Friday, July 14, 2017

ஊட்டும்.... (நாவல்)

அத்தியாயம் 3   ஊழ்வினை 1

காவேரியில்  நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்குப்பயன்படும். கரையோரங்களில் பச்சை இழைந்து கிடந்தது. எல்லாவகை கீரைகளும் பயிரிடப்பட்டு மண்டிக் கிடந்ததன. பாலத்தின்மீது நின்று நுரைத்தோடும் காவிரியை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். மேற்கில் சூரியன் மஞ்சள் நதிக்குள் இறங்கிக்கொண்டிருந்தான். சில பறவைகள் வரைந்து உயிர்பெற்றதுபோல பறந்துபோயின வடக்கிருந்து தெற்காக. வயல் வேலை முடித்தவர்கள் கொல்லை வேலை முடித்தவர்கள் தங்கள் மண்வெட்டிகளை.. கடப்பாரைகளைக் காவிரியில் கழுவி கரையில் போட்டுவிட்டு வேட்டியை அவிழ்த்துக்கொண்டு கோமணத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கழுத்தளவு மூழ்கிக்கொண்டு அப்படியே வாயால் தண்ணீரை விழுங்கி அண்ணாந்து உமிழ்ந்துகொண்டார்கள். சிலர் முழங்காலளவு தண்ணீரில் துண்டைப் பிழிந்து உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தார்கள்.

           என்ன மாமா.. வேலை முடிஞ்சிடிச்சா..?

           எங்க.. இன்னும் ரெண்டு மா கெடக்கு.
.
           மேற்கே போயிட்டு வந்திட்டியா..

           எங்க?

           உன் மாமியார் வழில யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு உம் பொண்டாட்டிதான் சொல்லிட்டுபோச்சு.. பிள்ளைகளை தரதரன்னு இழுத்துக்கிட்டுப்போனா.

           ஏம்மான்னே.. பஸ் போயிடும் பெரியப்பான்னுட்டு  பதில்பேசிக்கிட்டே போச்சு. நீ போவலியா..?

           நாந்தான்.. வயல்ல ஆள இறக்கிவிட்டுட்டேன்.. நடுறதுக்கு. நா போனா அவ்வளவுதான்.. பொழப்பு கெட்டுடும்.. மாமியாளுக்கு அத்தை மவளோட புருஷனாம்.. யாரு பாத்தா முன்னேர பின்னேர.. வயசானா சாவ வேண்டியதானே.. நாம போவாட்டி என்ன பொணம் வெந்துபோவாதா என்ன?
           அப்படியெல்லாம் பேசாதப்பா..  யாரு சாவ யாரு நிறுத்தி வைக்கமுடியும்? நாலு ஒறமுறை, சாதி, சனம் சொந்தப் பந்தம் வேணுமுன்னா அப்படித்தான் இருக்கும்.

           என்னங்கடா..பொழுதுபோயிடிச்சி.. உங்க அலப்பற முடியல்ல.

           இது வேற கதை மாமா..

           லேசாக இருள் கவியத் தொடங்கியது.

           பாலத்து முக்குக் கடையில.. குண்டு பல்பு உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்னு மினுக்குமினுக்குன்னு எரிய ஆரம்பித்தது.  பாய்லர் கிட்ட  வேலு டீ போட்டுக்கிட்டிருந்தான்..

           என்னா போட்டிருக்க வேலு இன்னிக்கு?

           காலிப்ளவர் பக்கடா போட்டேங்.. முடிஞ்சிடிச்சி.. காராச்சேவுதான் இருக்கு.  தூள் பக்கடா ஒரு ஆளு சாப்பிடலாம்.

           கொடு..

           இருள் அடர அடரக் குண்டு பல்பு வெளிச்சத்தில் சுவற்றில் வரைந்த ஓவியங்கள்போல இருந்தார்கள். கருப்பு உடம்பில் கட்டியிருந்த வெள்ளை வேட்டிதான் ஆளு கணக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

           தெருவுக்குள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

           மாப்ள.. நம்ப மாரிமுத்து சித்தப்பா வேஷங்  கட்ட ஆரம்பிச்சுடிச்சி.. ஒருமணிநேரம் கச்சேரிதான்.

           மாரிமுத்து கையில் அரிவாளுடன்..  யாரா இருந்தாலும் வெட்டுவேன்.. பாக்கறியா.. ஒரே வெட்டு ஓடிப்போயிடும் தலை கண் காணாம.. வா.. வா..

           நீ யாரு?

