Friday, June 28, 2013

கொஞ்சம் ஹைக்கூ....அப்புறம் ஒரு சிறுகதை




               
         
             
                0000

                மீந்திருக்கட்டும்
                எலிப்பொறி வேண்டாம்
                சோறும் அதன் வாழ்க்கையும்...

                0000

                கலைகின்றன
                மேகங்களும் மோகங்களும்
                அடர் இரவு..

                0000

                 பழம் விற்கிறாள்
                 பல்லாண்டுகளாய்
                 கனியாதிருக்கிறது வாழ்க்கை...

                 0000

                 கவனிப்பற்ற நிராகரிப்பில்
                 எரிந்து அடங்குகிறது மெழுகுவர்த்தி
                 யேசு முன்பு,,

                 0000

                  பக்தி வெள்ளம்
                  கரையுடைக்கிறது
                  நதியும் விதியும்

                 0000

                                                                    கௌரி (சிறுகதை)

                                               
                                     மூலையில் இருந்தன மண்ணெண்ணெய் டின்னும் ஒரு தீப்பெட்டியும்.
                                      அதை உற்றுப் பார்த்தாள் கௌரி.

                                     அதுபோதும் தன்னை எரிப்பதற்கும் உயிர் போவதற்கும்,

                                     உடம்பு எரியும்போது வலிக்கும். தாங்க முடியாத வலியிருக்கும். அதைவிட மனத்தில் இருக்கிறது.

                                     எல்லாம் தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள்.
பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.

                                     பிடிக்கவில்லை என்பதற்காக சாக முடிவெடுக்கவில்லை.

                                      அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசி அதைக் காரணம் சொல்லி பேசிவிட்டுப்போகிறார்கள்.

                                      அப்பர் என்கிற ஒரு மிருகம் இருந்தும் கெடுத்தது, அம்மாவை உதறிவிட்டுப் போயும் கெடுக்கிறது.

                                      எப்படி எதுவுமில்லாமல் இப்படி பெண்ணை வளர்த்திருக்கமுடியும்?

                                      இவளின்அம்மா சரியில்லை என்றுதானே கணவன் விட்டுவிட்டுப்போனான்.

                                     உண்மை அதுவல்ல.

                                     அவனுக்கிருந்த பல பெண்களின் உறவால்கூட அம்மா விலகவில்லை. ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு வாய் குடிக்கும் அம்மாவைப் போகச்சொன்னான் பதிலாக.

                                      அன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாகப்போகிறோம் நானும் என் பெண்ணும் என்று மிரட்ட ஓடிபபோனான். அதை சாக்காக வைத்துக்கொண்டு எண்ணெய் உடலோடு மகளோடு ஓடிவந்தாள் இந்த உலகில் வாழ.

                                        இதுதான் உண்மை.

                                        எதுவுமற்றவள் உண்மை எப்போதும் ஏற்றம் பெறுவதில்லை. அது நம்பப்படுவதுமில்லை.

                                        தன்னை உருக்கி எரியும் மெழுகுவர்த்திபோல அம்மா கௌரியை வளர்த்திருக்கிறாள்.

                                        ஆனால் விதி துரத்துகிறது.

                                        சொற்களால் துரத்துகிறது.

                                        அதில் நெருப்பைத் தடவியபடி துரத்துகிறது.

                                       என்ன செய்வாள் பாவம்.

                                        ஆகவேதான் கௌரி இந்த முடிவை எடுத்தாள்.

                                        நெடுநேரம் யோசித்தாள்.

                                        முன்புபோல் இல்லை. இப்போது வரிசை எண் கொடுத்து டோக்கன் கொடுத்திருக்கிறார்கள்.

                                         அந்த டோக்கன்படிதான் மண்ணெண்ணெய் தருகிறார்கள்.
                               
                                         காலையில் வெறும் வயிற்றில் பழையசோற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டுப்போய் மாலையில்தான் இந்த மண்ணெண்ணெய் வாங்கிவருகிறாள்.

                                      இதை வைத்துதான்  விறகடுப்பில் எல்லாம் முடியும.

                                      தான் ஊற்றிக்கொண்டு எரிந்துவிட்டால் அம்மா பட்டினிதான் கிடப்பாள்.

                                       செத்துப்போன என்னை நினைப்பாளா? தன்னை நினைப்பாளா? எதுவுமே தெரியாமல் துடிக்கும் தன் வயிற்றை நினைப்பாளா?

                                      யோசித்தாள்,

                                      சரி அம்மா இன்றைக்கு சமைக்கட்டும். வயிறு நிரம்பச் சாப்பிடட்டும். மண்ணெண்ணெய் மிச்சமிருந்தால் சாவது பற்றி யோசிக்கலாம்.

                                      அவமானம்தான்.

                                     அம்மா படாத அவமானமா?

                                     போதும். அவளின் துன்பம் தணியவேண்டும்.

                                     சரியென்று  யோசித்து நாளை சாகலாம் என்று முடிவெடுத்தாள் கௌரி.

                                     அரசு தன்னையறியாமல் ஏழை மக்களுக்கு செய்கிற உதவியிது.
               


                 
               
                

Sunday, June 23, 2013

ஜால்ரா குறுந்தொடர்,,,,,5






                             கோயில் பிரகாரத்தில் ஜமக்காளம் விரித்திருந்தார்கள்.

                             பெரும்பாலும் ஆண்கள். நாலைந்து பெண்கள் நடுத்தரவயதில் உட்கார்ந்திருந்தார்கள்.

                             வேணுகோபால்தான் பேச்சைத் தொடங்கி வைத்தார்.

                             கும்பாபிஷேகம் நடத்தணும். எதிர்பார்த்தபடி கலெக்ஷன் வரலே. ரொம்ப வருஷமாச்சு.. தெருவுலேயும் நாலைந்து இழவு விழுந்துடிச்சி. சீக்கிரம் நடத்திடறதுதான் நல்லது. என்ன பண்ணலாம் அவஙக் அவங்க யோசனையை சொல்லுங்க..

                              எங்க பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க தந்திடறோம்..

                              இது என்ன சொத்தா. பங்குபோட்டு பராமரிக்கிறது. இது கடவுள் காரியம். ஆளுக்கு ஒரு செலவை ஏத்துக்கிட்டா மெயின் செலவு சமாளிச்சுடலாம்.. கும்பாபிஷேகச் செலவுக்கு மத்த தெருவுக்கு வசூலுக்குப் போவலாம்..
                               அதையும் யாருக்கு எதுன்னு சொல்லிடுங்க.

                               ஏங்க இது என்னங்க நான் சொல்றது. அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது. அதுக்கேத்தபடி ஏத்துக்கங்க.

                               உள்ளே தளம் போட்டு டைல்ஸ் போடணும். வெளிச்சுவரு காரை பேந்துபோய் கெடக்கு.. அதை சீர்பண்ணி டைல்ஸ் ஒட்டணும்.. பெயிண்ட் செலவு இருக்கு. கோபுரத்துல போனவந்தத சீர்பண்ணனும்.. விளக்கு இருக்கு. எதஎதது யாருக்கு ஒத்துவருமோ செஞ்சுக்கலாம்.

                                 பூசை சாமான்கள்ல பலது குறையுது,,

                                 என்ன என்ன கொறையுது?

                                 துர்வாக்கால் இல்ல... சூடம் ஏத்துறது இல்லே... சின்ன சின்ன பித்தளை தட்டுங்க கெடந்துச்சு,, இப்படி பல கொறையுது,,

                                 சாமி சிலையே பல கொறையுது,, வேணுகோபால் பேசினார்.

