாகிப்போனாள்.

           சிதறிய பழங்களைப் பொறுக்குவதுபோல அவள் உடலைப் பொறுக்கிக்கொண்டுபோனார்கள்.

      பார்த்த மாரிமுத்து அன்றிலிருந்து மனம்  வெதும்பி பைத்தியமானான். எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. யாரைப் பார்த்தாலும் கையில் அரிவாள் எடுத்துக்கொண்டு வெட்டுவேன் என்று துரத்தத் தொடங்கினான்.

           ஒரு நாள் கோவிந்தனை அந்த அரிவாளோடு துரத்த அதுவும் விபரீதமாய் முடிந்தது இன்னொரு கதை.

                                                                                                                (ஊழ்வினை தொடரும்)   
          

Sunday, July 9, 2017

ஊட்டும் .... (நாவல்)....

அத்தியாயம் 2    ஊழ்வினை 2

                          கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா  கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நின்று பார்த்தாள்.
                         உலையிலிட்ட அரிசிக்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் அடிச்சோறு கருகிவிட்ட நெடியது.
                        இதுபோன்று நிகழ்ந்தது இல்லை.
                        அரிசிக்குத் தகுந்த நீரை வைக்கத் தெரியாத பெண் இருக்கமுடியாது. கவனம் சிதறுகிறது. ஏன்?
                        மங்களா யோசித்துப் பார்த்தாள். அடுப்பை நிறுத்திவிட்டு வேறு உலை வைத்தாள். கொஞ்சம் கருகல்கூட நித்தியானந்தத்திற்குப் பிடிக்காது. சாப்பிடமாட்டான். எதுவும் குறையும் சொல்லமாட்டான். பட்டினி வயிறோடு படுத்துக்கொள்வான்.
                         விடு.. பரவாயில்லை. ஒரு டம்ளர் பால் கொடு குடித்துவிட்டுப் படுத்துக்கொள்கிறேன் என்பான்.
                           எனவே வேறு உலை வைத்தாள். சரியான நீரும் வைத்து கொதி வந்ததும் அரிசியைக் களைந்து உலையிலிட்டாள்.
                              கொதிக்க ஆரம்பித்தது அரிசியை வாங்கிய உலை.
                              என்னமோ மனதைப் பிசைகிறது. பிள்ளைகளைப் பார்த்தாள். கூடத்தின் மத்தியில் அமர்ந்து பள்ளிப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள் வீட்டுப்பாடமாக.
                              பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
                               இப்படிப் பார்ப்பது பழக்கமில்லை. ஆனாலும் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்கிற உந்துதல் அவளுள் எழும்பியிருந்தது.
                              இன்றைக்கு எல்லாமும் மாறாக நடக்கின்றன.
                               இதற்கு என்ன பொருள்?
                               எதற்கான விளைவு இந்த மாறுதலான செயற்பாடுகள்.
                               மங்களாவால் யோசிக்க முடியவில்லை.
                               மறுபடியும் அடுப்படிக்குள் போய் சாதத்தைக் கஞ்சி வடிய பாத்திரத்திற்குள் கவிழ்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு கூடத்திற்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
                                மனசுக்குள் ஏதோ பிசைவதுபோலவே மறுபடியும் தோனியது.
                                நித்தியானந்தத்தை நினைத்துக்கொண்டாள்.
                                அவனுக்குப் பிடித்தமான பருப்பு உருண்டை குழம்பு வைத்திருக்கிறாள். பக்கோடா வற்றல் வறுத்திருக்கிறாள். கொஞ்சம் கூடவே சாப்பிடுவான்.
                                வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தாள்.
                                தண்ணீர் குடிக்கவேண்டும்போலிருந்தது. குடித்தாள். லேசாகப் பசிப்பதுபோலிருந்தது.
                                என்ன இருக்கிறது என்று யோசித்து இருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துவந்து பிரித்தாள். உடனே பிள்ளைகள் வந்து சூழ்ந்துகொண்டன.
                              அம்மா எனக்குக் கொடு.
                              எனக்கும் கொடும்மா.
                               பிரித்துக் கொடுத்தாள்.
                               தான் இரண்டு பிஸ்கட்களை எடுத்துக்கொண்டாள்.  ஒரு டம்பளர் தண்ணீர் எடுத்துவந்து வைத்துக்கொண்டு அதில் அந்த பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிட்டாள். பின் அந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். டம்ளரை வைக்கும்போது வாசலில் யாரோ அலறும் குரல் கேட்டது.
                                 மங்களாக்கா....மங்களாக்கா...
                                 பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள்.
                                 குமார் நின்றுகொண்டிருந்தான்.
                                 என்னடா?  இப்படி கத்தறே? என்றாள் பதட்டமுடன்.
                                 அக்கா..அக்கா.. என்றபடி அழ ஆரம்பித்துவிட்டான்.
                                 என்னடா ஆச்சு?
                                 அண்ணனுக்கு...  என்றபடி அழ ஆரம்பித்தான்.
                                 சட்டென்று ஒரு நெருப்பு மங்களாவிற்குள் பற்றியது.
                                 என்னடா ஆச்ச அண்ணனுக்கு சொல்லுடா?
                                 பெரிய கோயிலுக்கிட்ட ஆக்சிடெண்டு ஆயிடிச்சுக்கா.. லாரிக்காரன் அண்ணன்மேல மோதிட்டான்..
                                 ஐய்யய்யோ.. என்றபடி தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு மங்களா கத்த தெரு கூடிவிட்டது.
                                 என்னடா ஆச்சு?
                                 நித்தி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட்..  லாரி மோதிடிச்சு..
                                அவனுக்கு என்னடா ஆச்சு?
                                 அங்கேயே உயிர் போயிடிச்சு..
                                என்னங்க,,, என்றபடி பெருங்குரலெடுத்து மங்களா கத்தியபடி மயங்கிப்போனாள்.
                               தெருவே குலை நடுங்கி நின்றது.
                               அடக்கடவுளே?
                               அடப்பாவி.. இப்பத்தான பாத்தேன்.. புள்ளங்கள விட்டுட்டுப்போனான்..
                                யார் யாரோ என்னன்னவோ பேசினார்கள். ஓடினார்கள். மங்களாவை மயக்கம் தெளிவித்தார்கள். பிள்ளைகள் ஓடிவந்து மிரண்டு நின்றன.
                            யாரோ ஆட்டோ எடுத்து வந்தார்கள்.
                            எங்கடா கொண்டுபோயிருக்காங்க..
                            மெடிக்கலுக்கு..
                            ஓடினார்கள்
                             இவர்கள் போனபோது நித்தியானந்தத்தின் உடலை மார்ச்சுவரிக்கு முன்னால் தரையில் போட்டிருந்தார்கள்.
                              மங்களா விழுந்து புரண்டு அவன் உடல்மேல் கட்டிக் கொண்டு அழுதாள்.
                               என்னங்க.. இப்படிப் பண்ணிட்டுப்போயிட்டீங்க.. நான் என்ன பண்ணுவேன். புள்ளங்களா பாருங்க.. பிள்ளைகள் அப்பா.. அப்பா என்று கதறின.
‘                             மங்களாவிடம் கையெழுத்து வாங்கி மார்ச்சுவரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யக் கொண்டுபோனார்கள்.
                               மருத்துவமனைக்கு வெளியே வேப்ப மரத்தடியில் கவிழ்ந்து கிடந்தாள் மங்களா. அதற்குள் அவளின் உறவுகளுக்குச் சொல்லி அவர்களும் வந்து கூடிக்கிடந்தார்கள்.
                               உள்ளே போஸ்ட் மார்ட்டம் நடந்துகொண்டிருந்தது.

