.
இன்று தைப்பூசம் முருகப் பெருமானை நினைந்து வழிபடும் சிறப்புத் திருநாள் இது.இந்நாளில் முருகப்பெருமானைத் தனது குருவாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அருளாளர் வடலுர்ர் இராமலிங்க சுவாமிகள். அருளாளர் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.
தமிழ் மண்புலம் செய்த தவப்பயனால் சரியாக நுர்ற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கருகில் உள்ள மருதுர்ரில் கருணீக மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகனாக அவதரித்தவர். சகோதரர் சபாபதிப் பிள்ளையால் வளர்க்கப்பெற்றவர். செந்தமிழ்க் கடவுளாகிய முருகபெருமானது திருவருட்காட்சி இளமையிலேயே கிடைத்தது. எனவே முருகனைத் தனது குருவாகக் கொண்டார். உலகெங்கும் நீக்கமற எல்லாவற்றிலும் இறைவன் சுடர்விட்டு விளங்கும் ஜோதியாக இருக்கிறார் என்று உணர்த்தியவர்.
சாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டியவர் வள்ளலார். சமயத்தாலும் சாதியாலும் விளையும் தீங்குகளைக் களைய சீர்திருத்தம் கண்டவர்.
ஏழைகள் தொடங்கி எல்லா மக்களும் அடையும் இன்னல்களைப் போக்குதற்கென திருவுளங்கொண்டு உயர்ந்த நோக்குடன் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வகுத்தார். இந்நெறிக்கிணங்க இவற்றைப் பரப்ப வடலுர்ரில் சன்மார்க்க சங்கம். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை எனும் மூன்று அருள் நிலையங்களை நிறுவி தொண்டுசெய்த பெரும் ஞானி.
தனது பரந்துபட்ட இறை உள்ளத்தால் அருளிச் செய்தவையே திருவருட்பா எனும் அரிய பொக்கிஷம். ஆறுதிருமுறைகளாக 5818 திருப்பாடல்களாக அருளிச் சென்றிருக்கிறார். பல்வேறு சமயங்களில் வள்ளலாரால் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் தனிப்பாடல்களாகவும் எழுதப்பெற்றவை இப் பாடல்கள்.
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1989 வரையில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதற்கு அருமையான உரையை எழுதியவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சாகாக் கல்வியையும் வலியுறுத்திய அருளாளர் வள்ளலார். பசி, பிணி, பகை இவற்றை நீக்கவே பாடுபட்டார். அதனால்தான் வடலுர்ரில் வயிறு என்றழைக்கப்படும் சத்திய தருமச் சாலையையும் சிரசு என்றழைக்கப்படும் சத்திய ஞான சபையையும் நிறுவித் தொண்டாற்றினார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்று உயிரிரக்கம் காட்டியவர். இன்று வடலுர்ர் ஒளிவெள்ளம் கொண்டிருக்கும். ஒளிப்பிழம்பு அருளாளரை நினைந்து போற்றுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றிய சுவையான தகவல்களுடன் பகிர்வேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
Thursday, January 20, 2011
Monday, January 17, 2011
வழிகாட்டிகள்....
திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு இது பொருந்தும். கடவுள் நம்பாதவர்களுக்கு அவர்கள் உயர்வாக நினைக்கும் வயது முதிர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஏதேனும் ஓர் உயர்ந்த பண்போ அல்லது பல உயர்ந்த பண்புகளோ இருக்கும். அன்பு காட்டுவார்கள் பிரதிபலன் பாராமல். உதவி செய்வார்கள் எதிர்பார்ப்பு இல்லாமல். எப்போதும் நல்ல செயல்களை மேற்கொண்டு நல்ல செய்திகளையே பேசுவார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் பயன்பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி கொள்வார்கள்.
புறாவுக்காக தசையை அரிந்து அஃறிணை உயிர்க்கு வழிகாட்டியவன் சிபி மன்னன்.
முல்லைக்கொடியை வாழ வைக்க தேரை ஈந்தவன் பாரி.
குளிரில் நடுங்கிய மயிலுக்காகப் போர்வை தந்தவன் பேகன்.
