Sunday, December 28, 2014

உரையாடல் சுவை....
               இலக்கியங்கள் சுவையானவை.  அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.

              உலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.

             சிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.


சிங்கன்  -  இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி?
சிங்கி     -   பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.


சிங்கன் -   உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்
                     இருக்குதடி சிங்கி.
சிங்கி     -   அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.


சிங்கன்  -  உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்
                     சிங்கி?
சிங்கி     -   சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.


சிங்கன் -   சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி?
சிங்கி     -   அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.


சிங்கன் -   நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல  நெ ளிவு அது
                      என்னடி சிங்கி?
சிங்கி     -   பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.


சிங்கன் -   செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி?
சிங்கி    -   குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச
                     மடா சிங்கா.


சிங்கன் -  உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்
                    சிங்கி?
சிங்கி     -  கண்டிய தேசத்தில்  நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.


சிங்கன் -  உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து
                     வைத்தது யாரடி சிங்கி?
சிங்கி    -   திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.


சிங்கன் -  உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி
                     சிங்கி?
சிங்கி     -  சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.


சிங்கன் -   உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-
சிங்கி    -    காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.


சிங்கன் -  எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு
                    போன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி?
சிங்கி     -  குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.


சிங்கன் -   காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி?
சிங்கி     -   அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.


சிங்கன் -    குமிழமலர்  மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி?
சிங்கி     -    முத்து மூக்குத்தியடா சிங்கா.


சிங்கன் -   சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி
                      சிங்கி?
சிங்கி    -    தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.


இப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்


சிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.
சிங்கி     - அதில் சந்தேகமோ, உன் தலைப்  பேனைக் கேளடா சிங்கா.


என்கிறாள்.

                    எத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.Tuesday, December 23, 2014

ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்வணக்கம்.

                       என்னுடைய  குரு  பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன். இதுவரை 64 நுர்ல்களை எழுதியுள்ளார். ஒவவொரு புத்தகம் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவை.

                         இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவு நெடுநாட்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

                          இந்தப் பதிவு இவருடைய ஒரு நுர்ல் பற்றி.

                          நுர்லின் பெயர்  ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்.

                          எத்தனையோ சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. என்றாலும் இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்டது.

                         காலங்காலமாக நமக்குச் சொல்ப்பட்டு வந்த நீதிக்கதைகள் பல தந்திரங்களை உள்ளடக்கியவை. இவற்றை தன்னுடைய அனுபவத்தில் வேறாகப் பார்த்துப் புதிய சிந்தனையை உண்டாக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.

                       இதற்கு இன்றையக்கான அவசியம் நேர்ந்திருக்கிறது.


                     இன்றைய சமுகத்தை மாசுபடுத்துபவர்களை ஒரு சிறிய
                     ஊசியாலாவது குத்திப் பார்க்கவேண்டுமென்ற துடிப்பு
                    எனக்கிருந்தது. பெருமைப்படத்தக்க சில உண்மை நிகழ்வு
                     களை எடுத்துச் சொல்லி இவற்றில் உள்ளதுபோல வாழ்ந்து
                     பாருங்களேன் என்று இளைஞர்களைத் துர்ண்டும் நோக்கம்
                     எனக்கிருந்தது. இவற்றின் விளைவே இந்த நுர்லாகும்.


என்கிறார். ஆனால் உண்மை மிகக் கசப்பானது. எப்படியென்றால் இன்றைக்கு தேவை ஊசிகளல்ல கடப்பாரைகள். லட்சக்கணக்கில் கடப்பாரைகள் தேவை. ஆனால் கடப்பாரைகள்தான் முறிந்துபோகும் செயலற்று. இப்படியெண்ணி மறநதுபோகலாம். இங்கு குவெபா அவர்கள் ஊசியால் குத்துவது என்பது உண்மையின் ஊசியால் மனத்தில் தைப்பது என்கிறபொருளாகும்.

                       .........................நீதிக் கருவூலங்கள் இன்று பூட்டுத் திறக்கப்படாமல்
                     இரும்புப் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டன. அந்த வாழும்
                     மறைகள் வாழ்க்கை மறைகளாகவில்லை. அந்த நீதிகளை எளிமை
                     யாக என் அனுபவக் கல்வியில் பெற்ற பயிற்சியோடு சேர்த்து இந்த
                     நுர்லை உருவாக்கி உங்கள் முன் அளிக்கின்றேன். இளைஞர்களின்
                     வாழ்க்கையில் இந்த நுர்ல் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்
                     என்பது என் உறுதியான நம்பிக்கை. வெறுங்கதை சொல்லிச் சிரிக்க
                     வைத்துப் படிப்போர் பொழுதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
                     விழலுக்கு நீர்பாய்ச்சுவதால் பயன் ஏது? விளைவயல்களாக இருக்க
                     வேண்டிய இளைஞர் உலகில் களைகள் மண்டிக் கொண்டிருக்கின்றன.
                     பொழுதுபோக்கே வாழ்க்கை நோக்கம் எனப் பூரித்துப் போயிருக்கிறது.
                     இளைஞர் உலகம். அதனைத் திசை திருப்பவே இந்நுர்ல் ஆக்கப்
                     பட்டுள்ளது.


                              கதைத்தொகுப்பின் நோக்கம் இது.

                        இத்தொகுப்பில் 45 கதைகள் உள்ளன.  இரு கதைகள் உங்களின் பார்வைக்கு சான்றாக.