                                                                                              (ஊழ்வினை தொடரும்)


                     

Tuesday, July 4, 2017

ஊட்டும் (நாவல்)

 அத்தியாயம் 2     ஊழ்வினை 1


                       கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தான் நித்தியானந்தன். முன் பாரில் ஒரு பிள்ளையும் பின்பாரில் பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். நித்தியானந்தன் பிள்ளைகள்.. பெண்தான் மூத்தவள் பெயர் தேவகி,. அடுத்து இளையவன் பெயர் சுரேஷ்.
                       தேவகி ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.
                       சுரேஷ் ஐந்தாவது வகுப்பு படிக்கிறான். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.
                       இருவரையும் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருகிறான்.
                       கடைத்தெருவிற்கு அந்தப்பக்கம் நாலைந்து தெருக்கள் தள்ளி ஒரு ஆங்கிலப் பள்ளி இருக்கிறது. அங்குதான் படிக்கிறார்கள். நாலைரை மணிக்குப் பள்ளி முடிந்துவிடும்.
                            ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பதால் நித்தியானந்தத்திற்கு 4 மணிக்கு முடிந்துவிடும்.  ஆகவே தினமும் வந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு நகரில் உள்ள தலைமை அலுவலகம் போவான். முக்கியமாக யூனியன் அலுவலகத்திற்கு. போராட்டம், யூனியன் இவற்றில் ஆர்வம் உள்ளவன்.
                            அப்பா இங்க எங்க போறே?
                           இது என்னடா கேள்வி. உங்கள வீட்டுல வுட்டுட்டுஅப்பா ஆபிசு வரைக்கும் போயிட்டு வந்துடுவேன்.
                           எப்போ வருவே?
                           எட்டு மணிக்கு வந்துடுவேண்டா.
                           அப்பன்னா வரும்போது பானி பூரி வாங்கிட்டு வாங்க.
                           எப்பப்பாரு பானிபூரி.. அது வயித்த கெடுக்கப்போவுது.
                           அப்பா எனக்கு சாக்லெட் பெரியவளின் கோரிக்கை.
                            சரி வாங்கிட்டு வரேன்.
                           வீட்டு வாசலில் வந்து பிரேக் பிடித்து சைக்கிளை நிறுத்தினான். முதலில் சுரேஷை இறக்கிவிட்டு அவன் பைனை அவனிடத்தில் கொடுத்தான். அப்புறம் தேவகி தானாகவே இறங்கிகொண்டாள். அப்பா நானா இறங்கிட்டேன் பாருங்க.
                         வெரிகுட்டா.. இப்படித்தான் இருக்கணும். நீயாத்தான் எல்லா வேலையும் செய்ய கத்துக்கணும்..
                         நானும கத்துக்குவேம்பா.. என்றான் சுரேஷ் அவசரமாக.
                         நீயும் வெரிகுட்டுடா..
                         பின் சைக்கிளை விட்டுக் கீழிறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே வந்தான்.
                        உள்ளே அவன் மனைவி மங்களா அடுப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தாள்.
                        மங்களா.. புள்ளங்களுக்கு ஏதாச்சும் குடிக்கக் குடு.. நான் ஹெட் ஆபிசு வரைக்கும் போயிடு வந்துடுறேன்.
                       இருங்க உங்களுக்கும்  பூஸ்ட் ஆத்திடறேன். குடிச்சிட்டுப் போங்க.. மதியம் சாப்பிட்ட சாப்பாடு பத்தாது. டிபன்பாக்ஸ் சின்னது.
                       மங்களாவின் அன்பு செயல்பூர்வமானது.
                       சரி குடு.
                      என்றபடி உட்கார்ந்தான்.
                       அப்பா இந்த சூவைக் கழட்டிவிடு.. என்றான்.
                        அக்காவ பாரு.. அவளே கழட்டிக்கிறா.. இப்பத்தான சொன்னே நானும் கத்துக்குவேன்னு.. அக்காக்கிட்ட கத்துக்க
                        சரிப்பா.
                        குட். வரும்போது பானிபூரி வாங்கிட்டு வருவேன்.
                        மங்களா கொடுத்த பூஸ்டைக் குடித்தான். இன்னிக்கு ரொம்ப டேஸ்டா இருக்கு.
                        குடிச்சுட்டு தம்ளர தாங்க ரொம்பக் கிண்டல்தான்.. வழக்கமாக போடுற தண்ணிபால்லதான் போட்டேன்.
                       உங்கைபட்டா ருசி தனிதான்.
                       போங்க.. கிளம்பி..
                        சரி வரேன்.. என்றபடி படியிறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டான். மனதுக்குள் ஒருமுறை பிள்ளைகளை நினைத்துக்கொண்டான். பெரியவள் தானாகச் செய்யப் பழகிக்கொள்கிறான். பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும். சுரேஷையும் இப்படி தனியாகச் செய்ய பழக்கிவிடவேண்டும்.
                        சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு கடைத்தெரு வந்து வீதியில் கலந்து வேகமாக மிதித்தான்.
                        பழைய பஸ்ஸ்டாண்ட் பக்கம் வந்து அண்ணாசிலையோடு திரும்பி பெரியகோயில் போற வீதியில் சைக்கிளைத் திருப்பினான்.
                       பெரியகோயிலைக்கடக்கும்போது சிவசிவ என்றான்.
                       புது ஆற்றுப் பாலத்தைக் கடந்து திருப்பத்தில் சைக்கிளை ஓட்டும்போது போன் வந்தது.
                        அப்படியே ஓரமாக நிறுத்தி பையிலிருந்து போனை எடுத்து ஹலோ யாரது என்றான்.
                       பெரியகோயிலைக் கடந்து வேகமாகப் போன லாரி புதுஆற்றைக் கடக்கும்போது திருப்பம் என்று வேகத்தைக் குறைக்கவில்லை. அந்த வேகத்தைக் குறைக்காமல் திருப்பியபோது நித்தியானந்தம் நின்றதைச் சட்டென்று லாரி டிரைவன் கவனித்து பிரேக்கை அழுத்துவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
                      இடது பக்க சக்கரம் இடித்து அப்படியே நித்தியானந்தம் வலது பக்கம் சாலையில் சைக்கிளோடு அப்படியே குப்புற சரிய.. அவன் முதுகின்மேல் ஏறி லாரி நின்றது. படக்கென்று தேங்காய் உடைப்பதுபோன்று சத்தம் கேட்டது.
                        அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.
                         ஏதும் கத்தினானா என்றுகூட த் தெரியாமல் நித்தியானந்தன் உடல் நசுங்கி செத்துப்போயிருந்தான்.

