Friday, July 14, 2017

ஊட்டும்.... (நாவல்)

அத்தியாயம் 3   ஊழ்வினை 1

காவேரியில்  நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்குப்பயன்படும். கரையோரங்களில் பச்சை இழைந்து கிடந்தது. எல்லாவகை கீரைகளும் பயிரிடப்பட்டு மண்டிக் கிடந்ததன. பாலத்தின்மீது நின்று நுரைத்தோடும் காவிரியை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். மேற்கில் சூரியன் மஞ்சள் நதிக்குள் இறங்கிக்கொண்டிருந்தான். சில பறவைகள் வரைந்து உயிர்பெற்றதுபோல பறந்துபோயின வடக்கிருந்து தெற்காக. வயல் வேலை முடித்தவர்கள் கொல்லை வேலை முடித்தவர்கள் தங்கள் மண்வெட்டிகளை.. கடப்பாரைகளைக் காவிரியில் கழுவி கரையில் போட்டுவிட்டு வேட்டியை அவிழ்த்துக்கொண்டு கோமணத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே குளித்துக்கொண்டிருந்தவர்கள் கழுத்தளவு மூழ்கிக்கொண்டு அப்படியே வாயால் தண்ணீரை விழுங்கி அண்ணாந்து உமிழ்ந்துகொண்டார்கள். சிலர் முழங்காலளவு தண்ணீரில் துண்டைப் பிழிந்து உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தார்கள்.

           என்ன மாமா.. வேலை முடிஞ்சிடிச்சா..?

           எங்க.. இன்னும் ரெண்டு மா கெடக்கு.
.
           மேற்கே போயிட்டு வந்திட்டியா..

           எங்க?

           உன் மாமியார் வழில யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு உம் பொண்டாட்டிதான் சொல்லிட்டுபோச்சு.. பிள்ளைகளை தரதரன்னு இழுத்துக்கிட்டுப்போனா.

           ஏம்மான்னே.. பஸ் போயிடும் பெரியப்பான்னுட்டு  பதில்பேசிக்கிட்டே போச்சு. நீ போவலியா..?

           நாந்தான்.. வயல்ல ஆள இறக்கிவிட்டுட்டேன்.. நடுறதுக்கு. நா போனா அவ்வளவுதான்.. பொழப்பு கெட்டுடும்.. மாமியாளுக்கு அத்தை மவளோட புருஷனாம்.. யாரு பாத்தா முன்னேர பின்னேர.. வயசானா சாவ வேண்டியதானே.. நாம போவாட்டி என்ன பொணம் வெந்துபோவாதா என்ன?
           அப்படியெல்லாம் பேசாதப்பா..  யாரு சாவ யாரு நிறுத்தி வைக்கமுடியும்? நாலு ஒறமுறை, சாதி, சனம் சொந்தப் பந்தம் வேணுமுன்னா அப்படித்தான் இருக்கும்.

           என்னங்கடா..பொழுதுபோயிடிச்சி.. உங்க அலப்பற முடியல்ல.

           இது வேற கதை மாமா..

           லேசாக இருள் கவியத் தொடங்கியது.

           பாலத்து முக்குக் கடையில.. குண்டு பல்பு உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்னு மினுக்குமினுக்குன்னு எரிய ஆரம்பித்தது.  பாய்லர் கிட்ட  வேலு டீ போட்டுக்கிட்டிருந்தான்..

           என்னா போட்டிருக்க வேலு இன்னிக்கு?

           காலிப்ளவர் பக்கடா போட்டேங்.. முடிஞ்சிடிச்சி.. காராச்சேவுதான் இருக்கு.  தூள் பக்கடா ஒரு ஆளு சாப்பிடலாம்.

           கொடு..

           இருள் அடர அடரக் குண்டு பல்பு வெளிச்சத்தில் சுவற்றில் வரைந்த ஓவியங்கள்போல இருந்தார்கள். கருப்பு உடம்பில் கட்டியிருந்த வெள்ளை வேட்டிதான் ஆளு கணக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

           தெருவுக்குள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

           மாப்ள.. நம்ப மாரிமுத்து சித்தப்பா வேஷங்  கட்ட ஆரம்பிச்சுடிச்சி.. ஒருமணிநேரம் கச்சேரிதான்.

           மாரிமுத்து கையில் அரிவாளுடன்..  யாரா இருந்தாலும் வெட்டுவேன்.. பாக்கறியா.. ஒரே வெட்டு ஓடிப்போயிடும் தலை கண் காணாம.. வா.. வா..