முரசுக் கட்டிலில் படுத்த புலவருக்காய் கவரி வீசினான் மன்னன் ஒருவன்.
தன்னிடம் வந்த புலவன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகத் தலையைத் தர முன்வந்தவன் குமணன்.
இதெல்லாம் தெரியாத செய்திகள் இல்லை. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கு வழிகாட்டிகள்.
சிலர் செயலில் வழிகாட்டினார்கள்.
சிலர் அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டினார்கள்.
சிலர் பாடியும் எழுதியும் வழிகாட்டினார்கள்.
ஆனாலும் தன்னலம் எண்ணாது கைம்மாறு கருதாது வழிகாட்டினார்கள்.
தன்னைக் காட்டிக்கொடுத்தவனை மன்னித்து வழிகாட்டினார் யேசு பெருமான்.
நபிகள் மன்னிக்கச் சொன்னார்.
புத்தர் மன்னிக்கச் சொன்னார்.
காந்தியடிகள் மன்னிக்கச் சொன்னார்.
இவர்கள் மிக உயர்ந்தவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டியமையால்.
வழிவழியாகத் தொடர்வது இது.
ஆகவேதான் தந்தையும் தாயும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள்.
எடுத்துக்கொள்பவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.
தடுத்துக்கொள்பவர்கள் தடுமாறிப் பயணிக்கிறார்கள் கடைசிவரை.
வழிகாட்டல் என்பது தந்தையைப் போல நல்வழிக்குத் திருப்பி கெட்டதைத் தீண்டாதே என்று வலியுறுத்தி..அதற்காக இழக்கவேண்டுமானால் தன்னை இழந்து..வழிகாட்டுகிறார்கள்.
தாய் தன் அன்பாலும் தன் தியாகத்தாலும் வழிகாட்டுகிறாள்.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கணத்தைப் படைத்தார். அது மிகச் சிறந்த வழிகாட்டலாக இருந்தது. அதனைப் பின்பற்றி பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதினார்கள். இன்றுவரை அழியாது இருக்கிறது.
இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அவர்கள் வழிகாட்டிய பாதையில் ஏராளமான பல்வகைப் பொருண்மையிலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இன்று வழிகாட்டல் என்பது கேலிக்குரியதாகிவிட்டது.
வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் எல்லாம் தெரியும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்கள்.
தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டலாக இருக்கின்றன.
தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.
வயதும் ஆணவமும் ஏறியதைத் தவிர அவர்கள் வேறு பேறு பெறவில்லை.
எதையும் படிக்காமல் எல்லாவற்றையும் விமர்சித்து வழிகாட்டுகிறார்கள்.
எதையும் கேட்காமல் எல்லாவற்றையும் தவறென்று மறுத்து வழிகாட்டுகிறார்கள்.
ஒரு சிறந்த தலைமைக்கு அவனுடைய பணியாளர்கள் விழா எடுக்கிறார்கள். அவன் சிறந்த வழிகாட்டலாக இருந்திருக்கிறான் அனைவரின் வாழ்விலும் என்பதை இது காட்டுகிறது.
வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை வரம்புகள் இல்லாத நதியைப் போன்றது. வீணாகித்தான் போகும்.
புத்தகங்கள் நல்ல வழிகாட்டல்கள்.
வாசிக்கிற பழக்கத்தையே தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கிற கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எழுதுகிற பழக்கத்தையே எண்ணிப் பார்க்காதவர்கள் ஏராளமான புத்தகங்களுக்கு ஆசிரியர்களாகவும் அதற்கான விருதுகளையும் பெற்று வழிகாட்டலையே கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிற பெற்றோர்கள் அருகிவிட்டார்கள்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிதான் வழிகாட்டல்.
நல்ல நண்பர்கள் அருகிவிட்டார்கள் வழிகாட்டல் இன்றி.
சகோத உறவுகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பவும் என சிதைந்துவிட்டது வழிகாட்டல் இன்றி.
ஆசிரியர் மாணவர் உறவுகள் அடியோடு வேரறுந்துவிட்டது.
மதிக்கிற இடத்தில் மாணவர்களை நடத்தவில்லை ஆசிரியர்கள். வழிகாட்டவில்லை.
