என்னமோ நடக்குது…
குறுந்தொடர் - அத்தியாயம் 3
முன்னிரு அத்தியாயச்
சுருக்கம்
ராகவன் என்பவர் தன் மகனுக்குப் பெண்
பார்க்கப்போன இடத்தில் அந்தப் பெண் கொலைசெய்யப்படுகிறாள். படித்த பட்டதாரியான வளவன்
என்பவன் தன்னைத்தானே துப்பறிவாளன் என்று சொல்லிக்கொள்கிறான்.
இனி……
நொந்துபோய் உட்கார்ந்திருந்தான் கதிர்.
எதிரே அவனுக்குப் பிடித்தமான உணவு ரவா தோசை ஆறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சின்ன வெங்காயம்
மிதக்கும் சாம்பாரின் மேல் முட்டை உள் ஓட்டுச் சவ்வு போலப் படலம் படர்ந்துகொண்டிருந்தது.
ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து
யார் துணையுமில்லாமல் வாழ்வது சவால்தான். அப்படியும் அவன் தன்னை எல்லோருக்கும் அறிய
வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுதைகயில் அதைக் கலைத்து விளையாட ஒரு கூட்டம் எப்போதும்
கண்கொத்திப் பாம்பாகவே இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெல்லமுடியும் நம்பிக்கை
வை என்று அறிவுரை மழை பொழிய ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நாக்கைத் தொங்க
வைத்துக்கொண்டு.
கரும்புக்கொல்லையும் வாழைத்தோப்பும்
அகத்திகீரையும் என பச்சை செழிக்கும் கிராமத்தின்
மண்ணில் பிறந்தவன் கதிர். ஒரு பட்டப்படிப்பு மட்டுமே அவனால் படிக்கமுடிந்தது.
இளம் அறிவியல் வேதியியல் சிறப்புநிலையில் படித்திருந்தான். அதற்குமேல் படிப்பதற்கு
விதி அனுமதிக்கவில்லை. ஆனால் ஏராளமான அறிவையும் அதை சமயோசிதமாகப் பயன்படுத்தும திறனையும்
ஆண்டவன் அவனுக்கு அள்ளிக்கொடுத்திருந்தான்.
எப்படி முளைவிட்டது அந்த ஆசை அவனுக்குள்
என்று தெரியாது. சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான். அப்படியே புறப்பட்டு
சென்னைக்கு வந்துவிட்டான். இரண்டு பெரிய இயக்குநர்களைப் படாதபாடு சந்தித்து ஒரு கதையை
இரண்டு விதமாகச் சொன்னான். அவர்கள் முகத்தில் சரவிளக்குகள் பளிச்சென்று எரிவதைக் கண்டு
இவன் கனவுலகத்தில் மிதந்தான்.
யேய்… தம்பி.. என்ன பெயர் சொன்னே?
கதிரா? உண்மையிலே நீ சூரியக் கதிர்தாண்டா.. இத்தனை நாளா எங்கடா இருந்தே.. இதுவரைக்கும்
இப்படியொரு கதையை எவனும் சொல்லிக் கேக்கலடா.. கேட்ட முதல் கதையிலே நெஞ்சுல ஓங்கி அறைஞ்சுட்டே..
இதைப் படமா எடுத்தா கோடிக்கோடியா பணம் கொட்டும்டா.. உன்ன என்ன லெவல்ல வைக்கிறேன் பாரு…
இரண்டு இயக்குநர்களும் யாருமறியாவண்ணம்
சூழ்ச்சியாய் பொய்யைக் கரைத்து வெண்ணெய்யாய் கதிரின் நெஞ்சில் கரைத்தார்கள்.
அவர்கள் வாங்கிக்கொடுத்த அல்வாவும்
ரவாதோசையும் இவனுள் அழுத்தமான நம்பிக்கையைத் தந்தது.
முடிந்தது.
அதற்குப் பின் அவர்களைச் சந்திக்க
முடியவில்லை. நொந்துபோனான் கதிர்.
அவர்கள் இயக்கத்தில் புதுப்படம் வந்தபோது கதிர் தியேட்டருக்குப் போனான். போனவன் இதயம் வெடித்ததுபோல உணர்ந்தான். அந்தப் படம் இவன்
சொன்ன கதை..
ஆத்திரம் அடங்காமல் கையில் இருந்த
மிச்சக்காசை ஆட்டோவுக்குத் தந்து போனான்..
அந்த ஸ்டுடியோ வாசலில் தாக்கப்பட்டான்
கதிர். முகம், கைகால் சிராய்ப்புகளுடன் திரும்பி
வந்து.. எங்கே செல்வது என்று தெரியாமல் சாலையோர்ப் பிளாட்பாரத்தில் எல்லாம் மறந்து
தூங்கினான்.
சென்னை வந்து பஞ்சம் பட்டினியாகக் கிடந்து
ஒரு இளம் இயக்குநரிடம் எடுபிடியாக ஒரு வேலைக்குச் சேர்ந்தான். தன்னுடைய ஆசை இயக்குநராக
ஆவது என்பதை மறைத்தான்.
அதற்கான காலக் கொக்காய் காத்திருந்தான்.
இன்றைக்கு செட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்த இளம் இயக்குநர் சற்று முன்கோபக்காரன். ஒரு காட்சி எடுத்தார்கள். அது சரியாக அமையவில்லை.
என்னதான் மறைத்துக்கொண்டாலும் இவனால்
இவன் உள்ளத்தை அடக்கமுடியவில்லை.
சார்.. நான் இந்தக் காட்சியை எப்படி
எடுக்கலாம்னு சொல்லட்டுமா சார்.. என்றான்.
நீ பெரிய புடுங்கியா? உன்னக் கேட்டனா..