                                 என்ன சாமி சிலைங்க இருந்துச்சி சொல்லுங்க... என்றார் தாமோதரன்.
                                 எனக்கு விவரம் தெரிஞ்சு இருந்த சின்ன சிலைங்க பல காணும். எங்க தாத்தாவுக்கு அப்பா வாங்கி வச்சது.. அதுல ஒண்ணே ஒண்ணு சம்பநத்ரோடது,, அதக் காப்பாத்தி வீட்டுல வச்சிட்டுப்போனாரு எங்கப்பாரு..

                                 அத ஏன் உங்க வீட்டுல வச்சிருக்கீங்க?
                                 கோயில்ல பாதுகாப்பு இல்லன்னுதான்.. ரெண்டு தடவை கோயில் கேட்ட ஒடச்சிருக்காங்க.. அதனால எங்கப்பா வீட்டுல கொண்டு வந்து வச்சிட்டாரு... முக்கிமான விஷேசமான  நாளுஙக்ல கோயிலுக்கு எடுத்திட்டு வருவாரு...

                                    நல்ல கேட் ஸ்ட்ராங்கா போட்டு நல்ல பூட்டுப் போட்டுடுவோம்..
                                    தாராளமா செய்யுங்க.. ஆனா அது ஐம்பொன் சிலை,,  அதான் தயக்கமா இருக்கு..
                                    எல்லா சிலையும் ஐம்பொன்னு சிலைதான்..
                                    அதுலதான் சந்தேகமாக இருக்கு.. அத சரிபார்க்கணும்..
                                    என்ன அர்த்தத்துலே பேசறிங்க?
                                    எந்த அர்த்தமும் இல்ல,, இங்க இருந்த பல சாமர்னுங்க..சின்ன சின்னதா ஐம்பொன்னு காலப்போக்குல போயிடிச்சி...
                                    எப்ப போச்சு?
                                    சன்னமாப் போயிடிச்சி..
                                    நாங்க அஞ்சு வருஷம் பாத்திருக்கோம்.. அப்ப என்ன இருந்துச்சோ அது அப்படியே இருக்கு,,, என்றார் தாமோதரன்.
                                    அததான் சரிபார்க்கணும்னு சொல்றேன்.
                                     என்ன சநதேகப்படறியா நீ? எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னோடது தெரியுமா? தாமோதரன் ஆத்திரப்பட்டார்.
                                     சந்தேகம் இல்ல. ஆனா உண்மை தெரியணும் எல்லோருக்கும்.
                                     என்ன வேணுகோபால் பொத்தாம் பொதுவுல இப்படி குற்றம் சொல்றீங்க?
                                   ஒண்ணு சொல்றேன் கேளுங்க.. இதுவரைக்கும் ஆளுங்க இங்கவந்துதான் இந்த சிலைங்களுக்கு பாலிஷ் போடறது நடந்திருக்கு. அது எங்கப்பா இருக்கறவரைக்கு. பாலிஷ் போடறப்ப தெருக்காரங்க நாலைஞ்சு பேரு சாட்சியிருப்பாங்க.. எங்க பொறுப்பு மாறினதும் சிலைங்க எல்லாம்  மூலவரத் தவிர மத்தது  பாலிஷ் போட வெளியே போச்சு.. திரும்பிவரும்போது அது எப்படி இருந்துச்சின்னு தெரியாதுல்ல..
                                     செருப்பால அடிப்பேன் நாயே.. திமிரா.. என்குடும்பம் திருட்டுக் குடும்பம்னு சொல்றியா.. நீங்க டிரஸ்ட் பார்த்த யோக்கியதைதான் ஊருக்கே தெரியுமே? அதனால எங்கப்பா சண்ட போட்டு டிரஸ்டிய மாத்தி தான் பார்த்தாரு..

                                    ஒழுங்கா பேசுடா நாயே,, நான் அடிச்சேபுடுவேன்,,

                                    வேணுகோபாலும் தாமோதரனும் நேருக்கு நேர் எழுந்து ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தார்கள்.
 
                                     என்னப்பா இது கோயிலா? என்ன? நாங்க எதுக்கு இங்க இருக்கோம்? பழச விடுங்கப்பா.. சாமி சொத்த யார் தின்னிருந்தாலும் அத சாமி பாத்துக்கும் ஆக வேண்டியத பாருங்க..
     
                                       இவ வீட்டுலே வசசிருக்கிற சிலை ஐம்பொன்னுன்னு எப்படி நம்பறது? தாமோதரன் கேட்டார்.

                                      அது எங்க முப்பாட்டன் செஞ்சது.. யார வேணாலும் அழைச்சிட்டு வந்து பரிசோதிச்சுக்கலாம்.. இருங்க வரேன்.. என்றபடி எழுந்துபோய் இரண்டுபேராய் அந்த ஞானசம்பந்தர் சிலையைக் கொண்டு வந்து கோயில் வைத்தார்.

                                 என் பாரம் கொறஞச்து.. இனி இந்த சிலை ஒங்க பொறுப்பு.. என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. சோதிச்சும் பாத்துக்கங்க...

                                  சிலை கையிலே இருந்துச்சே அந்த ஜால்ரா என்ன ஆச்சு? அதுவும் ஐம்பொன்னுதான்..

                                    அது காணாமப் போனதாலதான் எங்கப்பா சிலையும் போயிடும்னு பயந்து வீட்டுக்குத் துர்க்கிட்டு வந்துட்டாரு.

                                    எனக்குத் தெரிஞ்சு தினமும் கோயிலை கூட்டிப் பெருக்கறது அந்த தனம்தான்.. ஜால்ரா அப்பத்தர்ன் காணாமப்போனது..

                                     அடப்பாவி அந்த பொம்பள அப்பாவி.. அதுமேல பழிய போடாத,,,
                                     ஏன் அத ஏமாத்தி கொறச்ச விலைக்கு  வீட்டை வாங்கிட்டியே அதனால சப்ப கட்டுறியா?

                                     நான் ஏமாத்தி வாங்கல்லே.. இந்த வலம்புரி விநாயகருக்குத் தெரியும்.. அதுவா மருமவனுக்கு விபத்துன்னு.. வித்துட்டு வைத்தியம் பார்க்கப்போறேன்னிச்சு.. அதான் வாங்கி உதவினேன்.

                                      அய்யய்யோ விடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்துப் பெரிசா இருக்கு.. எது நடந்தாலும் விடுங்க.. இனி ஆகவேண்டியத்ப் பாருங்க.. ஆளுக்கு ஒரு பொறுப்ப எடுங்க.. இந்த முதக் கூட்டமே ஒண்ணுமில்லேன்னா ஒரு காரியமும் பார்க்கமுடியாது.

                                      நான் கடைசிவரைக்கும் ஆகிற சிமெண்ட் செலவு என்னோடது.
                                      நான் டைல்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன்.

                                      விளக்குங்க.. தண்ணி போர் செலவு என்னோடது..

                                      தட்டுமுட்டுப் பித்தளை சாமான் நான் வாங்கித் தநதுடறேன்.

                                      மத்த மத்த காரியத்துக்கு ஐயரே,, பட்டியல் போடுங்க.. தெருத்தெருவா வசூலுக்குப் போகலாம்.. தினமும் நாலு பேராச்சும் போவணும்..

                                      அதுக்கென்ன போகலாம்.

