Wednesday, August 31, 2011
இடைவெளிகளும் சில செய்திகளும்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
வணக்கமுடன் உறரணி.
தொடர்பணிகள். வேறுசில புதிய பொறுப்புக்கள்.
இப்போது இடைவெளியில் வந்திருக்கிறேன்.
==================================================================
தொடர்பணிகளில் ஒரு பகுதியாக சில புத்தகங்கள் எழுதி முடித்து வெளியிட்டுவிட்டேன். ஒன்று சங்க இலக்கியம் சொல்லும் பொருளும் என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு. முழுக்க முழுக்க பொருண்மையியல் அடிப்படையில் அமைந்த புத்தகம் இது. சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்ச்சொற்களைப் பற்றிய சொல்லாராய்ச்சி புத்தகம். நீண்ட கால உழைப்பு. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்திருப்பது.
இரண்டாவது அண்ணாவை பற்றியது. அவரது படைப்புக்களில் காணப்படும் பல்வகைத் தன்மைகளை ஆராய்ந்து கருத்தரங்குகளில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு. பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா என்பது அந்தப் புத்தகம்.
மூன்றாவது புரண்டு படுக்கும் வாழ்க்கை எனும் தலைப்பிலான ஏற்கெனவே வெளிவந்த எனது ஒருபக்க சிறுகதைகளின் (கிட்டத்தட்ட 60 கதைகள்) தொகுப்பு.
மிகுந்த வேலை வாங்கினாலும் புத்தகம் வெளிவந்ததும் அதற்குக் கிடைத்த மரியாதையும் கருத்துப்பரிமாறல்களும் எல்லா இடர்களையும் களைந்துவிட்டது.
•••••••••••••••••••••••••••••••••
(2)
கதையும் காரணமும். முதலில் காரணம் அப்புறம் ஒரு குட்டிக்கதை.
எனக்குத் தெரிந்த பேராசிரியர்கள். கல்விப்பணியில் செம்மாந்தவர்கள். ஆனால் அடுத்தவரை ஏளனம் பேசுவதில் தினப்பொழுதைக் கழித்தவர்கள். நல்ல அறிஞர்கள். ஆனால் நல்ல மனிதர்கள் இல்லை. இவர்களால் நானும் காயப்பட்டிருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின் ஒரு கருத்தரங்க நிகழ்வில் இவர்களைச் சந்தித்தபோது இவர்களின் குடும்பநிலை பற்றி மற்றவர்கள் பேச கேட்கவேண்டியிருந்தது. இவர்களுக்கு ஒவவொருவருககும் ஒரே பிள்ளைதான். ஆனாலும் அந்தப் பிள்ளைகள் சரியாக கல்வித்தகுதியில்லாமலும் சரியான வாழ்க்கை நிரந்தரம் இல்லாமலும் இருக்கும் சூழலைப் பேசினார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. பெரும் பேராசிரியர்கள் மற்றவர்களை ஏளனம் பேசியே தங்கள் வாழ்வை விட்டுவிட்டார்கள் என்று.
இதுபோலத்தான் சில நெருங்கிய உறவுகளும். அடுத்தவரை பார்க்கிற பார்வை தவறாகவே இருக்கிறது. உழைத்து முன்னேறியவனைப் பாராட்டாமல் அவன் முன்னர் இடர்ப்பட்ட தருணங்களை நினைத்து ஏளனப் பார்வை பார்க்கும் இவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிடுகிறார்கள். இதுவும் நினைக்கப் பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அவர்களை திருத்துவது நமது வேலையில்லையே.. நம்முடைய இலட்சியமும் இலக்கும் வேறு அல்லவா?
இப்போது குட்டிக்கதை.
ஒரு மருத்துவர் தனது சீடனான மருத்துவரிடம் தான் எப்படி நோயாளியை அணுகுகிறேன் என்று பார்த்து அதன்படி நீயும் பழகு என்றார்.