வணங்குகிற இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ளவில்லை. வழிகாட்டவில்லை.
எல்லாவற்றிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது வழிகாட்டலுக்கு.
வழிகாட்டலுக்கு ஏங்கத்தான் வேண்டியிருக்கு.
வளர்கின்ற உலகையெண்ணி வளர்கிறது பேரச்சம்.
Tuesday, January 4, 2011
எண்ணங்கள்
நான்காக மடிக்கப்பட்டு
சாலையின் ஓரமாய் கிடந்தது
அந்த வெள்ளைத்தாள்...
காற்று அதனை எழுப்பிக்
கொண்டிருந்தது..
எடுத்துப் பார்க்கையில்
எதுவும் எழுதப்படாமல்
இருந்தது..
நினைவில் பொங்கின
எண்ணங்கள்...
உனது அன்பை எழுதுவேன்
என்றாள்...
உனது பரிவை எழுதுவேன்...
என்றது குழந்தை...
உனது அவமானத்தை எழுதுவேன்
என்றது உறவு...
உனது பலவீனத்தை எழுதுவேன்
என்றன சுற்றம்...
உனது போராட்டத்தை எழுதுவேன்
என்றது காலம்...
உனது சகிப்புத்தன்மையை எழுதுவேன்
என்றது சந்தர்ப்பம்...
உனது பற்றுதலை எழுதுவேன்
என்றது நட்பு...
உனது வாழ்வியலை எழுதுவேன்
என்றது கவிதை...
எண்ணங்கள் இறைந்தோடின
காற்றுவெளியெங்கும்...
கடவுள் வந்தார்
நீயென்ன எழுதுவாய் என்றார்
மௌனத்தை எழுதுவேன் என்றபடி
தாளை அவரிடம் நீட்டிவிட்டு
இதிலென்ன நீங்கள் எழுதுவீர்கள்
என்றேன்...
கடவுள் சொன்னார்
நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே....
Monday, January 3, 2011
அழல்...
வானம் இளமஞ்சளைத் தங்கத்தில் பூசிக்கொண்டு கிடந்தது. நாள்முழுக்க இயங்கிய களைப்பில் தனது கோடானுக்கோடி கதிர் கரங்களைச் சுருக்கிக்கொண்டு அவதாரத்தை நிறைவு செய்த கடவுளைப்போல சூரியன் வானத்தில் தங்கப் பாதையில் சறுக்கிக்கொண்டிருந்தது அதன்போக்கில். லேசான இருள் நத்தைபோல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. கூடு திரும்பிக்கொண்டிருந்த எல்லாப் பறவைகளும் நிறபேதமின்றி கருப்புப் பூசிக்கிடந்தன. அடர் கருப்பில் சிறகுகளை விரித்திருந்தன. அவற்றின் மனமெங்கும் அவற்றின் கூடுகளில் காத்திருக்கும் குஞ்சுகளின் நினைவைத் தேக்கியிருந்தன.
சந்தனமுல்லையின் மலர்ந்த மணம் காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தது. யார் வீட்டிலோ விளகேற்றி பத்தி ஏற்றும் வாசமும் காற்றில் மிதந்துகிடந்தது.
அன்று வெள்ளிக்கிழமை.
அயிகிரி நந்தினி..தெளிவாக ஒரு சின்ன பெண்குழந்தையின் குரலில் பக்கத்து வீட்டிலிருந்து கேட்டது. சிறிய வயதில் சிலருக்கு குரல் தெளிவு இறைவனின் பரிசன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதய்ய என்று வாணி ஜெயராம் யாரிடமோ கேட்டுக் கிறங்கிக்கொண்டிருந்தார்.
சௌம்யா மாலையில் ஒரு குளியல் முடித்து அலங்காரம் செய்திருந்தாள். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அவள் இரண்டுமுறை குளிப்பது என்பதை தெய்வ ஆணையாகக் கொண்டிருந்தாள்.
