Sunday, May 27, 2012

பகிர்வுகள்...



ஆதங்கப் பகிர்வு


               1981 ஆம் ஆண்டு உலகளாவிய நிலையில் எங்கும் நடந்திராத நிகழ்வாக உருவாக்கபெற்றது இது. தனிப்பட்ட மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம். தஞ்சை பெற்றவரம் தமிழ்ப் பல்கலைக்கழகம். இதனை மாண்பமை முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயரிய தொலைநோக்குடன் சிந்தித்ததன் விளைவாக தஞ்சை மண் புண்ணியம் பெற்றது. தமிழுக்கென்று ஒரு சீரீய பெருமை மிகு பல்கலைக்கழகம். இதன் நோக்கம் தமிழ் பண்பாடு தமிழ் நாகரிகம்.. தமிழர் மாண்பு...தொன்மை இவற்றினைக் காக்க எழுந்து ஓர் உயராய்வு மையமாக. அதன்படியே திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பின்னர்தான் தெலுங்குப் பல்கலைக்கழகம் திராவிடப் பல்கலைக்கழகம் போன்றவை தொடங்கப்பட்டன என்பது கண்கூடு.

             பழம் பெருமைமிக்க தமிழ்மொழியின் தொன்மையையும் பழம் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வதர்களைப் போற்றுதலும் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க படைப்பாக்கங்களை வெளிக்கொணருவதும் அவர்களைப் போன்று இன்னும் பல அறிஞர்களையும் உலக தரத்திற்கு உருவாக்கி உலகமெங்கும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பதன் நோக்கமாகவே தமிழ்ப் பல்கலைக்கழகம் செயற்படவேண்டும் என்கிற உறுதிப்பாட்டில்தான் அது இயங்கிவந்தது.

              முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கவனிப்பாரற்று சவலைப் பிள்ளையாயிற்று என்பதுதான் உண்மை. அதன் அரசியல் காரணங்கள் நிறைய. ஒரு மொழிக்காக உருவாக்கப்பெற்ற பல்கலைக்கழகத்தில் திட்டங்களைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள்... பேரறிஞர்கள் எழுதிய அரிய பொக்கிஷங்களான ஆய்வுப்படிகளை நுர்ல்களாகக் கொணடுவருவதில் இடர்கள்..இப்படி நிதிநிலைமையர்ல் தமிழ்ப்பல்கலைக்கழகம் பல இன்னல்களைச் சந்தித்தது. பல துணைவேந்தர்கள் வந்தார்கள் போனார்கள். ஆனாலும் அவர்களால் தமிழறிஞர் வ.அய்.சு.வின் இடத்தை நிரப்பவே முடியாமல்போனதுதான் வருத்தம்.

              இருப்பினும் இவற்றினைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். அது நமது நோக்கமல்ல.

               நமது நோக்கம் ஒரு மொழிக்கென்று அதுவும் நம் தாய்மொழிக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் மேன்மேலும் உயரத்திற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும் என்பதுதான். அதன்செயல்திட்டங்களும் பணிகளும் மீண்டும் செம்மையாக்கப்பட்டு அதன் உயரிய நோக்கமான உயராய்வு மையம் என்பது நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.

               ஒரு பல்கலைக்கழகம் என்பது புறத்தளவிலும் அகத்தளவிலும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக் கொண்டது. இது எந்த நிலையிலும் சிதைக்கப்படகூடாது என்பதுதான் மொழிக்கும் அதற்காக உருவாகியிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் கொடுக்கப்படும் கௌரவம்.


                ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிலப் பரப்பில் ஒரு பகுதியைத் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு கொடுத்தாகிவிட்டது. தற்போது இன்னொரு பகுதியை வழங்கி அதில்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் கொண்டுவரலாம் என்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

                மாண்பமை முதல்வர் அம்மா அவர்களுக்குப் பணிவான வேண்டுகோள வைப்பது இதுதான்.


                 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட அலுவலகக் கட்டமைப்புக் கொண்டது. அதற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது.

                 பல்கலைக்கழகத்திற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது. அதது அதனதன் இடத்தின் இருந்தால்தான் கொண்டாடப்படும் மாண்பு நிலைப்படும்.

                எனவே இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவுவது வேறுவேறு பணிச்சூழலில் இரண்டையும் அகௌரப்படுத்தும் செயலாகவே அமையும்.

                முதல்வர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து இதனைப் பரிசீலித்து உரிய திட்டமிடலை ஆணையாக வழங்கவேண்டும். மேலும் உங்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அதன் பழைய மாண்பை பெற்று உலகெங்கும் தேமதுரத தமிழோசை பரவும்வகை செய்யவேண்டும் என்பதுதான் இதன் ஆதங்கப் பகிர்வாக அமைகிறது.



    மகிழ்ச்சிப் பகிர்வு


                     தஞ்சை பெசண்ட் அரங்கில் அனன்யா பதிப்பகத்தின் சார்பில் தஞ்சாவர்க்கவிராயரின் கவிதைநுர்ல் வளையல் வம்சம் வெளியீட்டுவிழா 26.05.2012 அன்று மாலை வெகு சீர்மையோடும் சிறப்போடும் நடந்தேறியது.

                    விழாவில் கலந்துகொண்டவர்கள் பலரும் மிகச் சிறந்த படைப்பாளிகள்..ரசனை மிக்கவர்கள்.. பல்துறைசார்ந்த அறிஞர்கள்..வாசிப்பாளர்கள்.. என அவரவர் கருத்துக்களை நுர்ல் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.

                       ஓவியர் வீரசந்தானம் அவர்கள் வளையல் வம்சக் கவிதைகள் குறித்து ஒரு ஓவியக்கண்காட்சியை ரசிப்பதுபோல காற்றில் தனது சொற்களால் வரைந்து காட்டினார்.

                      காதம்பரி வெங்கட்ராமன் வழக்கம்போல தனது ஆழமான உணர்வுகளை வளையல்வம்சத்தின் மேன்மையுணர வெளிப்படுத்தினார்.

                        நா.விச்வநாதன் அவருக்கேயுரித்தான கம்பீரத்தில் வளையல் வம்சத்தை நனைத்து எல்லோரையும் உணர்வில் ஈரப்படுத்தினார்.

                        ஒரு மனித நேயமிக்க மருத்துவராக விளங்கும் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் நான் மருத்துவராக வரவில்லை நோயாளியாக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அற்புதமான சுருக்கமான அதேசமய்ம் செறிவான ஒரு கவிதையை வழங்கிவிட்டது பிரமிப்பானது. சுந்தர்ஜி சொன்னது போல் டாக்டர் கவிஞராகிவிட்டார். ஆனால் நாங்கள் மருத்துவராக முடியுமா? என்று, உண்மைதான்,

                          வளையல் வம்சம் குறித்த தனது கருத்துக்களைக் குறிப்பிடுவதற்கு முன்னர் கவிதையை விமர்சிக்க வரவில்லை. நான் அனுபவிப்பவன். ஆகவே நான் அனுபவித்ததை கட்டுரையாக வாசித்துவிடுகிறேன் என்று உறரணி நீண்டதொரு கட்டுரை வாசித்தளித்தார்.

                           கவிதை என்பது வாசிக்கப்படவேண்டும் இசை என்பது  கேட்கப்படவேண்டும் நட்சத்திரம் தேவையெனில் வானத்தின் உச்சியில் சென்று தேடுவதைப்போலவும் கடலுக்குள் இருக்கும் கூழாங்கல் தேவையெனில் கடலுக்குள் இறங்கி அதன் ஆழம் வரை செல்வதுபோல நான் கவிராயருக்குள் இறங்குகிறேன், அவருக்கும் எனக்குமான உறவில் உருவானவை இக்கவிதைகள் என அற்புதமான ஒரு கருத்தை சுந்தர்ஜி மொழிந்துவிட்டுபோனது காதில் இசையாக ஊடுருவியது.

                           அனன்யா அருள் கவிராயர் கவிதைகள் குறித்த  தனது கருத்துக்களைக் கட்டுரையாக வாசித்தளித்தார்.

                            முத்தமிழ் விரும்பியின் கவிராயர் குறித்த கருத்துக்கள் எளிமையாகயும் சுவையாகவும் அதேசமயம் தெளிவாகவும் முத்தமிழின் சுவையைக் கூட்டுவதாக அமைந்தது.

                            தேவரசிகன் தனக்கேயுரித்தான பாணியில் மிக நுட்பமான கவிராயரின் கவிதைகளை எடுத்துப்பேசினார்.

                              கடைசியாக வந்தாலும் கச்சிதமாகப் பேசுவேன் என உறுதிசெய்வதுபோல ஒரு கதையைச் சொல்லி மனத்தை தைக்கவிட்டு போனார் கவிஜீவன்.

                             நீண்ட நாட்களுக்குப் பின் ஓர் அற்புதமான கவிதை நிகழ்வில் மனம் சுகந்து கிடந்த நிறைவு கிடைத்தது. வாய்ப்பளித்த அனன்யா பதிப்பகத்தாருக்கும் கவிஞர் அருளுக்கும் நன்றிகள். கவிதை நுர்ல் குறித்து நாளைய பதிவில் பகிர்ந்துகொள்வேன்.


           வேண்டுகோள் பகிர்வு


                           மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒவ்வெரு மாணவியும் மாணவரும் அவரவர் திறனுக்கேற்பச் சூழலுக்கேற்ப மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். எல்லோரையும் எல்லாக் கடவுளர்களும் காக்கட்டும்.

                    1. நன்றாகப் படிக்கிற மதிப்பெண்களைத் தரப்படுத்தியிருக்கிற அத்தனை ஏழைப் பிள்ளைகளையும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் விரும்பும் மேல்படிப்பிற்குச் செல்ல அரசு துணைபுரியவேண்டும்.

                   2. நம்முடைய விருப்பங்களுக்குப் பலிகொடுக்காமல் அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பிய படிப்பை வழங்கவேண்டுமாய் பெற்றோர்கள் நடந்துகொள்ளவேண்டும்.

                   3. பணமுடைய மனமுடையவர்கள் முடியாத பிள்ளைகளுக்கு உதவுங்கள்.