           மாணிக்கத்து மவன்.

           நீ போ.. உனக்கும் எனக்கும் பகையில்ல..  வா.. வெட்டுனா ஒரே வெட்டுதான்.. மாரிமுத்து குரல் அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும் பட்டு திரும்பி வந்து தெருவை நிறைத்து அதிரடித்தது.

           மாரிமுத்து கதை ஒரு தனிக்கதை.

           காலம் கண்ணுக்குத் தெரியாதது என்பதால் அதுகுறித்த அச்சம் நம்மிடம் இல்லை. காலம் தன் வேலையைக் காட்டுகிறபோதுகூட அதுபற்றி சிந்தனையும் குறை கூறுவதும் இல்லை.

           ஆனால் காலம் பொல்லாதது. அது யாரை  வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் செய்வது தெரியாமல் செய்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் தன் விளையாட்டின் விளைவுகளை.

           மாரிமுத்துவின் கதையும் அப்படித்தான்.

           ஒல்லியான உடலமைப்பு. அதில் ஆங்காங்கே எலும்புகள் துருத்திக் கிடந்தாலும் அதில் ஓர் அழகு மண்டிக்கிடக்கும். நெஞ்செல்லாம் புதர்போல முடி நிறைந்திருக்கும். கை, கால்களிலும் விளைந்த வயலின் கதிர்களைப்போல மடித்தபடி மயிர்க்கற்றை மாரிமுத்துவிற்கு ஓர் தனித்த அடையாளத்தையும் அழகையும் தந்திருந்தது. நன்றாகத்தான் இருந்தார்.

           மூன்று மகன்களும் மூன்று மகள்களும் என ஆறுபிள்ளைகள் 
பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

           அப்படி நினைத்துக்கொண்டுதான் வாழ்ந்தார்.

           உள்ளூரிலேயே மாரிமுத்து மனைவியின் இரண்டு தங்கைகளும் வாக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் யாருடனும் ஒட்டாது. ஒட்டிய குடும்பத்தின் சகலை கோவிந்தன் மாரிமுத்துவுடன் அந்நியோன்ய சிநேகம்.

           அதுதான் செய்யக்கூடாத செயலை செய்ய வைத்தது.

           யாரறிவார் என்று அவர்கள் துணிந்து அந்த காரியத்தைச் செய்தார்கள்.

           அவர்கள் செய்த செயலை யாருந்தான் அறியவில்லை. ஆனால்  இருவருக்கு மட்டும் இவர்களின் செயல் தெரியும்.

           ஒன்று ஒரு பெண்.

           இன்னொன்று கடவுள்.

           பெண் என்ன செய்வாள். தவித்து அடங்கினாள். பதறிக் கலங்கினாள். பரிதவித்துப் புலம்பினாள்.

           ஆனால் மனதுக்குள் கோபம் நெருப்பாய் வளர்ந்து கிடந்தது.

           வளர்ந்து கிடந்த நெருப்பில் சொற்களைக் கொண்டி அள்ளி மனங்கொண்ட மட்டும் வீசினாள்.

           மாரிமுத்துவும் கோவிந்தனும் அதில் நனைந்தார்கள்.

           கவலையின்றிப் பேசி மறந்தார்கள்.

           கடவுள் மறக்கவில்லை என்பதை மாரிமுத்துவின் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வில் உணர்த்தினார்.

           கீரைக் கூடையில் கீரை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குப் போன மாரிமுத்துவின் மனைவி வேலாயி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்கையில் அடிபட்டுத் துண்டுதுண்டாகிப்போனாள்.

           சிதறிய பழங்களைப் பொறுக்குவதுபோல அவள் உடலைப் பொறுக்கிக்கொண்டுபோனார்கள்.

      பார்த்த மாரிமுத்து அன்றிலிருந்து மனம்  வெதும்பி பைத்தியமானான். எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. யாரைப் பார்த்தாலும் கையில் அரிவாள் எடுத்துக்கொண்டு வெட்டுவேன் என்று துரத்தத் தொடங்கினான்.

           ஒரு நாள் கோவிந்தனை அந்த அரிவாளோடு துரத்த அதுவும் விபரீதமாய் முடிந்தது இன்னொரு கதை.

                                                                                                                (ஊழ்வினை தொடரும்)   
          

Sunday, July 9, 2017

ஊட்டும் .... (நாவல்)....