பெரிய நெற்றி என்றாலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும் திருநீறும் குங்குமமும் சௌமியாவின் அழகைத் தாண்டி ஒரு கூடுதல் அழகைத் தந்திருந்தது. நண்டுகள் ஊர்ந்த கடல் மணற்பரப்பைப்போல அவளது கருங்கூந்தல் அழகேறியிருந்தது. துருதுருவெனப் பரபரக்கும் விழிகள்.
காபி சாப்படுறியா...சௌம்யா அம்மா கேட்டாள்.
இல்லைம்மா. சாமி கும்பிட்டுட்டு வந்துடறேன்.
ஆறிப்போயிடும் சூடா சாப்பிட்டாதான் காபி நல்லாயிருக்கும்.
அப்படியே சிம்ல வை. ஆறிட்ட நான வந்து சூடுபண்ணி குடிச்சுக்கறேன்.
சாமியறைக்குள் நுழைந்தாள்.
எதிரே சுவற்றில் ஆனந்த விநாயகர். அப்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகன். மேலே திருமலை வேங்கடவன்..மதுரை மீனாட்சி..புன்னைநல்லுர்ர் மாரியம்மன்..
எல்லாவற்றிற்கும் முல்லைப்பூக்களில் இரண்டிரண்டுபோட்டாள். விளக்கேற்றினாள். வெள்ளிவிளக்கில் நெய் ஊற்றி சுடரை சிறிதாக வைத்தாள். நெடுநேரம் நின்று எரியும். துர்வக்கர்லில் நெருப்பெடுத்து சாம்பிராணி போட்டு வீடுமுழுக்க வலம் வந்தாள். வீடுமுழுக்க சாம்பிராணி மணம் காற்றில் சுகந்த கவிதையெழுத ஆரம்பித்தது.
சூடமேற்றிக் காண்பித்துவிட்டு திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு வெளியே வந்தாள். வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.
மனம் அமைதியாகக் கிடந்தது. மனமெங்கும் மகிழ்ச்சியொன்று துளிர்க்க ஆரம்பித்தது. இப்போது அவன் நினைவு வந்தது.
அவன் சங்கரன். பாலக்காட்டில் இருக்கிறான். இந்த நேரம் என்ன செய்துகொண்டிருப்பான். தன்னைப்போலவே அவனும் கடவுள் நம்பிக்கை உடையவன் என்று சொன்னார்கள். ஒரு கோயில் விடமாட்டான் என்றும் சொன்னார்கள். தன்னைப்போலவே அவனும் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ என்று நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவே இனித்தது.
காபி ஆறிடும்மா சௌமியா...போய் குடிம்மா என்றாள் அம்மா.
எழுந்துபோனாள். காபி லேசான சூட்டில் இருந்தது. இந்த இதம் போதும். மெல்ல உதட்டில் வைத்து அருந்தினாள். மறுபடியும் அவனே வந்து சிரித்துப்போனான்.
அவனை முதன்முதலாகச் சந்தித்த தருணங்களை நினைத்துப் பார்த்தாள்.
சார்..சார்.. என்று வாசலில் குரல் கேட்டது. ரங்கராஜன் எழுந்துபோய் பார்த்தார். நடுத்தர வயது தம்பதிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.
வாங்க..யார் வேணும்?
ரங்கராஜன்னு...
ஆமா..நான்தான் உள்ளே வாங்க.. உள்ளே போய் அமர்ந்தார்கள்.
என்ன செய்தி?
என்னோட பேரு தியாகராஜன். ரிசர்வ் பேங்க்ல வேலை பார்க்கிறேன். இது என்னோட மனைவி நர்மதா. ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. எனக்கு ஒரே பையன் பேரு சங்கரன். பாலக்காட்டில் எஞ்சினியரா இருக்கான். அவனுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்போ உங்க பொண்ணு பத்தி சொன்னாங்க..அதான் பேசிட்டுப்போகலாம்னு வந்தோம்.
எந்தப் பீடிகையும் இல்லாமல் நேரடியாகப் பேசியது ரங்கராஜனுக்குப் பிடித்துப்போயிற்று..
