கடவுளின் கணக்கு என்று அடிக்கடி எல்லோருமே சொல்வார்கள். சாதாரண கணக்கே பலருக்கு வேப்பங்காயாக இருக்கும்போது கடவுளின் கணக்கு எப்படி பிடிக்கும். இருந்தாலும் அதுபற்றிய ஒரு பயம் அல்லது எதிர்பார்ப்பு எல்லோரிடத்தும் இருக்கத்தான் செய்கிறது.எப்போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்று யாரும் அறியமுடிவதில்லை. அலுவலகத்தில் நுழைந்தபோதே கனகலிங்கம் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக அவனைப் பார்க்கமுடியவில்லை. விடுப்பில் இருந்திருக்கவேண்டும். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னான். நானும் பதிலுக்கு சொல்லிவிட்டு
என்ன கனகலிங்கம் ஆள் ரொம்ப டல்லா இருக்கே? ரொம்ப நாள்
வீவு போலருக்கு என்றேன்.
ஆமா சார்... என்றான் அதற்குமேல் பேச்சைத் தொடர விரும்பாதவன் போல...
என்னாச்சு கனகலிங்கம்? என்று அழுத்திக் கேட்டவுடன் ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு கடகடவென அழுதான்.. எனக்குச் சங்கடமாகிவிட்டது.
எதுக்கு கனகலிங்கம் அழறே? என்றேன்.
என் பையன் செத்துப்போயிட்டான் சார் என்றான்.
என்ன சொல்றே கனகலிங்கம்? என்றேன் பதறியபடி.
ஆமா சார் போனவாரம் ஞாயிற்றுக்கிழமை. ஒரே பையன் சார். அதுக்கு மேல எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க சார்.. ஒரு பையன்தான் இருந்தான் சார்.. அவனும் செத்துப்போயிட்டான். எங்க வீட்டுலே இன்னும் சாப்பிடலே சார்.. அழுதுகிட்டேயிருக்காங்க.. ஏற்கெனவே நான் லாஸ் ஆப் பே சார்.. அதான் வேலைக்கு வந்துட்டேன். சார் என்றான்.
என்ன ஆச்சு?
ரோடு ஆக்ஸிடெண்ட் சார்....
எங்கே?
வைத்தீஸ்வரன் கோயில்ல.. சன்னதி வாசல்லேயே சார்... பஸ்ஸைவிட்டு இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணலாம்னு இருந்தோம் சார்.. சட்டுனு நான் போறேன் முன்னாலன்னு கைய உருவிட்டு ஓடுனா சார்.. சிதம்பரத்துலேர்ந்து வர்ற பஸ்.. வெள்ளைக்கலரு... கவனிக்கலே...அப்படியே உடம்பு மேல வண்டி ஏறிடிச்சி.. எங்க கண்முன்னாடியே புள்ள துடிச்சு செத்துப்போயிட்டான் சார்...என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதான்.
என்ன வயது கனகலிங்கம்?
ஆறாவது படிக்கிறான் சார்,
என்னால் எதுவும் பேசமுடியல்லே.. ஒருமுறை கனகலிங்கத்தைப் பார்த்தேன்.. ஒரே பிள்ளை அவனுக்கும் இந்தக்கதி... கனகலிங்கம் பேசினான்.
நீஙக் டெய்லி வருவீங்களே சார்.. அந்த வெள்ளை வண்டிதான்.
மனசு அதிர்ந்தது. ஒருவேளை நான் போயிருந்தால்.. கனகலிங்கத்தின் மேல் ஏறிய பேருந்தின் கணத்தில் என்னுடைய எடையும் அல்லவா சேர்ந்திருக்கும். இருந்தும் உறுத்தியது.
அன்றைக்கு பாண்டியன் வருவார். கண்டக்டர் மட்டும் மாறும். ஜெயக்குமார் திங்கட்கிழமை டூயுட்டி..