                                                                                            (ஊழ்வினை ஊட்டும்)

Friday, June 30, 2017

ஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2



              அத்தியாயம் 1                                                              ஊழ்வினை 2


                      நல்லவேளை சன்னல் கதவுகளைத் தாளிடாமல் இருந்தான்.
                      கண்களுக்குள் வந்த சொர்ணாவும் மித்ராவும் சன்னலில் தெரிந்தார்கள்.
                      சன்னல் வழியே பார்த்த சொர்ணா பெருங்குரலெழுப்பிக் கத்தினாள்.
மித்ரா அப்பா..அப்பா.. என்று அழ ஆரம்பித்தாள்.
                      யாரோ கதவை உடைக்க முயன்றார்கள்.
                      சீக்கிரம் உடைங்க. உடைங்க.. என்று கத்தினார்கள்
                      நாலைந்துபேர் உடைக்க உடைந்தன கதவுகள்.
                      உள்ளே புகுந்தவர்கள் ஓடிவந்து ஒருவர் இருகால்களையும் பிடித்துத் தன் தோளில் தாங்கிக்கொள்ள. யாரோ ஒருவர் ஸ்டுலை அருகே இழுத்துபோட்டு ஏறி புடவையை அறுத்தார்கள்.
                         மூச்சுத் திணறினான் குமரன். பேச முடியவில்லை. கண்கள் மேலே செருகியிருந்தன.
                          கழுத்திலிருந்து புடவையை விடுவித்தார்கள்.
                          பேனை போடுங்கப்பா.
                          பேன் சற்று நின்று பின் வேகமெடுத்தது.
                          காற்று வர குமரனின் கண்கள் இயல்புநிலைக்கு வரவில்லை. மயக்கமானான்.
                          ஓடுங்க ஒரு ஆட்டோ எடுத்துட்டு வாங்க.
                           மாடிப்படியிறங்கி ஓடினார்கள்.
                           நாலாவது வீட்டில் விருந்தாளி யாரையோ இறக்கிவிட்டு திரும்பிய ஆட்டோவைக் கண்டதும் பதறி கூப்பிட்டார்கள்.. ஆட்ட்ட்ட்டோ...
                          அரண்டவன் போல ஆட்டோக்காரர் திரும்பி வந்தார்.
                           என்னம்மா?
                          இருங்க.. எங்க அண்ணன் தூக்கு போட்டுக்கிச்சு.. மயக்கமாயிருக்கு.. ஆசுபத்திரிக்கப் போவணும்..
                           ஆட்டோக்காரர் மிரண்டார்.. தூக்குப்போட்டுக்கிட்டாரா.. யம்மா.. எனக்கு ஸ்கூல் சவாரி இருக்கு.. ஆட்டோவைத் திருப்ப..
                            தெருவிலிருந்த ஒருபெண் குறுக்கே நின்றாள்.
                            ஆளுக்கு உசிரு இருக்குய்யா.. உன்னோட சொந்தம்னா இப்படி கௌம்புவியா.. கொஞ்சம் நில்லுப்பா..கண்ணு..
                              கண்ணு நின்றார்.
                             அதற்குள் குமரனைத் தூக்கிக்கொண்டு படியிறங்கி ஆட்டோவுக்கு வந்துவிட்டார்கள்.
                             அப்படியே உட்கார வையுங்க
                              சொர்ணா நீ முதல்ல ஏறு.. ஏறினாள். ஓரமாக உட்கார்ந்துகொண்டாள். அடுத்து குமரனை ஏற்றி அவளருகே வைத்து அவள் தோள்மீது சாய்த்துகொடுத்தார்கள்.
                           இன்னொருத்தங்க யாராச்சு போங்க.
                            அம்மா.. நானும் வரேன்.. என்றபடி மித்ரா ஏறிக்கொண்டு பயங்கலந்த பார்வையோடு குமரனைப் பார்த்தாள்.
                           எங்கப்பா குமரனோட அப்பா?  வூட்ல இல்லியா?
                           இருக்காரு...
                            அதற்குள் குமரனின் அம்மா ஏறிவந்து ஆட்டோவில் உட்கார்ந்தாள். திருமுருகன் கிளினிக்குப் போப்பா..
                           ஆட்டோ கிளம்பிப்போனது.
                           வீட்டினுள் குளிர்சாதனை அறைக்குள் கட்டிலில் உட்கார்ந்திருந்த முத்துவேல் குளிரின் அளவை அதிகரித்தான். குளிரைத் தாண்டி உடலும் மனமும் கொதித்தது.
                           யார் விட்ட சாபம் இது?
                           குமரனை நினைக்க நினைக்க மனம்  அரிசியிட்ட உலை கொதிப்பதுபோலக் கொதித்து கொதித்து அடங்கியது.
                           என்னப்பா இப்படி உக்காந்திருக்கே?  உள்ளே வந்த எதிர்வீட்டு தனத்தம்மாள் கேட்டாள்.
                            என்ன செய்யச் சொல்றீங்க?  நான் சாகாம இருக்கேன்னு வருத்தமாக இருக்கு. பட்டுன்னு செத்துப்போயிட்டா இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கவேண்டியதில்ல.
                            என்னப்பா பண்ணறது? நீயும் அந்தக் காலத்துலேர்ந்து படாதபாடு பட்டுத்தான் வந்திருக்கே.. யார் செஞ்ச பாவமோ ஒன் தலயில விடியுது..