                                    ஒரு கவிதை,,,,,,,, அல்ல வாழ்க்கைத்துளி

                                     அம்மாவின் பழைய
                                      புகைப்படத்தைத்
                                      துடைத்துத்துடைத்துப்
                                      பார்த்தேன்
                                      பளிச்சென்றே தெரியவில்லை
                                      அப்புறம் புரிந்தது
                                      ஐயோ,,
                                      அது அழுக்கல்ல
                                       காலம்...
                                                             தஞ்சாவூர்க் கவிராயர்
                                               நன்றி. வளையல் வம்சம்..


               நுர்ல் பகிர்வு


                          கவிராயர் அறிமுகப்படுத்தி வைத்தார். யாழி என்றொரு இளைய கவிஞன். வயதில்தான் இளையவன். கவிதையில் வானத்தை உரசுபவன்.
என் கைரேகை படிந்த கல் என்பது இவன் கவிதை நுர்லின் பெயர்.
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழச்சொல்கிற கவிதைகள்.

                    திணிப்பை
                    எதிர்க்கும்பொருட்டுக்
                    கடித்துவிடுகிறது
                    செருப்புகூட
                    தன்னை உணர்த்தி
                    சில நேரங்களில்...

                    வாசிப்பதுதான் கவிதைக்குப் பெருமை.

                    யாழி,,,யுடன் பேச....9976350636.

‘                   கவிராயர் யாழியை அறிமுகம் செய்கிறபோது சொன்னார். எனது கவிதை குறித்து இவனைப் பேசச் சொல்லியிருக்கக்கூடாது ஏனென்று சொன்னால் இவன் குயில், குயில் பாடத்தானே செய்யும். பேசுமா என்ன என்று,
அது தொகுப்பு முழுக்கத் தெரிகிறது.

                     வாழி யாழி....

                        
                                                                              நாளையும் பகிர்வேன்...


Monday, May 21, 2012

பேருந்து (நாவல்)


ஐந்தாம் அத்தியாயம் - எல்லாம் நன்மைக்கே

               
              பேருந்து பயணம்தான் பெரும்பான்மையோருக்கு வாய்த்திருக்கிறது. ரயிலில் செல்வோர் அதற்கெனத் திட்டமிட்டுச் செல்பவர்கள். எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வோர்தான் எத்தகைய பயணமாக இருந்தாலும் அதுகுறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தேதிக்கு முன்பே அதற்கான டிக்கட்களைப் பதிவு செய்துகொண்டுவிடுவார்கள். எனவே நினைத்தவுடன் பயணம் மேற்கொள்ள எப்போதும் பேருந்துதான் சரியான வசதியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. தொடக்கத்தில் சிறுவயது முதலே பேருந்தில் பயணித்தால் உடனே வாந்தி வந்துவிடும். ஒத்துக்கொள்ளாது. ஒவ்வொருமுறையும் வாந்தி எடுத்து அம்மா திட்டுவாள்..சனியன்..கண்டதையும் திங்கறது இப்படி வாந்தியெடுக்கிறது. அப்பா சொல்வார் அவனுக்குத்தான் பஸ் ஒத்துக்காதுல்ல.. என்று. கண்டக்டர் வந்து கன்னாபின்னவென்று திட்டிவிட்டு எங்கேனும் சாலையோரம் மணல்கிடக்கும் பகுதியில் பேருந்தை நிறுத்தி பெயர்ப்பலகையில் கொஞ்சம் மண்ணையள்ளிப்போட்டுவிட்டு விசில் அடிப்பார். வாயில் வைத்த விசிலுடன் ஒட்டுமொத்த வாந்தியெடுத்த குடும்பத்தை ஒரு முறை முறைத்துவிட்டுப்போவார். அம்மா அந்த வேகத்தையெல்லாம் ஓங்கி ஒரு அறைவிட்டு தணித்துக்கொள்வாள். அது வாந்தியெடுத்ததைவிட வலியாக இருக்கும்.

      எனவே பேருந்து பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் ஒரு எலுமிச்சைப்பழம் அல்லது எலந்தை வடை (எலந்தை வடையின் ருசி குறித்து பெரிய கதையே எழுதலாம்) கருப்பாக வட்டமாக மெலிதாக இருக்கும். ஆனால் அது ஒரு புளிப்பும் துவர்ப்பும் உப்பும் கலந்த சுவை. அது வாந்தியைக் கட்டுப்படுத்தும். அல்லது புளிப்பு மிட்டாய். பெரும்பாலும் அந்த வாந்தியெடுக்கிற தருணத்தில் ஏன் வாழ்கிறோம் என்கிற உணர்வே மிஞ்சும். அடிவயிற்றில்  ஆயிரம் பேர் நின்றுகொண்டு மேல்நோக்கி அத்தனை குடல்களையும் கைகளில் ஏந்தி வாய் வழியாக தள்ளுகிற முயற்சிபோலிருக்கும். சிலநேரம் கண்கள் கண்ணீரில் வெடிக்க மூக்கு வழியாகவும் சோற்றுப்பருக்கைகள் வெளியே வந்து திக்குமுக்காடவைக்கும். அப்போது அந்த எலுமிச்சைப் பழத்தை ஒரு துளையிட்டதுபோல் பல்லால் கடித்து அதன்வழி ஸ்ட்ரா போட்டு உறிஞசியதுபோல அந்த சாற்றின் ஒரு துளியை உறிஞ்சுகையில் அது வாந்தியை வந்து பாரு எந்த ஊரு என்று கேட்பதுபோல ஆறுதலைத் தரும்.

          எதுக்கு ஒத்துக்கலன்னா அழைச்சிட்டு வர்றீங்க? பேசாம வீட்டுல விட்டுட்டு வந்துடவேண்டியதுதானே,,,  வெறும் வயித்தோட அழைச்சிட்டு வர்ற வேண்டியதுதானே,,, நாத்தம் குடலைப்புடுங்குது.. நாங்கல்லாம் ஊரு போய் சேரவேண்டாம்?,,, விடுங்க சார்.. சின்னப்பசங்க.. அப்படித்தான் இருக்கும்.இனிமே பஸ்ல அழைச்சிட்டு வரும்போது இட்லி இடியாப்பம் இதுமாதிரி லைட்டா கொடுத்து அழச்சிட்டு வாங்க.. இல்ல அடிக்கடி பஸ்ல போனா பின்னால ஒத்துக்கும்... சரியாயிடும்..

         உண்மையில் அடிக்கடி பேருந்தில் பயணித்ததால்தான்அது சரியாயிற்று என்பதுதான் உண்மை. பள்ளிக்கூடம் முடித்து கல்லுர்ரி படிப்பு வரை சைக்கிள்தான். பேருந்து பயணம் இல்லை. அதற்குப்பின்னரும் உள்ளுரிலேயே வேலையும் அமைந்தவிட்டதால் டூவீலர் என ஆயிற்று. எனவேதான் பேருந்துபயணம் என்பது இல்லாமல்போனது. ஆசிரியப்பணிக்காக வெளிக்கிளம்பியதுதான் பேருந்துபயணம்போல ஆகிவிட்டது. அதுவரை வாழ்க்கையில் சுற்றாத ஊர்களையெல்லாம் கட்டாயமாக சுற்றவேண்டிய நிலையில் வாராவாரம் பேருந்துபயணம் என்பது கட்டாயமாகிப்போனது. இப்போது பேருந்தில் வாந்தி வருவதில்லை. பேருந்து என்பது வசதியான ஒரு பயணத்திற்கான தோழனாக ஆகிப்போனதுதான் உண்மை.

         ஒவ்வொருமுறை ஒவ்வொரு ஊருக்கும்போகும்போது எத்தனையோ முகம் தெரியாத மனிதர்கள் ஏறி இறங்குவது ஒரு மிகப்பெரிய தொடர் காட்சிக்கு ஆளாக்கிவிட்டது. வயதானவர்கள்.. சின்ன குழந்தைகள்...பெண்கள்.. பள்ளி கல்லுர்ரி பிள்ளைகள்...பல்வகை வேலை செய்யும் தொழிலாளர்கள்..பணியாளர்கள்..அலுவலர்கள்...கிளி ஜோஸ்யக்காரன்...பலுர்ன் விற்பவன்...பஞ்சு மிட்டாய் விற்பவன்..கடலை விற்பவன்...உலக மேப் விற்பவர்கள்...வெள்ளரி பிஞ்சு விற்பவர்கள்... பைனாப்பிள் விற்பவர்கள்... கொய்யாப்பழம். . சிலசமயம் மாம்பழம் விற்பவர்கள்...கருவாடு விற்கும் பெண்.. இலைக்கட்டுடன் ஏறும் விவசாயிகள்.. பக்காரிகள்.. பூக்காரர்கள்...நெல்லிக்காய்..எலந்தைப்பழம் விற்பவர்கள்.. சாக்குமூட்டையுடன் ஏறுபவர்கள்... இவர்களுக்கிடையில் ஈர உடையுடன் சொட்டசொட்ட ஏறுபவர்கள்... (துக்கத்திற்குப் போய்விட்டு வருபவர்கள்.. அல்லது வயல் வேலை முடித்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வருபவர்கள்) என எண்ணிலடங்கா மனிதர்கள். அவரவர்களுக்கு அவரவர் பிரச்சினை. இவர்களுக்கிடையில் கண்டக்டர் நீந்திக்கொண்டு மிதந்துகொண்டு மூச்சு திணறிக்கொண்டு நகர்ந்து டிக்கட் போடவேண்டும். சதா எதையேனும் கத்திக்கொண்டே  தனது  சக்தியையெல்லாம்  காற்றில் கொட்டிக்கொண்டு டிக்கட் போடும் அவரைப் பார்த்தால் ரொம்பப் பரிதாபமாக இருக்கும்.

            டெய்லி வர்றே... சில்லறையா கொடுக்கமாட்டீயா? அடுத்த ஸ்டாப்பிங்கல இறங்கறது நுர்று ரூவா நோட்டு.. என் தாலிய அறுக்கறதுக்குன்னு வருவியா?... நடந்துபோனா என்ன இளைச்சா போயிடுவே..

