Sunday, May 22, 2011

நிகழ்வுகள்....ஃ சிலவற்றிற்கு காரணங்கள் விளங்குவதில்லை. என்னுடைய மகனின் பள்ளித்தோழன் கோவையில் பொறியியல் படித்துவந்தான். மூன்றாமாண்டு மாணவன். விளையாட்டு, படிப்பு, மற்றும் இதர நடவடிக்கைகளில் படு வித்தகன். நிறைய சான்றிதழ்கள். நிறைய பரிசுகள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்று தஞ்சைக்குப் புறப்பட்டவன் ரயிலில் பயணம் செய்கையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு வந்திருக்கிறான். அப்போது அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான். இளம் வயது. தவிரவும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவர்களின் துயரத்தை எதைக்கொண்டு அடைப்பது?

ஃ வதந்திகள் என்பது கேவலமான ஒரு செய்கை. மொட்டைக் கடிதம் போடுவது என்பது அதைவிட படு கேவலமான செயல். இதுபோன்ற செயல்களை படிக்காதவர்கள் செய்வதேயில்லை. படித்தவர்கள்தான் அதிலும் கற்பித்தலில் உள்ளவர்கள் நிறைய செய்கிறார்கள். இதனால் எதிர்முனையில் ஏற்படும் விளைவுகளையும் துயரங்களையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் (ஓய்வு பெற்றுவிட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே) மருமகன் மருமகளைக் கண்டவர். இதில் தேர்ந்தவர். வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.

ஃ திருச்சி மலைக்கோட்டையில் உச்சியின் இடையில் ஒரு குடைவரை கோயில் உள்ளது. இதில் மகேந்திரவர்ம பல்லவனின் சரிதை கிரந்தத்தில் உள்ளது. இது 8 சுவையான கவிதைகளாக உள்ளது. இது கற்பந்தல் எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. கற்பந்தல் எனும் சொல்லாட்சி அக்காலத்திலேயே பயின்றுள்ளமை சிறப்பு. இக்கவிதைகளின் பொருண்மை சிறப்புப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.

ஃ சமஸ்கிருத நாடக வரலாற்றைப் பற்றி படிக்கிற வாய்ப்பும் அதைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்கிற வாய்ப்பும் சமீபத்தில் நேர்ந்தது. அவற்றின் நாடக விதிகளைப் பற்றிக் கேட்கும்போது வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழுமையாக அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியிருக்கிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் நாடக விதிகள், ஆங்கீகம். வாஜ்ஜியம். ஆகாமியம். சாத்வீகம் எனும் 4 வகை அபிநயம் ( அதாவது மன எழுச்சியால் ஏற்படும் உடல் அசைவு, வாக்கால் ஏற்படும் உடல் அசைவு, மனசால் நினைப்பதை வெளிப்படுத்துவது, மனக்கூற்றால் பொறுமையுடன் வெளிப்படுத்துவது) அதேபோன்று நாட்டிய தர்மி, லோக தர்மி எனும் இருவகை நாடகத் தர்மங்கள் எனப் படிக்கப்படிக்க சுவையாக இருக்கிறது. அதேபோன்று மனதைப் பாதிக்கும் எதனையும் சிறுதுளிகூட மேடையில் காண்பிக்கக்கூடாது எனும் சமஸ்கிருத நாடக விதியை இன்றைய நாடகங்களோடு பொருத்திப் பார்த்து வருத்தம் வந்தது. ரஸம், அலங்காரம், சந்திகள் என விரிந்துபோகிறது. முழுமையாகக் கற்றபின் விரிவாக எழுதகிறேன்.


ஃ ஒரு சின்ன கவிதை


எல்லாத் தருணங்களிலும்
எல்லாவற்றையும் மனது
நினைக்கிறது
எல்லாவற்றையும் மறந்தும்
போகிறது..
வெளிப்படுத்த விரும்புகையில்
மறுபடியும் யோசிக்கவைக்கிறது
வெளிப்படுகையில்
நினைத்ததும்
மறந்ததும்
விரும்பியதும்
என எவற்றின் சாயலும்
கடுகளவுமில்லாது
நிகழ்ந்துவிடுகிறது...