                            நாந்தான் யார் குடியயோ கெடுத்திருக்கேன்.
                            சரிப்பா.. போப்பா. எழுந்து ஆசுபத்திரிக்குப் போ..
                             வேணாம்மா அவனப் பாத்தாலே வெறுப்பா இருக்கு.. அவன நம்பி கட்டிக்கிட்டு வந்துட்டேன்.  அந்தப் பொம்பளப் புள்ளங்களுக்காக உசிர விட முடியாம இருக்கேன். இல்லன்னா எனக்கெல்லாம் இருக்கவே பிடிக்கலம்மா..
                           முத்துவேல் தலையை தடவி.. அமைதியா இரு.. நீயே நெஞ்சு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டவன்.. உணர்ச்சிவசப்படாத..
                           வெளியே போய்விட்டாள்.
                           எழுந்து தண்ணீர் குடித்தான்.
                           மனது அடங்கவில்லை. தவித்தது.
                          திருமுருகன் கிளினிக்கில் போய் ஆட்டோ நின்றது.
                          மயக்கம் தெளியாமல் இருந்தான்.
                          உள்ளே கொண்டுபோனார்கள்.
                          என்னாச்சு?
                         விவரம் சொன்னார்கள்.
                          போலிசுக்கு சொல்லணுமே.. இது தற்கொலை கேசு.
                          சொல்லிடறோம் டாக்டர்.. முதல்ல இவனக் காப்பாத்துங்க.
                         உள்ளே கொண்டுபோனார்கள்.
                          ஒருமணிநேரம் கடந்து டாக்டர் வெளியே வந்தார்.
                           சரியாயிட்டாரு. இன்னும் பத்துநிமிஷம் தொங்கியிருந்தா குரல்வளை உடைஞ்சி ஆளு போயிருப்பான். ஆயுசு கெட்டி.
                            டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் குமரனின் தாய்.
                           எதுக்கு கும்படறீங்க?  ஏற்கெனவே வந்தவன்தானே இவன்.
                          ஆமாம் டாக்டர்.
                           இவன மாதிரி ஆளு எல்லாம் இருக்கறது வேஸ்ட்தான்.. நானே சொல்லக்கூடாது.. ஆனா  எரிச்சலா இருக்கு. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவன உயிர் காப்பாத்தலாம்.. திமிறுல செய்யறவனக் காப்பாத்தக் கூடாது. அது என் தொழிலுக்கே துரோகம்..
                              சொர்ணா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
                              டாக்டர் கேட்டார் நீ  அவனோட  வொய்ப்பா?
                               ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்.
                              பிட்டி கேர்ள் என்றபடி  போனார்.
                               உள்ளே போனார்கள். கண் விழித்தபடி படுத்திருந்தான்.
                               அருகே போய் குமரனின் அம்மா கத்தினாள்.. காலம் முழுக்க என் கொலையறுக்க பாக்கறேல்ல..
                                சொர்ணா எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
                                என்னிக்கு உங்கப்பனுக்குப் பொண்டாட்டியா வந்தேனோ அப்பலேர்ந்து எனக்கு நிம்மதியில்ல.. வெந்தத தின்னு விதிவந்தா சாவுன்னுதான் வாழ்ந்துட்டிருக்கேன்..
                                 குமரன் சொர்ணாவைப் பார்த்தத் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
                                  மித்ராவை அருகே அழைத்தான். போனாள்.
                                  நீ ஒரு பேட் பாய்ப்பா என்றாள் மித்ரா.
                                  மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே  சொர்ணாவைப் பார்த்தான் மறுபடியும்.
                                  பக்கத்துவீட்டுக்காரர் பார்க்க வந்திருந்தார்.
                                  என்னப்பா நீ?  ஒரு குடும்பமாச்சு.. பொம்பள புள்ள வச்சிருக்கே.. குடிய மாத்தமாட்டியா,, உன்னால எத்தனபேருக்கு கஷ்டம் பாரு..
                                  சொர்ணாவைப் பார்த்து டாக்டர் என்ன சொன்னாரும்மா..
                                  இப்படி யாராவது கேட்பார்கள் என்று காத்திருந்தது போல..
இருக்கறத வேஸ்ட்னு சொன்னார்.. என்றாள்.
                                   குமரனின் தாய்  சின்ன அதிர்வோடு மருமகளைப் பார்த்தாள்.
                                   குமரனுக்குள்ளும் அதிர்வு வந்தது.
                                   ஏதோ பிடித்திருந்த பிடி கைவிட அப்படியே அந்தரத்திலிருந்து விழுவதுபோல அவனுக்குள் ஒரு காட்சி வந்தது.