                            ஆற்றில் விழுந்த கோடாரி என்கிற கதை எல்லோரும் அறிந்ததுதான். விறகு வெட்டியின் நேர்மையால் தங்கம், வெள்ளி, இரும்பு எனக் கோடரி கிடைத்தது. இதனைப் பின்வருமாறு மாற்றி யோசித்து நம்மையும் பலமாக சிந்திக்கத் துர்ண்டுகிறார்.

                   விறகு வெட்டுபவரே ஆற்றில் கோடரி விழுந்துவிட்டதா? பரிவோடு
              கேட்டது தேவதை. 

                     ஆம் அம்மா. அவன் இயல்பாகக் கூறினான்.

                    கவலைப்படவேண்டாம் நான் இந்த ஆற்றில் மூழ்கி உன் கோடரியை
              எடுத்துத் தருகிறேன் என்றது வனதேவதை.

                     ..................நீ போய்வா.. நான் நீந்தத் தெரிந்தவன்.. நான் கைதவறவிட்ட
              கோடரியை நானே எடுத்துக்கொள்வேன் என்றான் கோடரிக்காரன்.

                      ...........................................

                       காலகாலமாக இப்படித்தானே கதை சொல்லி வருகின்றனர். ஆனால்   என் கதை வேறு. கோடரி என்றால் அது விறகு பிளக்கவேண்டும். தங்கத்தால் செய்த கோடரி வீட்டின் தரித்திரத்தை மாற்றலாம். ஆனால் உழைப்பை மறக்கடிக்கும். அதை அணிகலனாகச் செய்து அணிந்துகொண்டால், கடினமான   உழைப்பைப் புறக்கணிக்கும். பாதுகாப்பாக வைக்கப் பெரிய இடம் கேட்கும். பிறகு உதவிக்கு ஆள்கேட்கும். வெள்ளிக்கோடரியை அழகிய தட்டாக்கி உணவு     உண்ணலாம். ஆனால் நான் குடிக்கும் கூழுக்கு அது மிகை. ஆகவே என்    உழைப்பு மூலதனத்திற்கு ஏற்ற துணைக்கருவி இரும்புக் கோடரிதான். அதை ஆற்றில் மூழ்கி நானே எடுத்துக்கொள்வேன். வேலைசெய்யும் நேரம் உன்னோடு பேசி வீணாகிவிட்டது. உன் பட்டாடை கசங்காமல் அணிகலன்கள் பறிபோகாமல்
              பத்திரமாகப் போய்வா என்றான் விறகுவெட்டி.
இன்னொரு  கதை

       நான் யார் தெரியுமா? என்கிற கதை. இக்கதையில் வரும உரையாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.

                  திரு கந்தசாமி அவர்களே உங்கள் சிறப்புத்தகுதி?

                     ஐயா, நான் கலியுகக் கலைக்காவலர் என்ற சிறப்புப்
                     பெயரைப் பெற்றவன்.

                  அப்பாடா, கவலை இல்லை. இந்த யுகமுழுவதும் நீங்கள்
                  கலைகளைக் காப்பாற்றி விடுவீர்கள். அது சரி இந்தப் பட்டத்தை
                  உங்களுக்கு யார் கொடுத்தார்கள்.

                      கள்ளிக்காரன் புதுக்குடி மழலையர் பள்ளித் தொடக்க
                  விழாவின்போது அதன் தாளாளர் மாட்டுத்தரகர் மாடசாமி
                  கொடுத்தது.

                      மிகச் சிறப்பு கந்தசாமி அடுத்து சண்முகவேலன் அவர்களே
                   உங்கள் சிறப்புப் பெயர்?

                           சாதிக் கழக்கறுத்த சண்டமாருதம் சண்முகவேலன் என்பார்கள்
                    என்னை.

                           உங்களுக்கு இந்தப் பட்டத்தைத் தந்தவர்?

                        கொண்டையாம்பட்டி கோபாலகிருஷ்ணக் கோனாலும் ஐயன்வாடி
                    சுந்தரசாமித் தேவரும் ஐயா.

                          மிக நன்று பாராட்டுகள் அடுத்து நீங்கள்.

                     புரட்சி எழுத்துப் புயல்வேகச் சிந்தனை வேந்தன் பொழிலன்.

                          உங்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்கியவர்
.
                     மனவளர்ச்சியற்ற மக்கள் மன்றத்தார்.

                          எதற்காகக் கொடுத்தார்கள்?

                     அவர்கள் மன்றத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.

                     அதற்கு ஒரு மரியாதையாக.

                           மிக நன்று நர்மதா உங்கள் தகுதி.

 நாட்டியக்கலை அரசி அபிநயக் கூடாரம் அங்கலாவண்யள அழகு சித்திரம்    என்பது நான் பெற்ற பட்டம்.

                            இவற்றை வழங்கியவர்.

                            என் பாட்டி பிறவி நாட்டியக் கலாராணி பிரேமலதா அவர்கள்.

                            அவர்கள் அவ்வளவு சிறப்பாக ஆடுவார்களா?

                            அவர்கள் நடப்பதே நாட்டியம் போல இருக்கும்.

                            ஏன்?

                            பிறவியிலேயே அவர்களுக்கு ஒரு கால் ஊனம்.

இதுபோன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஊசியாய் தைக்கின்றன. நியாமுள்ளவர்கள் தர்மவான்கள் என்பதுபோல இது சரியான தளத்திற்குச் சென்றால் உரிய நியாயத்தின் முத்திரையாகப் பதியும்.

                அவசியம் படிக்கவேண்டிய தொகுப்பு இது. 