கனகலிங்கம் போய்விட்டான். தொணதொணவென்று பேசுவான். எதிர் வாதம் புரிவான். சொன்ன வேலைகளைச் செய்வான். ஒரு மணிக்குச் சொனன்ல் எதுவும் கேட்கமாட்டான். நான் சாப்பிடப்போறேன் சார்.. இது லஞ்ச் டைம் சார்... வந்து செய்யறேன் என்று நம்முடைய பதிலைக்கூட எதிர் பாராமல் போய்விடுவான்.
அலுவலக உதவியாளன்தான் கனகலிங்கம். அவனுடைய வேலைகள் அதிகம். சம்பளம் சொற்ப சம்பளம்தான். ஒரு பிள்ளை அது ஏன் நிற்கவில்லை அந்தக் குடும்பத்திற்கு. இதற்கு நதி மூலம் என்ன? ரிஷிமூலம்தான் என்ன? இனி எத்தனை காலம் அவர்களுக்கு ஆயுள் போட்டிருக்கிறதோ அதுவதை பேசிப்பேசி அழியவேண்டுமா? இது என்ன கடவுளின் கணக்கு?
மதியம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மணி இரண்டரை. வழக்கத்தைவிட்க் குறைவாக இருந்தது கூட்டம். கத்தரி வெயில் நறுக்கிக் கொண்டிருந்தது, கடலுர்ர் வண்டி காத்துக்கிடந்தது.
நாராயணன் இருந்தான். என்னைப் பார்த்ததும்... சார்.. வணக்கும் நீங்க எப்படியும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். சீட்டுப் போட்டுட்டேன் சார். உக்காருங்க். ரெண்டு நாப்பத்திரண்டு நம்ப டைம். இன்னும் வேற வண்டி வர்லே அதான் போயிடலாம்.
சரியாக 2.42க்கு வண்டியை எடுத்தார்கள். டிரைவர் சேகர் வணக்கம் சொன்னார்.
வண்டிக்குள் நாலைந்து பேர்கள்தான் உட்கார்ந்து இருந்தார்கள்.
என்ன நாராயணன் கூட்டமே இல்லை.
இன்னிக்கு அப்படித்தான் சார்... முகூர்த்த நாள் கிடையாது. நாலை
ஞசு மெட்ராஸ் வண்டி வரும். நாலு மணிக்குத்தான் கூட்டம் வரும். காலேஜ் விடுற நேரம் அதுதானே?
சிதம்பரம் பேருந்துநிலையம் விட்டு வெளியே வந்தது. ராஜிவ் காந்தி சிலையருகில் ஒரு கணவன் மனைவி வண்டியை நிறுத்தி ஏறினார்கள். வண்டி திரும்பி பச்சையப்பா ஸ்கூல் வளைவில் திரும்பி வேகமெடுத்தது. சேகர் வேகமாகவும் அதேசமய்ம நிதானமாகவும் ஓட்டக்கூடியவர். நாராயணன் டிக்கட் போட ஆரம்பித்திருந்தான்.
டிக்கட் போட்டுமுடித்துவிட்டு தோளிலிருந்து பணப்பையைச் சரித்து மடியில் வைத்துக்கொண்டு அருகில் உட்கார்ந்தான்.
சார் வெயில் படுத்தற பாடு தாங்க முடியல்லே சார்..
ஆமாம்...நாராயணன்... சீக்கிரம் சோர்வு ஆயிடுது.
உங்களுக்கு ஒரு நாளைக்கு இப்படியிருக்கு சார்.. எங்களப் பாருங்க ஒருநாள்விட்டு ஒருநாள்.. நரக வாழ்க்கை இதுசார்...
இக்கரைக்கு அக்கரை பச்சைதான் நாராயணன். அவங்கஅவங்க தொழில்ல ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது, எங்ககிட்ட ஒரு பையன் இருக்கான். அலுவலக உதவியாளர். அவனுக்கு ஒரே பிள்ளை.. இனி பிள்ளையும் பெத்துக்கமுடியாதாம்.. போனவாரம் வைத்தீஸ்வரன் கோயில் வாசல்லேயே மாட்டிக்கிட்டானாம்.. நம்ப பாண்டியன்தான் டிரைவர்..