            சும்மா இருய்யா... காலையிலேர்ந்து தலையில கல்லும் மண்ணும் சுமந்து வேலை பாத்திட்டு வந்தா உனக்கு அருமை தெரியும்.. சுளுவா சொல்லே அடுத்த ஸ்டாப்பிங்கதானே நடந்துபாருன்னு.. நடக்கத் தெரியாதவஙக் பாரு...சொல்லிகொடு...

              நீ சில்லறையா கொடுத்தா நான் ஏன் பேசப்போறேன்?

              நான் என்ன பேங்கா நடத்தறேன்.. அன்னிக்கு அன்னிக்கு சம்பளம்  இந்த எரநுர்றுவா காசுதான்... இன்னிக்கே சரியாயிடும்...

                 இந்தாப்பா கண்டக்டர் இந்தாள தள்ளி நிக்கசெர்ல்லு இலைக்கட்டால இடிச்சுக்கிட்டேயிருக்கான்..

                  யோய் இலைக்கட்டு தள்ளி வா...

                  எங்கங்க தள்ளி வர்றது...இலைக்கட்டு வெயிட்டுங்க...

                  எதுக்கு இவங்கள எல்லாம் வண்டியிலே ஏத்தறீங்க?

                  அட ராமர்... கருவாடு நாத்தம் சகிக்கல்லே... குடலைப்புடுங்கிட்டு வாந்தி வருது... ஏம்மா துணிய போட்டு மூடும்மா...

                  எல்லாம் மூடித்தான் இருக்கு... வறுத்தா சப்புகொட்டி திங்க மாட்டே,,, நீயா சமைக்கிறே வூட்டுல பொம்பள சமைக்கிறா... தின்னுப்புட்டு வியாக்கியானம் பேசற...

                     சரி விடும்மா...

                     உறலோ துர்ங்கி விழாதீங்க.. நிமிருங்க...

                     யோய் படியவிட்டு மேல வாய்யா...

                     நான் பாத்துக்கறேன்  நீ  ஒன் வேலைய பாரு...

                     என் வேலையதான் பாக்கறேன்.. படியவிட்டு மேல வந்து தொலை... விழுந்து தொலைக்கபோறே...

                       அய்... விழுந்துடுவோமா.. நாங்க... யாரு... நீ பாட்டுக்கு டிக்கட்ட போடு... எனக்கு ஓலைத்தேவராயன்பேட்டைக்கு ஒரு டிக்கட் கொடு...

                       குடிகார கம்னாட்டிங்க.. விழுந்து  தொலைச்சா யாரும் ஊருக்குப் போகமுடியாது...

                        யாருக்கும் டிக்கட் வேணுமா,,, வரவேண்டியிருக்கா.. கேட்டு வாங்கிடுங்க...செக்கர் வந்தா நான் பொறுப்பில்லே...

                       அடுத்த நிறுத்தத்தில் யாரேனும் ஓடி வருவார்கள்..

                      அய்யய்யோ இப்படி  பாவி மவ பண்ணிப்புட்டானே... இனி நான் என்ன செய்யப்போறேன்... மகமாயி.. என் மடியிலயா நெருப்பள்ளி கொட்டுவே... வருஷாவருஷம் தீ மிதிச்சானே உன் மனசு இரங்கலியா.. பாவி..

                     ஆத்தா கத்தாதே இது பஸ்சு...

                    விடு அது அழுது தீரட்டும்..

                     எங்க போறிங்க?

                     பாவநாசம் எட்டு டிக்கட்டு கொடுங்க...

                     என்னாச்சு?

                     அந்த ஆத்தாளோ பேரன்... இதுக்கு முந்துன பஸ்ல போயிருக்கான்... பஸ்ச விட்டு இறங்கியிருக்கான்.. யாரோ வெட்டிட்டாங்க...அங்கேயே உயிரு போயிடிச்சாம்...

                       என்ன முன்விரோதமா?

                        இவன் கொஞ்சம் துடிப்பா இருப்பான்...எதுக்கெடுத்தாலும் கைய ஓங்குவான்...

                          அப்பா அம்மா,, இருக்காங்களா?

                          அப்பாரு வெத்திலைக் கொடிக்கால்ல பாம்பு கடிச்சு செத்துப்போயிட்டாரு... ஆயிதான்.. அதோ அந்த மஞ்சப்புடவைதான்...

                          கருத்துப்போன ஒரு கரிக்கட்டையின்மேல் மஞ்சள் புடவை சுற்றியதுபோல அந்த பெண்ணிருந்தாள். அவள் வாழும் வாழ்க்கையை அவளது மேனி சொன்னது..

                           அவள் கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டேயிருந்தது. புடவைத் தலைப்பை சிறுபந்தாக உருட்டி வாயில் அடைத்தபடி பொங்கிகொண்டிருந்தாள்...

                              என்ன வயசுங்க?

                             இந்த ஆவணி பொறந்தா இருவத்திரண்டு ஆகும். ஆளு நல்ல திகாத்திரமா இருப்பான். நேருக்கு நேர் நின்னு வெட்டமுடியாது.. பின்பக்கம் கழுத்துல போட்டுட்டாங்க... எல்லாம் இவன் வயசு ஒத்த பசங்கதான்...

                             பாபநாசத்தில் பெருங்கூட்டம் திரண்டுகிடந்தது, நாலைந்து போலிஸ்காரர்கள் ஜீப்புடன் நின்றுகொண்டிருந்தார்கள்.  துர்ரமாய் ஆம்புலன்ஸ் வண்டி சப்தம் கேட்டது.

                            இந்த வயசுல இது தேவையா?

                             எங்க பசங்க கேக்கறாங்க?

                             கண்டிச்சு வளர்க்கணுங்க...

                             புருஷ்ன் இல்லாத பொம்பள குடும்பத்த பாப்பாளா.. இழுத்துட்டு வர்ற ஊர்வம்புக்குப் பஞ்சாயத்துப் போவாளா?

                              சின்ன சின்ன சந்தோஷங்கள்...
                               கருப்பு துயரங்கள்.
                               கலகலப்புகள்.
                               சிறுசிறு சண்டைகள்
                               எல்லை மீறுகிற சப்தங்கள்...
                               எதையும் கண்டுகொள்ளாமல் துர்ங்குகிறவர்கள்
                               அவரவர் நிறுத்தம் வந்தால் இறங்கிப்போகிறவர்கள்.
                               தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள்..

                                இவற்றுக்கிடையில் டிக்கட் போட்டுவிட்டு இன்வாய்ஸ் எழுதும் கண்டக்டர்.. சாலையைப் பார்த்தபடி பேருந்தை இயக்கும் டிரைவர். எல்லாவற்றையும் வாங்கிகொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து..

                                 அடிக்கடி நினைப்பது இந்தப் பேருந்திற்கு வாயிருந்தால் என்ன பேசும்?

                                  எனக்குத் தோணவில்லை.

                                   ஒவ்வொரு நாளும் சாலையில் ஏதேனும் ஒரு யுத்தத்திற்குத் தயாராகவே பேருந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

                                    அன்று வெள்ளைக்குதிரை வரவில்லை.

                                    ஏதோ இஞ்சின்கோளாறு என்று வேறு மஞ்சள் நிற வண்டியை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் வந்திருந்தார். வழக்கம்போலவே பாண்டியன்.

                                   என்ன சார் எப்படியிருக்கீங்க?

                                   எங்க ஜெயக்குமார் போனவாரம் வரல்ல

                                   அத ஏன் சார்  கேக்கறீங்க?.. அன்னிக்கு வைத்தீஸ்வரன் கோயில்ல ஒரு ஆக்ஸிடெண்ட்... ஒரு சின்ன பையன் குறுக்க வந்துட்டான்...ஒண்ணும் பண்ண முடியல்லே... ஸ்பாட் அவுட்.. என் பையன் வயசுதான் சார்.. மனசே கலங்கிப்போச்சு.. கடைசிலே அவனோட அப்பா உங்க ஆபிசுதான்சார்... மக்கள் கூடிப்போயிட்டாங்க....ஓடிலாம்னு பார்த்தோம்.. ஏன்ன என்ன ஏதுன்னு கேக்காம அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஆனா எங்க மேல தப்பு இல்லங்கறதால திகைச்சுப்போய் நின்னுட்டோம்...அதுக்குள்ள போலிஸ வந்துடுச்சி...

                              பஸ்ஸ ஸ்டேஷன்ல் விட்டுட்டு... ஆம்புலன்சுல பாடிய ஏத்திவிட்டுட்டு.. எல்லாத்தையும் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள ராத்திரி மணி ரெண்டாயிடிச்சு சார்.. பாண்டியன் மேல கேஸ் புக் பண்ணிட்டாங்க...
மறுநாள் வக்கில பாத்துட்டு நான் லீவு போட்டுட்டேன்.. நாலு நாள்...கனவுல அந்த பையனே வர்றான் சார்.. துர்ங்க முடியல்லே.. இது தெரியாம என் பொண்டாட்டி லீவுலதான் இருக்கீங்க...நம்ப புள்ளக்கி முடியெடுத்து காது குத்திடலாம் குலதெய்வம் கோயில்லன்னா.. எங்க வழக்கம் திருட்டு காதுதான் குத்துவோம்.. ஒண்ணும் சொல்லமுடியல்லே...காது குத்திட்டு வந்தாச்சு.. அந்த ஆசாரி சரியா குத்தாம விட்டதால காது புண்ணாயிடிச்சி.. கொதகொதன்னு சீழ் வச்சிடிச்சு.. பையன் துடிக்கிறான்.. தோட்டையும் கழட்ட முடியல்லே.. டாக்டர் கிட்ட போனோம்.. அவர் மெதுவா எல்லாத்தையும் துடைச்சி விட்டுட்டு தோட்டை கழட்டி கொடுத்திட்டாரு...ஓட்டை துர்ர்ந்துபோயிடிச்சி.. ஆனா புண் ஆறிடிச்சி.. இனிமே தோடு போடமாட்டேங்குறான்... சரின்னு கழட்டி வச்சிட்டோம்.. இதுல என்ன கூத்துன்னா.. அன்னிக்கு ரோட்டுல அடிபட்ட பையன் காதுல போட்டிருந்த தோடும் இதுவும் ஒண்ணு சார்.. என்னமோ தெரியல்லல அது மனச உறுத்துது சார்... ஏண்டா இந்தப் பொழப்புன்னு தோணுது... உண்மையிலேயே நிறைய பாவம் செஞ்சவங்கதான் கண்டக்டர் டிரைவரா வருவாங்க போலருக்கு சார்.. ஒவ்வொரு நாளும் மோட்டார் லைன்ல வண்டிய எடுத்து நைட்டு வண்டிய விட்டு இறங்கறவரைக்கும் இம்மைசதான் சார்.. பெரிய போராட்டம்.. நிம்மதியா எந்தப் பிரச்சினையும் இல்லாம வீடு வந்து படுத்தா போதும்னு இருக்கு சார்...