                                      சரி ஐயரே,, தீபாராதனைக் காமிங்க.. கூட்டத்த இத்தோட முடிச்சுக்கலாம்.. அடுத்தக் கூட்டத்தில பாத்துக்கலாம்..

                                   எல்லோரும் எழுந்தார்கள்.

                                   வேணுகோபால் தாமோதரனை முறைத்தபடியே எழுந்து நின்றார்.

                                   கோயிலுக்கு எதிரே தனலெட்சுமியின் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தார். ஏனோ மனசுக்கு வருத்தமாய்  வந்தது.

                                                                                                        (ஜால்ரா ஒலிக்கும்)

                                       
                                             





Saturday, June 22, 2013

முறையும் மொக்கையனும்





              உயிர்விட்ட மறுகணத்தில்
              வாசலில் நிற்பார் மொக்கையன்
              என்ன வயதிருக்கும் என்று
              ஊகம் பண்ணமுடியாத தோற்றம்
              அப்பாவின் கையைப் பிடித்து
              நடந்தவேளையில் கொஞ்சியபோது
              பார்த்த உருவம் இன்று என்பிள்ளை
              என் கைவிரல்களைப் பற்றி
              நடக்கையில் கொஞ்சும்போது மாறாமல்
              இருக்கிறது.. மார்க்கண்டேய வடிவமா?

              உயிர்போனவரை பாடையில் ஏற்றும்வரை
              எல்லாக் காரியத்தையும் செய்வார்
              அதற்கிடையில் காட்டிற்கு வேண்டிய
              வராட்டி முதலிய சாமர்ன்கள் சரியாகப்
              போய்விட்டதா என்பதையும் சரிபார்த்துக்
              கொள்வார்...
              இடுப்பில் ஏறிய வேட்டி
              தோளில் துவண்டு பின் தலையில்
              முண்டாசாய் ஏறிய சிவப்பு ஈரலைத்துண்டு,,
              ஒவ்வொரு காரியத்திற்கும் ஒலியெழுப்பிக்
              கொண்டே செய்யச்சொல்வார்...

              ஒருவழியாய் பாடையேறிப் பயணம்
               பாதையில் முன்  சைக்கிளில் கையில்
               பானையுடன் ஏறிப்போவார்
               காட்டில் காரியம் பார்க்க,,,

               யார் வீட்டில் எழவென்றாலும் மொக்கையன்
              இல்லாமல் எதுவும் நடக்காது
              அவரின் ஆளுகைக்குட்பட்ட தெருக்களில்
              மொக்கையன்தான் முறைவைத்துக் காரியங்கள்
              நடக்கும் கட்டையிலே போனது கட்டையிலே
              வேகும்..
              கடைசிவரை இருந்து
              வாக்கரிசிக்குப்போட்ட
              காசுகள் முடிந்து..பின் கூலி வாங்கிப்போவார்
              மறுநாள் பால்தெளியலுக்கு வந்துவிடுங்கள்
              என்ற உத்திரவிட்டு,,,

              முறையேதும் தப்பாமல் மொக்கையன்
              முறைசெய்யும் முறை ஊரே பிரசித்தம்..

              காலையில் வந்த அறிவிப்பு சொன்னது
              மொக்கையன் இறந்துபோய்விட்டதாக,,,
              எழுபத்தைந்து தாண்டி எண்பதிருக்கலாம்..
              போய்ட்டான்யா மொக்கையன்.. போச்சு
              எல்லாம் என்றார்கள்...

              வராட்டிமேல் மொக்கையன் உடல்
             அடுக்கி அதன்மேல் விறகடுக்கி
              தீ வைக்கும்வரை எதுவுமே முறையாக
              நடக்கவில்லை... யாருக்கும் தெரியவில்லை..
             ஆளுக்கு ஆள் நாட்டாண்மை நடந்தது..
             அதனால்தான் மொக்கையன் கடைசிவரை
             பேசாமல் கோபத்தில் வெந்தாரோ...?
             சாவதுகூட முறையோடு சாகவேண்டும்
              என்று மொக்கையன் சொல்லாமல் சொன்னதை
              யார் இனி கேட்டு செய்வார் முறையாக....

             0000000


              குடியிருந்து
              வேறு வீடு பார்த்துப்போன
              வாடகை வீட்டின்
              திண்ணையில் கிடக்கிறது
              சம்மதம் என்று
              எழுதப்பட்ட
              அஞ்சலட்டை ஒன்று
              காற்றில் அசைந்தபடி
              எங்கும் போகலாம்
              என்கிற அலைப்புடன்...

              0000000000             

Thursday, June 20, 2013

சொல்லிக்கொள்ள....



0000

முருகேசன் அம்மா 
அவன் பிறந்தவுடன்
இறந்துபோனாளாம்...

தனலெட்சுமியின் 
அம்மா அம்மை வந்து
இறந்துபோனாளாம்...

மாரியின் அம்மா
வறுமையில் துர்க்குப்போட்டு
இறந்துபோனாளாம்..

விசாலாட்சியின் அம்மா
ஆடிப்பெருக்கில் ஆற்றோடு
போய் இறந்துபோனாளாம்...

கோவிந்து அம்மா
லாரியில் அடிபட்டு
இறந்துபோனாளாம்..

இது  எதுவுமேயில்லாமல்
என்னோட அம்மா
யாரோடோ ஓடிப்போனாளாம்
சொல்லிக்கொள்ள எதுவுமற்ற
என் வாழ்க்கையில் சொல்லிக்
கொள்ள இருக்கட்டுமென்று
போலிருக்கிறது....

0000


Tuesday, June 18, 2013

ஜால்ரா....குறுந்தொடர் 4

ஜால்ரா.....குறுந்தொடர்...4



                              அந்த செவ்வாய்க்கிழமை நல்ல கிழமையாக விடியவில்லை தனலெட்சுமிக்கு.

                             காலையிலேயே தகவல் வந்துவிட்டது.

                              அவளுடைய மருமகனுக்கு ஏதோ விபத்து என்று. கோயில் வாசலில் நீர் தெளித்துக் கூட்டிவிட்டு கோயிலுக்கு உள் பிரகாரம்தான் கூட்டியிருப்பாள் அதற்குள் செய்தி வந்துவிட்டது.

                                புள்ளயாரப்பா இது என்ன சோதனைப்பா,, என்றபடி பதறி ஓடினாள் ஆட்டோவில்.

                                பக்கத்தில் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.

                                வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது திருப்பத்தில் வந்த மினி வேனைக் கவனிக்கவில்லை. கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. ஆள் ஏற்கெனவே மெலிதான தேகம். இப்போது இதுவேறு.

                                எதுவும் செய்யாமல் அப்படியே போட்டிருந்தார்கள்.

                                வலி தெரியாமலிருக்க ஊசி போட்டிருந்தார்கள்.

                               தனலெட்சுமி வார்டிற்குள் நுழைந்தோடினாள்.