                                                                                                   (ஊழ்வினைத் தொடரும்)



“‘

Wednesday, June 28, 2017

ஊட்டும் ..... நாவல்...

அன்புள்ள

              வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும என்கிற முனைப்பில் இப்போது.

             இதற்கிடையில் நான் எழுதிக்கொண்டிருக்கிற நாவல் ஊட்டும் என்னும் தலைப்புடையது. இதனை 100 பக்கங்கள் அளவு எழுதினாலும் அவற்றைத் தொடர்போல வலைப்பக்கத்தில் வெளியிட எண்ணியுள்ளேன். முன்பு பேருந்து நாவலை அப்படித்தான் எழுதி நண்பர்கள் நிறைய பின்னூட்டம் அளித்தார்கள். அவற்றைக்கொண்டு நாவலை செப்பம் செய்து இப்போது அது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது சென்ற ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு.,

               சிலப்பதிகாரத்தின்  காப்பிய உருவாக்கத்தின் அறங்களில் ஒன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது.இந்த அடியின் ஊட்டும் என்கிற ஒன்றை மட்டுமே என் நாவலின் தலைப்பாக வைத்துள்ளேன்.

             எனவே நாவலைத் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை அளிக்க வேண்டுகிறேன்.

               நன்றி வணக்கம்.

====================================================================


                                                   ஊட்டும்  (நாவல்)

அத்தியாயம் 1                        ஊழ்வினை 1

               

                                காலையில் மித்ராவைப் பள்ளிக்கு கிளப்பும்போதே சண்டை வந்துவிட்டது குமரனுக்கும் சொர்ணாவுக்கும்.
                                இன்னிக்கு நீ கொண்டுபோய் மித்ராவைப் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வந்துடு.
                               ஏன் நீங்க என்ன செய்யபோறீங்க? என்று கேட்டாள் சொர்ணா.
                               எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பியா நீ?
                               கேக்கற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?
                               நீ ரொம்ப யோக்யதைதான்
                               யோக்கியதையைப் பத்திப் பேச உங்களுக்கு தகுதி இல்ல.
                               காலையிலேயே எதுக்கு வம்பு இழுக்கறே சொர்ணா?
                               நானா? நல்ல குடும்பம் நடத்துனா நான் ஏன் வம்பு பண்ணறேன்.
                               நீ ஒழுங்கா இருந்தா நான் நல்ல குடும்பம் நடத்துவேன்.
                               நான்தான் தண்ணியப் போட்டுட்டு ஊர் ஊரா சுத்துறேன். வீடு கண்ட இடம் கடன் வாங்கிட்டு வெக்கமில்லாம இருக்கேன். ஏன்னா எங்கப்பா  அம்மா ஒழுங்கா வளக்கலே பாருங்க..
                               எங்கப்பா அம்மா வளத்தது தப்பா?
                               அத நான் வேற சொல்லணுமா.. நல்லாத் தெரியுதே.
                               அடிச்சு மூஞ்சு கீஞ்சிய கிழிச்சிடுவேன்.. நாயே.. ஒழுங்கு மரியாதயா நடந்துக்க.
                                ஆம்பள மட்டுந்தான் அடிப்பீங்களா? பொம்பளக்கி கை ஓங்கத் தெரியாதா?
                                அடிடி பாப்போம்.
                                எனக்கென்ன பைத்தியமா அடிக்கறதுக்கு..
                                அப்ப நான் பைத்தியமா?
                                என் தலையெழுத்து இப்படித்தானே போட்டிருக்கு.. எதுக்குமே வழியில்லாம வக்கத்து மாட்டிக்கிட்டேன்.. நாள் முழுக்க சீரழிஞ்சி சிரிப்பா சிரிக்கிறேன்..
                               எதுக்குடி இப்ப கண்டதையும் பேசறே?
                               தவறாம குடிக்கற மனுஷனுக்குப் பெத்த புள்ளய கொண்டுபோய் பள்ளிக்கூடத்துல விட நேரம் இல்ல.. ஆனா குடிக்க மட்டும் நேரம் இருக்கு.. அது எங்கெங்கோ போய் கடன் வாங்கி குடிக்கவும் கூசல..