               புத்தக விவரம் . அனுராதா பப்ளிகேஷன்ஸ்
                               விடையல் கருப்பூர், கும்பகோணம். 612 605.
                                  பேச. 04366-262237, 263237                   


                             


                       

Wednesday, December 17, 2014

தாயற்ற பாவிகாள்....
                                     ஒரு கணம் இதயம் உறைந்துவிட்டது இயங்காமல்.  மிருகங்கள்கூட  குழந்தைகள்  என்றால் இரக்கம் காட்டும் என்பதற்கு ஏராளமான செய்திகள் வருகின்றன.

                                     மிருகத்தைவிடக் கேவலமானவர்கள் என்பதை தாலிபான்கள்......காட்சிப்படுத்தியிருக்கும் கொடூரச் செயல் இது.

                                     பிள்ளைகள் என்ன செய்தன?

                                     படிக்கிற வகுப்பறைக்குள்  மரணத்தையா பாடமாகப் போதிப்பது.

                                     என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்  அம்மாவைக் கூட நினைக்கமுடியாமல் உயிர் போயிருக்குமே... தாலிபான்  பாவிகளே.. நீங்கள் ஒருவர்கூட தாய்க்குப் பிறக்கவில்லை...

                                     அம்மா என்று  மிருங்கள்கூட  உச்சரிக்கின்றன.  உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டன.

                                     இவர்களைப் பிள்ளைகளாகப் பெற்றதாக எண்ணிய  தாய் உள்ளங்களே.. உங்கள் இதயத்தை அடைத்துவிடுங்கள் இந்தப் பாவிகளுக்குத் துளிகூட கருணையின்றி..

                                      இயக்கம் என்பதற்குப் பெரிய பொருள் உண்டு.  ஒவவொரு தேசத்திலும் விடுதலைப் போராட்டச் சூழமைவில் இயக்கங்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றன. அவை அந்தந்த தேசத்தில் மிகப்பெரும் நன்மைகளை ஏற்படுத்தியவை.

                                         குழந்தைகளைக் கொல்கிற ஒன்று எப்படி இயக்கமாக இருக்கமுடியும்?  உலகின் மிகச்சிற்ந்த கோழைகள், எதற்கும் தகுதியற்ற தீவிரவாதம் என்கிற ஒரு விஷத்தை மட்டுமே உண்கிற கொலைகார பாவிகள்... ஒன்று சேர்ந்திருக்கிற மலமடிக்கும் சாக்கடை.. இயக்கமல்ல...

                                         காலையில் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகளை பிணங்களாகப் பெற்ற தாய்களுக்குத் தந்திருக்கிறீர்கள்... அந்த தாய் உள்ளங்கள் என்ன பாடுபடும்?  அவர்களின் சாபம் உங்களைப் போன்ற இயக்கங்களை விரைவில் அழித்து சாம்பல் ஆக்கிவிடும்.. இது சத்தியம்..

                                            அல்லா உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... அல்லாவின் தண்டனை உங்களுக்கு நிச்சயம் உண்டு.                                              இளம் பட்டாம்பூச்சிகளே
                                              சிறகடிக்க வழியற்று
                                              உயிரறுத்துப்போனார்கள் பாவிகாள...

                                               இதயத்தின் வேதனை அடங்கவில்லை.
                                               பிள்ளைகளே....பிள்ளைகளே...

                                               உங்களின் ஆன்மாவில் என்னைப்
                                                புதைக்கிறேன்...  செய்வதறியாமல்...

                                               மீண்டும் பிறந்து வாருங்கள்
                                               உங்களின் தாயின் கருவறைக்குள்...

                                               அல்லாவையும் ஆண்டவனையும்
                                               வேண்டி நிற்கிறேன்...
                                         

                                           

                                         

Monday, December 15, 2014

உள்ளம் இடிகிறது...
                     தமிழ் செம்மொழியாகி வேண்டுமென்கிற அளவிறகு விழாவும் கொண்டாடியாகி முடிந்துவிட்டது.

                     செம்மொழி என்பதற்கு அடிப்படை தமிழின் சங்க இலக்கியங்கள்.  பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்கிற இலக்கியங்கள்.

                     இவ்விலக்கியங்களைப் பாடிய புலவர்களும் அவர்கள் பட்டபாடும் எழுத்தில் வடிக்கமுடியாதவை.

                     ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த மனித  வாழ்வைத் தேடி இரவும் பகலும் பாராமல் ஓயாமல் எந்தவித வாகன வசதியுமற்ற காலவெளியில் ஓயாத மனத்துடன் அலைந்தவர் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யர் அவர்கள். உவேசா என்று அழைக்கப்படுபவர்.

                    அவர் பட்ட பாடுகளும் அத்தனை துன்பங்களுக்கிடையில் அவர் சேகரித்துப் பாதுகாத்துத் தந்துவிட்டுப்போயிருக்கிற இலக்கியங்கள் ஏராளமானவை.

                       அவர் இல்லையென்றால் அவ்விலக்கியங்கள் இல்லை. அவ்விலக்கியங்கள் இல்லையென்றால் இன்றைக்குப் பலருக்கு பிழைப்பே இல்லை.

                        தமிழ்மொழி உள்ளளவும் தமிழ்பேசும் உள்ளம் உள்ளளவும் அவரை மற்க்கக்கூடாது. மறந்தால் அவர்களை மன்னிக்கவும் முடியாது.

                         அப்படிப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டுவிட்டது.

                         முன்பிருந்தே தமிழுணர்வு உள்ளவர்கள் போராடியும் பலனற்று அவ்வீட்டை வாங்கியவர்கள் அதன் அருமை தெரியாமல் இடித்துவிட்டார்கள். அரசும் பேசாமல் இருந்துவிட்டது.

                          அவ்வீட்டை நினைவு இல்லம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமான தானே வரவேண்டிய உணர்வுள்ள கோரிக்கை விடுக்கப்பட்டும் இடிக்கப்பட்டுள்ளது தமிழ்த்தாத்தாவின் வீடு.