                    நினைத்துப் பார்த்தேன்.. காலையில் அலாரம் வைத்து நான்கு மணிக்கு எழுந்து பேருந்தைப் பிடிக்க ஓடி மூன்று மணிநேரங்கள் பயணித்து அலுவலகம் சென்றால் அங்கே தளர்வாக ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கண்டக்டர் டிரைவர் அப்படி செய்யமுடியாது.. இம்சையான பணிதான். நினைக்கையில் அவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது,

                   எல்லோருடைய வாழ்க்கையிலும் இம்சையும் சங்கடங்களும் இருக்கவே செய்கின்றன. அவை நிழல்போல விட்டு நீங்குவதில்லை. சில சமயம் நமக்குக் கட்டுக்கடங்கி பின்னாலே வருகின்றன. சில சமயம் இருப்பது தெரியாமல் இருக்கின்றன. சில சமயம் நமக்கு முன்னால் நீண்டு போகின்றன. அனுபவிப்பதுதான் வாழ்க்கை என்று தோணியது.

                  மாயவரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு டீயைக் குடித்துவிட்டு நின்றுகொண்டிருந்தோம். எட்டு பதினெட்டுக்குத்தான் வண்டியை எடுக்கவேண்டும். அப்போது ஒருவர் கருப்பும் வெள்ளையும் இழையோடிய தலையுடன் கையில் ஒரு அழுக்கான வயர்கூடையுடன்.. எங்களை நோக்கி வந்தார்..

                  வாய்யா.. என்றார் ஜெயக்குமார்.

                  எ...ன்ன... இன்னிக்கு சீ....க்...கிரமா... வந்துட்டீங்க என்று திக்கினார்.

                   ஜெயக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். சார் சிதம்பரத்துலதான்வேலை பாக்கிறர்ரு.. வணக்கம் என்றார். பதிலுக்கு வணக்கம் வைத்தேன். இவரு டெலிபோன்ல லைன்மேன்.. வல்லம் படுகை. நம்ப வண்டி நிக்காது.. இவருக்காக நிக்குது..

                   நி...க்...காம...போ...வும்.. அப்புறம் வண்டிய பாக்க முடியா.....து..
ஆமா... தெரிஞ்சுக்க என்றார் திக்கிபேசி சிரித்தபடி.

                      பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.
                   
                       திக்கிப்பேசியவர் பாண்டியனுக்கு பக்கத்தில் பானட்டில் உட்கார்ந்துகொண்டார். அப்போதுதான் அவரைக் கவனித்தேன். வெளுத்துப்போன சட்டை. சில இடங்களில் கிழிசல் சீப்பு பற்களாய் நின்றிருந்தன. பேண்ட் மங்கிய கலரில். காலில் வெள்ளைநுர்ல் போட்டு கையால் தானே தைத்துக்கொண்ட சிலிப்பர் செருப்பு..

                    சார் உங்க பேரு என்ன என்றேன்.

                    என் பேரா...சார்.. என்றபடி.. சொன்னார். சி...வ...க்..குமா....ர்.

                    என் பேரை சொன்னேன்.

                    கைகுலுக்கினார்.. டெய்லி வருவீங்க.. பாக்கலாம். சிரித்தார்.

                   பாண்டியன் வண்டியை எடுத்தார். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து கும்பகோணம் சாலையில் ஓடி அரசு மருத்துவமனை வீதியில் நுழைந்தபோது மருத்துவமனை அருகே பெரிய கூட்டம் இருந்தது. எல்லாரும் கரை வேட்டிகள். கட்சிக்காரர்கள். நிறைய வண்டிகள். ரோடு அடைத்து நின்றார்கள்.பேருந்து போகமுடியாது என்பது உறுதியானது. பாண்டியன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினார். கூட்டத்தின் அருகே போய் யாரிடமோ என்னவோ கேட்டுவிட்டுதிரும்பி வந்தார்.

                        என்னாச்சு பாண்டியன் ?

                         எம்எல்ஏவை வெட்டிட்டாங்களாம்...

                        என்னாச்சு...

                         பெரிய கும்பலாம்.. ஏகப்பட்ட வெட்டு...அங்கேயே உயிர் போயிடிச்சாம்.. போஸ்ட் மார்ட்டம் நடந்துகிட்டிருக்காம்...

                            வெள்ளைக்கார மனிதர்களுக்கிடையில் நிறைய காவல்துறை காக்கிகள் தெரிந்தன. ஒரு பதட்டம் மிதந்துவந்தது. எப்படியும் கிளியர் ஆக ஒருமணி நேரம் ஆகலாம். இன்றைக்கு விடுப்பு சொல்லிவிடலாமா என்று தோணியது.

                           சிவக்குமார் சொன்னார்.

                           ஏற்கெனவே நாலைஞ்சு மெமோ ஆயிடிச்சு லேட்டா போயி. இனிமே சம்பளம் கட்டுதான்... வருத்தமாய் சொன்னார்.

                          பேருந்தை விட்டு இறங்கி அருகேயிருந்த கடைக்குப் போனேன் ஏதேனும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று. மனசு சொல்லியது எல்லாம் நன்மைக்கே என்று.

                                                                                            (பேருந்து ஓடும்)


                     
                     


                               
                               

Sunday, May 13, 2012

அம்மா,,,அம்மா...அம்மா...


             இன்று அன்னையர் தினம்.

             எல்லோருக்கும் இன்றைக்கு அவரவர் அம்மாவைப் பற்றிய நினைவுகள் கட்டாயம் வராமல் இருக்காது. அதேசமயம் நம்முடைய பிள்ளைகளையும் நாம் அந்த அன்னை நிலையில் நின்று எண்ணிப்பார்க்கவும் செய்யும் நாள் இது.

             என் அம்மாவைப் பற்றி சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

            1. படிப்பறிவு ஒரு சிறிதும் இல்லாதவள் என்னுடைய அம்மா. எனக்குத் தெரிந்து ஒவ்வொரு எழுத்தையும் தள்ளிப்போட்டு தன்னுடைய பெயரை எழுதக் கற்றுக்கொண்டிருந்த அம்மா அதையும் மறந்துபோனாள் என்பதுதான் உண்மை.

           2. தெருவில் அம்மாவிற்கு ஒரு பெயர் உண்டு அவளைப் போல் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். அக்காக்களும் தம்பியும் நானுமாக இருந்த பெரிய குடும்பம். அதிகாலையில் எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன் குளித்துவிடவேண்டும். மழைபெய்த சேற்றுத்தண்ணீர் நிறத்தில் மங்கலாக சூடாக காபி என்று ஒன்று கொடுப்பாள். அதைக்குடித்துவிட்டு வீட்டுத் திண்ணையில் (இப்போது திண்ணைகள் எடுக்கப்பட்டுவிட்டன) ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பாடம் படிக்கவேண்டும். என்ன படிக்கிறோம் என்று அவளுக்குத் தெரியாது. ஏமாற்றினாலும் தெரியாது. ஆனாலும் படிக்கவேண்டும். ஏமாற்றாது படித்தோம். இன்று நன்றாக இருக்கிறோம். ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே தொடையில் அழுத்தமாக சிவந்துபோகுமளவுக்குத் திருகுவாள். அப்படித் திருகும்போது கண்ணில் கண்ணீரும் வாயில் சப்தமும் வரக்கூடாது. மௌனமாக அந்த வலியை அனுபவிப்போம்.

             3, செவ்வாய் வெள்ளி வீடலசுவாள். கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அண்ணாடவில் ஆளுக்கொரு பாத்திரத்தில் கொல்லைப்புறம் போய் அடிப் பைப்பில் தண்ணீர் அடித்து வந்து நிரப்பவேண்டும். வீடலசி கூட்டிவிட்டு கோலம்போட்டுவிட்டு. எல்லோரும் குளிக்கவேண்டும். குளித்துவிட்டு சாமிஅறையின் முன் உட்கார்ந்து சாமிப்பாட்டு படிக்கவேண்டும். கிட்டத்தட்ட அரைமணிநேரம் படிக்கவேண்டும். விடமாட்டாள். அப்புறம்தான் சாப்பாடு எல்லாமும்.

             4. ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் வீட்டிலிருந்து பெரிய கோயில் 2 கிலோமீட்டர் குறுக்குரோட்டில் (பழைய திருவையாறு ரோடு) நடத்தியே அழைத்துக்கொண்டுபோவாள் கோயிலைச் சுற்றி ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்கிவிட்டு சிறிதுநேரம் உட்காரவேண்டும் புல்வெளியில். அப்போது சொல்வாள் திக்கத்தவங்களுக்குத் தெய்வம்தான் துணைம்பாங்க. நமக்கு எல்லாமும் சாமிதான் என்பாள். திரும்பி நடந்துவரும்போது உப்புக்கடலை ஒருபொட்டலம் வாங்கி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்து அதைக் கொறித்துக்கொண்டே கால் வலிக்கவலிக்க வீடு வந்துசேர்வோம்.

            5. அடிக்கடி அம்மாவின் கிராமத்திற்குப்போகும்போது கிராமத்து எல்லையில் இருக்கும் முனியாண்டவர் அம்மாவின் பேவரைட். அங்குதான் ஒருமுறை திருவையாறு சப்தஸ்தானம் பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது வயது வநத்தாக சொல்வாள். முனியாண்டவர் அதையெல்லாம் ஒன்றும் கண்டுக்கொள்ளாமல் காக்கிறவர் என்று ஒவ்வொருமுறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த முனியாண்டவர் கோயில் வாசலில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு எம்புள்ளங்களப் பாத்துக்கப்பா என்பாள்.