சரி ஜாகத்தைக் கொடுங்க. பார்ப்போம். பொருத்தமிருந்தா பார்க்கலாம். சொன்னதும் சட்டென்று சங்கரனின் அப்பா ஜாகத்தை எடுத்துக்
கொடுத்தார். ரங்கராஜனும் சௌமியாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
ஜாதகம் பார்த்திட்டு பேசறோம் என்றார்.
இருங்க காபி சாப்பிட்டுட்டு போகலாம்.
எனக்கு டீ கொடுங்க. இவள்தான் காபி பைத்தியம்.
சங்கரன் அம்மா கேட்டாள்... நான் பொண்ணப் பார்க்கலாமா?
தாராளமா என்றபடி ரங்கராஜன் சௌமியாவைக் கூப்பிட்டார்.
சௌமியா வந்தாள்.
வாம்மா உக்காரு. என்றார்கள். உட்கார்ந்தாள்.
அவளிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு உடன் எழுந்து கிளம்பினார்கள்.
இரண்டுபேரும் பார்த்ததில் ஜாதகம் பொருந்தியது.
மனம் நிம்மதியானது.
பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.
பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போதுதான் சங்கரன் வந்தான். வெகு இயல்பாக இருந்தான். ஒரு பெண் பார்க்க வந்தவன்போல் இல்லை. விருந்தாளி வந்திருப்பவன் போல பேசினான். கேட்ட கேள்விக்கெல்லாம் சாதாரணமாகப் பதில் சொன்னான்.
எல்லோருக்கும் பிடித்துபோயிற்று சங்கரனை சௌமியா உட்பட.
ஒருமுறை யாருமறியாமல் சங்கரனும் சௌமியாவும் பார்த்துக்கொண்டார்கள். அதில் ஆயிரம் நம்பிக்கைகள் மலர்ந்து மணந்தன.
சௌமியா ஒரு புன்னகை வீசினாள்.
சங்கரன் அதை ஏந்திக்கொண்டான்.
போகும்போது அவளையும் அழைத்து போயிட்டு வரேன் என்றான். அது சௌமியாவிற்குப் பிடித்திருந்தது.
அதற்குப்பின் இருவருக்கும் செலவு வேண்டாம். திருமணத்திற்கு முந்தின தினம் நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று மன உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
அதற்குப்பின் ஓரிரு முறை தொலைபேசியில் பேசினான். முதலில் சௌமியா அப்பாவிடம் பேசிவிட்டு சௌமியாவிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டுப் பேசினான். இதுவும் ரங்கராஜனுக்கு நிரம்பவும் பிடித்துப்போயிற்று.
சௌமியாவிடம் மனம்விட்டுப்பேசினான். முதலில் தனது பலவீனங்களைப் பேசினான். அப்புறம் தன்னுடைய பலத்தைப் பேசினான். சௌமியா ஆச்சர்யப்பட்டாள். ஒரு யதார்த்தமானவன் நல்லவன் தனக்குக் கணவன் என்றபோது அவளுக்கு உண்மையில் பெருமையாக இருந்தது. இதுதான் உண்மையில் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டாள். தான் கடவுளிடம் உண்மையாக நடந்துகொண்டதற்குக் கிடைத்த பரிசு என்றும் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
அவனன்றி இனியொரு வாழ்வில்லை என்று நினைத்துக்கொண்டாள். திருமண தேதி குறித்தார்கள். இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தன. தினமும் ஒவ்வொரு விவரத்தையும் ரங்கராஜனும் தியாகராஜனும் கூடிகூடிப்பேசி முடிவெடுத்து செய்தார்கள்.
ஊரே சற்று பொறாமை கொண்டது. பரஸ்பரம் புரிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை கத்தி முனையிலிருந்தாலும் கரும்பு முனையிலிருந்தாலும் வாழ்தல் சுலபமானதுதான்.
நினைவு கலைந்தாள் சௌமியா.
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..நல்ல நாளில்..கண்ணன் மணிதோளில் பூமாலை நான் சூடுவேன்..பாமாலை நான் பாடுவேன்.. என்று வாணிஜெயராம் பாடியது இவளுக்காகவே என்றாற்போலிருந்தது. மனமெங்கும் சந்தோஷத் தீ பற்றியெரிந்தது..