ஒரு நோயாளியைப் பார்க்கப் போனார்கள். அவர் தொடர்ந்து வயிற்றுப்போக்கில் இருந்தார். மருத்துவர் அவரை அணுகி எல்லாம் விசாரித்துவிட்டு எதேச்சையாக அவரது கட்டிலின் கீழ் கண்டார். அங்கே ஏராளமான வாழைப்பழத்தோல்கள் கிடந்தன. மருத்துவருக்குப் புரிந்தது.
உடனே கேட்டார் அதிக வாழைப்பழங்கள் சாப்பிட்டீர்களா? உடனே நோயாளி ஆம் என்றார். அதுதான் இந்த வயிற்றுப்போக்குக்குக் காரணம் என்று மருந்து எழுதிக்கொடுத்தார்.
இன்னொரு சந்தர்ப்பம் வந்தது. மருத்துவர் போகமுடியாத நிலை. உடனே சீடனை அனுப்பினார்.
சீடனும் போனான். எல்லாம் விசாரித்துவிட்டு நோயாளியின் கட்டிலின் கீழ் வேண்டுமென்றே பார்த்தான். அங்கே ஒரு புலித்தோல் கிடந்தது. அந்த நோயாளி வேட்டைக்காரர் என்பது சீடன் மருத்துவனுக்குப் புரியவில்லை. உடனே கேட்டான் உங்கள் நோய்க்குக் காரணம் தெரிந்துவிட்டது. நீங்கள் ஒரு புலியைச் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று.
இதுதான் காரணமும் கதையும்.
இப்படித்தான் பல பேராசிரியர்களும் உறவகளும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
புவி உமாச்சந்திரன் என்று ஒரு பத்திரிக்கையாளர். தஞ்சையிலிருந்து பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். நல்ல எழுத்தாளர். நல்ல பத்திரிக்கையாளர். அப்புறம் சென்னை போனார். நீண்ட காலம் படைப்புப்பணியில் இருந்தார். சமீபமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை வந்தார். சமீபத்தில் அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. தஞ்சையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இரண்டுமுறைகள் இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்து பேசிக்கொண்டோம். நேற்று திடீரென்று இறந்துபோனார் என்று இலக்கிய நண்பர்கள் இன்று சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் படைப்பாளியின் மரணம் பற்றி அறியும்போதும். அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஒரு கவிதை
வாழ்க்கை எப்போதும்போல அமைதியாகத்தான் இருக்கிறது.
வற்றிப்போன ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் வழக்கம்போல ஆற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
ஆற்றில் குளிப்பது மகிழ்ச்சியானது.
நீந்தி குளிப்பது இன்றைக்கும் ஒரு சாதனைபோலவே இருக்கிறது.
ஆற்றங்கரை ஓரமாக உள்ள பிள்ளையார் அழகாக இருக்கிறார்.
அவருக்கு அலங்காரமும் பூசையும் நடக்கிறது.
நேற்று ஒரு கதை எப்போதோ அனுப்பியது திரும்பிகிடக்கிறது டீபாயில்.
வேறு பத்திரிக்கைக்கு அனுப்பலாம் நம்பிக்கையோடு.
நண்பர்களின் படைப்புக்களைப் படிக்கையில் ஆனந்தம் துள்ளுகிறது.
எழுதுவதைவிட அதிகம் படிப்பது பிடிக்கிறது.
வழக்கமான முகூர்த்த நாளில் பத்திரிக்கைகள் வருகின்றன.
மொய் பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது.
யார் எந்த கல்யாணத்திற்குப் போவது என்று.
எப்போது விடுப்பு எடுக்கலாம் என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
மகள் புதிதாக கல்லுரிக்குப் போகிறாள். புது அனுபவங்களைப் பகிர்கிறாள்.
வாழ்க்கை எப்போது போல அமைதியாக இருக்கிறது.
நான் மறுபடியும் ஒரு கவிதை எழுத உட்கார்கிறேன்
உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் அலுப்பு தீரவும்...
•••••••••••••••••••••••
Subscribe to:
Posts (Atom)