            6. அம்மாவின் அம்மாவும் அப்பாவும் இறந்துபோனபின்பு அம்மாவின் மூனறு தம்பிகளையும் அம்மாதான் வளர்த்தாள். அதற்கு அப்பாவின் ஒத்துழைப்பு அதிகம். அதில் எப்போதும் அம்மாவிற்கு அப்பா குறித்த பெருமை உண்டு. அடிக்கடி சொல்கிற வார்த்தை ஆயிரம் யானையை நிறுத்தலாம் நெஞசில அத்தனை அழுத்தம் என்பாள். அப்பா உயிருக்குப்போராடிய கடைசி நிமிடம்வரை அம்மா இதை சொன்னாள்.

           7. படிக்காதவள் என்றாலும் அவள் அறிவுறுத்திய வாழ்வியல் கருத்துக்கள் இன்றைக்கும் உதவுகின்றன. எதிரியாக இருந்தாலும் வீடுதேடி வந்துட்டா வான்னு கூப்பிட்டு உபசரிக்கணும். நமக்கு ஒருத்தரைப் பிடிக்கலேன்னா அவங்களப் பத்தி எந்த அவதுர்றும் பேசாம விலகி வந்துடணும். ஒதுங்கிடணும். அப்படியே அடிக்க வந்தாலும் இது வாங்கற காலம்னும் நினைச்சு வாஙகிக்கலாம். எத்தனை உயர்வு வந்தாலும் ஆடம்பரம் பண்ணக்கூடாது. பெரிதா பீத்திக்கக்கூடாது. அமைதியா இருக்கணும். ஒருவில்லை சூடம் கோயில் வாசல்ல ஏத்தி வச்சி சாமிய வேண்டிக்கிட்டாபோதும்.

          8. ரொம்ப சிக்கனமாக இருப்பாள்.  ஒரு கத்தரிக்காய்...ஒரு வாழைக்காய்...ஒரு முட்டை என்று வறுமை வாழ்க்கை வாழ்வதில் அம்மாவுக்கு அலாதி பிரியம். அடிக்கடி சொல்வாள் தொண்டைக்கு அப்புறம் எல்லா ருசியும் மலம்தான். எனவே உணவில் வளைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது என்பாள்.

          9. எந்தக் குறையாக இருந்தாலும் தெய்வத்திடம் முறையிடவேண்டும். அவன் பார்த்துக்குவான் என்பாள். அவனுக்குத் தெரியும் யாருக்கு என்ன எப்ப கொடுக்கணும்.. நல்லது கெட்டதும் இப்படித்தான்னு.

        10, தேவையில்லாமப் பயப்படக்கூடாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும் நியாயம் நம்ப பக்கம் இருந்தா துணிச்சலா எதிர்க்கலாம் என்பாள். அப்படிபோனா இந்த உயிர் போகட்டும் என்பாள்.

            அப்பா இறந்துபோய் ஆறாண்டுகள் ஆகிவிட்டன. அப்பாவின் ஓய்வூதியத்தில் அம்மா தனியாக அவள் வீட்டில் இருந்துவருகிறாள். அவளின் போக்கில் எதுவும் மாறவில்லை. இப்போது உடல்நிலையில் தடுமாற்றம் வந்திருக்கிறது.  அவள் இயல்புகள் எதுவும் மாறவில்லை. என்னுடைய உயர்வாக இருந்தாலும் சரி...என்னுடைய மகன்...மகள் உயர்வாக இருந்தாலும் சரி போய் சொன்னால் வாழ்த்தி நெற்றியில் திருநீறு இடுகிறாள். கவனமாக இருங்கள் என்கிற ஒற்றைச்சொல்லுடன் நிறுத்திக்கொள்கிறாள்.

             அம்மா குறித்து நிறைய இருக்கின்றன அம்மாவிடம் கற்றுக்கொண்டதும் நிறைய இருக்கின்றன.


           

     
       

Thursday, May 10, 2012

மனச்சித்திரங்கள்....


மனச்சித்திரங்கள்....


                1, பயணத்தில் ஏதேனும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ரயில் பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்து பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்தில் பயணிக்கும்போது எங்கேனும் புழுதி விரிக்கப்பட்ட சாலையோரம் அழுக்கேறிய தொலைபேசிக்கம்பத்தின் அருகே..அல்லது தானும் வாழ்ந்து முடித்துவிட்ட சிதிலமான ஒரு வீட்டின் அருகே ஒரு வறுமை வரைந்த ஓவியமாய் ஒரு சிறுமியை அல்லது ஒரு நடுத்தரவயதுக்காரனைப் பார்க்கையில் மனசு பிசைகிறது கொஞ்சநேரமாவது..


              2.  இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிற தருணங்களில் பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற கூட்டத்தில் நிச்சயம் அடையாளப்படுத்த முடிகிறது நம்முடைய வாழ்க்கை என்றைக்கு உயர்ந்து நாமும் இப்படி இருசக்கரத்தில் பயணிப்போம் இந்த வறுமை வெல்லும் வாழ்க்கை என்று உணர்த்துகிற ஒரு முகத்தையேனும் ,


             3.   பத்துவருடங்களாயிற்று வயலில் பிளாட்போட்ட மனையில் வீடுகட்டி குடிவந்து. எல்லாச் செடிகளையும் வைத்து அவைகளும் பூத்து அதன் அழகை ரசித்து...இயல்புபோல வாழ்க்கை கழிந்தாலும் இந்தப் பத்தாண்டுகளில் தெரு எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. பத்துவருடங்களாகப் பழகி வசிக்கும் எங்கள் வீட்டு செல்லநாய் ஜோ...குரைப்பதற்குக் குரைத்து...தாவுவதற்குத் தாவி.. துரத்துவதற்குத் துரத்தி...கூப்பிடும்போது வந்து போடுவதை வாலாட்டி மகிழ்ச்சியோடு..தின்றிருந்தாலும் யாருமற்ற பொழுதுகளில் தெருவில் விழித்துக்கிடக்கையில் அதன் மனசுக்குள் இந்தப் பத்துவருடங்களின் மாற்றமும் இந்தத் தெரு மனிதர்களின் நடவடிக்கைகளையும் பற்றி என்னயிருக்கும்? நாய் மனசை அறியமுடியுமா என்ன?

            4,  கவிதை எங்கே தொடங்குகிறது என்று கேட்டான் என் மகன். நான் யோசித்துக்கொண்டேயிருந்தேன். அப்போது என்னுடைய சகோதரியின் மகள் வந்து ஒரு செய்தி சொன்னாள் செய்தி தெரியுமா நம்ப தெருவுலே குடியிருந்துச்சே தனலெட்சுமி பாட்டி...(கிட்டத்தட்ட எண்பது வயது..நல்ல கண் பார்வையும் நல்ல பேச்சும் நடையுமாக இருந்த பாட்டி) நேத்து ஆத்து பாலத்துலே குழாய்போட்டிருப்பாங்கல்ல அந்த கேப்புல புடவையைக் கட்டி துர்க்குப்போட்டு செத்துப்போயிருச்சாம்.. பாவம்.. அதுக்கு ரெண்டு புள்ளங்க..ஆனால யாரும் சோறு போடமாட்டேன்னுட்டாங்க...பசி தாங்காம செத்துப்போச்சாம்...என் மகன் என்னைப் பார்த்தான்... இந்த சமூகத்தின் கவிதை அங்கிருந்து தொடங்குகிறது என்று அவனுக்கு உரைக்கவேண்டியதில்லை..

          5,   நடைவண்டிகள் தொலைந்துபோய் பிளாஸ்டிக் பொம்மைகளாகி நிற்கின்றன. கிலுகிலுப்பைகள் வர்ழாத வண்ணங்களைக் காட்டுகின்றன. பல்லாங்குழிகள் சில்வரில் பளபளப்புக் காட்டுகின்றன. விளையாடவேண்டும் என்கிற நிலைபோய் எங்களிடம் இவையெல்லாமும்  இருக்கின்றன என்கிற போலியில் மயங்கிக்கிடக்கும் வாழ்க்கையில்... எந்த வீட்டிலாவது பரண் இருக்குமா என்று தேடுகிறேன்.. இந்த அவலத்தைச் சொல்ல ஒரு மரப்பாச்சி இருக்குமென்கிற நம்பிக்கையில்.

                           மீண்டும் வரைவேன். 

Monday, May 7, 2012

தமிழவேள் உமாமகேசுவரமபிள்ளை

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் பிறந்தநாள் இன்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். அவரின் தமிழ்ப்பணிகள் என்றைக்கும் தமிழ்கூறு நல்லுலகின் அழியாத பதிவுகள். புதையல்கள். சாகா வரம்போல அவை. இவர் குறித்து கரந்தைஜெயக்குமார் தனது வலைப்பக்கம் சில அரிய செய்திகளை அள்ளி தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் சான்றாக உங்களுக்குத் தருகிறேன். நன்றி திரு ஜெயக்குமார்.


     
     நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

       வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடிய முதல் அமைப்பும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

இவையெல்லாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சிலவேயாகும்.

        7.5.2012 ஆகிய இந்நாள், மூச்செல்லாம் தமிழ் மூச்சு, பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சு, பெற்றதெல்லாம் தமிழ்த் தாயின் வெற்றி என வாழ்ந்து காட்டிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் அவர்களின் 130 வது பிறந்த நாள் ஆகும்.

இந்நன் நாளில்
தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். தமிழவேளின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
60 வது நினைவு நாள்
(9.5.2012)

      
             தாயாகி உண்பித்தான், தந்தையாய்
             அறிவளித்தான், சான்றோ  னாகி
             ஆயாத  நூல்பலவும் ஆய்வித்தான்
             அவ்வப்போ  தயர்ந்த  காலை
             ஓயாமல்  நலமுரைத்து  ஊக்குவித்தான்
             இனியாரை  உறுவோம்  அந்தோ
             தேயாத  புகழான்தன்  செயல்  நினைந்து
             உளம்  தேய்ந்து  சிதைகின்றே  மால்
-          ஔவை துரைசாமி பிள்ளை

--------------------


                                   பெற்றோர்
             இழந்தான்  இல்லத்
             துணையாள் இழந்தான்  உடன்
             பிறந்த தமையன்
             சங்கம் நிறுவிய துங்கன்தனை
             இழந்தான்  அருமை
             மகன் பஞ்சாபகேசன்தனை
             இழந்தான்.


