Monday, December 5, 2011
தமிழ் வாழ்க
ஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவிய ஆழம் கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித்த்ன்மையோடு கொண்டிலங்குவது தமிழ்.
தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் எனத் தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள் தமிழுக்கு என்றைக்கும் குறையாத செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்கு தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோல பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.
நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடிய ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம் போல அது உச்சரிக்கப்படுவதாக எழுதுகிறார்கள். திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள். தமிழின் பண்பாட்டை சிதைப்பதுபோல அவை பிறமொழிச் சொற்களின் கலப்பில் இப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பொது அறிக்கையினிடையே அவை பாடலாகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கொலைவெறி பாடலும்.
நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால் தமிழ் பேசி தமிழ்நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. அமரகவிகள் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்னும் பலரும் தற்போது வைரமுத்து வாலி அறிவுமதி நா.முத்துக்குமார் எனத் தமிழின் மேன்மை சொல்லும் பாடலாசிரியர்கள் மத்தியில் இப்படியொரு அறிவிலித்தனமாகப் பாடலை எழுதிப்பாடி அதுகுறித்து கூச்சமிலலாமல் காரணம் சொல்கிறீர்கள். தமிழ்மொழி ஆற்றல் மிகுந்தது. அதனை யாரும் அழிக்கமுடியாது. அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் அழிந்துபோவார்கள். இதுதான் வரலாறு. இளைய வயது தமிழைப் படியுங்கள். அதன் இனிமையைச் சுவையுங்கள். அற்புதமாகப் பாடலாம் எழுதலாம். பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்.
உங்களுக்கு இது புரியுமா? என்றும்கூடத் தெரியவில்லை. ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும் இனியொருமுறை இதுபோன்று அமையாதிருக்க.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு... பாரதிதாசன்.
Subscribe to:
Posts (Atom)