Tuesday, June 11, 2013

ஜால்ரா குறுந்தொடர்....2

ஜால்ரா... அத்தியாயம் 2                        அக்னி நட்சத்திரம் முடிந்து மறுநாள்.

                         காலையில்  எழுந்து வானத்தைப் பார்த்தபோது லேசாக மூடியிருந்தது மழைமேகங்களால். நிச்சயம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் மழை வரும் என்பது ஐதீகம். மறுநாளே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் முன்னோர்கள் மேல் இருந்த மதிப்பு கூடியது.

                         கதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு நீர் தெளிப்பதற்காக கையில்  வாளியில் தண்ணீருடன் வந்தாள் தனலெட்சுமியம்மாள். எதிரே வலம்புரி விநாயகர் கோயில். வாளியிலிருந்த தண்ணீரைக் கொண்டு கோயில் வாசலில் தெளித்து முடித்து வாளியை அப்படியே தரையில் வைத்துவிட்டு இடுப்பில் செருகியிருந்த முந்தானையைத் தளர்த்திவிட்டு அப்படியே விநாயகரை கைகூப்பி வணங்கினாள்.

                         புள்ளயாரப்பா,,, எல்லாரையும் நல்லா வை. இப்படி தெனமும் உன் வாசல்ல தண்ணி தெளிச்சு கூட்டிப்பெருக்கற சக்திய சாவற வரைக்கும் கொடு,, உனக்குப் புண்ணியமாப் போவும்..

                         அப்புறம் தன் வீட்டு வாசலில் தெளித்து முடித்தாள்.

                         கூட்டிப் பெருக்கிக் கோயில் வாசலிலும் பின் தன் வாசலிலும்  கோலத்தைப் போட்டு முடித்தாள்.

                          கோயிலுக்கு எதிரேதான் அந்த சிறிய குடிசை வீடு, தனலெட்சுமிக்கு மிஞ்சிய பூர்வீக சொத்து அதுதான்.

                           தனலெட்சுமியின் கணவன் கீற்று போடும் வேலையில் இருந்து ஒருமுறை மாடியில் கீற்றுப்போடும்போது தவறி கீழே விழுந்து கால்கள் முறிந்துபோய் அபப்டியே படுக்கையில் விழுந்து இறந்துபோனான்.

                          ஒரு மகள். தனலெட்சுமி ஒருமகளோடு இந்த வீட்டில் ஒதுங்கிக்கெர்ண்டாள்.

                           மகளைத் துர்க்கிக்கொண்டு வீட்டு வேலைக்குப் போய் மகளை வளர்த்தாள். அப்புறம் காதையும் கழுத்தையும் மூடி நகை செய்து மகளைக் திருமணம் செய்து கொடுத்தாள். மாப்பிள்ளை ஒரு  காபி கிளப்பில் சர்வராக இருக்கிறான். மகளை நன்றாக வைத்துக்கொள்கிறான். அதுபோதும்.

                          இன்னும் வீட்டு வேலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறாள்.

                          கிடைப்பதில் கொஞசம் சாப்பிட்டு கொஞ்சம் சேமித்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