             துன்பங்கள்
             தொடர்ந்து வரினும்
             துயரங்களைச்
             சுமந்து வரினும்  உள்ளம்
             தளராதிருந்தான்  என்றும்
             தமிழ் நினைவோடிருந்தான்
             எங்கள்
             முண்டாசு முனிவன்
             உமாமகேசன்.


For read full details : karanthaijayakumar.blogspot.com

சுகன்...300... வெள்ளிவிழா நிகழ்வுகள்...


         சௌந்தர சுகன் இலக்கியச் சிற்றிதழ் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சுகன் 300 வது இதழ் மற்றும் வெள்ளிவிழா நிகழ்வுகள் தஞ்சையில் 05,06.05.2012 ஆகிய இருநாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.

          இதற்கான அழைப்பிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்குமே தவிர அதைத்தவிர வேறு எந்த அழகியலையும் சுகனிடத்தில் பார்க்கமுடியாது. அதை அவர் விரும்புவதில்லை. அது மட்டுமன்றி ஓரிருவர் இருந்தாலும்கூட போதும் திட்டமிட்டபடி குறித்தநேரத்தில் விழாவைத் தொடங்கிவிடுவார். அவரின் பண்பு இது. திட்டமிடலும் சரியான நேரத்திற்குத் தொடங்குவதுமான அவரின் பண்பு நல்ல பத்திரிக்கையாளனின் அடையாளம் என்றே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

           விழாவை நான்கு  பகுதிகளாகப் பிரித்துக்கொள்வது வசதி என நினைக்கிறேன்.  ஒன்று தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையின் படைப்பரங்கம். இரண்டாவது கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் கவிதைப்புத்தக வெளியீடு மூன்றாவது  சுகனின் சிற்றிதழ்கள் குறித்த ஆவணப்படம் நான்காவது இதழ்குறித்த பன்முகப் பேச்சுக்கள்.


                   முதல்பகுதியான படைப்பரங்கம் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் இலக்கயப்பேரவை குறித்து நீண்டதொரு விளக்கத்தினை சுகன் அளித்தபின் தொட்டங்கியது. சிலர் கவிதை வாசித்தார்கள். அவரவர் அனுபவ வெளிப்பாடாக இக்கவிதைகள் அமைந்திருந்தன.

                     இரண்டாவது கவிதைப்புத்தகம் வெளியீடு. கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் குறித்த பன்முகப் பரிமாணங்களை எடுத்துப்பேசினார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சில் சில அனுபவத் தெறிப்புக்கள் இருந்தன. இவை கவிதை எழுதுவோர்க்குத் தேவையானவை.

                     தனது அனுபவங்களின் வலிகளைப் பதிவு செய்வது கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகளின் ஒட்டுமொத்தப் பொருண்மையாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கவிஞரின் பெண் எழுத்துக்கள் என்ற நிலையில் இதனை எடுத்துக்கொண்டால் கிருஷ்ணப்பிரியா பயணிக்கவேண்டிய துர்ரம் இன்னுமிருக்கிறது என்று சொல்லவேண்டும். எனினும் இத்தொகுப்பு ஒரு சோடை போகாத தொகுப்பு என்று சொல்லலாம். முதல் தொகுப்பிலேயே சமுகத்தின் மீதான அக்கறையும் குறிப்பாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்பெறுகின்ற வன்முறைகளுக்கான  எதிர்ப்புக்களின் தீவிரமான ஒரு களமாக கிருஷ்ணப்பிரியாவின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சில கவிதைகள் மனதில் எந்தவித உணர்வுகளையும் ஏற்படுத்தாது வெறுமனே நிற்கின்றன. இவற்றைத்தாண்டிய சில கவிதைகள் உயர்ந்த உச்சத்தின் தேவையையும் எட்டிப்பிடிப்பதையும் நாம் மறுக்கமுடியாது. பெரும்பாலான கவிதைகளில் கவிதைக்கான ஓசை உணர்வு என்பதைத்தாண்டி ஓர் உரைநடைக்கான சாயலையும் காணமுடிகிறது. எனவே கவிதையின் பொருண்மை என்பது இங்கு அறிவிப்பாகவே நடந்து முடிந்துவிடுகிறது. சிலவற்றில் தன்னிலைவிள்க்கம் என்பது கவிதையினைப் படிக்கத் தடையாக நின்றுவிடுகின்றன. எப்படியெனில் கவிதைக்கென வரையப்பட்டிருக்கும் படங்களைப்போல. கவிதைகளும் படங்களும் தனித்தனியாக இயங்கவேண்டியவை. இந்நுரலில் படங்கள் பொருத்தமற்றே இருக்கின்றன.  இது என்னுடைய பார்வையில் பட்டது.

                  மிக வலுவான பொருண்மையின் இறுக்கத்தில் அதனை இறக்கிவைக்கிறபோது சட்டென்று வைத்ததுபோல ஒரு உணர்வு சில கவிதைகளில் அறியமுடிகிறது. இவரது எழுத்தின் வன்மை இன்னும் ஆழமாக உணர்த்தப்படவேண்டியிருக்கிறது என்பதையே இத்தொகுப்பின்மூலம் அவருக்கு வைக்கும் வேண்டுகோளாக இருக்கும்.  தொகுப்பின் மனதை ஈர்த்ததோடு மட்டுமல்ல மிகமிக வலிமையான கவிதைகளாக சிலவற்றைச் சுட்டலாம்.

                          ஆசை.....அபிஷேகம்... (அசல்) சுற்றுலா... (இங்கு அசல் என்பது தேவையில்லை என்று படுகிறது),,, எதிர்பார்ப்பு... கடவுளின் பயணம்.. கசிவின் பயம்...கறைகள்...நானும் நீயும்...அவளும் அம்மாவும்..

                         சில கவிதைகளில் சொற்கள் முகத்தில் அறைந்து இதயம் துளைத்து ஸ்தம்பிக்க வைக்கின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தில் தனக்கான ஓர் இடத்தை ஒளியுட்ன் தக்க வைக்கப்போகும் கிருஷ்ணப்பிரியாவிற்கான நம்பிக்கைகள்.. வாழ்த்துக்கள் பிரியா.

                        மூன்றாவது சுகனின் சிற்றிதழ்கள் எனும் ஆவணப்படம்.  இதில் சுகனின் உழைப்பையும் சேகரிப்பையும் பாராட்டலாம் என்றாலும் இது முழுமையான ஆவணப்படம் அல்ல என்பதுதான் என்னுடைய ஆதங்கம். ஒரு முறையான சிற்றிதழ் வரலாற்றை இது எடுத்துவைக்கவில்லை. முன்னோடி இதழ்கள் குறித்து ஒரு பத்தியாவது சுகன் பேசியிருக்கலாம். அதாவது கலாமோகினி...சூறாவளி...ஜெகன்மோகினி...நவசக்தி....கசடதபற...இப்படி நிறைய இதழகள் விடுபட்டிருக்கின்றன. காட்டிய இதழியல் வரலாறு குறித்து குட்டபபட்ட நுர்ல்களில் தமிழ் இதழ்கள் (சோமலே)...முதல் நாளிதழ்கள் மூன்று ...மா.ரா. இளங்கோவன்.. இதழ்களின் பொருண்மை அடிப்படையில் அவற்றின் வகைகள்...தொடங்கப்பட்ட சூழல்.. பட்ட வலிகள்...ஏதேனும் ஒரு கட்டத்தில் சாதித்தவைகள்...நின்றுபோனதற்கான காரணங்கள் என அமைத்துக் கொண்டிருக்கலாம். நிறைய  வரலாற்று விடுபாடுகளுடன் அமைந்துள்ள ஆவணப்படம் என்றாலும் சுகனின் உழைப்பு என்பதும் சிறப்புக்குரிய கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

                                        
                        நான்காம் நிகழ்வில் சுகன் இதழ் குறித்து தங்களின் தொடர்பு. உறவு. பிணைப்பு போன்றவற்றை ஒவ்வொருவரும் தனக்கேயுரித்தான நிலைப் பாட்டில் எடுத்துவைத்தார்கள். 300 இதழ்களின் எத்தனையே சோதனைகள்...அவமானங்கள்...வலிகள் இவற்றின் ஊடாக எதிர்கொண்டு நடத்திவிட்டு இனி நடத்தமுடியுமா... நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு மணிநேரத்தில் மேலாக சுகன் பட்டியலிட்டபோது அவை அத்தனைபேரின் மனங்களையும் கசிய வைத்துவிட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரம் ஒன்றையே மனத்தில் இருத்தி எதற்கும் எதனோடும் சமரசம் செய்துகொள்ளாமல் ஒரு இதழை 25 ஆண்டுகள் நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. இந்த சமூகத்தின் இருப்பிற்காக தனது பங்களிப்பாக 300 துர்ண்களை நிறுவியிருக்கிறார் சுகன்...300 படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறார் சுகன்...300   மைல்கற்களைப் புதைத்திருக்கிறார் சுகன்... என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே சுகன் இதழை எப்படிக் கொண்டுவருவது என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்கவேண்டும். இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் உண்மை.

                       படைப்பாளியால் முடிந்தது வாசிப்பது... காசு கொடுத்து வாங்கி வாசிப்பது...சந்தா கட்டுவது.. அடுத்தவருக்கு அறிமுகப்படுத்துவது. என்பதுதான் இதனை சுகன் இதழ் படைப்பாளிகள் அத்தனைபேரும்  செய்வார்கள். இதில் எவ்வித ஐயமும் இல்லை.
                 
                       விழாவிற்கு கவிஞர் மேத்தா...நா.விச்வநாதன்...கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்...கவிஞர் நாகராசன் (தத்தன் இதழ் ஆசிரியர்). வலம்புரி லேனா (ஆலம்பொழில் கடித இதழ் ஆசிரியர்),,அம்பல் மாதவி ,,கவிஞர் செழியன்... கவிஞர் செல்லதுரை (நந்தி சேனல்) வெளியூர்களிலிருந்து சக்தி அருளானந்தம்...சொ.பிரபாகரன்..அமிர்தம் சூர்யா (கல்கி உதவி ஆசிரியர்) கவிஞர் நிலா மகள்.. நெய்வேலி பாரதிக்குமார்..மீனாசுந்தர்...சேலம் இளங்கோ... சிறகு இரவிச்சந்திரன் (சிறகு இதழின் ஆசிரியர்) இவர்களுடன் உறரணியும்.  வந்திருந்தோர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


லை.