                            அரிய பல நுர்ல்களைப்  புதிப்பித்தவர் (பதிப்பித்தவர்)

                             கருத்தரங்குகள் அல்லது அவரின் பிறந்த நாளில் அல்லது நினைவுநாளில் புகைப்படத்திற்கு மாலையிட்டுப் புகைப்படம் எடுத்து மறந்துவிடுவதைத்தான் காலங்காலமாக ஒவ்வொரு தமிழறிஞருக்காகவும் நாம் செய்கிற அதிகப்பட்சத் தமிழ்த்தொண்டு.

                               தமிழுக்காக நம்முடைய தாய்மொழிக்காகப் பாடுபட்டவர்களை நாம் என்றைக்கும் நினைத்து அவர்கள் உரைத்துவிட்டுப்போன வாழ்வின் சொற்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் பின்பற்றி வாழவேண்டும்.

                              உள்ளம் இடிகிறது..

                              அரசிடம் ஒரு  வேண்டுகோள்...  அவர் வீடு இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவிடம் கட்டியாவது  நாம்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.  தமிழுக்காக தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர்வது என்பதும்கூட தமிழ்த்தொண்டுதான். 

Sunday, October 26, 2014

அன்புள்ள...

                  இன்றைக்கு தினமணியில் ஒரு கவிதைபோன்ற செய்தியை வாசித்தேன்.

                    எந்த ஓர் உயிரையும்
                    அதிகம் நேசித்துவிடாதே
                    அவர்கள் பேசாத
                    ஒவ்வொரு நொடியும்
                    மரணத்தைவிட
                    கொடுமையாக இருக்கும்..

உண்மைதான். இந்த நேசிப்பு என்பது ஒருவரோடு காலம் முழுக்க அருகில் இருந்துதான் நேசிக்கவேண்டும் என்பதில்லை.  அது வாய்த்தவருக்குக் கொடுமையானது. அதைப்போன்றுதான் அவர்களின் எழுத்துக்களும். ஒரு படைப்பாளியைப் பார்த்துப் பேசாமலேயே அவரின் எழுத்துக்களோடு வாழ்வது அதனை நேசிப்பது என்பது அற்புதமானது.

               இந்த வாரம் முழுக்க மனம் கணத்திருக்கிறது.

               காரணம் மூன்று மரணங்கள். பேரிழப்புகள்.

               1. நடிகர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்.
              2.  எழுத்தாளர்  பெருமைமிகு ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.

              3. எழுத்தாளர் கலை விமரிசகர் தேனுகா அவர்கள்.

              முதல் இரண்டுபேரோடு பழக்கமில்லை என்றாலும் படங்களின் வழியாக முன்னவரும் எழுத்துக்களின் வழியாகப் பின்னவரும் என் மனதை நனைத்தவர்கள். தெளிவான உச்சரிப்பில் வசனம் பேசி காட்சிக்கு உயிர்கொடுத்தவர் எஸ்எஸ்ஆர். அவரின் படங்கள் படங்களல்ல வாழ்க்கை. வாழ்க்கையாக அவரின் படங்களின் அவரின் நடிப்பு. அவரின் குடும்பத்திற்கு மனத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலியும் ஆறுதலும்.

              2. தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் எங்கள் குரு எங்களுக்கு நல்ல இலக்கியங்களுக்கான திசையில் வழிகாட்டி நின்றபோது எண்பதுகளில் ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் படித்து நெகிழ்ந்தது உண்டு. காலந்தோறும் பெண் என்கிற அவரின் சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையிலான பெண் குறித்த சிந்தனைப் பதிவுகளான நுர்லை வாசித்தபோது நிறைவு. படைப்புலகிலும் ஆய்வின் பரப்பிலும்  அவரின் தேர்ந்த தெளிவும் எழுத்தும் நாளைவரையும் அழியாக கோலங்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமை செலுத்திய பெண் எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன். சூடாமணி அநுத்தமா அம்பை சிஆர் ராஜம்மா காவேரி வாஸந்தி என பெண் எழுத்துக்களில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர்கள். இதற்குக் காரணம் இவற்றை வாசிக்கச் சொன்ன குரு ப்ரகாஷ் அவர்கள்.

              பலர் பல எழுத்தாளர்களுடன் குறிப்பிடத்தக்க நினைவுகளில் கலநதுகொண்டு சரியாக அவர்களுட்ன் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் புகைப்படம் எடுத்துப் பரிமாறும்போது பொறாமையாக இருக்கிறது. எப்போதும் நம்மைவிட்டுப் போகமாட்டார் என்று ஒவ்வொரு மணிக்கணக்கில்அருகில இருந்தும் என் குரு ப்ரகாஷ்உடன் ஒரு புகைப்படம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு அணிந்துரை வாங்கமுடியவில்லை கடைசிவரை. எனவே ராஜம கிருஷ்ணன் போன்றவர்களை எப்படியேனும் ஒருமுறை சந்தித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது. இது என் ராசி போலும். ஒவ்வொருவரின் இழப்பின் பின்னேதான் இதனை உணரும் வாய்ப்பை எனக்களிக்கிறார் கடவுள்.

             இப்போது என் கண்களில் கரிப்பு மணிகள். அம்மாவின் ஆன்மா அமையுறட்டும்.