ஓ.. அதானா.. இன்னிக்கு கோர்ட்டுனு பாண்டியன் போனான். பாவம் சார் பாண்டியன் நிதானமாக ஓட்டுவான் சார்... சின்ன ஆடு குறுக்கே வந்துட்டாக்கூட நிறுத்தி ஓட்டுவான். இதான் சார் கடவுள் கணக்கு.. பாண்டியனோட பொண்ணுக்கு அமமை போட்டிருக்கு ச்ர்ர்....இதுலே இன்கிரிமெண்ட் வேற கட்டு.. பழசு கேசு வேற ரெண்டு மூணு சார்..வட்டிக்குக் கடன் வாங்கித்தான் மத்த குடும்பச் செலவுகளைப் பார்க்கணும். சர்ர‘
பாண்டியன் எப்போதும் இறுக்கமாக இருப்பதற்கு காரணம் ஊகிக்க முடிந்தது. சாலைவிதிகளை மக்களும் அனுசரிக்கவேண்டும். ஓட்டுநர்களும் அனுசரிக்கவேண்டும். அப்படி சரியாகப் பேணுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எதிர்பாராமல் நடக்கும் விபத்திற்கு எதிர்பார்ப்புடன் இருக்கும் டிரைவர்கள் குடும்பங்களைப் பழி வாங்கிவிடக்கூடாது அல்லவா?
சீர்காழி புதிய பேருந்துநிலையத்திற்குள் நுழைந்தது பஸ். சேகரு அண்ணே ஒரு அஞ்சு நிமிஷம் போடலாம்.. ஏதும்கூட்டம் வரும்.. முன்னால பவனி போயிட்டிருக்கான்... என்றான் நாராயணன். வண்டி நின்றது. சிலர் மட்டும் ஏறி உட்கார்ந்தார்கள்.
சார் தண்ணீ வேணுமா? என்றான்.
சமயம் பார்த்து மனசறிந்து கேட்டதுபோல இருந்தது.
தா... நாராயணன்...
இருங்க அங்க ஒரு கடையிலே பானை தண்ணீ இருக்கும். அதப் புடிச்சுட்டு வர்றேன்...
தண்ணி வாங்கிக் குடித்ததும் அத்தனை இதமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை. தாகத்திற்கு முன்பிருந்த நிலையும்.. தாகம் தணிந்தபின் இருக்கும் நிலையையும் எண்ணிப்பார்க்கையில் கடவுள் கணக்கு என்பது நினைவிற்கு மறுபடியும் வந்தது.
அப்போதுதான் அந்த போஸ்ட் மாஸ்ட்டரைக் கவனித்தேன். அவருக்கு என் சீட்டைக் கொடுத்துவிடவேண்டும். சார்.. இங்க வாங்க உக்காரலாம் என்றேன். பரவாயில்ல சார் என்றார் அவர். நான் பிடிவாதமாக வாங்க சார்.. உக்காருங்க நல்லா காத்து வரும்.. எழுந்து வந்து உட்கார்ந்துகொண்டார். ரொம்ப தேங்ஸ் சார் என்றார்.. கொஞ்சநேரத்தில் சீர்காழியைவிட்டு வெளியேறியது பேருந்து. போஸ்ட் மாஸ்ட்டர் வெற்றிலை மடிக்க ஆரம்பித்தார். அவர் மடிப்பது அழகாக இருந்தது. மடித்து முடித்ததும் இந்தாங்க சார்... என்று நீட்டினார். எனக்குப் பழக்கமில்லை சார் என்றேன்.
ஒருநாளைக்குப் போடுங்க சார்.. மனசுக்கு நிம்மதியாக இருக்கம் என்றார்.
நான் மனநிம்மதி இழக்கவில்லையே என்று அவரிடம் சொல்லத் தோணியது ஆனால் சொல்லவில்லை. அவர் பீடா போல மடித்துக் கொடுத்த வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தேன். ஏனோ அன்றைக்கு அது அத்தனை சுகமாக இருந்தது. அவரிடம் நன்றி சார் என்றேன். வெற்றிலைச் சிவப்பேறிய பற்களைக் காட்டி சிரித்தார்.