அப்போதுதான் வாசலில் இருளைப் பிரித்து ஒரு குரல் ஒலித்தது.
ரங்கராஜன் எழுந்துபோனார்.
கொஞ்சநேரம் பேச்சுக்குரல்கள் கேட்டன.
அய்யய்யோ என்று ரங்கராஜன் அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார். வாசலுக்கு சௌமியா ஓடினாள். அவள் அம்மாவும் ஓடினாள்.
அப்பா என்னாச்சுப்பா...சௌமியா பதறினாள்.
என்னங்க என்னாச்சு சௌமியா அம்மா பதறினாள்.
அதற்குள் தெரு கூடி நின்றது.
செய்திசொன்னவன் இருளோடு இருளாய் திரும்பிப்போனான்.
செய்தி இதுதான். சங்கரன் இறந்துபோய்விட்டான். பாலக் காட்டில் சாலை விபத்து. சங்கரன் அப்பாதான் செய்தியனுப்பிவிட்டு பாலக்காடு விரைந்திருக்கிறார்கள்.
சௌமியாவிற்கு கண்கள் இருட்டின. மனமெங்கும் சற்று முன் எரிந்த சந்தோஷத்தீ அடர்துக்கநெருப்பை இதயத்தின்மீது கொட்டியது. மூச்சு திணறினாள். அப்படியே சரிந்தாள். ஓடிப்போய் துர்க்கினார்கள்.
வீடே மயானமாகிப்போனது.
யார் வைத்த கொள்ளி இது?
வீடே பற்றி எரிகிறது. கடவுள் இத்தனை தண்டனை கொடுப்பவரா? இத்தனை நாள் வேண்டுதலும் வீணா? அது பொய்யா?
ஏன் இத்தனை கொடூரம் என் வாழ்க்கையின்மீது கடவுளுக்கு?
காத்த ஒழுக்கமும் நேசித்த கடவுளர்களும் கடைப்பிடித்த விரதங்களும் காற்றில் கற்பூரம் எரிந்து கரைவதைப்போல பயனற்றுப் போய்விட்டது.
அவனையன்றி இனியொரு வாழ்க்கை இல்லையென்று பெருமை கொண்டது இனி வாழ்கையே இல்லையென்றா பேரிடி விழுவது..
அவனன்றி இனி வாழ்தல் இயலாது.
அவனன்றி வேறு துணை மனம் விரும்பாது.
என்ன நினைத்திருப்பான் கடைசி நிமிடத்தில். இவளை நினைத்தோம் இறப்பைத் தழுவிவிட்டோமென்றா? இவளை விட்டுப் பிரிகிறோமென்று சில கண்ணீர்த்துளிகளாவது சிந்தியிருப்பானா? உயிர் பிரியும் யாருமில்லாமல் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன துடிதுடித்திருப்பான். அடக்கடவுளே இதுஎன்ன கொடுமை எல்லாமிருந்தும் யாருமற்ற அனாதைபோல நடுச்சாலையில் உயிர்விடுவது..இது எந்தப் பிறவியின் சாபம்? யார் விட்ட சாபம்?
பேச்சற்றுப்போனாள். மனம் புலம்பி துடித்துக்கொண்டிருந்தது.
ரங்கராஜன் சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதார். சௌமியாவும் அப்பாவின் நெஞ்சில் சொல்லாத துன்பங்களையெல்லாம் மௌனத்துடிப்பில் சொல்லி துடித்தாள். தன்னைத் தேற்றிக்கொண்டு பாலக்காடு கிளம்பினார்.
சௌமியா அம்மா துடித்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு சாமியறையில் அழுதாள்.