               மூன்றாவது கலை விமரிசகர் தேனுகா. வங்கிப் பணியில் இருந்துகொண்டு ஓவியங்களைப் புதுஉலகின் திரையில் தரிசிக்க வாய்ப்பளித்தவர். வண்ணங்கள் வடிவங்கள் வழியாகவே அவர்அறிமுகம். ஒவ்வொரு தஞ்சைக் கூட்டத்திற்கும் அவர் வருவார். ப்ரகாஷ் அழைத்திருப்பார். முதல் அறிமுகத்தில் ஹரணி என்று அறிமுகம் செய்துகொண்டேன். இனிமையாக ஓவியம் குறித்த புரிதலை உண்டாக்கினார்.

                அதற்கு சரியாக நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன் அவரை. நான்காவது முறை சமீபத்தில் தி இந்து தமிழ் நாளிதழ் நடத்திய வாசகர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது நானும் நண்பர் அனன்யா அருள் அவர்களும் சென்று நலம் விசாரித்தோம். என்னுடைய சந்தேகப்புத்தி என்னைத் தெரிகிறதா சார் என்றேன். என்ன ஹரணி நன்றாகத் தெரிகிறது என்றார். உடல் தளர்ந்திருந்தது. பின் அவரிடம் கவிஞர் நா விச்வநாதன் அவர்கள் பேசத்தொடங்கப் பிரிந்தோம் நானும் அருளும். வழக்கமாகப் பேசுகிற பேச்சிலிருந்து மாறுபட்டிருந்தது தேனுகாவின் பேச்சு. மாறுபட்ட பேச்சு. உணர்ச்சி இழையோட இந்துவின் தன்மைகுறித்து தேவை குறித்து மிக அழகாகப் பேசினார். என்ன இது தேனுகா இன்றைக்கு மாறுபட்டிருக்கிறார் பேச்சில் என்றுகூட நானும் அருளும் நினைத்தோம். கூறிக்கொண்டோம் பரஸ்பரம். கடைசிப் பேச்சு என்றாலும் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் சுவை குறையாத தளராத பேச்சு அது.

                 இன்றைக்கு அவர் இவ்வுலகிலிருந்து உடல் வழியாகவும் விடைபெறுகிறார். அவரின் எழுத்துக்கள் அவரின் முகம் இன்றைக்கும் முகத்தில் ஓர் ஓவியம்போல மனத்திரையில் விரிந்துகொண்டேபோகிறது.

                 தி இந்து வாசகர் விழாவில் அவரிடம் கைகுலுக்கம்போது  சிறுபிள்ளைகளின் கழற்றிப்போட்ட சட்டைகளைக் கையில் எடுப்பதுபோது மிருதுவாக இருந்தது அவரின் குலுக்கல். அது தளர்வு என்றாலும் ஓர் ஓவியத்தைத் தொடடுத் தடவுவதுபோலிருந்தது.

                  தேனுகா சார்...

                    

Thursday, October 23, 2014

தீபாவளி கொண்டாடியவர்கள்...              தீபாவளி கொண்டாடியவர்கள்...


              தீபாவளி ஒவ்வொரு ஆண்டு வந்தாலும் அதுவொரு எதிர்பார்ப்பை உருவாக்கியே வருகிறது.

                முன்கூட்டியே அவரவர் தகுதி, வேலை, சம்பளம், பட்ஜெட் இவற்றிற்கு ஏற்பத் திட்டமிட்டு குடும்பத்தின் அனைவரும் சேர்ந்துபோய் துணி எடுத்து வந்துவிடுகிறார்கள்.

                 தீபாவளி வருவதற்கு முன்னமே இரண்டு மாதங்களுக்கு முன்பே துணி எடுத்து ரிலாக்ஸாகத் தைத்துக் காத்திருப்பவர்கள். இவர்களின் திட்டமிடல் எப்போதும தவறாது.

                ஒரு மாதத்திற்கு முன்பு தீபாவளி குறித்து பேசத் தொடங்கி அது தொடர்பாகக் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டை வந்து அது அணையாத நெருப்புப்போல தீபாவளி வரும் ஒரு வாரத்திற்கு முன்பு அணைந்துபோகும். எப்படியோ பணம் புரட்டி எல்லாமும் எடுத்தவுடன்.

                தீபாவளிக்கு முன்தினம் கண்டிப்பாக அன்றைக்கு எப்படியும் மழை பெய்யும். ஒரு குடைதான் இருக்கும். குடை மறந்துபோகும். கூட்டம் நெருக்கும். எதையும் பார்த்து நிதானமாக எடுக்கமுடியாது. என்றாலும் வேறு வழியின்றிப் போய் எடுத்து வீடு வந்துசேரும்போது நேரம் மட்டுமல்ல எரிச்சலும் நீண்டிருக்கும்.

                           அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் வருகிற கூட்டம்.  வாயில் பற்ற வைத்த சிகரெட் அல்லது பீடியுடன் ஒரு கையால் வேட்டியின் நுனியைப் பற்றிக்கொண்டு முன்னே ஒரு கிராமத்து கணவன் அசைய.. பின்னே அவன் மனைவியும் பிள்ளைகளும் முகத்தில் மகிழ்ச்சியுடன்.. வேடிக்கைப் பார்த்தபடி நெரிசலில் நடப்பார்கள்.

                           பல விவாதங்கள்.. சிறுசிறு சண்டைகள்...பிரச்சினைகள்.. வீட்டிற்குப் போனவுடனே துணி பத்தவில்லை மாற்ற வாவென்ற அழைப்புக்கள். டாப் இருக்கு சரியான பாட்டம் கிடைக்கலே..  இவ்வளவு கலர் இருக்கு நான் நினைச்ச கலர் அமையலே.. எல்லாருக்கும் நல்லா அமைஞ்சுடிச்சி.. எனக்குத்தான் கலரும் அமையலே துணியும் அமையலே.. இப்படி பல உரையாடல்கள்.. பணம் பத்தாமை.. மனம் போதாமை... குணம் போதாமை..