           நீ யாரு?

           மாணிக்கத்து மவன்.

           நீ போ.. உனக்கும் எனக்கும் பகையில்ல..  வா.. வெட்டுனா ஒரே வெட்டுதான்.. மாரிமுத்து குரல் அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் சுவற்றிலும் பட்டு திரும்பி வந்து தெருவை நிறைத்து அதிரடித்தது.

           மாரிமுத்து கதை ஒரு தனிக்கதை.

           காலம் கண்ணுக்குத் தெரியாதது என்பதால் அதுகுறித்த அச்சம் நம்மிடம் இல்லை. காலம் தன் வேலையைக் காட்டுகிறபோதுகூட அதுபற்றி சிந்தனையும் குறை கூறுவதும் இல்லை.

           ஆனால் காலம் பொல்லாதது. அது யாரை  வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் செய்வது தெரியாமல் செய்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும் தன் விளையாட்டின் விளைவுகளை.

           மாரிமுத்துவின் கதையும் அப்படித்தான்.

           ஒல்லியான உடலமைப்பு. அதில் ஆங்காங்கே எலும்புகள் துருத்திக் கிடந்தாலும் அதில் ஓர் அழகு மண்டிக்கிடக்கும். நெஞ்செல்லாம் புதர்போல முடி நிறைந்திருக்கும். கை, கால்களிலும் விளைந்த வயலின் கதிர்களைப்போல மடித்தபடி மயிர்க்கற்றை மாரிமுத்துவிற்கு ஓர் தனித்த அடையாளத்தையும் அழகையும் தந்திருந்தது. நன்றாகத்தான் இருந்தார்.

           மூன்று மகன்களும் மூன்று மகள்களும் என ஆறுபிள்ளைகள் 
பிறக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

           அப்படி நினைத்துக்கொண்டுதான் வாழ்ந்தார்.

           உள்ளூரிலேயே மாரிமுத்து மனைவியின் இரண்டு தங்கைகளும் வாக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு குடும்பம் யாருடனும் ஒட்டாது. ஒட்டிய குடும்பத்தின் சகலை கோவிந்தன் மாரிமுத்துவுடன் அந்நியோன்ய சிநேகம்.

           அதுதான் செய்யக்கூடாத செயலை செய்ய வைத்தது.

           யாரறிவார் என்று அவர்கள் துணிந்து அந்த காரியத்தைச் செய்தார்கள்.

           அவர்கள் செய்த செயலை யாருந்தான் அறியவில்லை. ஆனால்  இருவருக்கு மட்டும் இவர்களின் செயல் தெரியும்.

           ஒன்று ஒரு பெண்.

           இன்னொன்று கடவுள்.

           பெண் என்ன செய்வாள். தவித்து அடங்கினாள். பதறிக் கலங்கினாள். பரிதவித்துப் புலம்பினாள்.

           ஆனால் மனதுக்குள் கோபம் நெருப்பாய் வளர்ந்து கிடந்தது.

           வளர்ந்து கிடந்த நெருப்பில் சொற்களைக் கொண்டி அள்ளி மனங்கொண்ட மட்டும் வீசினாள்.

           மாரிமுத்துவும் கோவிந்தனும் அதில் நனைந்தார்கள்.

           கவலையின்றிப் பேசி மறந்தார்கள்.

           கடவுள் மறக்கவில்லை என்பதை மாரிமுத்துவின் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வில் உணர்த்தினார்.

           கீரைக் கூடையில் கீரை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டிற்குப் போன மாரிமுத்துவின் மனைவி வேலாயி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்கையில் அடிபட்டுத் துண்டுதுண்டாகிப்போனாள்.

           சிதறிய பழங்களைப் பொறுக்குவதுபோல அவள் உடலைப் பொறுக்கிக்கொண்டுபோனார்கள்.

      பார்த்த மாரிமுத்து அன்றிலிருந்து மனம்  வெதும்பி பைத்தியமானான். எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. யாரைப் பார்த்தாலும் கையில் அரிவாள் எடுத்துக்கொண்டு வெட்டுவேன் என்று துரத்தத் தொடங்கினான்.

           ஒரு நாள் கோவிந்தனை அந்த அரிவாளோடு துரத்த அதுவும் விபரீதமாய் முடிந்தது இன்னொரு கதை.

                                                                                                                (ஊழ்வினை தொடரும்)