அட பாவி தெய்வங்களா..உங்க கண்ணு அவிஞ்சுப்போச்சா? இப்படிப் பண்ணிப்புட்டிங்களே..தெய்வங்கதானா நீங்க? உங்களுக்கு நல்ல கதியே வராது என்று கடவுளர்களுக்கு சாபங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பனி பெய்ய ஆரம்பித்திருந்தது. இரவும் அடர்த்தியாக இருந்தது. இனி தனது வாழ்க்கை முழுக்க அந்த இருள் ஆக்கிரமித்துக்கொண்டதுபோல உணர்ந்தாள். சங்கரன் முதன்முதலாகப் பார்த்த பார்வையில் இருந்த நம்பிக்கை அவளுள் மரமாகியிருந்தது. அவன் இல்லாமல் இன்னொரு வாழ்க்கையை அவள் விரும்பவேயில்லை. அவனோடு இத்தனைகாலம் வாழ்ந்ததே போதும் என்று நினைப்பு வந்தது. தெளிவான முடிவுக்கு வந்தாள். வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தாள். அம்மா அருகே வந்தாள். சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். சௌமியாவிற்குக் கண்ணீர் வரவில்லை.
இரவு நெடுநேரம் விழித்திருந்தாள் சௌமியா.
மனம் முழுக்க அவனே நிறைத்துக் கிடந்தான். அடிக்கடி வந்து சிரித்துக்கொண்டேயிருந்தான். ஏண்டா இப்படி விட்டுவிட்டுப் போனாய் என்று கேட்டாள்..போடி என்று செல்லமாய் பேசி சிரித்துவிட்டுப்போனான்.
இன்னொரு வாழ்க்கையை யோசிக்கவே அருவருப்பாக இருந்தது. அதனை எப்படி வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு வாழ முடியும்? நிம்மதியும் மகிழ்ச்சியும் கனவுகளும் தொலைந்த மனதோடு அந்த வாழ்க்கை எப்படி வாழ்க்கையாக இருக்கும்?
எழுந்து கதவைத் திறந்துகொண்டு உறாலுக்குள் வந்தாள். அம்மாவின் உறக்கவொலி கேட்டது. இப்போதுதான் உறங்கத் தொடங்கியிருக்கவேண்டும். மெல்ல அடுப்படிக்குப் போனாள். அங்கே ஆயில் கேன் கிடந்தது எடுத்துக்கொண்டு தன்னறைக்குத் திரும்பினாள். உள்ளே வந்து அதை வைத்துவிட்டு பாத்ரூம் போய்விட்டு வந்தாள். கைகால் முகம் கழுவி ஒழுங்கு செய்துகொண்டாள். சாமியறைக்குள் போய் அந்தப் போட்டோக்களின் முன் நின்றாள். உங்களுக்குத் திருப்திதானா? என்று ஒருமுறை வாய்திறந்து கேட்டாள். யாரும் பேசவில்லை அவள் கேள்விக்கு மௌனமாக நின்றார்கள் குற்றவாளிகளைப்போல. திரும்பி தன் அறைக்கு வந்தாள். கதவை உட்புறம் தாழிட்டாள். சன்னல் கதவுகளையும் அடைத்து கொக்கிகளைப் போட்டாள்.
தரையில் ஆசனம்போட்டு உட்கார்ந்துகொண்டு அந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் கவிழ்த்து உடல்முழுக்க ஊற்றிக்கொண்டு நன்றாக நனைத்துக்கொண்டாள். மெல்ல தீக்குச்சி கிழித்து கால் பகுதியில் வைக்கக் காத்திருந்தது குபீரென்று தீ தாவியது அவள் உடலெங்கும். வாயை மூடி உறுதியாக இருந்தாள். அவளிடமிருந்து ஒரு சிறு கேவலும் வரவில்லை. போடி என்று சங்கரன் சிரித்துவிட்டுபோனான்.
ஒரு பாம்பு ஊர்வதைப்போல அந்த அறையெங்கும் ஒரு அழல் பரவியது.
Saturday, January 1, 2011
புத்தாண்டு பரிசுகள்..
புத்தாண்டு என்பதால் மட்டுமல்ல வழக்கம்போல புகைவண்டி பிடிக்க எழும் நேரமான 4 மணிக்கு எழுந்து குளித்து முடித்தாகிவிட்டது. கோயிலுக்குச் செல்லலாம் என்று நினைத்து மாடிக்கு சென்று படர்ந்து கிடந்த முல்லைக்கொடியில் (வீட்டில் மனைவி வைத்திருக்கும் சந்தன முல்லைக்கொடியில்) மலர்களைப் பறிக்கலாம் என்று கைவைத்தபோது ஒவ்வொரு முல்லையிலும் இரவின் பனித்துளி அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. மேலே கசிந்து வந்த சூரியஒளி பனித்துளியில்பட்டு தங்கம்போல் மின்னிக்கிடந்தது. இந்த அழகு நண்பன் மதுமிதாவிற்குப் புத்தாண்டு பரிசாக.