                         

                     
 
         

Thursday, May 3, 2012

நான்காம் அத்தியாயம் ...கடவுள் கணககு ,,, (பேருந்து நாவல்)



         





கடவுளின் கணக்கு என்று அடிக்கடி எல்லோருமே சொல்வார்கள்.  சாதாரண கணக்கே பலருக்கு வேப்பங்காயாக இருக்கும்போது கடவுளின் கணக்கு எப்படி பிடிக்கும். இருந்தாலும் அதுபற்றிய ஒரு பயம் அல்லது எதிர்பார்ப்பு எல்லோரிடத்தும் இருக்கத்தான் செய்கிறது.எப்போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்று யாரும் அறியமுடிவதில்லை. அலுவலகத்தில் நுழைந்தபோதே கனகலிங்கம் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக அவனைப் பார்க்கமுடியவில்லை. விடுப்பில் இருந்திருக்கவேண்டும். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னான். நானும் பதிலுக்கு சொல்லிவிட்டு

          என்ன கனகலிங்கம் ஆள் ரொம்ப டல்லா இருக்கே? ரொம்ப நாள்
வீவு போலருக்கு என்றேன்.
   
         ஆமா சார்... என்றான் அதற்குமேல் பேச்சைத் தொடர விரும்பாதவன் போல...

           என்னாச்சு கனகலிங்கம்? என்று அழுத்திக் கேட்டவுடன் ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு கடகடவென அழுதான்.. எனக்குச் சங்கடமாகிவிட்டது.

            எதுக்கு கனகலிங்கம் அழறே? என்றேன்.
            என் பையன் செத்துப்போயிட்டான் சார் என்றான்.
           என்ன சொல்றே கனகலிங்கம்? என்றேன் பதறியபடி.
           ஆமா சார் போனவாரம் ஞாயிற்றுக்கிழமை. ஒரே பையன் சார். அதுக்கு மேல எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க சார்.. ஒரு பையன்தான் இருந்தான் சார்.. அவனும் செத்துப்போயிட்டான். எங்க வீட்டுலே இன்னும் சாப்பிடலே சார்.. அழுதுகிட்டேயிருக்காங்க.. ஏற்கெனவே நான் லாஸ் ஆப் பே சார்.. அதான் வேலைக்கு வந்துட்டேன். சார்  என்றான்.

            என்ன ஆச்சு?
            ரோடு ஆக்ஸிடெண்ட் சார்....
             எங்கே?
            வைத்தீஸ்வரன் கோயில்ல.. சன்னதி வாசல்லேயே சார்... பஸ்ஸைவிட்டு இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணலாம்னு இருந்தோம் சார்.. சட்டுனு நான் போறேன் முன்னாலன்னு கைய உருவிட்டு ஓடுனா சார்.. சிதம்பரத்துலேர்ந்து வர்ற பஸ்.. வெள்ளைக்கலரு... கவனிக்கலே...அப்படியே உடம்பு மேல வண்டி ஏறிடிச்சி.. எங்க கண்முன்னாடியே புள்ள துடிச்சு செத்துப்போயிட்டான் சார்...என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதான்.

           என்ன வயது கனகலிங்கம்?
          ஆறாவது படிக்கிறான் சார்,
           என்னால் எதுவும் பேசமுடியல்லே.. ஒருமுறை கனகலிங்கத்தைப் பார்த்தேன்.. ஒரே பிள்ளை அவனுக்கும் இந்தக்கதி... கனகலிங்கம் பேசினான்.

              நீஙக் டெய்லி வருவீங்களே சார்.. அந்த வெள்ளை வண்டிதான்.

              மனசு அதிர்ந்தது. ஒருவேளை நான் போயிருந்தால்.. கனகலிங்கத்தின் மேல் ஏறிய பேருந்தின் கணத்தில் என்னுடைய எடையும் அல்லவா சேர்ந்திருக்கும். இருந்தும் உறுத்தியது.
             அன்றைக்கு பாண்டியன் வருவார். கண்டக்டர் மட்டும் மாறும். ஜெயக்குமார் திங்கட்கிழமை டூயுட்டி..
               கனகலிங்கம் போய்விட்டான். தொணதொணவென்று பேசுவான். எதிர் வாதம் புரிவான். சொன்ன வேலைகளைச் செய்வான். ஒரு மணிக்குச் சொனன்ல் எதுவும் கேட்கமாட்டான். நான் சாப்பிடப்போறேன் சார்.. இது லஞ்ச் டைம் சார்... வந்து செய்யறேன் என்று நம்முடைய பதிலைக்கூட எதிர் பாராமல் போய்விடுவான்.
               அலுவலக உதவியாளன்தான் கனகலிங்கம். அவனுடைய வேலைகள் அதிகம். சம்பளம் சொற்ப சம்பளம்தான். ஒரு பிள்ளை அது ஏன் நிற்கவில்லை அந்தக் குடும்பத்திற்கு. இதற்கு நதி மூலம் என்ன? ரிஷிமூலம்தான் என்ன? இனி எத்தனை காலம் அவர்களுக்கு ஆயுள் போட்டிருக்கிறதோ அதுவதை பேசிப்பேசி அழியவேண்டுமா? இது என்ன கடவுளின் கணக்கு?
           
                   மதியம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மணி இரண்டரை. வழக்கத்தைவிட்க் குறைவாக இருந்தது கூட்டம். கத்தரி வெயில் நறுக்கிக் கொண்டிருந்தது, கடலுர்ர் வண்டி காத்துக்கிடந்தது.

                     நாராயணன் இருந்தான். என்னைப் பார்த்ததும்... சார்.. வணக்கும் நீங்க எப்படியும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். சீட்டுப் போட்டுட்டேன் சார். உக்காருங்க். ரெண்டு நாப்பத்திரண்டு நம்ப டைம். இன்னும் வேற வண்டி வர்லே அதான் போயிடலாம்.
                      சரியாக 2.42க்கு வண்டியை எடுத்தார்கள். டிரைவர் சேகர் வணக்கம் சொன்னார்.
                      வண்டிக்குள் நாலைந்து பேர்கள்தான் உட்கார்ந்து இருந்தார்கள்.
                    என்ன நாராயணன் கூட்டமே இல்லை.
                    இன்னிக்கு அப்படித்தான் சார்... முகூர்த்த நாள் கிடையாது. நாலை
ஞசு மெட்ராஸ் வண்டி வரும். நாலு மணிக்குத்தான் கூட்டம் வரும். காலேஜ் விடுற நேரம் அதுதானே?
                     சிதம்பரம் பேருந்துநிலையம் விட்டு வெளியே வந்தது. ராஜிவ் காந்தி சிலையருகில் ஒரு கணவன் மனைவி வண்டியை நிறுத்தி ஏறினார்கள். வண்டி திரும்பி பச்சையப்பா ஸ்கூல் வளைவில் திரும்பி வேகமெடுத்தது. சேகர் வேகமாகவும் அதேசமய்ம நிதானமாகவும் ஓட்டக்கூடியவர். நாராயணன் டிக்கட் போட ஆரம்பித்திருந்தான்.

                       டிக்கட் போட்டுமுடித்துவிட்டு தோளிலிருந்து பணப்பையைச் சரித்து மடியில் வைத்துக்கொண்டு அருகில் உட்கார்ந்தான்.
                        சார் வெயில் படுத்தற பாடு தாங்க முடியல்லே சார்..
                       ஆமாம்...நாராயணன்... சீக்கிரம் சோர்வு ஆயிடுது.
                        உங்களுக்கு ஒரு நாளைக்கு இப்படியிருக்கு சார்.. எங்களப் பாருங்க ஒருநாள்விட்டு ஒருநாள்.. நரக வாழ்க்கை இதுசார்...
                         இக்கரைக்கு அக்கரை பச்சைதான் நாராயணன். அவங்கஅவங்க தொழில்ல ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது, எங்ககிட்ட ஒரு பையன் இருக்கான். அலுவலக உதவியாளர். அவனுக்கு ஒரே பிள்ளை.. இனி பிள்ளையும் பெத்துக்கமுடியாதாம்.. போனவாரம் வைத்தீஸ்வரன் கோயில் வாசல்லேயே மாட்டிக்கிட்டானாம்.. நம்ப பாண்டியன்தான் டிரைவர்..
                        ஓ.. அதானா.. இன்னிக்கு கோர்ட்டுனு பாண்டியன் போனான். பாவம் சார் பாண்டியன் நிதானமாக ஓட்டுவான் சார்... சின்ன ஆடு குறுக்கே வந்துட்டாக்கூட நிறுத்தி ஓட்டுவான். இதான் சார் கடவுள் கணக்கு.. பாண்டியனோட பொண்ணுக்கு அமமை போட்டிருக்கு ச்ர்ர்....இதுலே இன்கிரிமெண்ட் வேற கட்டு.. பழசு கேசு வேற ரெண்டு மூணு சார்..வட்டிக்குக் கடன் வாங்கித்தான் மத்த குடும்பச் செலவுகளைப் பார்க்கணும். சர்ர‘
                           பாண்டியன் எப்போதும் இறுக்கமாக இருப்பதற்கு காரணம் ஊகிக்க முடிந்தது. சாலைவிதிகளை மக்களும் அனுசரிக்கவேண்டும். ஓட்டுநர்களும் அனுசரிக்கவேண்டும். அப்படி சரியாகப் பேணுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எதிர்பாராமல் நடக்கும் விபத்திற்கு எதிர்பார்ப்புடன் இருக்கும் டிரைவர்கள் குடும்பங்களைப் பழி வாங்கிவிடக்கூடாது அல்லவா?