                                 குமரனுக்குள் தன்மானம் பொங்கி வெடித்தது.
                                 எது செய்தாலும் பதிலுக்குத் தயங்காமல் எதிர்வினை காட்டுவாள்.
                                அதற்குள் எட்டிப்பார்த்த வசந்தா உள்ளே வந்தாள். குமரனின் தாய்.
                                 நாளு முழுக்க உங்க எழவே பெரிசா போச்ச?
                                 என்ன ஆச்சு?
                                  சொர்ணா அழுதபடியே சொன்னாள். அத்தே.. காலயிலேயே குடிக்கக் கிளம்பியாச்சு. இன்னிக்கு மித்ராவுக்கு பரிச்சை.. கொண்டு போய் விட முடியாதுங்கறாரு.. நான் இன்னிக்கு வீட்டுக்கு வரக்கூடாது.. உடம்பெல்லாம வலி உயிரப் போவுது.. காலையிலேயே உதிரம் போவுது..
                                 சொல்லிவிட்டு அழுதாள்.
                                  ஏண்டா இப்படி பண்ணறே?  பேசாம நானும் உங்கப்பனும் செத்துப்போறோம்.. அப்புறமாச்சும் திருந்துவியாடா.. நாங்க என்னடா பாவம் பண்ணோம்.. இப்படி வந்து பொறந்திருக்கே.. அப்படி குடிக்கச் சொல்லுதா.. இத விட்டுத்தொலக்க மாட்டியா.. ஒத்த பொம்பளப் புள்ள அவள கரையேத்த வேண்டாமா?
                                  பேசாமல் உட்கார்ந்திருந்தான் குமரன். எதிர்த்துப் பேசமாட்டான் தாயை. அப்புறம் குடிக்கக் காசு கிடைக்காது.
                                  ஏதாவது ஒரு காரணம் சொல்லுவன் காசு வாங்க. கிடைக்கவில்லையெனில் அசந்த சமயம் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு சாமானைத் தூக்கிக்கொண்டு போய் விற்றுவிட்டுக் குடித்து வருவான்.
                                  குமரனின் அப்பா முத்துவேல்.  நான் என்ன பண்ணறது. என் தலையெழுத்து. அவன்லாம் திருந்த மாட்டான். ஒண்ணு நாம இதல்லாம் கண்டுக்காம சீக்கிரம் செத்துப்போவணும்.. இல்ல அவன் செத்துப்போவணும். ஏதாவது ஒண்ணு நடந்தாதான் இது முடிவுக்கு வரும்.
                                  குமரனால் குடிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுவும் முட்ட முட்ட.
                                 இத்தனைக்கும் குமரன் அப்பா,அம்மாவோடுதான் இருக்கிறான். நாலைந்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார் முத்துவேல். அதில் ஒன்றில்தான் குமரனும் குடியிருக்கிறான். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும். எப்படியும் திருத்திவிடலாம் என்கிற நப்பாசையில்.
                               எட்டு மணியாயிற்று. சொர்ணா அவசரமாகக் கிளம்பி மித்ராவை ரெடிபண்ணி அழைத்துக்கொண்டு போனாள்.
                                உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா? அவ வீட்டுக்கு வரக்கூடாது..அந்த அவஸ்தையெல்லாம் உனக்கு எங்க புரியப்போவுது.?  உன்னை ஏண்டா பெத்தோம்னு இருக்கு..
                                சொல்லிவிட்டு  வசந்தா போய்விட்டாள் அவள் வீட்டிற்கு.
                                 சற்று நேரம் உட்கார்ந்திருந்தான்.
                                 குடிக்காமல் இருக்க முடியவில்லை. குடியை நிறுத்தவே முடியவில்லை. என்ன செய்யலாம் பேசாமல் செத்துப்போய்விடலாம். சாவேண்டா என்று நிறைய குரல்கள் அவன் மனத்துள் ஒலித்தன.
                                 வீட்டின் கதவை உட்புறம் தாழிட்டான்.
                                  மர ஸ்டூல் கிடந்தது.
                                 அதை எடுத்துப்போட்டான். ஒரு புடவையை எடுத்து மேலே மின்விசிறியில் கட்டினான். மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி உறுதி செய்தபின் நின்ற மர ஸ்டூலை எட்டி உதைக்க உடல் தொங்கியது. கழுத்தில் சுருக்கு இறுக்கியது. உயிர்போகும் தருணத்தை எண்ணியபடியே இருந்தவன் சட்டென்று வலி தாங்கமுடியாமல் கத்த நினைக்க குரல் வரவில்லை. கால்களை உதைத்து எட்டியுதைத்த மர ஸ்டூலை இழுக்க முயன்றான் எட்டவில்லை. சொர்ணாவும் மித்ராவும் நிழலாக வந்துபோனார்கள். கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தான் விடாது.