                       எப்படியே தீபாவளி நாள் விடிகிறது.

                       முன்தினம் இரவிலிருந்து மத்தாப்புகளும் ராக்கெட்டுகளும் வண்ணம் காட்ட.. படபடவென்று பட்டாசுகள் வெடிக்கின்றன.

                       தீபாவளியன்று வீடுவீடாகப்போய் பலகாரங்கள் பரிமாறி துணிகுறித்த விசாரிப்புகள். எதிர்பார்ப்புகள்..

                         எல்லாம் முடிந்து அன்று மாலை..

                         ஒரே உரையாடல் எல்லோரிடத்தும்

                         என்னதான் பாத்துப் பாத்து எடுத்தாலும் இந்த வருஷமும்
டிரெஸ் சரியா அமையலே..  நாலைஞசு பேரு சொல்லிட்டாங்க.. இது மாட்ச் இல்லே.. இதப்போய் எடுத்தியான்னு.. சே..

                          குடிசைகள் அடர்ந்த  தெருக்களின் ஊடே நடந்தால்... நடக்க முடியாது...வாசல்தோறும் பளபளப்பான சேலைகளில் உள்ளே கன்னங்கரேலென்ற பெண்கள் வாயெல்லாம் சிரிப்பாக.. ஆண்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு,  எனப் புளொரெசண்ட் கலர்களில் சட்டை வெள்ளை வேட்டி.. பிள்ளைகள் உடம்பில் ஜாக்கெட் அணிந்ததுபோல மினி சர்ட்.. மேலே ஒரு கலர் கீழே ஒரு கலர்.. சட்டையில் அங்கங்கே பிளாப்புகள் பட்டன்கள்.. பாக்கெட்டுகள்.. கீழே பேண்டை மடித்துவிட்டிருப்பார்கள்.. கைகளில் உதிரி வெடிகளைப் பிடித்திருப்பார்கள்... கையெல்லாம் மருந்தின் படலம் முட்டையோட்டின் உள் சவ்வுபோலப் படர்ந்திருக்கும்.. அதை பேண்ட்டில் தேய்த்தபடி வெடி வெடிப்பதில் மும்முரமாக.. சின்னஞ்சிறு பிள்ளைகள் பாதி முறுக்கு கடித்தபடியோ.. அதிரசம் வாயில் பாதி சட்டையில் பாதி உதிர்த்தபடியோ..சட்டைப் பாக்கெட்டில் துருத்திக்கொண்டிருக்கும் வாழைப்பழம்.. இப்படி தெருமுழுக்க எல்லோருக்கும் தீபாவளியை உதிர்த்துக்கொண்டிருக்கும் சிரிப்பு.. சிரிப்பு...

                      ஒவ்வொருஆண்டும் இப்படித்தான்... இவர்கள்தான் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.. மறுநாள் எதுவுமில்லை என்ற உணர்வை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டு..

                            மனதால் கொண்டாடுவோம் தீபாவளி மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லாமும் குறையாக இருந்தாலும்..


Saturday, October 11, 2014

செய்திகளும் உணர்வுகளும்செய்தி 1


                     இவ்வாண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசினை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

                       அ) இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி (60)
                      ஆ) பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (17)

                   
                 குழந்தைகள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (நன்றி தினமணி- 11.10,2014)

                      அவர்கள் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இந்த குழந்தைகள் கல்வி மற்றும் உரிமை இவற்றுக்காகத் தொண்டு  ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள.

                       நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                        .........இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே
                       வலுவான உறவுகளைக் கட்டமைக்கக் கூட்டாகப் பாடுபடுவது
                       என்று சத்யார்த்தியும் நானும் முடிவு செய்துள்ளோம். நான்
                       அமைதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியாவும்
                        பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது.
                        ஆஸ்லோ நகரில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள
                        நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்குமாறு நவாஸையும்
                        மோடியையும் நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

17 வயது சிறுமியின் ஆத்மார்த்தமாக மனிதநேயமிக்க பொறுப்பான உண்மையான உலகெங்கும் அமைதி நிலவவேண்டும் என்றெண்ணும் உள்ளங்களின் ஒட்டுமொத்தக் குரலாகப் பதிவு செய்துள்ளார் மலாலா. மகளே உன்னை வணங்குகிறேன்.  உன் எண்ணம் நிச்சயம் ஈடேறும்.

                சமீபமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான மோதலில் உயிரிழந்துபோன வீரர்களின் குடும்பங்களை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். எத்தனைக் கனவுகள். எத்தனை எதிர்பார்ப்புகள். எத்தனை திட்டங்கள். எல்லாமும் இழந்து அந்த முகந்தெரியாத குடும்பங்களின் துயரை யார் பகிர்ந்துகொள்வது.

                     எப்படியாயினும் உயிரற்ற குண்டுகளில் அரிதான மானிட உயிர் முடிந்துபோவது வேதனையாக உள்ளது.

                        மலாலாவின் வேண்டுகோளை நாமும் வழிமொழிந்து வேண்டிநிற்போம்.

                          0000000000000000000000000000000000000000000


செய்தி 2

                          அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் மறைவு.

                          காந்தியக் கொள்கைகளில் தன்னை இறுக்கமாக இணைத்துக் கொண்டு கடைசிவரை அப்படியே வாழ்ந்தவர் அக்டோபர் 2 அன்று  இயற்கை எய்தியது எத்தனை ஒற்றுமையானது.

                          அவரின் பணிகள் அல்லது தொண்டுகள் எண்ணிலடங்கா.