                               அய்யய்யோ தெய்வமே... என்னப்பா ஆச்சு?   மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
                               அம்மா...அம்மா... என்று பேசமுடியாமல் கணவனைக் காட்டியபடி அழுதாள்.
                                மல்லாக்கப் போட்டிருந்தார்கள்.
                                ஊசிபோட்டதையும் மீறி வலியிருப்பதை அவனின் முக அசைவுகள் காட்டிக்கொண்டிருந்தன.
                               டாக்டர் வந்ததும் தனலெட்சுமி கதறினாள்.
                               டாக்டர் அய்யா.. எப்படியாச்சும்  என் மருமகனக் காப்பாத்துங்கய்யா... எனக்கும் என் மகளுக்கும் வேற நாதி கிடையாது.. ஜாதி சனம் கிடையாது டாக்டர் அய்யா..
                               அழக்கூடாதும்மா. பயப்படறமாதிரி இல்லே.. இடுப்பு எலும்பு முறிஞ்சிருக்கு. அத ஆபரேசன் பண்ணித்தான் சரிப்பண்ணணும்.. ஆனா..
                                 சொல்லுங்க டாக்டர் அய்யா..
                                  ஸ்கேன் எடுத்துப் பாத்துட்டுதான்  இன்னும் தெளிவா சொல்லமுடியும்.. ஆனா உயிருக்கு ஆபத்து இல்லே..
                                  என்றபடி டாக்டர் போய்விட்டார்.
                                  அவர் போனதும் ஒரு நர்சு வந்தாள். அவள் தனலெட்சுமியிடம் சொன்னாள்.
                                  இந்த பாரும்மா டாக்டர் சொல்லமாட்டாரு.. இங்க அத்தனை வசதியில்லே... வெறும் மாவுக்கட்டுத்தான்..பேசாம பிரைவேட் கொண்டுபோயிடுங்க.. கொஞ்சம் பணம் செலவாகும். ஆனா சரியாயிடும்.. இங்க மாவுக்கட்டுதான் ரொம்ப நாளாகும்.. அப்புறம் காலம் முழுக்கப் படுக்கையிலே இருக்கறமாதிரி ஆயிடும்.. நல்லா யோசிச்சு முடிவெடு..
                                   போய்விட்டாள்.
                                   தனலெட்சுமி மகளைப் பார்த்தாள்.
                                    மகள் தனலெட்சுமியைப் பார்த்தபடியும் அடிக்கொருதரம் கணவனைப் பார்த்தபடியும் அழுதுகொண்டிருந்தாள்.
                                    கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
                                    அன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்து பிரைவேட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தார்கள்.
                                     அவர்கள் சொன்ன தொகை தனலெட்சுமியை அதிர வைத்தது. இருப்பினும் யோசித்தாள்.
                                      ஆபரேசன் செய்துடுங்க டாக்டர் என்றாள்.
                                      அம்மா.,. அவ்வளவு பணத்துக்கு எங்கம்மா போவே? என்றாள்.
                                     எல்லாம் வலம்புரி ஐயா பார்த்துக்குவார்.
                                     சரி.. பாத்துக்க.. நான் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடறேன் என்று கிளம்பி ஆட்டோ எடுத்துக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தாள்.
                                     ஆட்டோவை அனுப்பிவிட்டு நேராக வேணுகோபால் வீட்டுக்குப் போனாள்.
                                     வா தனம் என்றார் வேணுகோபால்.
                                     என்ன விஷயம்? என்றார்.
                                     என் வீட்டை எடுத்துக்கிட்டு பணம் கொடுங்க என்றாள் நேரடியாக.
                                     என்னது வீட்டை வித்துடறியா?
                                   ஆமாய்யா எனக்கு வேறுவழி தெரியலே என்றாள். சொல்லிவிட்டு மருமகனுக்கு ஏற்பட்ட விபத்தைச் சொன்னாள்.
                                    இப்ப அவ்வளவு பணம் இல்லியே,,, ரெண்டு மூணு நாளாகும்.
                                    பரவாயில்லைங்கய்யா.. இப்ப கொஞ்சம் பணம் கொடுங்க. ஆஸ்பத்திரிக்குக் கட்டறதுக்கு.
                                     உடனே வேணுகோபால் எதுவும் பேசாமல் உள்ளேபோய் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே ஒரு பத்திரத்தையும் கொண்டு வந்து

                                  தனம் உன்னை நம்பறேன். .. பேச்சு மாறமாட்டே,, ஆனா எனக்கு நேரம் சரியில்லே,,  அதனால இந்தப் பேப்பர்லே ஒரு கைநாட்ட வச்சிடு எனக்கு வீடு விக்கறதா,,,

                                 தனலெட்சுமி எதுவும் பேசாமல்  செய்தாள்.
                                பணத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனாள்.
                                பணத்தைக் கட்டினாள்.
                                ஏதும்மா இவ்வளவு பணம்? என்றாள் மகள்.
                                சொன்னாள்.
                                என்னம்மா?  என்று அதிர்ந்தாள்.
                                விடு.. அத நானா எடுத்திட்டுப்போவப்போறேன். உங்களுக்குத்தான்.. மாவா கொடுத்தா என்ன சுட்டுப் பணியாரமா கொடுத்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான். என்றாள்.

                                                                                                          (ஜால்ரா ஒலிக்கும்).
                             
 


                               
                     

Monday, June 17, 2013

புதிய படைப்புக்கள்

புதிய   படைப்புக்கள்


                        வணக்கம்.

                        இந்தக் கோடைவிடுமுறையில் பின்வரும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதுபற்றிய விரிவான குறிப்பைப் பின்னர் எழுதுகிறேன்.

                        1. நத்தையோட்டுத் தண்ணீர் (பல்சுவைக் கட்டுரைகள்)

                        2. செல்லாத நோட்டு (சிறுகதைத் தொகுப்பு)

                        3. மிட்டாய் வண்டி  (சிறுவர் கதைகள்)

                        4. பேருந்து    (நாவல்)

இதற்கே இந்தக் கோடை விடுப்பு சரியாகிவிட்டது.

                         எழுதவேண்டும் என்கிற  உந்துதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  தாகம் அடங்கவில்லை.

                         உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

Sunday, June 16, 2013

சொல்வேட்டையும் தினமணியும்

தினமணியும் சொல்வேட்டையும்...


               தினமணி நாளிதழ் இதழியல் வரலாற்றில் முக்கியமான வரலாற்றுப் பதிவு இதழாக இருந்துவருகிறது. இந்நாளிதழுக்கு ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்பவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருகுறிப்பிட்ட  கூறுகளைத் தனித்த அடையாளமுடன் பெற்று வாசிப்போரின் கவனத்தை ஈர்த்துவருவது கண்கூடு. கேஎன் சிவராமன் ஆசிரியராக இருந்தபோது அவரின் தனித்துவம் நாளிதழ் முழுக்கத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு புதிய ஆசிரியர் பொறுப்பேற்கும்போதும் இது நிகழ்கிறது. இந்த வரிசையில் தற்போது திரு கே. வைத்தியநாதன். இவரின் ஆசிரியப் பொறுப்பில் புதிதாக வெளிவரும் பகுதி சொல்வேட்டை எனும் பகுதியாகும்.

                 நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் அவர்கள் ஆரம்பித்துள்ள இந்தப் பகுதியில் வாரம் ஓர் ஆங்கிலச் சொல்லை அளித்து அதற்கு இணையான தமிழச்சொல்லை வாசகர்கள் கருத்துரைக்கு விட்டு முடிவு செய்யும் பகுதியாகும். ஒரு மொழியின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த சொல்லாக்கம் என்பது மிக முக்கியமானதாகும். அவ்வகையில் சொல்வேட்டை எனும் பகுதி மிக முக்கிய தமிழ்ப்பணியாகும். பலரும் ஆர்வமாக இதில் பங்கேற்று வருகிறார்கள்.