வைத்தீஸ்வரன் கோயில் சன்னதி வந்தபோது கனகலிங்கத்தின் முகம் தெரியாத மகன் நினைவுக்குள் நிழலாக வந்துபோனான். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
சோழசக்கர நல்லுர்ர் திருப்பத்தில் நாலைந்து போக்குவரத்து ஊழியர்கள் டியுட்டிக்கு செல்வதற்காகப் பேருந்தை நிறுத்தி ஏறினார்கள்.
நாராயணா எப்படியிருக்கே? என்றார்கள்.
நல்லாயிருக்கேன்.. என்றான்.
எங்க உன் தோஸ்த்து குரஙகு நாகராஜன் என்றார்கள்.
என்னண்ணே தெரியாதா உங்களுக்கு என்றான் நாராயணன்.
என்னாச்சு?
போனவாரம் திருவையாறு போகும்போது நல்லா போதை நம்ப மொபசல் வண்டிதான்.. பிரண்ட வீல்ல மாட்டிட்டான். ஸ்பாட்டுலேயே உயிர் போயிடிச்சு.. இத்தனைக்கு அவனுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்து வேலை வாங்கிக்கொடுத்த ராமுதான் அந்த பஸ்சுக்கு டிரைவர். என்ன கொடுமை பாருங்க..
அடக்கடவுளே.. சின்னவயசுப்பா.
‘ சின்ன வயசுதான். ஆனா அவன் செய்யாத அக்கிரமா?
பொழுதன்னிக்கும் பான் பராக். வண்டியவிட்டு இறங்கினா மொடாக்குடி.
கடவுள் கணக்கு சரியாம்தா இருக்கு என்றார் ஒரு ஓட்டுநர்.
சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தேன்.
பேருந்து ஓடிக்கொண்டிருந்தது நாராயணன் அந்தக் கூட்டத்தோடு உட்கார்ந்து வேறு கதை போக்குவரத்து நிலவரங்கள் குறிதது நடந்துகொண்டிருநத்து.
வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். மேகம் மறைத்த வெயில் தணிவாக இருந்தது.
துர்க்கம் வருவதுபோலிருந்தது லேசாக கண்களை மூடிக்கொண்டேன்.
மறுபடியும் இதென்ன கடவுள் கணக்கு என்றபோது பெரியகோயில் மேம்பாலத்தில் பேருந்தில் அடிபட்டு இறந்துபோன தங்கவேல் மாமா நினைவில் வந்துபோனார். அம்மாவின் கடைக்குட்டி சின்னம்மா பையன் அவர்.
(பேருந்து ஓடும்)
இந்தப்பகுதியில் கனம் அதிகம் ஹரணி சார். மனம் விட்டுப்போக நாளாகும்.
ReplyDeleteகனகலிங்கத்தின் மகன் இறந்ததைப் படித்தபோது பாடகி சித்ராவின் குழந்தை நினைவுக்கு வந்து படுத்துகிறது. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை, அதுவும் குறைபாட்டுடன். ஆனாலும் தங்கவில்லையே. எட்டுவருடங்கள் அன்பைப் பொழிந்துவிட்டு ஒருநாள் மறைந்துவிட்டதே. இதென்ன கடவுள் கணக்கு?
கடவுள் கணக்கு மனதை வெகுவாக உறுத்துகின்றது.
ReplyDeleteஅலுவலக கணக்கு முடிப்பில் திணறி சற்றே பெருமூச்சு விட்ட எனக்கு இப்போதுதான் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு.. கணக்கு மனசில் கனக்குது..
ReplyDeleteபேருந்துகள் எங்கும் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
ReplyDeleteஅன்புள்ள...
ReplyDeleteகீதமஞ்சரி...
கரந்தை ஜெயக்குமார்
ரிஷபன்
விமலன்
மனமார்ந்த நன்றிகள் வருகைக்கும் கருத்துரைக்கும்.