                                                                                      (ஊழ்வினை தொடரும்)




Sunday, May 28, 2017

இன்றைய தினமணி தமிழ்மணியில் என் கட்டுரை






இல்லற வாழ்வின் இணைப்புப் பாலம்


            செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் அகம் புறம் எனும் இரு பண்புநிலைகளைச் சார்ந்த பாடல்களைக் கொண்டது. இதில் அக இலக்கியம் இல்லறவாழ்வின் மேன்மையைப் பேசுவதாகும். அக இலக்கியங்களின் அடிப்படையே மாந்தர்களின் கூற்றுதான். கூற்று என்பது பேச்சு என எளிதாகப் பொருள் கொள்ளலாம். ஆனால் இந்த கூற்றுரைப்போரின் சொற்களின் பொருள்கள் மிக விரிவானவை மிகச் செறிவானவை. இதில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, பரத்தை கூற்று, நற்றாய் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று என விரியும். இவற்றில் தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வினை மேற்கொள்ள துணை நிற்பதே அகவாழ்வின் கூற்றுகளின் முதன்மையான நோக்கம். இதில் தோழி எனப்படும் பெண் செவிலித்தாயின் பெண்ணாக வருபவள். மதிநலம் மிக்கவள். துணிவானவள். கண்டிப்பானவள். அறத்தொடு நிற்பவள். எந்த தீயவிளைவுக்கும் ஆட்படாதவள். தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வில் ஈடுபடுதலுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள். இவள் தலைவனிடத்தும் தலைவியிடத்தும் மிக்க அன்புடையவள். இவளின் பேச்சு நயமானது. சான்றாக தலைவனிடத்து தலைவி குறித்து தலைவியிடத்து தலைவன் குறித்தும் பேசுகிற பின்வரும் இருபாடல்கள் தோழியின் மாண்பை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல்களாகும்.
பாடல் எண். 27
            இப்பாடல் பாலைத்திணையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.  தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்துபோயிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுக்கமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதையுணர்ந்த தோழி தலைவியின் வருத்தம்போகப் பேசும் பேச்சு இது.
            தலைவன் உன் மீது மிகுந்த அன்புடையவன். எனவே அவன் அந்த அன்பை உனக்கு வழங்குவதில் தடையில்லாதவன். அவன் பாலை நிலத்து வழியாகத்தான் பொருள் ஈட்டுவதற்குச் சென்றிருக்கிறான். பாலை நிலம் வறண்டது. நீர்த்தாகம் எழ வைப்பது. என்றாலும் அங்கே அருமையான காட்சிகள் உண்டு. ஒன்றை சொல்கிறேன் கேள். தன்னுடைய இணையான பெண் யானைக்கு நீர்த்தாகம் எடுப்பதையுணர்ந்த ஆண் யானை அந்த பாலைநிலத்தில் வளர்ந்துள்ள யா என்கிற மரத்தின் நீர்ப்பட்டையை உரித்துக் கொடுக்க அதைவாங்கியுண்ணும் பெண்யானை நீர்த்தாகத்தைத் தணித்துக்கொள்ளும். இது அன்பால் நிகழும் காட்சி. இக்காட்சியை அந்நிலத்தின் வழியாகச் செல்லும் தலைவன் பார்க்கிறபோது கண்டிப்பாக உன் நினைவு வந்து விரைவில் திரும்பிவிடுவான் வருந்தாதே  என்கிறாள். இக்கருத்தைச் சுட்டும் அருமையான பாடல் பின்வருமாறு
                        நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
                        பிடிபசி களைய பெருங்கைவேழம்
                        மென் சினை யா அம் பிளக்கும்
                        அன்பின் தோழிஅவர் சென்ற வாறே
                                                                        குறு.27
(நசை – விருப்பம், பிடி – பெண்யானை, பெருங்கை வேழம் –ஆண்யானை, மென்சினை – மென்மையான கிளை, யா – மரம், ஆறு- வழி)
                        இதேபோன்று பிரிந்துபோன தலைவன் காலத்தை நீட்டிக்கிறபோது தலைவியைச் சந்திக்க வரும்போது அவனைத் தடுத்து தோழி பேசுகிறாள்.
            இது குறிஞ்சித்திணைப் பாடல். கபிலர் பாடியது.  இரவு நேரத்தில் வந்து செல்லும் தலைவனிடத்துத் தோழி பேசுகிறாள்.
            மூங்கிலால் தன்னுடைய காவல் மரமான வேர்ப்பலா மரத்திற்கு வேலியிட்டிருக்கும் மன்னனின் நாட்டைச் சேர்ந்த தலைவனே உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். அந்த காவல் மரத்தின் வேர்ப்பலா இருக்கிறதே அது பெரிய பழம். ஆனால் சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் வல்லமை படைத்தது. இது இயற்கையாக நடப்பது. பலாப்பழம் பெருக்கப் பெருக்க அந்த சிறிய காம்பிலேயே தொங்கும். இது இயல்பானது. ஆனால் உன்னுடைய பிரிவின் காரணமாக உன்மீது கொண்ட ஆசையானது அந்த பலாப்பழம் பெருப்பதுபோல பெருத்துவளர்கிறது. ஆனால் இந்த ஆசைஎனும் பழம் பெருப்பதோ அவளுடைய உயிர் எனும் சிறிய காம்பில். இது பலாப்பழத்தைப்போல தாங்கும் ஆற்றல் கொண்டதல்ல. உரிய காலத்தில் நீ வரவில்லை என்றால் ஆசைப்பழத்தின் பெருக்கத்தால் தாங்கமுடியாமல் உயிர்க்காம்பு முறிந்துவிடும். எனவே உடனே வந்து அவளை மணந்துகொள் என்கிறார். இந்த அற்புதத்தைப் பேசும் பாடல் பின்வருமாறு.
             வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யாரஃ தறிந்திசி னோரே சாரல்
            சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு
            இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே
                                                            கபிலர்
(வேரல் –மூங்கில், பலவு –பலா, கோடு – காம்பு, )
இவ்வாறு பலவிடங்களில் தோழியின் செயல்பாடு தலைவனும் தலைவியும் இல்லறவால்வில் இணைந்து வாழ்வதற்குப் பாடுபடும் அவர்களை இணைக்கும் இணைப்புப்பாலமாகவும் அமைந்துள்ளமை கண்டு வியக்கத்தக்கதாகும்.

                                                                                    முனைவர் க. அன்பழகன்

நன்றி . தினமணி - தமிழ்மணி 28.5.2017
                                                                                    
3.99 GB (26%) of 15 G

Tuesday, May 23, 2017

பழிகொண்ட பித்தா...




                       அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றாள் ஔவை.  கிடைத்தற்கரிய பிறவி மானிடப்பிறவி என்பார் சான்றோர். ஆகவே தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவம். தோன்றும்போதே புகழுடன் தோன்றமுடியுமா? அப்படியல்ல பொருள்.. தோன்றி வளர்ந்து பணிசெய்யும் வாழ்வில் புகழ் எய்துமாறு உருவாக்கிக்கொள்ளல் அல்லது செயலாற்றுதல் அப்படியில்லையெனில் அதனைச் செய்யவேண்டியதில்லை.

                      கூற வந்தது இதுவல்ல. வாழ்வில் மனிதனாக உயிர்த்து வாழும்காலத்தில் செய்வனவற்றை ஒழுக்கமோடும் சிறப்போடும் செய்து முடித்து இறந்துபோகவேண்டும். குன்றாப் புகழ் கிடைக்குமெனில் உயிரைக் கொடுத்தும் அதனை ஈட்டிக்கொள்ளலாம். ஆனால் உயிரைக்கொடுத்து யாரேனும் பழி கொள்வாரா?

                       விதி அப்படியெனில் அப்படித்தான். விதி எப்படிவேண்டுமானாலும் பழியேற்றிப் பலிவாங்கும் பலம் கொண்டது.

                       வருநிதி பிறர்க்கு ஆர்த்த இருநிதிக் கிழவன் மகன் என்கிற மாசாத்துவானின் மகன் கோவலனுக்கு இப்படித்தானே நேர்ந்தது.

                         ஒழுக்கக்கேடு எந்த நிலையிலும் அதற்கான தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்.