                   நான் அறிவியல் தமிழ். கலைச்சொல்லாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இப்பகுதியைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தற்போது போனவாரம் தொடங்கி நானும் இதற்கு இணையான தமிழ்ச்சொல் வழஙகிய நிலையில் போனவாரமும் இந்த வாரமும் என்னுடைய சொற்களும் கருதப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் பலரும் சொற்கள் அளித்துள்ள நிலையில்  இணையான தமிழச்சொல்லாக நீதியரசர் அவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிற சொல்லை நான் மட்டுமே பரிந்துரைத்திருக் கிறேன்    என்பது மகிழ்ச்சியானது. . ஏன் என்றால் alter ego என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பலர் பரிந்துரை செய்திருந் தாலும் நீதியரசர் அவர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல்லை நான் மடடுமே அளித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

                       கிட்டத்தட்ட 34 சொற்களை இணைச் சொல்லாகப் பரிந்துரை செய்திருந்தேன். அதில் நீதியரசர் அவர்கள்

                          தன்னியல்புப் பிரதி. தன்னுருப் பிரதி. தன்னுரு நகல். தன்னுரு மெய். தன் மாற்றுரு. மாற்றாளன். மெய்யுரு மாற்று. தன் மாற்று வடிவு ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டுள்ளார்.

                            இதில் இணையான சொல்லாக  தன் மாற்றுரு என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை வேறுயாரும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                             நீதியரசர் அவர்களுக்கும் தினமணிக்கும் என்னுடைய நன்றிகள்.

                             இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

                             நீங்களும் இந்த சொல்வேட்டைப் பகுதியில் கலந்துகொள்ளலாம். தமிழுக்காற்றும் தொண்டு அது.

Saturday, June 15, 2013

ஜால்ரா... குறுந்தொடர்... 3

ஜால்ரா.....குறுந்தொடர்...  3


                         கோடைக்காலம் புழுக்கம் தாங்கமுடியாமல் போகிறது. என்னதான் மின்விசிறிகள் ஓடினாலும் அது மேலும் வெப்பத்தை வாரி உடல்மேல் கொட்டும்போது குப்பென்று வியர்வை புதைமணல்மேல் நீர் கொப்பளிப்பதுபோல கொப்பளிக்கின்றன. எனவே இது ஒததுவராது என்று மொட்டை மாடிக்குப்போய் திறந்தவெளியில் படுக்க அருமையான காற்று. விடியும்வரை நிம்மதியான உறக்கம். ஆனந்தமாய் இருக்கிறது.

                          எப்போது படுத்தாலும் அதிகாலை 5 மணிக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அப்படியே எழுந்து வானத்தின் முகத்திலதான் விழிக்கவேண்டியிருக்கிறது. அதுவும் குளித்து முடித்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுவனைப்போல சூரியன் எழும்பிவருகின்ற அந்த காலை வானத்தைப் பார்க்கையில் இதமான வெள்ளையும் அதில் மெல்லிய நுர்லோடைபோல மஞ்சள் நிறமும் அதன் மேலாக மேகங்கள் வெள்ளிப் பார்டர் கட்டியதுபோலிருக்கும் அந்த அற்புதம் காணக் கிடைப்பது கொடுப்பினையானது. மனதுக்கு நிம்மதியைத் தருவது.

                         அன்றைக்கு வானத்தைப் பார்த்துவிட்டு மாடிப்படியிறங்குகையில் பவளமல்லி கோர்த்த மாலை வரிசைபோல மின்கம்பியில் நெருக்கியமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் மனத்தை அப்படியே பறித்துக்கொண்டன. கையில் கேமரா இல்லையே என்கிற வருத்தம் மேலோங்கியது. செல்போன் டவர்கள் வந்தபிறகு இந்த இனம் அழிய்த்தொடங்கியிருக்கிற வேளையில் இத்தனை சிட்டுக்குருவிகளை ஒருசேரப் பார்த்த ஆனந்தம் யாரிடமாவது சொல்லத் துடித்தது. ஆனால் இந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லை. வீட்டைச் சுற்றிலும் நாலைந்து மனைகள் வெறுமையாகக் கிடக்க அதில் மண்டிக்கிடந்தது கருவேல மரங்களும் நாலைந்து வேப்பமரங்களும் சில காட்டுச்செடிகளும் என்றாலும் அவற்றின் பச்சைதான் இந்த சிட்டுக்குருவிகளை இங்கு அழைத்திருக்கவேண்டும் என்றபோது வீடு கட்டாமல் இருக்கும் அந்த மனை உரிமையாளர்களுக்கு மனது நன்றி சொல்லிக்கொண்டது.

                              இசைப்பெட்டியில் இசைக்கேற்பப் பட்டன்களை கீழிறக்கும் வரிசைப்போல நாலைந்து சிட்டுக்குருவிகள் இடைஇடையே எழுந்து பறந்துபோயிருந்த காட்சியும் மனதைப் பறித்தது.

                             பல்துலக்கிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு செய்தித்தாள் வாங்கிக்கொண்டு ஒரு டீயையும் குடித்துவரலாம் என்று கடைத்தெருவிற்குப் புறப்பட்ட போது வேணுகோபால் சொன்னது நினைவுக்கு வந்தது.

                             அவரிடம் சொல்லாமல் போய்விடலாம் என்று அவர் இருக்கும் தெருவிற்குப் போய் அவர் வீட்டின் படியேறி அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது கதவு திறந்தது.

                            என்னை எதிர்பார்க்கவில்லை.

                            தம்பி நீங்களா? எனறு சறறு லேசாகத் தடுமாறினார்,

                           வாங்க உள்ள வாங்க் தம்பி,, என்றபடி உள்ளே போனார்.

                            சேர் எடுத்துப்போட்டார்.  உள்ளே பார்த்து நம்ப சின்னாஸ்பத்திரி டாக்டர் பையன் வந்திருக்காரு.. காபி போடு,,,

                             வேணுகோபால் மனைவி எட்டிப்பார்த்து என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? என்றபடி உளளே தலையை இழுத்துக்கொண்டார்கள்.

                              சொல்லுங்க தம்பி என்றார்.

                               பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கேன் என்றேன்.

                              சட்டென்று அவர் முகம் மாறியது இப்பவா?

                               ஆமாம்.

                              சரி காபிய குடிங்க... பார்க்கலாம் என்றார் உடனே.

                             காபி குடிக்கும்போது பேசினார்.

                              நீங்க் அவசியம் அதைப் பார்க்கணும் தம்பி.. எங்க காலத்துக்கு அப்புறம் நீங்கதானே வழிநடத்தப்போறவங்க  என்றார்.

                              காபி குடித்துவிட்டு வீட்டின் மாடிக்கு அழைத்துப்போனார். பின்னாலே தொடர்ந்து ஆர்வமோடு படியேறினேன்.

                               மாடியறையில் அத்தனை ஓட்டைகளும் உடைசல்களும் கிடந்தன. உள்ளே ஒட்டடைகள் படிந்து கிடந்தன.

                              தம்பி.. இதுல பொட்டு பொடிச போட்டு வச்சிருக்கேன். இத பூட்டி வைக்கறதுமில்லே,, சும்மாத்தான் சாத்தி வச்சிருக்கேன்.. இதுக்குள்ளதான் அத வச்சிருக்கேன் வாங்க.. என்றபடி காலால் சில பொருட்களை ஒதுக்கியபடியே போனார். ஒரு தையல்மிஷின் கிடந்தது. அதன் அடியில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதை ஒரு கையால் பற்றிக்கொண்டு வெளியே இழுத்து தம்பி.. ஒரு கை பிடிங்க என்றார். ஆளுக்கொரு கையாகப் பிடித்தபடி  அந்த சாக்குமூட்டையை நடுநாயகமாக வைத்தோம்.