கோயிலுக்கு கிளம்பி கடைத்தெரு வருகையில் எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு டூவீலர் கிறிச்சென்று பிரேக் அடிக்க நானும் நிதானித்து நிறுத்தினேன். பளபளவென்று மின்னும் சில்வர் கவுன் போட்டு வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த ஒரு பெண்குழந்தை குறுக்காக ஓடிவர பின்னாலே துரத்திக்கொண்டு வந்த அதன் தாய் பயந்து அலற வண்டி மோதாமல் நின்றுவிட்டது. அந்த வண்டியோட்டியவர் சொன்னார் அம்மா..இன்னிக்கு நியு இயர்னு திட்டாமப் போறேன்..இப்படிய குழந்தய ரோட்டுல விடுவீங்க.. என்றபடி நகர...அந்தக் குழந்தை இடுப்பில் கைவைத்து சிரிப்புடன் ஒரு சின்ன நடனம்இட.. எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது கோபமுற்ற அதன் தாய் உட்ப..அந்த பிஞ்சு மழலையின் சிரிப்பு நண்பன் சுந்தர்ஜிக்குப் புத்தாண்டு பரிசாக..
மீனாட்சியம்மன் கோயியிலில் வழிபட்டுவிட்டு தட்சிணாமூர்த்தியிடம் வேண்டிவிட்டு ஆஞ்சநேயரை நெய் தீபமிட்டு வணங்குகையில் கம்மென்று முகத்தில் மோதியது துளசியின் மணம். ஒரு வயதானவர் கையடங்கா துளசி மாலையுடன் வந்து அதனை சன்னதியைப் பூட்டியிருந்தகேட்டில் வைத்துவிட்டு ஆஞ்சநேயரை வணங்கிவிட்டுப்போனார். வீட்டுலே இவருக்காக வச்சிருக்கேன் நிறைய துளசி செடிங்க. அதுல பறிச்சது என்றார் என்னிடம். அப்போதுதான் பறித்து வந்ததால் அதன் மணம் கோயிலெங்கும் கமழ்ந்தது. அந்த துளசியின் மணம் நண்பன் ரிஷபனுக்குப் புத்தாண்டு பரிசாக.
வீட்டிற்கு வந்து வழக்கம்போல வாங்கிவந்த கொத்தமல்லி காம்புகளை கூண்டிற்குள் இருக்கும் மகள் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்களுக்குக் கொடுக்க அந்தக் கூண்டு சிறுதுளைகள் வழியாக ஒவ்வொரு காம்பாகத் தர எப்போதும்போல பரபரவென்று கீச்கீச்சென்று அழகாக ஒலியெழுப்பி கொத்தமல்லி காம்பின் சாறு உறிஞ்சும் அழகும் அந்தப் பறவைகளின் வண்ணங்களும் சகோதரி பத்மாவிற்கு புத்தாண்டு பரிசாக.
வீட்டில்வைத்திருக்கும் குபேர மரத்தின் மஞ்சள் பூக்களில் தேன் அருந்த வரும் தேன்சிட்டுகள் இன்றைக்குக் கூடுதலாக வந்திருந்தன. பூபூவாகத் தாவிக்கொண்டே தேனருந்தி சிறகடித்த அந்த காட்சி சகோதரி நிலாமகளுக்குப் புத்தாண்டு பரிசாக.
என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா ஜிஎம்பி அவர்களுக்கும் ஐயா ஆர்.ஆர்.ஆர் அவர்களுக்கும் மனம் நெகிழ்வோடு.
நண்பர் சிவகுமாரன்...நண்பர் ஆர்விஎஸ்...சகோதரி ஆதிரா...என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு இழையும் தருணங்களுடன்...
கைகூப்புகிறேன்.
Subscribe to:
Posts (Atom)