                          எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னிலை உயர்ந்தவர். அத்துடன் முடிந்துவிடவில்லை. உயர்ந்த நிலைக்குப் போனபிறகு தன்னிலும் தாழ்ந்து கிடக்கிற மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்திட முனைந்தவர்.

                            அவரின் நிதி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் பார்சல் நிறுவனங்களும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வையும் கொடுத்தன.

                            காந்தியம் ஆன்மீகம் எனும் இருநிலைகளில் தன்னைப் பிணைத்துக்கொண்டு வாழ்ந்த மகான்.

                           மட்டுமல்லாமல்  தமிழின் பழைய இலக்கியங்களையும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காந்தியம், காப்பியங்கள் எனும் எல்லாவற்றையும் தரமான அச்சுப் பதிப்பில் அதிகப் பக்கங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்தார்.

                          அச்சுக்காகும் செலவின் பெரும்பகுதியை தன் பங்காகக் கொடுத்து வாங்குவோருக்கு குறைந்த விலையிலும் கொடுப்போர்க்கு நிறைவான விலையிலும் அளித்த மாண்பு. அதேபோன்று அவரின் சிந்தனைகளையும் தொடர்ந்து ஓம் சக்தி இதழில் எழுதி வந்தார்கள். சமூகத்தின் பல்வேறு முககிய மக்கள் பிரச்சினைகள் குறித்து எழுதியதோடு அதற்கெனத் தீர்வுகளையும் பல ஆலோசனைகளையும் முன் வைத்தவர்கள்.

                          கடைசிவரை மாண்புமிக்க மாண்பாளராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் தொண்டுகளால் கடைசிவரை வாழும் பேறுபெற்றவர்.

                          அவரின் ஆன்மா அமைதிகொள்ள அவரின் குடும்பத்தார் அமைதிகொள்ள இறைவனை வேண்டி நிற்போம்.

                                        0000000000000000000000000000000


செய்தி 3

                        என்னுடைய பல கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன.

                        நிறைய கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

                        என்றாலும் தினமலரில் வெளிவந்து முதல் பரிசு பெற்ற கதைக்கு நான் பெற்ற கடிதங்களும் கைபேசி வழி பெற்ற பாராட்டுக்களும் நெகிழ வைத்தன. இன்னும் படைப்புலகில் மேலான இலக்கையடைய அவை உந்துதலாக இருக்கின்றன.

                          குறிப்பாக ஆய்வுலகிலும் படைப்புலகிலும் அளப்பரிய  சிந்தனைகளையும் நுர்ல்களையும் வெளியிட்டுப் பல பரிசுகளும் பெற்றவர்.
தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் முக்கியமான பல கமிட்டிகளில் அங்கம் வகிப்பவர்.

                        நேர்மை, சத்தியம், ஒழுக்கம், கடமை தவறாமை, கடின உழைப்பு, தேர்ந்த வாசிப்பு, தேர்ந்த எழுத்து, எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதல், உதவுதல் என இன்றுவரை பணிஓய்வு பெற்றும் தன் எழுத்துக்களில் ஓய்வுபெறாமல் எழுதிக்கொண்டிருக்கும் மூன்றெழுத்துத் தகைமை. பெருமை.

                                கு. வெ. பா.

                                எனும்

                               பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

                     அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு  தன்னுடைய மன எண்ணத்தைக் கவிதையாக்கித் தந்துள்ளதை நீங்களும் அறியத் தருகிறேன்.
இதனைத் தரக் காரணம். அவ்வளவு எளிதில் அவரின் பாராட்டுக் கிடைத்துவிடாது. அவர் மனதுக்குப் பட்டால்தான் அதனைக் குறித்துப் பேசுவார். எத்தகையே ஆளுமையாளரின் படைப்பாக இருந்தாலும்.

                               இந்தக் கவிதை எனக்கு கிடைத்த இரண்டாவது முதல் பரிசாகக் கருதுகிறேன்.

                              ஒருநங்கை            இறந்தா         ளாக
                                  உலகோர்தாம்   ஏற்றி                டாத
                              திருநங்கை             தனைம          ணந்தான்
                                   சீர்மிகும்              குடும்பம்       சேர்த்தான்
                              தருணங்கள்           சோதனை     தந்து
                                   தடைகளை        விளைத்த     போதும்
                               மரணங்கள்            கூட                 எம்மை
                                   விலக்கிடா         என்று             ரைதத்தான்.


                               மகள்மணம்            கொள்ள        வந்தோர்
                                    மணவறை         தன்னில்       இந்த
                               வகைத்திரு             நங்கை          வந்தால்
                                    மணமதே            வேண்டாம்   என்றார்
                                அகத்தினில்           மாற்ற            மில்லை
                                    அவளென்றன்   மனையே      யாவாள்
                                 சுகம்துக்கம்           இரண்டி          னுக்கும்
                                     துணையவள்    என்று             ரைத்தான்


                                  இப்படி                     யாக                  அன்பர்
                                       எழுதினர்          கதையொன்    றிங்கே
                                  செப்பிடு                வித்தை            யன்று
                                        செயலிது         மனித                நேயம்
                                  ஒப்பிடின்             அவளும்          தாயே
                                         உலகவர்         உணர்க            என்றே
                                   அப்படி                  உரைத்த          நண்பர்
                                        அன்பழகன்      வாழ்க              நன்றே.