                             மாடியறையின் சன்னல்களை எல்லாம் திறந்துவிட்டு வாயில் கதவை மூடினார். தம்பி அப்படியே உக்காருங்க என்றார்..

                             அவர் அபப்டியே உட்கார்ந்துகொண்டு சாக்கு மூட்டையைப் பிரித்தார். உள்ளே ஒரு போர்வை சுற்றிக்கிடந்தது. மேலும் அதனையும் நீக்கினார். உள்ளே அற்புதமான பளபளவென்று ஒரு சிலையிருந்தது. எனக்குள் ஆச்சர்யமானது. 

                                மெலிதான பச்சை மூங்கிலின் மெலிந்த தோற்றத்தைப்போல.. அதாவது ஒரு மெலிந்த தேகமுள்ள பரத நாட்டியப் பெண்ணின் உடம்பைப்போல அந்த சிலை அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்தது.

                                 சிலையைத் திருப்பினார். நல்ல கனம்.  தங்கத்தைப் பூசி அதன்மேல் ஒளியைப் பாய்ச்சியதுபோல பளபளவென்று ஒரு ஆண் சிலை. தலைமேல் அழகிய கொண்டை. கொண்டையைச் சுற்றி பூவேலை. கண்களைப் பிடுங்கிக் கரைத்துக்கொண்டிருந்தது சிலையின் தோற்றப்பொலிவு.  

                                 பாத்தீங்களா தம்பி.. என்னோட முப்பாட்டனோட உழைப்புல வலம்புரி விநாயகர் கோயிலுக்கு செஞ்சு வச்சது.. வருஷம் எத்தனைன்னு தெரியாது.. அத்தனையும் ஐம்பொன்னு.. இது யார் சிலை தெரியுமா ஞானப்பால் குடிச்ச ஞானச்சம்பந்தரோட சிலை...அவர் கைகளைப் பாருங்க.. என்று  சொல்லிப் பேச்சை நிறுத்தினார்.

                      வலது உள்ளங்கை மேலேறி இடது கை கீழிறங்கியிருந்தது. இரண்டுக்கும் இடையில் சமமான இடைவெளியிருந்தது. 

                        இது என்ன அபிநயம்? என்றேன் எனக்குத் தெரிந்த அரைகுறையான அறிவோடு..

                         இது அபிநயம் இல்ல தம்பி.. அவரோட கைகளில் தாளம் இருந்துச்சி.. (ஜால்ரா).. தாளம் அடிக்கற மாதிரி.. அதுவும் ஐம்பொன்னுதான்..இப்ப இல்ல...

                          எங்க போச்சு? என்றேன்.

                          அதக் கேட்டா தெரு பொல்லாப்பு வரும்.. இந்தத் தெருவுல இருக்கற பெரும்பாலும் ஒரு ஜாதி.. நான் வேற ஜாதி..  ஒண்ணாக் கூடிக்குவாங்க... 

                               அடக்கடவுளே... என்றேன்.

                              இது என்னோட பாரம்பரியச் சொத்து.. இது  மட்டுமில்லே.. இந்த வரிசையிலே இருக்கிற ஒவ்வொரு தெரு புள்ளயார் கோயில்லயும் ஒரு சிலைய என்னோட முப்பாட்டன் செஞ்சு வச்சிருக்கான்.. அப்பரு...மாணிக்கவாசகரு.. சுந்தரருன்னு.. அதெல்லாம் என்ன கதியாச்சுன்னு தெரியல்லே.. ஆனா சிலைங்க இருக்கு.. ஆனா  ஐம்பொன்னு சிலைங்க இல்ல அதுங்க.. இதயாச்சும் காப்பாத்தணும்னுதான் நினைக்கிறேன்.. கும்பாபிஷேகம் முடிஞ்சஉடனே  எல்லார் முன்னிலையிலேயும் இதக் கோயில்ல வச்சி எல்லா விவரத்தையும் சொல்லிடுவேன். அப்பத்தான் செத்தாலும் என் ஆவி நிம்மதியாக போவும்...

                                 மனம் கசிந்தது. வேணுகோபால் கைகளைப் பற்றிக்கொண்டேன்.

                              அண்ணே... எவ்வளவு பெரிய காரியம்..  எத்தனை வருஷமா இதக் காப்பாத்தியிருக்கீங்க... உங்க கையெடுத்துக் கும்பிடணும்னு தோணுது...அந்த சிலையைப் பாருங்கண்ணே.. எத்தனை ஜொலிப்பு ஜொலிக்குது.. அய்யோ.. கண்ணப் புடுங்கிட்டுப்போவுது.. கத்தி முனை மாதிரி மூக்கப் பாருங்க.. கண்ண மடிச்சு மூடியிருக்கிற அழகப் பாருங்க.. காதுலேர்ந்து தோள்வரைக்கும் கொடியோடிருக்கு பாருங்க..அய்யோ.. இப்ப இதுமாதிரி வடிக்கமுடியுமா?... இதெல்லாம் நம்மோட பண்பாட்டு அடையாளம்ணே... உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு....

                                    சிலையில் உருகிக்கொண்டிருந்தேன்.

                                   ஆளுடைப்பிள்ளையின் அழகில் என்னை மறந்து கொண்டிருந்தேன்.

                                     என்னோட செயலுக்கு நீங்கதான் தம்பி முதல் சாட்சி...
மனப்பாரம் இறங்கினதுபோலருக்கு.. யார்கிட்டயாவது இத சொல்லிடணும்னு தோணிச்சு.. காட்டிடணும்னு மனசுக்குப் பட்டிச்சு.. காட்டிட்டேன்.. இனி இதுக்கு குந்தகம் வராது.. கோயில்ல வச்சுடுவேன்..

                              பழையபடி கட்டி சாக்குமூட்டையை வைத்துவிட்டு நகர்ந்தார்.

                             ஆளுடைப் பிள்ளையாச்சே.. சாக்குப்பைக்குள் மூச்சு திணறாது அவருக்கு என்று தோணியது.

                             அவன் உமையன்னையின் பிள்ளையல்லவா? தாய்க்குத் தெரியாதா பிள்ளையைப் பார்த்துக்கொள்ள என்றும் தோணியது.

                              வேணுகோபால் வீட்டைவிட்டுப் படியிறங்கும்போது சொன்னார்.

                              தம்பி இத பாத்தது உங்க மனசோட இருக்கட்டும்,

                              சரிங்கண்ணே--

                             கடைத்தெரு நோக்கிப்போகும்போது மனசுக்குள் கேள்வி எழுந்தது,

                              அந்த ஜால்ரா எங்கே போனது? என்னவாயிற்று அது?

                                                                                                                    (ஜால்ரா ஒலிக்கும்)





Thursday, June 13, 2013

அவசரத்தந்தி

அவசரத் தந்தி



                                 வணக்கம்.

                                 160 ஆண்டுகளுககுமேலாக மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகித்துவந்த சொல் தந்தி என்பதாகும.

                                  அவசரமாக ஒரு செய்தியை உடனே யாருக்கும் தெரிவிக்க அதன் விளைவை உடனே தெரிந்துகொள்ள எனத் தந்தியின் பயன்பாடு மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்ட காலம் இருநத்து.