                        சீர்காழி புதிய பேருந்துநிலையத்திற்குள் நுழைந்தது பஸ்.  சேகரு அண்ணே ஒரு அஞ்சு நிமிஷம் போடலாம்.. ஏதும்கூட்டம் வரும்.. முன்னால பவனி போயிட்டிருக்கான்... என்றான் நாராயணன். வண்டி நின்றது. சிலர் மட்டும் ஏறி உட்கார்ந்தார்கள்.
                           சார் தண்ணீ வேணுமா? என்றான்.
                           சமயம் பார்த்து மனசறிந்து கேட்டதுபோல இருந்தது.
                           தா... நாராயணன்...
                           இருங்க அங்க ஒரு கடையிலே பானை தண்ணீ இருக்கும். அதப் புடிச்சுட்டு வர்றேன்...
                           தண்ணி வாங்கிக் குடித்ததும் அத்தனை இதமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை.  தாகத்திற்கு முன்பிருந்த நிலையும்.. தாகம் தணிந்தபின் இருக்கும் நிலையையும் எண்ணிப்பார்க்கையில் கடவுள் கணக்கு என்பது நினைவிற்கு மறுபடியும் வந்தது.

                           அப்போதுதான் அந்த போஸ்ட் மாஸ்ட்டரைக் கவனித்தேன். அவருக்கு என் சீட்டைக் கொடுத்துவிடவேண்டும். சார்.. இங்க வாங்க உக்காரலாம்  என்றேன். பரவாயில்ல சார் என்றார் அவர். நான் பிடிவாதமாக வாங்க சார்.. உக்காருங்க நல்லா காத்து வரும்.. எழுந்து வந்து உட்கார்ந்துகொண்டார். ரொம்ப தேங்ஸ் சார் என்றார்.. கொஞ்சநேரத்தில் சீர்காழியைவிட்டு வெளியேறியது பேருந்து. போஸ்ட் மாஸ்ட்டர் வெற்றிலை மடிக்க ஆரம்பித்தார். அவர் மடிப்பது அழகாக இருந்தது. மடித்து முடித்ததும் இந்தாங்க சார்... என்று நீட்டினார். எனக்குப் பழக்கமில்லை சார் என்றேன்.
                           ஒருநாளைக்குப் போடுங்க சார்.. மனசுக்கு நிம்மதியாக இருக்கம் என்றார்.
                           நான் மனநிம்மதி இழக்கவில்லையே என்று அவரிடம் சொல்லத் தோணியது ஆனால் சொல்லவில்லை. அவர் பீடா போல மடித்துக் கொடுத்த வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தேன். ஏனோ அன்றைக்கு அது அத்தனை சுகமாக இருந்தது.  அவரிடம் நன்றி சார் என்றேன். வெற்றிலைச் சிவப்பேறிய பற்களைக் காட்டி சிரித்தார்.
                          வைத்தீஸ்வரன் கோயில் சன்னதி வந்தபோது கனகலிங்கத்தின் முகம் தெரியாத மகன் நினைவுக்குள் நிழலாக வந்துபோனான். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
                           சோழசக்கர நல்லுர்ர் திருப்பத்தில் நாலைந்து போக்குவரத்து ஊழியர்கள் டியுட்டிக்கு செல்வதற்காகப் பேருந்தை நிறுத்தி ஏறினார்கள்.
                          நாராயணா எப்படியிருக்கே? என்றார்கள்.
                          நல்லாயிருக்கேன்.. என்றான்.
                          எங்க உன் தோஸ்த்து குரஙகு நாகராஜன் என்றார்கள்.
                         என்னண்ணே தெரியாதா உங்களுக்கு என்றான் நாராயணன்.
                         என்னாச்சு?
                         போனவாரம் திருவையாறு போகும்போது நல்லா போதை நம்ப மொபசல் வண்டிதான்.. பிரண்ட வீல்ல மாட்டிட்டான். ஸ்பாட்டுலேயே உயிர் போயிடிச்சு.. இத்தனைக்கு அவனுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்து வேலை வாங்கிக்கொடுத்த ராமுதான் அந்த பஸ்சுக்கு டிரைவர். என்ன கொடுமை பாருங்க..

                       அடக்கடவுளே.. சின்னவயசுப்பா.
‘                     சின்ன வயசுதான். ஆனா அவன் செய்யாத அக்கிரமா?
பொழுதன்னிக்கும் பான் பராக். வண்டியவிட்டு இறங்கினா மொடாக்குடி.
கடவுள் கணக்கு சரியாம்தா இருக்கு என்றார் ஒரு ஓட்டுநர்.
                       சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தேன்.
                       பேருந்து ஓடிக்கொண்டிருந்தது நாராயணன் அந்தக் கூட்டத்தோடு உட்கார்ந்து வேறு கதை போக்குவரத்து நிலவரங்கள் குறிதது நடந்துகொண்டிருநத்து.
                        வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன்.  மேகம் மறைத்த வெயில் தணிவாக இருந்தது.
                         துர்க்கம் வருவதுபோலிருந்தது லேசாக கண்களை மூடிக்கொண்டேன்.

                         மறுபடியும் இதென்ன கடவுள் கணக்கு என்றபோது பெரியகோயில் மேம்பாலத்தில் பேருந்தில் அடிபட்டு இறந்துபோன தங்கவேல் மாமா நினைவில் வந்துபோனார். அம்மாவின் கடைக்குட்டி சின்னம்மா பையன் அவர்.
               
                                                                                                (பேருந்து ஓடும்)
                                                                                           
             











Tuesday, May 1, 2012

மனச்சித்திரம்



       1.  அலெக்ஸ் பால் மேனன் ஒரு பொறுப்பான உயர்பதவியில்
            இருப்பவர் என்பதைவிட அடிப்படையில் ஒரு மனிதர்.
            அவரின் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது. மாவோயிஸ்டுகள்
             யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உடனடியாக
            அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான்
            மிக முக்கியமானது. பேச்சு வார்த்தை நடத்துகிறோம்..பேசிக்
            கொண்டிருக்கிறோம்.. வழக்கம்போல குழு அமைத்திருக்கிறோம்.
            இவையெல்லாம் ஒரு உயிருக்கு முன்னர் அர்த்தமற்றது.
            உடல்நலமில்லாத ஆஸ்மா  தாக்குதலுக்குள்ளவரை.. உடனடி
            யாகக் காப்பாற்றுதல்தான் பொறுப்பான அதிகாரியாக இருந்து
            இந்த தேசத்திற்காகக் கடமைதவறாது பணியாற்றும் அவருக்கு
            நாம் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும். மனசு தவிக்கிறது.
            அலெக்ஸ் பால்மேனன் விரைவில் வாருங்கள் நலமுடன்.



       2.  யாருமே யாராகவும் இல்லை. யாருமே நேராகவும் இல்லை.
           தேரோடும் வீதியில் வசிப்பவனுக்கு தேரின் அருமை தெரிய
           வில்லை. கடுகு சிறியது காரமானது என்பது ஊரறிந்தது. எனவே
           தான் சிறியவரிடத்து பதவி வழங்கப்படும்போது அது அதி-காரமாக
           உள்ளது. வலிய போய் செய்கின்ற உதவிகள் உதவாக்கரைகளைப்
           போல பலனற்றுப்போகின்றன. தகுதியற்றவனுக்கு உரிய எந்த
           ஒன்றையும் அவன் போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது.
            வாழையிலை அழகாக உள்ளது. எச்சில் இலையாக வெளியே
           எறியப்படும்போது அதன் வாழ்வியல் குறித்து யாரும் கவலை
            கொள்வதில்லை. தகைமையற்றவர்கள் உலகமெங்கும் நிரம்பி
           வழிகிறார்கள் கொசுக்களைப்போல. வயதானவர்கள் வாழ்வது
           வீணென்று அவர்களிடமே முகத்தில் அறைந்துசொல்கிற தலை
           முறை சரியாக இலக்கு இல்லாமல் இழப்பை ஈடுகட்டமுடியாத
            அழிவைநோக்கி நகர்ந்துபோகிறார்கள் யாரும்  காப்பாற்றமுடியாமல்.
            யாரேனும் ஒரு அழகான அர்த்தமுள்ள அற்புதக் கவிதையை
            எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்தபடியே
            அது யாரின் பிரசுரத்திற்கும் ஆளாவதில்லை.

                         இப்போதுள்ள குழந்தைகளுக்கு மண் வாசனை இல்லை.
             தொலைக்காட்சியெனும் தொற்றுநோய் அவர்களின் கண்களைக்
              கெடுக்கிறது. சோம்பலை அள்ளிப் பூசுகிறது. கவனமின்மையை
             உருவாக்குகிறது. கல்லைப்போல இருந்த இடத்திலேயே கட்டிப்
             போடுகிறது மிருகங்களைப் பழக்குவதுபோல குழந்தைகள்
             பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

                                                                                                   (வரைவேன்)

              இம்மாதம் உண்மை பத்திரிக்கையில் வெளிவந்த கவிதைகள்

                யாரேனும்
                கிள்ளினால்தான்
                வலிக்கும்
                இப்போது கிளறினாலே
                வலிக்கிறது
                தொட்டால்தான் சுடும்
                இப்போது
                சொன்னாலே சுடுகிறது
                அறைந்தால்தான்
                கண்ணீர் வரும்
                இப்போது
                பார்த்தாலே கண்ணீர்
                வருகிறது.
                வாழ்தலே வாழ்க்கை
                இப்போது
                வாழாதிருத்தலே வாழ்க்கை...

                000000

                 எல்லாவற்றையும்
                 செய்வதற்கு
                 நேரம் ஒதுக்குகிறோம்
                 எதையுமே செய்யாமல்தான்
                 எல்லா நேரமும்
                  ஒதுங்கிவிடுகிறது
                  கசடுகளைபபோல

                 000000

                  தொடர்ந்து
                  ஒலித்துக்கொண்டிருக்கும்
                  தொலைபேசியை
                   யாரும்
                   உடனே
                   எடுத்துவிடாதீர்கள்
                   எடுக்காமலும்
                   இருந்துவிடாதீர்கள்...

                  00000

                  வாழ்வின் எல்லாக்
                  கேள்விகளையும்
                  கேட்டுவிடுகின்றன
                   நொறுங்கநொறுங்க
                  சருகுகளின் மீது
                  நடக்கும்போது...

                   000000

                            (நன்றி / உண்மை மாதமிருமுறை இதழ் / மே.2012)