                                   
                                    வனமலர்                  போற்பி           றந்து
                                           வாழ்க்கையே   கனவாய்ப்     போன
                                     இனமலர்                  என்று               மாலை
                                           எதனினும்          சேர்ந்தி            டாத
                                      குணமலர்                திருநங்           கைக்கே
                                           கொடுத்தனர்      ஏற்றம்            இங்குத்
                                       தினமலர்                  பரிச                 ளித்த
                                             சிறுகதை         சிறந்த                தன்றே

                                       
                                        அன்பழகன்            கதைக              ளெல்லாம்
                                              அடிநாதம்         மனித                நேயம்
                                         பண்புரை               திறத்தைக்       காண்மின்
                                               பலப்பல           நலிந்த               மக்கள்
                                         அன்பினுக்            கேங்கி               நிற்கும்
                                               அகத்துறை     துன்ப                  மெல்லாம்
                                          என்பினை             உருக்கு              மாறே
                                                இயம்பிடும்    நேர்த்தி               நன்றே...


           
                        இந்தக் கவிதையினை எனக்காக என் படைப்புக்காக எழுதிட எடுத்திட்ட நேரம் சிறிதெனினும அது எனக்குக் கிடைத்த பொன்னான வரம்.
அத்தகைய மாண்புடை பேரறிஞனின் வார்த்தைகளைத் தங்களோடு பகிர்ந்துகொள்வது மிக மகிழ்ச்சியான தருணம்.

                     0000000000000000000000000000000000000000000000000000

                                    

Sunday, October 5, 2014

அன்பு வேண்டுகோள்

அன்பு வேண்டுகோள்...

     
                    அனைவருக்கும் வணக்கம்.

                    என்னுடைய பேருந்து நாவல் வெளிவந்திருக்கிறது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதனை முன்னோட்டமாக வலைப்பக்கத்தில் எழுதியபோது இதற்கு நிறைய கருத்துக்கள் வந்தன. மகிழ்ச்சியாக இருந்தது.  ஐநது நாவல்கள் பாதிக்குமேல்  வளர்ந்து நின்றிருக்கும் நிலையில் இந் நாவல் முழுமையுற்றிருக்கிறது. கருத்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

              குறிப்பாக வெளிவந்த குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடர்ந்து கருத்துக்கள் உரைத்தவர்கள்

                       மதிப்பிற்குரிய ஜிஎம்பி ஐயா
                       திருமிகு ரிஷபன்
                       சகோதரி கீத மஞ்சரி
                       சகோதரி நிலா மகள்
                       இளவல் ஜெயக்குமார்

உங்களுக்கு தனிப்பட்ட நன்றிகள். அன்புகூர்ந்து உங்கள் இல்ல முகவரியை எனக்கு மின்னஞ்சல் வழி தெரிவிப்பின் நாவலை அனுப்பிவைக்க ஏதுவாகும்.

                            நன்றிகள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                     


Monday, September 29, 2014

பரிசுஅன்புள்ள வணக்கம்..


                  இடைவெளிகள்தான் அன்பைத் தக்க வைக்கின்றன எனலாம்.

                 வேலைப்பளு படைப்பிலக்கியப் பணிகள் என்று நாள்கள் கடநதுவிட்டன.

                 இந்த இடைவெளியில் நிறைய மகிழ்ச்சிகள்.

                 1. முன்பு சொன்னபடி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்
                     இரண்டாம் பரிசு.

                 2. செல்லாத நோட்டு எனும் சிறுகதைத் தொகுப்பின் சில கதைகள்
                     கல்லுர்ரிப் பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

                 3. தற்போது நேற்று தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவுச் சிறுகதைப்
                     போட்டியில் என் கதைக்கு முதல் பரிசு ..... ( சிறுகதைத் தலைப்பு                                 அவளும் அம்மாதான்...) கிடைத்துள்ளது.

                  4. பேருந்து நாவல் வெளிவந்துவிட்டது.

                 
           தொழில் நுட்பம் தெரியாததால் பரிசுக் கதைகள்  இரண்டையும் வெளியிடுவதில் தாமதம் நேர்கிறது. விரைவில் இன்னும் இரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். படித்துவிட்டு உங்களின் கருத்து எதுவாயினும் தெரிவிக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, August 24, 2014


இந்த வாரம் விகடனில் வந்த கவிதை...

பூர்வீக வீடு
சிதைந்துகொண்டிருந்த்து...

விரைவில் மாற்றிவிடுங்கள்
என்று சொல்லிவிட்டுப்
போனார் பெரியப்பா...

இடித்துவிட்டு மனைபிரித்து
பாகம் பிரித்துக்கொள்ளலாம்
என்பது சித்தப்பாவின் கருத்து..

முன்னோர்கள் வாழ்ந்த வீடு
என்றாலும் இப்போது வாழ
முடியாது... த்த்துவம் சொன்னார்
மாமா..

மனையாகப் போட்டால்
முன்மனை நமக்குதான்
பேசிக்கொண்டார்கள் மருமகள்கள்

எப்படியிருந்தோம் தெரியுமா
என்றே அழுதழுது நின்றார் அம்மா..

போவோர் வருவோர் ஆளுக்கொரு
கருத்து சொன்னார்..

நாலைந்து ஓணான்கள்
புணர்ந்து நின்றன
பூனையொன்று நாலைந்து
குட்டிகளை ஈந்திருந்த்து
விரிந்த சுவரிடுக்குகளில்
கொஞ்சம் பூச்சிகளும்

சில அணில்களும் அவ்வப்போது
பட்டாம்பூச்சிகளும்
வந்துபோயின
வீட்டின் மேலே ஒரு
செடி முளைத்திருந்த்து..

ஆனாலும் பூர்வீக
வீடு சிதைந்துகொண்டிருந்த்து..

வாழ்ந்த சிலவற்றின்
நினைவுகளோடும்
வாழும் சிலவற்றின்
கனவுகளோடும்.....

நன்றி  ஆன்ந்த விகடன்.