                                   கைப்பேசி வந்தபின் தந்தியின் சேவை பயன்படுத்தப்படாமல் தற்போது சூலை 15 ஆம நாளுடன் இசசேவையை நிறுத்திவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

                                    தகவல் தொழில்நுட்ப வளரச்சியின் விளைவால் இத்தகைய கொடிய முடிவைத் தந்தி சந்திக்கிறது. என்னதாக் தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும் தந்தி என்பது மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

                                   அது மனிதனின் எல்லா உணர்வுகளின் நம்பிக்கைக் களமாக இருந்தது. ஏற்கெனவே கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவருகிறோம். இதற்கும் தந்தி நிலைமை ஏற்படும் காலம் வெகு துர்ரத்தில் இல்லை. எனவே தந்தி மூடுவிழாவை அலட்சியமாக எண்ணிவிடமுடியாது,

                                     நுழைய முடியாத இடஙக்ளுக்கு எல்லாம் தந்திதான் நுழைந்து சென்றது,

                                    இறப்புச் செய்திகள்.
                                    பிறப்புச் செய்திகள்.
                                    ஏதேனும் பிரச்சினைகள்.
                                   குடும்பத் தகராறுகள்.
                                    மகிழ்ச்சியான நிகழ்வுகள்.
                                   வேலை கிடைத்துவிட்டது.
                                   உடனே வரவும்.
                                    வேலையில் சேரவும்.
                                    நான் வருகிறேன்.
                                    நான் ஊர்போய் சேர்ந்துவிட்டேன்.
                                    தங்கை வயதுக்கு வந்துவிட்டாள்.
                                    அப்பா பணம் அனுப்பியிருக்கிறார.
                                    அம்மா புறப்பட்டு வருகிறாள். கவலைப்படாதே,
                                    வியாபாரம் பேசி முடித்தாயிற்று.
                                    தேர்வில் வெற்றிபெற்றுவிட்டாள்.
                                   

         இப்படிப் பலவற்றை உணர்வுப்பூர்வமாக அசைக்கமுடியாத மாற்றமுடியாத சாட்சியாக வாழ்வின் நம்பிக்கைத் தடமாக இருந்த தந்தியின் ஆயுள் முடிந்துவிட்டது. 160 வயதில் ஆயுள் முடிவு.

                                     தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நம்பிக்கையில்லாத எதனையும் மாற்றிப் பேசக்கூடிய ஓர் உறுதியற்ற வர்ழ்வின் நிகழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

                                    இது நல்லதா?

                                    எதற்கென்றாலும் சொல்லுதிர்ப்பது முக்கியமல்ல, ஆனால் கொடுத்த வாக்கை பேசிய பேச்சை உண்மையென்று உறுதிப்படுத்த எது சாட்சி?
                                      எழுததுப் பூர்வமாக எதுவுமே இல்லாத நிலையில் எப்படி எல்லாமும் சரியாகும்?

                                       தந்தி குறித்த உங்கள் விவாதங்களை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

                                       எதுவாயினும் எழுதுங்கள். ஆரோக்கியமாக இருப்பின் அதனை அரசுக்கு எடுத்துரைப்போம்.

                                        என்னைப் பொறுத்தவரை தந்தி சேவை அவசியமானது.

Tuesday, June 11, 2013

ஜால்ரா குறுந்தொடர்....2

ஜால்ரா... அத்தியாயம் 2



                        அக்னி நட்சத்திரம் முடிந்து மறுநாள்.

                         காலையில்  எழுந்து வானத்தைப் பார்த்தபோது லேசாக மூடியிருந்தது மழைமேகங்களால். நிச்சயம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் மழை வரும் என்பது ஐதீகம். மறுநாளே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் முன்னோர்கள் மேல் இருந்த மதிப்பு கூடியது.

                         கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு நீர் தெளிப்பதற்காக கையில்  வாளியில் தண்ணீருடன் வந்தாள் தனலெட்சுமியம்மாள். எதிரே வலம்புரி விநாயகர் கோயில். வாளியிலிருந்த தண்ணீரைக் கொண்டு கோயில் வாசலில் தெளித்து முடித்து வாளியை அப்படியே தரையில் வைத்துவிட்டு இடுப்பில் செருகியிருந்த முந்தானையைத் தளர்த்திவிட்டு அப்படியே விநாயகரை கைகூப்பி வணங்கினாள்.

                         புள்ளயாரப்பா,,, எல்லாரையும் நல்லா வை. இப்படி தெனமும் உன் வாசல்ல தண்ணி தெளிச்சு கூட்டிப்பெருக்கற சக்திய சாவற வரைக்கும் கொடு,, உனக்குப் புண்ணியமாப் போவும்..

                         அப்புறம் தன் வீட்டு வாசலில் தெளித்து முடித்தாள்.

                         கூட்டிப் பெருக்கிக் கோயில் வாசலிலும் பின் தன் வாசலிலும்  கோலத்தைப் போட்டு முடித்தாள்.

                          கோயிலுக்கு எதிரேதான் அந்த சிறிய குடிசை வீடு, தனலெட்சுமிக்கு மிஞ்சிய பூர்வீக சொத்து அதுதான்.

                           தனலெட்சுமியின் கணவன் கீற்று போடும் வேலையில் இருந்து ஒருமுறை மாடியில் கீற்றுப்போடும்போது தவறி கீழே விழுந்து கால்கள் முறிந்துபோய் அபப்டியே படுக்கையில் விழுந்து இறந்துபோனான்.

                          ஒரு மகள். தனலெட்சுமி ஒருமகளோடு இந்த வீட்டில் ஒதுங்கிக்கெர்ண்டாள்.

                           மகளைத் துர்க்கிக்கொண்டு வீட்டு வேலைக்குப் போய் மகளை வளர்த்தாள். அப்புறம் காதையும் கழுத்தையும் மூடி நகை செய்து மகளைக் திருமணம் செய்து கொடுத்தாள். மாப்பிள்ளை ஒரு  காபி கிளப்பில் சர்வராக இருக்கிறான். மகளை நன்றாக வைத்துக்கொள்கிறான். அதுபோதும்.

                          இன்னும் வீட்டு வேலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறாள்.

                          கிடைப்பதில் கொஞசம் சாப்பிட்டு கொஞ்சம் சேமித்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