அத்தியாயம் 2    ஊழ்வினை 2

                          கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா  கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நின்று பார்த்தாள்.
                         உலையிலிட்ட அரிசிக்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் அடிச்சோறு கருகிவிட்ட நெடியது.
                        இதுபோன்று நிகழ்ந்தது இல்லை.
                        அரிசிக்குத் தகுந்த நீரை வைக்கத் தெரியாத பெண் இருக்கமுடியாது. கவனம் சிதறுகிறது. ஏன்?
                        மங்களா யோசித்துப் பார்த்தாள். அடுப்பை நிறுத்திவிட்டு வேறு உலை வைத்தாள். கொஞ்சம் கருகல்கூட நித்தியானந்தத்திற்குப் பிடிக்காது. சாப்பிடமாட்டான். எதுவும் குறையும் சொல்லமாட்டான். பட்டினி வயிறோடு படுத்துக்கொள்வான்.
                         விடு.. பரவாயில்லை. ஒரு டம்ளர் பால் கொடு குடித்துவிட்டுப் படுத்துக்கொள்கிறேன் என்பான்.
                           எனவே வேறு உலை வைத்தாள். சரியான நீரும் வைத்து கொதி வந்ததும் அரிசியைக் களைந்து உலையிலிட்டாள்.
                              கொதிக்க ஆரம்பித்தது அரிசியை வாங்கிய உலை.
                              என்னமோ மனதைப் பிசைகிறது. பிள்ளைகளைப் பார்த்தாள். கூடத்தின் மத்தியில் அமர்ந்து பள்ளிப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள் வீட்டுப்பாடமாக.
                              பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
                               இப்படிப் பார்ப்பது பழக்கமில்லை. ஆனாலும் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்கிற உந்துதல் அவளுள் எழும்பியிருந்தது.
                              இன்றைக்கு எல்லாமும் மாறாக நடக்கின்றன.
                               இதற்கு என்ன பொருள்?
                               எதற்கான விளைவு இந்த மாறுதலான செயற்பாடுகள்.
                               மங்களாவால் யோசிக்க முடியவில்லை.
                               மறுபடியும் அடுப்படிக்குள் போய் சாதத்தைக் கஞ்சி வடிய பாத்திரத்திற்குள் கவிழ்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு கூடத்திற்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
                                மனசுக்குள் ஏதோ பிசைவதுபோலவே மறுபடியும் தோனியது.
                                நித்தியானந்தத்தை நினைத்துக்கொண்டாள்.
                                அவனுக்குப் பிடித்தமான பருப்பு உருண்டை குழம்பு வைத்திருக்கிறாள். பக்கோடா வற்றல் வறுத்திருக்கிறாள். கொஞ்சம் கூடவே சாப்பிடுவான்.
                                வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தாள்.
                                தண்ணீர் குடிக்கவேண்டும்போலிருந்தது. குடித்தாள். லேசாகப் பசிப்பதுபோலிருந்தது.
                                என்ன இருக்கிறது என்று யோசித்து இருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துவந்து பிரித்தாள். உடனே பிள்ளைகள் வந்து சூழ்ந்துகொண்டன.
                              அம்மா எனக்குக் கொடு.
                              எனக்கும் கொடும்மா.
                               பிரித்துக் கொடுத்தாள்.
