பட்டப்படிப்பை முடித்திருந்த நேரம். அப்போதுதான் இலக்கியப் பரிச்சயமும் வாசிக்கிற ஆர்வமும் மேலும் முனைப்புக் காட்டிய காலக்கட்டம் அது.
தஞ்சையின் வடவாற்றங்கரையில் நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொணடிருந்தபோதுதான் கமலஹாசன் எனும் நடிகனை ஆழமாகப் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கு நண்பர்களால் உணர்த்தப்பட்டது.
பதினாறு வயதினிலே படம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் கமலைப் பார்க்கிற தருணங்கள் ஒரு நடிகனாகப் பார்க்காமல் அந்தக் குறிப்பிட்ட பாத்திரத்தின் உயிராகவே மாறிக்கொண்டிருந்த கலைஞனைத் தரிசிக்கிற பெரும்பேறு வாய்த்தது.
படைப்புக்கலை என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இறைவனைப் பார்க்கவில்லை இதுவரை என்றாலும் அதன் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை மாறவேயில்லை. அது பழமையான மரத்தின் ஆழமாகப் பதிந்துவிட்ட வேரைப்போல மனதில் இன்றுவரை நின்று வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கிறது. அவ்வகையில் கமலை நோக்குகிற தருணங்களில் நிச்சயம் கடவுளால் வரமளிக்கப்பட்ட கலைஞன்தான் என்கிற உறுதிப்பாடு மனதில் பதிந்துபோனது,
பதினாறு வயதினிலே,,,வாழ்வே மாயம்,,, மன்மத லீலை,,,மூன்று முடிச்சு... அபூர்வ ராகங்கள்...சிகப்புரோசாக்கள்...குணா... மகாநதி...ஹேராம்.. மைக்கேல் மதன காமராசன்...தேவர் மகன்..அன்பே சிவம்... இந்தியன்...அபூர்வ சகோதரர்கள்...விக்ரம்...சலங்கை ஒலி... மரோ சரித்ரா... கல்யாணராமன்... நாயகன்.... நினைத்தாலே இனிக்கும்...பஞ்ச தந்திரம்...
படங்களின் வரிசையும் ஆண்டும் நினைவில் இல்லை என்றாலும்.. கமலின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். மேலே சொன்னவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல,, ஒவ்வொன்றிலும் ஒரு கலைஞன் செத்து மறுபிறவி எடுத்ததுபோல தன்னை அர்ப்பணித்து உருவாக்கிய படங்கள்... ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோன்ற ஒரு அனுபவத்தைத் தருகின்ற படங்கள்.. எத்தனை கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதற்கு இடமளிக்கிற படங்கள்.. கமல் என்கிற கலைஞன் தன்னை உருக்கி வார்த்த கலைபடைப்புக்கள்...
காலத்தால் அழியாக கலைப்படைப்புக்களைத் தந்துள்ள கமலின் ஒவ்வொரு உயிர்ப்பும் தேர்ந்த கதை...சிறந்த மொழி நடையில் அமைந்த உரையாடல்களின் வன்மை... காட்சி யமைப்பு... நடிப்பின் ஆழம்... பார்ப்போரை வலிமிக யோசிக்க வைக்கிற நுட்பம்.. இப்படி ஒவ்வொரு கூறையும் விரித்து சொல்லிவிட்டுப்போகலாம். சுருக்கமாக சொல்வதானர்ல் கமலை அனுபவிக்கவேண்டும்.
தமிழருவி மணியன் குறிப்பிட்டதுபோல ஏதோ நடித்து ஏதோ சேர்த்து செட்டிலாகிவிடுகிற சராசரி கலைஞனின் பிரதியல்ல கமல். தன்னை சோதனைக்குள்ளாக்கி... வலி பொறுத்து.. வலி சகித்து ஒவ்வொரு படைப்பிலும் வற்றாத தாகத்தை அனுபவித்து வெயிலிலே துடிக்கும் புழுவைப்போல கலைதாகத்திற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் கமல்.
எல்லோருக்கும் புரிகிற கழுத்து வலிக்க உயர்ந்துப் பார்க்கிற அற்புதம் போல பிரமிப்புபோல.. நிற்கிற கலைஞன் கமல். எல்லாவற்றிலும்
தனக்குத் திருப்தி தேடித் தவித்து நின்று பின் உள்ளடக்கி உருவாக்கித் தரும்
கலைப்படைப்பின் பிரும்மா கமல்.
வயிற்றுப் பசிக்குத் தவிக்கும் வறுமையைப்போலவே வலிமிகுந்த சோதனைக் கட்டத்தை ஒவ்வொரு படம் முடிவுறும்போதும் அனுபவிக்கிற கமலின் வலியை யாரும் ஏந்திக்கொள்ளவேண்டாம். குறைந்த பட்சம் அதனை விமர்சிக்காமல் மரியாதை செலுத்தும் பண்பை அளிப்பதன்மூலம் அந்தக் கலைஞனுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.
கமல் கலையுலகின் கற்பகவிருட்சம்.
கமல் கலை வானின் வெளிச்சம். விலாசம்.
கமல் வரம் வாங்கி வந்தவரல்ல. கலைத்தாயின் பிரதி.
பெரிய சாகரம் ஆர்ப்பரிக்கிறபோது அடங்கும்வரை அது பொங்கியே அடங்குகிறது.
விரிந்து பரந்த அமைதியான வானில்தான் இடி முழங்கி பேரிடியாகி பெருமழை கொட்டி பூமியை மூச்சுத் திணற வைக்கிறது.
முகம் வருடி இதழ் வருடி இழைகிற தென்றல்தான் பெருங் காற்றாகி பெருமுழக்கம் செய்கிறது.
கமல் இன்றைக்கல்ல பிறக்கும்போதே தாகம் வற்றாத கலைஞனாய் கலைத்தாய் பெற்றெடுத்துவிட்ட பிள்ளையாகத்தான்.
கமல் என்றைக்கும் விஸ்வரூபம்தான்.
காலம் இதனை உலகளவில் அங்கீகரிக்கும்.
0000000