                           எப்படியும் காலையும் மாலையும் அவளுக்கு வேலை கோயில் வாசலில் நீர் தெளித்து பெருக்கி கோலம்போடுவதுதான். ஆறுமணி பூசைக்கு ஐயர் வரும்போது கூடமாட இருந்து சில்லறை வேலைகள் செய்து தருவாள்.
                           சரியையும் கிரியையும்  ஆன வேலைகள்
                            என்னா தனம் ஒம் மவ எப்படியிருக்கா?
                            நல்லா இருக்கா சாமி, எனக்கென்ன கவலை, எல்லாம் இந்த வலம்புரி புள்ளயாரய்யா பாத்துக்குவாரு,,
                            எல்லாத்தையும் அவரு தலையிலேயே போட்டுடு
                            ஆமா, அவருக்கு என்னதான் வேலை?
                            வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் யாரேனும் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலு ம் அபிஷேகத்திற்குக் கொண்டுவருவார்கள்.
                            அந்த விநியோகத்தில் தனலெட்சுமிக்கு கொஞ்சம் கிடைக்கும். அன்றைய பசி தணியும்.
                            தனம,,, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தணும்.. ரொம்ப நாளாச்சு,,, செய்யாம இருக்கறது தெருவுக்கு ஆகாது,,
                              ஆமாம் சாமி,, நான் வாகக்ப்பட்டு வநத் காலத்துக்கு இதுவரை நடகக்ல்லே,,,நடத்திப்புடறது நல்லதுதான்,, தெருக்காரங்ககிட்ட செய்திய போட்டு வையுங்க,,
                             சொல்லியாச்சு தனம்,, அதுக்கான வேலை நடக்குது,
                             அதெல்லாம் நடந்துடும் சாமி,, அவருக்குத் தெரியாதா? எது எது எப்ப நடக்குமோ அப்ப நடத்திடுவாரு,,
                              சொல்லிவிட்டு விநாயகரைப் பார்த்து ஒரு தோப்புக்கரணம் போட்டாள்,
                               வலம்புரி சிரித்துக்கொண்டிருந்தார் மாறாது,
                               ஐயர் தீபாராதனைக் காட்டிவிட்டு தனத்திடம் தட்டை நீட்டினார், தொட்டுக் கும்பிட்டுவிட்டு திருநீறு பூசிக்கெர்ண்டிருக்க யாரோ நாலைந்துபேர் கோயிலுக்குள் வர அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினாள்,
                             வாங்கோ,,, விபூதி எடுத்துக்கோங்க என்று தட்டை நீட்டினார்,
                             தொட்டுக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் அப்படியே பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள்.
                             என்ன சாமி,, ஒரு நாள் பாருங்க,, கும்பாபிஷேகத்த நடத்திடுவோம்.
                              நாள் குறிச்சு வச்சிருக்கேன்.
                              சரி.. முறைப்படி தெருக்கூட்ட்ம் கூட்டிப் பேசிடுவோம். இந்து அறநிலையத்துறை காவல்துறை எல்லாத்துக்கும் முறைப்படி தெரிவிச்சுடுவோம்.
                               வசூல் தொடங்கிடணும்,
                               எது வேணாலும் கூட்டத்தைக் கூட்டி செய்யுங்கோ,, தெருக்காரங்க எல்லாரும் ஒத்துமையா இருந்து செய்யவேண்டிய காரியம் இது,
                               ஆமாம் சாமி,,, செஞ்சுடலாம்,
                               அப்புறம் ஒரு விஷயம்,, கோயில்ல இருக்கற பொருட்களைச் சரிபார்க்கணும்,,
                                 இப்படிச் சொன்னது வேணுகோபால்தான்,
                                 எதுக்கு? என்று கேட்டார் தாமோதரன்,
                                 நாளைக்கு யாரும் கணக்குக் கேட்டா?
                                 யாரு கணக்கு கேப்பா? எப்படி கொடுக்க முடியும், இதுக்கு முன்னாடி எத்தனை பேரு கோயில் நிர்வாகம் பார்த்திருக்காங்க,, அவங்க கிட்டர்ந்து ஆரம்பிக்கணும், அவங்கள்ள பலபேரு செத்துப்போயாச்சு,
                                 எனக்குத் தெரிஞ்சு இருக்கற தளவாடங்களை சரி பார்ப்போம்,
என்றார் வேணுகோபால்,
                                 என்ன இருக்கோ, அத பட்டியல் போடுங்க சாமி,, மணி தட்டு தாம்பாளம் சரவிளக்கு இப்படி ஏதாச்சு இல்லாம ஒடஞ்சிப்போயிருந்தா என் செலவிலே வாங்கிக் கொடுத்துடறேன்,, என்றார் தாமோதரன்,
                                  வேணுகோபால் தாமோதரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
                                   தாமு வாங்கிக் கொடுக்கறது பிரச்சினையில்ல,,,இருக்கறது ஒழுங்கா இருக்கான்னு பார்க்கணும்,, பல சிலைகள் ஐம்பொன்னு அதெல்லாம் இப்ப இல்ல,,, சின்ன சின்ன சிலைகள்,, நான் சின்ன வயசுலேர்ந்து பார்த்திருக்கேன்.. அது எனக்கு நினைவிலிருக்கு,,,
                                   கடந்த பத்துவருஷமா எங்க தாத்தா,, அப்புறம் அப்பா இப்ப நான் பாக்கறேன்,, சந்தேகப்படற மாதிரியில்ல இருக்கு என்று சட்டென்று கோபப்பட்டார் தாமோதரன்,
                                       சந்தேகம் இல்ல தாமு,, ஒரு காரியம் செய்யும்போது அது சரியா நடக்கணும்,
                                      இல்ல,, என்னமோ எங்க குடும்பம் திருட்டுக்குடும்பம் மாதிரியில்ல உங்க பேச்சு இருக்கு,,
                                      என்ன தாமு இபப்டி பேசறீங்க?
                                      பின்னே?
                                      சரி எனக்கு என்ன? நாளைக்கு அவங்க கேட்டா பதில் சொல்லுங்க,,,
                                      தெருக்காரங்களுக்கு எங்க குடும்பத்தப் பத்தி தெரியும்,,
                                       நான் தெருக்காரங்களச் சொல்லலே அரசாங்கத்த செர்ன்னே,, இந்து அறநிலையத்துறையிலே பட்டியல் இருக்குமில்லே,,,
                                      தாமோதரன் முகம் மாறியது, அதைச் சட்டென்று மறைத்து,
தெருக்கூட்டத்தக்  கூட்டி முடிவு பண்ணிக்கலாம், நான் வரேன் சாமி,,
என்றபடி கோபமாக எழுந்து போனார் தாமோதரன்,
                                        எதுக்கு பிரச்சினை? என்றார் ஐயர்,
                                        இல்லே சாமி,, நான் சொல்லறதுலே ஒரு குறிப்பு இருக்கு என்றார்,  உங்களுக்கு விவரமா சொல்றேன், என்றார் வேணுகோபால்,
                                         ஐயர் குழப்பமாக வேணுகோபால் முகத்தைப் பார்த்தார்,

                                                                                                 (ஜால்ரா ஒலிக்கும்)
                               
                        
     
               


Monday, June 10, 2013

கலைஞர் அறக்கட்டளைப் பரிசு



      அன்புள்ள...

                               வணக்கமுடன் ஹரணி.

                                தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது இன்றைக்குத்தான் சரியாயிற்று. எனவே எந்தப் பதிவையும் இடமுடியாமல் போனது வருத்தம்.

                                 19.6.2012 இல் மாநில அளவில் நடத்திய் கலைஞர் அறக்கட்டளைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அது கனிந்து நேற்று 09.06.2013 அன்று தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மாண்பமை முன்னாள் மத்திய அமைசசர் திருமிகு பழனி மாணிக்கம் அவர்கள் தலைமையிலும் மாண்பமை அமைச்சர் உபயதுல்லா அவர்கள் முன்னிலையிலும் சான்றிதழும் பரிசுத்தொகையும்  வழங்கப்பட்டது.

                               பரிசு வழங்கிய கலைஞர் அறக்கட்டளையினருக்கும் இதனை இன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட தினமணி. தினத்தந்தி இதழ்களுக்கும் நன்றிகள்.

                               இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

                               35 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாது எழுதிவரும் சூழலில் இத்தகைய பரிசு மிக ஊக்கமானது.

                                 இனி பதிவுகள் தொடரும்.

                                 சந்திப்போம்..

                                                                                                        அன்புடன்
                                                                                                        ஹ ர ணி