                               தான் இரண்டு பிஸ்கட்களை எடுத்துக்கொண்டாள்.  ஒரு டம்பளர் தண்ணீர் எடுத்துவந்து வைத்துக்கொண்டு அதில் அந்த பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிட்டாள். பின் அந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். டம்ளரை வைக்கும்போது வாசலில் யாரோ அலறும் குரல் கேட்டது.
                                 மங்களாக்கா....மங்களாக்கா...
                                 பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள்.
                                 குமார் நின்றுகொண்டிருந்தான்.
                                 என்னடா?  இப்படி கத்தறே? என்றாள் பதட்டமுடன்.
                                 அக்கா..அக்கா.. என்றபடி அழ ஆரம்பித்துவிட்டான்.
                                 என்னடா ஆச்சு?
                                 அண்ணனுக்கு...  என்றபடி அழ ஆரம்பித்தான்.
                                 சட்டென்று ஒரு நெருப்பு மங்களாவிற்குள் பற்றியது.
                                 என்னடா ஆச்ச அண்ணனுக்கு சொல்லுடா?
                                 பெரிய கோயிலுக்கிட்ட ஆக்சிடெண்டு ஆயிடிச்சுக்கா.. லாரிக்காரன் அண்ணன்மேல மோதிட்டான்..
                                 ஐய்யய்யோ.. என்றபடி தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு மங்களா கத்த தெரு கூடிவிட்டது.
                                 என்னடா ஆச்சு?
                                 நித்தி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட்..  லாரி மோதிடிச்சு..
                                அவனுக்கு என்னடா ஆச்சு?
                                 அங்கேயே உயிர் போயிடிச்சு..
                                என்னங்க,,, என்றபடி பெருங்குரலெடுத்து மங்களா கத்தியபடி மயங்கிப்போனாள்.
                               தெருவே குலை நடுங்கி நின்றது.
                               அடக்கடவுளே?
                               அடப்பாவி.. இப்பத்தான பாத்தேன்.. புள்ளங்கள விட்டுட்டுப்போனான்..
                                யார் யாரோ என்னன்னவோ பேசினார்கள். ஓடினார்கள். மங்களாவை மயக்கம் தெளிவித்தார்கள். பிள்ளைகள் ஓடிவந்து மிரண்டு நின்றன.
                            யாரோ ஆட்டோ எடுத்து வந்தார்கள்.
                            எங்கடா கொண்டுபோயிருக்காங்க..
                            மெடிக்கலுக்கு..
                            ஓடினார்கள்
                             இவர்கள் போனபோது நித்தியானந்தத்தின் உடலை மார்ச்சுவரிக்கு முன்னால் தரையில் போட்டிருந்தார்கள்.
                              மங்களா விழுந்து புரண்டு அவன் உடல்மேல் கட்டிக் கொண்டு அழுதாள்.
                               என்னங்க.. இப்படிப் பண்ணிட்டுப்போயிட்டீங்க.. நான் என்ன பண்ணுவேன். புள்ளங்களா பாருங்க.. பிள்ளைகள் அப்பா.. அப்பா என்று கதறின.
‘                             மங்களாவிடம் கையெழுத்து வாங்கி மார்ச்சுவரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யக் கொண்டுபோனார்கள்.
                               மருத்துவமனைக்கு வெளியே வேப்ப மரத்தடியில் கவிழ்ந்து கிடந்தாள் மங்களா. அதற்குள் அவளின் உறவுகளுக்குச் சொல்லி அவர்களும் வந்து கூடிக்கிடந்தார்கள்.
                               உள்ளே போஸ்ட் மார்ட்டம் நடந்துகொண்டிருந்தது.

