வணக்கம்,
இடைவிடாத மழையும் இடைவெளிவிடாத பணியும்
தொடர்ந்திருக்கின்றன.
இன்று நீலம் புயலின் காரணமாக விடுமுறை விட்டிருக்கிறார்கள்.
மின்வெட்டும் இல்லை.
இதுதான் தருணமென்று ஒவ்வொரு வலைப்பூவாய் வலம்
வந்து மகிழ்ந்த தருணங்கள் நிகழ்ந்தன.
இன்னும் வலம் வரவேண்டும் இன்றைக்கு எவ்வளவு முடியுமோ
அவ்வளவு.
அடுத்தவர் பிரச்சினையில் எப்போதும் மூக்கை நுழைக்கும்
அமெரிக்க வெள்ளத்தால் ஒரு லட்சம் கோடி இழப்பு வருத்தத்தைத்
தரவில்லை.
சாலைகள் போடப்பட்ட தெருக்களும் சரி... போடப்படாத
தெருக்களும் சரி... குளங்களாகவும் குட்டைகளாகவும் பெருகி
பல்லிளிக்கின்றன... அதைவிட,,, அரசியல்...
கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதன் சத்தியத்தில்
இயங்கவேண்டும்.
000000000000000
மழை கொட்டுகிற தருணத்தில்
விழுகின்ற மழையேணியில் ஏறுகிறேன்..
கை வழுக்கவில்லை
மனம் வழுக்குகிறது...
அப்படியே சரிந்து
சில பூக்களின் வண்ண இதழ்களின் மீதும்
சில வண்டுகளின் இறக்கைகளின் மீதும்
அடர்ந்த இலைகளின் மீதும்
சில மிருகங்களின் முதுகின் மீதும்
கூரைகளின் மீதும்,,, குறு மலைகளின் மீதும்
கொஞ்சம் சாக்கடையிலும்
கொஞ்சம் சகதியின் பரப்பிலும்
விழுகிறேன்...
தவிக்கையில் தாங்கிப் பிடிக்கின்றன
சில குழந்தைகளின் காகித கப்பல்கள்
போகும்வரை போகட்டுமென்று
அதில் பயணிக்கிறேன்,,,
சுகமாய் இருக்கிறது மழையும்
மழையேணியும்,,,
முகமருகே உரசுகிறது வாசமாய்
ஒரு தேனீர் கோப்பை
அன்பாய் அவளின் சொற்கள்,,,,,
முதுகில் இறுகும் மகளின் கைகள்,,,,
மழையில் இன்னொரு உலகிற்கு
நான் பயணிக்க வெளியே கூச்சலிடுகின்றன
மழையேணியின் ஒவ்வொரு துளியும்,,,
000000000000
ஒரு துளி மழைக்குள்
அடங்குமா
மனதும் மகிழ்ச்சியும்?
ஒரு துளி மழைக்குள்
அடங்குமா
எந்தக் கவிதையும்?
ஒரு துளி மழைக்குள்
அடங்குமா
முதலும் முடிவும்?
ஒரு துளிமழைக்குள்
அடங்குமா
ஒரு வறுமையின் மரணம்?
ஒரு துளி மழைக்குள்
அடங்குமா
எதுவும்?
துளிதானே கடல்?
துளிதானே உலகம்?
துளிதானே இயக்கம்?
துளிதானே பிரும்மம்?
துளிதானே துயரம்?
துளிதானே இன்பம்?
துளிதானே,,,துளிதானே,,,,
0000000000000