மயிறு.. உன்னோட வேலைமயிறு என்னவோ அதைப்பாரு.. உன் யோசனை மயிறு எல்லாம் வேண்டாம்… போ
சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வை…
திரும்பி வந்தான்.
மதியம் சற்று படப்பிடிப்பை நிறுத்தி
வைத்திருந்தார்கள். இவன் ஸ்டுடியோ வாசலில் செக்யூரிட்டி அறையில் உட்கார்ந்திருந்தான்.
செக்யூரிட் சொன்னான்
தம்பி கதிரு உனக்கு இதெல்லாம் தேவையா?
இந்த சென்னையில பொழக்க வந்திருக்கே.. அறிவுரை சொல்லாதே.. இங்க உள்ளவனுக்கு எல்லாமும்
தெரியும்னு சொல்லுவான்.. ஆனா எதுவும் தெரியாது.. கழுகு மாதிரி அடுத்தவன முழுங்கறது
தெரியாம முழுங்கிப் பொழப்பான். ஆனா கௌரவம்.. தன்மானம்.. சொந்தத் திறமைம்பான்.. பொழக்கற
வழிய பாரு கதிர் என்றான் அன்பாக.
இல்லண்ணே இந்த இயக்குநர் ரொம்ப நல்லவரு..
கஷ்டப்பட்டுப் படம் எடுக்கறாரு.. நானும் சினிமா இயக்குநர் ஆவணும்னுதான் சென்னைக்கே
வந்தேன்.. அவரு எடுத்தக் காட்சிய கொஞ்சம் ‘மாத்துனா போதும்.. படத்துலேயே அதுதான் பேசப்படற
அளவுக்கு வ‘ரும்.. என்றான் கதிர்.
சரி எதுக்கு இப்படி ஆதங்கப்படறே.. எங்கிட்டட
அந்தக் காட்சிய சொல்லு.. நான் கேக்கறேன்..
கதிர் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தான்.
எதற்கோ சிகரெட் பிடிக்க வந்த அந்த இளம்
இயக்குநர் கதிர் செக்யூரிட்டியிடம் சொல்வதைக் கேட்டு முடித்தான்.
சட்டென்று போனான்.. அந்தக் காட்சிய
எடுத்துடலாம் என்றான்.
கதிர் சொன்னதுபோலவே எடுத்தான்.
காட்சி பிரமாதமாக வந்திருந்தது. கதிர்
பார்த்துக்கொண்டிருந்தான்.
மாலையில் அந்த இயக்குநர் கூப்பிட்டான்..
டேய் இங்க வாடா..
என்ன சார்? என்றபடி அருகில் போனான் கதிர்.
அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து நாளையிலேர்ந்து
உனக்கு இங்க வேலை இல்ல. சொல்ற வேலய விட்டு மயிறுமாதிரி யோசனை சொல்லவருவே.. சுத்தப்படாது
கௌம்பு..
வாசலுக்கு வெளியே துரத்தாத குறைதான்.
கதிர் வெளியே வந்தான்.
என்ன உலகம்டா? திறமைக்கு மதிப்பே இல்லியா வயிறு பசித்தது. கையில் பணம் இருந்தது. போய் ஒரு
கையேந்திப் பவனில் போய் உட்கார்ந்து நாலு தோசை ரெண்டு ஆப் பாயில் ஒரு ஆம்லெட் என்று
நிறைய சாப்பிட்டான். படுக்க இடம் தேடினான். எதிரே பிளாட்பாரம். அருகே புங்க மரம். இன்னிக்கு
ராத்திரி இங்கதான்.. என்று அந்தப் பிளாட்பாரம் நோக்கிப் போனான்.
நள்ளிரவில் எழுப்பினார்கள். எழுந்தான்.
போலிஸ்.. சார்..
வாடா.. எழுந்திரு.. செய்யறவேலைய செஞ்சுட்டு
பேசாமா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இங்க வந்து படுத்திருக்கே..
நான் என்ன சார் பண்ணே?
என்ன பண்ணியா? கொலை பண்ணிட்டு எவ்வளவு
அமைதியா பேசறே.. அழுத்தமான கொலகாரன் ஏட்டு இவன்…
என்ன சார் சொல்றீங்க.. நான் ஸ்டுடியோவுல
வேல பார்த்தவன் சார்.. என்னப் போயி..
என்ன வேலை பார்த்தே? டைரக்டரா?
கேலியாகச் சிரித்தார்கள்.
உண்மை சார்.. நான் டைரக்டர் ஆகத்தான்
சார் கிராமத்துலேர்ந்து சென்னைக்கு வந்தேன் சார்..
நல்லா கதை சொல்றே?
எனக்கு கதை சொல்லத் தெரியும் சார்.
கன்பார்ம்டு.. கௌம்பு.
காவல் நிலையத்தின் உள்ளே போய் தரையில்
உட்கார வைத்தார்கள்.
யோவ் இவன் பேர்ல காயத்ரி கொலை வழக்கு
எப்ஐஆர் ரெடி பண்ணு. சப்பை மேட்டரு.. அவளோட
அப்பன் பெரிய ஆபிசர எல்லாம் பாப்பேன்னு மிரட்டிப் பாக்கறான்.. இவன்தான் கொன்னான்னு
மேட்டர முடி. பேரு என்ன கதிரா. டைரக்டர் ஆசையில் சென்னை வந்த வாலிபர். பெண் மர்மக்கொலையில்
தொடர்பு. கைது. பேப்பருக்கு செய்தி கொடுத்துடு. நாளைக்குக் கோர்ட்டுல புரடியூஸ் பண்ணிடலாம்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா..
வந்துடுச்சு சார்..
(இன்னும் நடக்கும்)