                          சித்பவானந்தர் சொல்லுவார் யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காட்டிற்குள் ஒரு சட்டியில் நெருப்புடன் போய் அதில் கை வைத்தால் நெருப்பு சுடாதிருக்குமா?
                          அதுபோல யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒழுக்கக்கேடு எப்படியும் தெரிந்துவிடும் என்பதுதான்..
                           கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்.
                           யுத்தகாண்டத்தில் இராவணன் வதைப் படலத்தில்.
                           பாடல் இதோ.

                           போர்மகளை கலைமகளை புகழ்மகளை
                                 தழுவிய கை பொறாமை கூர
                           சீர்மகளை திருமகளை தேவர்க்கும்
                                 தெரிவு அரிய தெய்வக் கற்பின்
                           பேர்மகளை தழுவுவான் உயிர் கொடுத்து
                                  பழி கொண்ட பித்தா.. பின்னைப்
                            பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப்
                                  பணை இறுத்த பணைத்த மார்பால்?


         தன்னுடைய இணையற்ற வீரத்தினால் போரில் வெற்றித்திருமகளை அடைந்தவன் இராவணன்.  பல்வேறு கலைகளைக் கற்று கலைமகளையும் பெற்றவன். திறம்பட்ட பல்வேறு பண்புகளால் புகழ் மகளையும் தழுவியவன் இராவணன். என்றாலும்
                 சிறப்புமிக்க சீதாதேவியை.. தேவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத தெய்வத்தன்மை மிக்கக் கற்பினையுடைய அதனால் பெயர்பெற்றவளைத் தழுவும் ஆசையினால் உயிரைக்கொடுத்து மிகப்பெரும் பழியைப் பெற்றவனே பித்தனே.. பலம்பொருந்திய யானைகளின் கொம்புகளை ஒடித்த பெரிய மார்பையுடையவனே இப்போது பார்மகளை (மண்மகளை)த் தழுவிக் கிடக்கின்றாயே என்று அழுகிறான் இராவணனின் இளவல் வீடணன்.

                        உயிரைக்கொடுத்துப் புகழைப்பெறுவது நியாயம். உயிரைக் கொடுத்து பழி கொள்வது பித்துப்பிடித்தவன் செயல்தானே-. பித்தா என்கிறான்.
             
                        உனக்கு பித்தா?  அட பித்தா என வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் இயங்குகிறது.

                         இன்னொருவன் மனைவிமேல் பித்துப் பிடித்ததால்தான் பித்தானான்.
                            எல்லாம் அறிந்தும் அறியாதவன்போலிருக்கும் சிவனை பித்தா எனவழைக்கக் காண்கிறோம்.
                            இராவணனும் எல்லாமும் அறிந்தவன்.
                            அறிந்தும் செய்த தவறு அழித்துவிட்டது.
                            விதியின் விளையாட்டுக் களத்தில் இராவணனும் பலியானான்.
                            அதனால்தான் வீடணன் பழிகொண்ட பித்தா என்கிறான்.
                            போர்மகள், கலைமகள், புகழ்மகள், சீர் மகள், பேர் மகள், பார் மகள் எல்லாமும் மகள்களே.. தன் மனைவி தவிர்த்து மற்றோரைப் பார்க்கவேண்டியது  தாய்மைப் பண்புடன் . என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
மேற்சுட்டிய மகள்கள் யாவரும் ஈடிணையற்ற உயர்ந்த தன்மையுடையவர்கள். உயர்ந்தவர்கள். தாய்  மட்டுமே ஈடு இணையற்றவள்.
தாரம் தவிர்த்து மற்றோரைத் தாய்மைப் போற்றுதல் உயிர்ச்சிறப்பு.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இன்று வாசித்ததில் வியந்தது மகிழ்ந்தது.

               கட்டுரை எழுதுதல்  என்பது ஒரு பயிற்சி. அதனைத் திறம்பட எழுதுதல் என்பது தேர்ச்சி. எல்லோரும் விரும்ப எழுதுதல் என்பது மாட்சி.

                    மாட்சியுடையோர் மாண்புடையோர்.

                    இன்று தினமணியில் கவிஞர் எழுத்தாளர் மற்றும் உயர் அதிகாரி திருமிகு இறையன்பு எழுதிய தொடர்க்கட்டுரை உச்சியிலிருந்து தொடங்கு. அதில் இன்றைய தலைப்பு பொழுதாக்கங்கள் HOBBIES அதாவது பொழுதை ஒவ்வொரு நாளும் ஆக்கமுறச் செய்தல் என்று புரிந்துகொள்ளலாம்.

                    இதில் இறையன்பு அவர்களின் நடை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பதால் மெருகேறிக்கொண்டே அது மொழியைக் கடந்து நிற்கிற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அல்லது ஒரு புதுமொழிக்கான நடையைத் தருகிறது என்பேன்.

                    இறையன்பு எழுதுகிறார்..

                பணியை மட்டுமே கடிவாளம் போட்ட குதிரையாகச் செய்யாமல் பணி முடித்ததும் பொழுதாக்கங்களில் ஈடுபடுபவர்கள் பணியின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும்  அயராமல் பணியாற்றுகிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய பணிகளை முடிக்கிறார்கள். அவர்கள் மேசையில் கோப்புகள் தோப்புக்கரணம் போடுவதில்லை. அவர்கள் பார்வையாளர்களை மலர்ச்சியுடன் சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் பேசினால் மற்றவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை நிமிடங்களில் கிரகித்துக்கொள்கிறார்கள். பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல் கோபத்தை மறுநாளுக்கு வரவு வைக்காமலும் அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.

                    இதற்கு எதிரிடையானவர்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார் இறையன்பு

                எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ அந்தளவிற்குப் பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள்.  பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.

              பல உயரங்களில் அதிகாரம் செய்பவர்கள்  வாசித்துணரவேண்டிய வரிகள்.
 
                00000000000000000000000