                                                                                              (ஊழ்வினை தொடரும்)


                     

Tuesday, July 4, 2017

ஊட்டும் (நாவல்)

 அத்தியாயம் 2     ஊழ்வினை 1


                       கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தான் நித்தியானந்தன். முன் பாரில் ஒரு பிள்ளையும் பின்பாரில் பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். நித்தியானந்தன் பிள்ளைகள்.. பெண்தான் மூத்தவள் பெயர் தேவகி,. அடுத்து இளையவன் பெயர் சுரேஷ்.
                       தேவகி ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.
                       சுரேஷ் ஐந்தாவது வகுப்பு படிக்கிறான். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.
                       இருவரையும் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருகிறான்.
                       கடைத்தெருவிற்கு அந்தப்பக்கம் நாலைந்து தெருக்கள் தள்ளி ஒரு ஆங்கிலப் பள்ளி இருக்கிறது. அங்குதான் படிக்கிறார்கள். நாலைரை மணிக்குப் பள்ளி முடிந்துவிடும்.
                            ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பதால் நித்தியானந்தத்திற்கு 4 மணிக்கு முடிந்துவிடும்.  ஆகவே தினமும் வந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு நகரில் உள்ள தலைமை அலுவலகம் போவான். முக்கியமாக யூனியன் அலுவலகத்திற்கு. போராட்டம், யூனியன் இவற்றில் ஆர்வம் உள்ளவன்.
                            அப்பா இங்க எங்க போறே?
                           இது என்னடா கேள்வி. உங்கள வீட்டுல வுட்டுட்டுஅப்பா ஆபிசு வரைக்கும் போயிட்டு வந்துடுவேன்.
                           எப்போ வருவே?
                           எட்டு மணிக்கு வந்துடுவேண்டா.
                           அப்பன்னா வரும்போது பானி பூரி வாங்கிட்டு வாங்க.
                           எப்பப்பாரு பானிபூரி.. அது வயித்த கெடுக்கப்போவுது.
                           அப்பா எனக்கு சாக்லெட் பெரியவளின் கோரிக்கை.
                            சரி வாங்கிட்டு வரேன்.
                           வீட்டு வாசலில் வந்து பிரேக் பிடித்து சைக்கிளை நிறுத்தினான். முதலில் சுரேஷை இறக்கிவிட்டு அவன் பைனை அவனிடத்தில் கொடுத்தான். அப்புறம் தேவகி தானாகவே இறங்கிகொண்டாள். அப்பா நானா இறங்கிட்டேன் பாருங்க.
                         வெரிகுட்டா.. இப்படித்தான் இருக்கணும். நீயாத்தான் எல்லா வேலையும் செய்ய கத்துக்கணும்..
                         நானும கத்துக்குவேம்பா.. என்றான் சுரேஷ் அவசரமாக.
                         நீயும் வெரிகுட்டுடா..
                         பின் சைக்கிளை விட்டுக் கீழிறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே வந்தான்.
                        உள்ளே அவன் மனைவி மங்களா அடுப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தாள்.
                        மங்களா.. புள்ளங்களுக்கு ஏதாச்சும் குடிக்கக் குடு.. நான் ஹெட் ஆபிசு வரைக்கும் போயிடு வந்துடுறேன்.
                       இருங்க உங்களுக்கும்  பூஸ்ட் ஆத்திடறேன். குடிச்சிட்டுப் போங்க.. மதியம் சாப்பிட்ட சாப்பாடு பத்தாது. டிபன்பாக்ஸ் சின்னது.
                       மங்களாவின் அன்பு செயல்பூர்வமானது.
                       சரி குடு.
                      என்றபடி உட்கார்ந்தான்.
                       அப்பா இந்த சூவைக் கழட்டிவிடு.. என்றான்.
                        அக்காவ பாரு.. அவளே கழட்டிக்கிறா.. இப்பத்தான சொன்னே நானும் கத்துக்குவேன்னு.. அக்காக்கிட்ட கத்துக்க
                        சரிப்பா.
                        குட். வரும்போது பானிபூரி வாங்கிட்டு வருவேன்.
                        மங்களா கொடுத்த பூஸ்டைக் குடித்தான். இன்னிக்கு ரொம்ப டேஸ்டா இருக்கு.
                        குடிச்சுட்டு தம்ளர தாங்க ரொம்பக் கிண்டல்தான்.. வழக்கமாக போடுற தண்ணிபால்லதான் போட்டேன்.
                       உங்கைபட்டா ருசி தனிதான்.
                       போங்க.. கிளம்பி..
                        சரி வரேன்.. என்றபடி படியிறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டான். மனதுக்குள் ஒருமுறை பிள்ளைகளை நினைத்துக்கொண்டான். பெரியவள் தானாகச் செய்யப் பழகிக்கொள்கிறான். பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும். சுரேஷையும் இப்படி தனியாகச் செய்ய பழக்கிவிடவேண்டும்.
                        சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு கடைத்தெரு வந்து வீதியில் கலந்து வேகமாக மிதித்தான்.
                        பழைய பஸ்ஸ்டாண்ட் பக்கம் வந்து அண்ணாசிலையோடு திரும்பி பெரியகோயில் போற வீதியில் சைக்கிளைத் திருப்பினான்.
                       பெரியகோயிலைக்கடக்கும்போது சிவசிவ என்றான்.
                       புது ஆற்றுப் பாலத்தைக் கடந்து திருப்பத்தில் சைக்கிளை ஓட்டும்போது போன் வந்தது.
                        அப்படியே ஓரமாக நிறுத்தி பையிலிருந்து போனை எடுத்து ஹலோ யாரது என்றான்.
                       பெரியகோயிலைக் கடந்து வேகமாகப் போன லாரி புதுஆற்றைக் கடக்கும்போது திருப்பம் என்று வேகத்தைக் குறைக்கவில்லை. அந்த வேகத்தைக் குறைக்காமல் திருப்பியபோது நித்தியானந்தம் நின்றதைச் சட்டென்று லாரி டிரைவன் கவனித்து பிரேக்கை அழுத்துவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
                      இடது பக்க சக்கரம் இடித்து அப்படியே நித்தியானந்தம் வலது பக்கம் சாலையில் சைக்கிளோடு அப்படியே குப்புற சரிய.. அவன் முதுகின்மேல் ஏறி லாரி நின்றது. படக்கென்று தேங்காய் உடைப்பதுபோன்று சத்தம் கேட்டது.
                        அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.
                         ஏதும் கத்தினானா என்றுகூட த் தெரியாமல் நித்தியானந்தன் உடல் நசுங்கி செத்துப்போயிருந்தான்.

                                                                                            (ஊழ்வினை ஊட்டும்)