                           எப்படியும் காலையும் மாலையும் அவளுக்கு வேலை கோயில் வாசலில் நீர் தெளித்து பெருக்கி கோலம்போடுவதுதான். ஆறுமணி பூசைக்கு ஐயர் வரும்போது கூடமாட இருந்து சில்லறை வேலைகள் செய்து தருவாள்.
                           சரியையும் கிரியையும்  ஆன வேலைகள்
                            என்னா தனம் ஒம் மவ எப்படியிருக்கா?
                            நல்லா இருக்கா சாமி, எனக்கென்ன கவலை, எல்லாம் இந்த வலம்புரி புள்ளயாரய்யா பாத்துக்குவாரு,,
                            எல்லாத்தையும் அவரு தலையிலேயே போட்டுடு
                            ஆமா, அவருக்கு என்னதான் வேலை?
                            வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் யாரேனும் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலு ம் அபிஷேகத்திற்குக் கொண்டுவருவார்கள்.
                            அந்த விநியோகத்தில் தனலெட்சுமிக்கு கொஞ்சம் கிடைக்கும். அன்றைய பசி தணியும்.
                            தனம,,, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தணும்.. ரொம்ப நாளாச்சு,,, செய்யாம இருக்கறது தெருவுக்கு ஆகாது,,
                              ஆமாம் சாமி,, நான் வாகக்ப்பட்டு வநத் காலத்துக்கு இதுவரை நடகக்ல்லே,,,நடத்திப்புடறது நல்லதுதான்,, தெருக்காரங்ககிட்ட செய்திய போட்டு வையுங்க,,
                             சொல்லியாச்சு தனம்,, அதுக்கான வேலை நடக்குது,
                             அதெல்லாம் நடந்துடும் சாமி,, அவருக்குத் தெரியாதா? எது எது எப்ப நடக்குமோ அப்ப நடத்திடுவாரு,,
                              சொல்லிவிட்டு விநாயகரைப் பார்த்து ஒரு தோப்புக்கரணம் போட்டாள்,
                               வலம்புரி சிரித்துக்கொண்டிருந்தார் மாறாது,
                               ஐயர் தீபாராதனைக் காட்டிவிட்டு தனத்திடம் தட்டை நீட்டினார், தொட்டுக் கும்பிட்டுவிட்டு திருநீறு பூசிக்கெர்ண்டிருக்க யாரோ நாலைந்துபேர் கோயிலுக்குள் வர அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினாள்,
                             வாங்கோ,,, விபூதி எடுத்துக்கோங்க என்று தட்டை நீட்டினார்,
                             தொட்டுக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் அப்படியே பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள்.
                             என்ன சாமி,, ஒரு நாள் பாருங்க,, கும்பாபிஷேகத்த நடத்திடுவோம்.
                              நாள் குறிச்சு வச்சிருக்கேன்.
                              சரி.. முறைப்படி தெருக்கூட்ட்ம் கூட்டிப் பேசிடுவோம். இந்து அறநிலையத்துறை காவல்துறை எல்லாத்துக்கும் முறைப்படி தெரிவிச்சுடுவோம்.
                               வசூல் தொடங்கிடணும்,
                               எது வேணாலும் கூட்டத்தைக் கூட்டி செய்யுங்கோ,, தெருக்காரங்க எல்லாரும் ஒத்துமையா இருந்து செய்யவேண்டிய காரியம் இது,
                               ஆமாம் சாமி,,, செஞ்சுடலாம்,
                               அப்புறம் ஒரு விஷயம்,, கோயில்ல இருக்கற பொருட்களைச் சரிபார்க்கணும்,,
                                 இப்படிச் சொன்னது வேணுகோபால்தான்,
                                 எதுக்கு? என்று கேட்டார் தாமோதரன்,
                                 நாளைக்கு யாரும் கணக்குக் கேட்டா?
                                 யாரு கணக்கு கேப்பா? எப்படி கொடுக்க முடியும், இதுக்கு முன்னாடி எத்தனை பேரு கோயில் நிர்வாகம் பார்த்திருக்காங்க,, அவங்க கிட்டர்ந்து ஆரம்பிக்கணும், அவங்கள்ள பலபேரு செத்துப்போயாச்சு,
                                 எனக்குத் தெரிஞ்சு இருக்கற தளவாடங்களை சரி பார்ப்போம்,
என்றார் வேணுகோபால்,
                                 என்ன இருக்கோ, அத பட்டியல் போடுங்க சாமி,, மணி தட்டு தாம்பாளம் சரவிளக்கு இப்படி ஏதாச்சு இல்லாம ஒடஞ்சிப்போயிருந்தா என் செலவிலே வாங்கிக் கொடுத்துடறேன்,, என்றார் தாமோதரன்,
                                  வேணுகோபால் தாமோதரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
                                   தாமு வாங்கிக் கொடுக்கறது பிரச்சினையில்ல,,,இருக்கறது ஒழுங்கா இருக்கான்னு பார்க்கணும்,, பல சிலைகள் ஐம்பொன்னு அதெல்லாம் இப்ப இல்ல,,, சின்ன சின்ன சிலைகள்,, நான் சின்ன வயசுலேர்ந்து பார்த்திருக்கேன்.. அது எனக்கு நினைவிலிருக்கு,,,
                                   கடந்த பத்துவருஷமா எங்க தாத்தா,, அப்புறம் அப்பா இப்ப நான் பாக்கறேன்,, சந்தேகப்படற மாதிரியில்ல இருக்கு என்று சட்டென்று கோபப்பட்டார் தாமோதரன்,
                                       சந்தேகம் இல்ல தாமு,, ஒரு காரியம் செய்யும்போது அது சரியா நடக்கணும்,
                                      இல்ல,, என்னமோ எங்க குடும்பம் திருட்டுக்குடும்பம் மாதிரியில்ல உங்க பேச்சு இருக்கு,,
                                      என்ன தாமு இபப்டி பேசறீங்க?
                                      பின்னே?
                                      சரி எனக்கு என்ன? நாளைக்கு அவங்க கேட்டா பதில் சொல்லுங்க,,,
                                      தெருக்காரங்களுக்கு எங்க குடும்பத்தப் பத்தி தெரியும்,,
                                       நான் தெருக்காரங்களச் சொல்லலே அரசாங்கத்த செர்ன்னே,, இந்து அறநிலையத்துறையிலே பட்டியல் இருக்குமில்லே,,,
                                      தாமோதரன் முகம் மாறியது, அதைச் சட்டென்று மறைத்து,
தெருக்கூட்டத்தக்  கூட்டி முடிவு பண்ணிக்கலாம், நான் வரேன் சாமி,,
என்றபடி கோபமாக எழுந்து போனார் தாமோதரன்,
                                        எதுக்கு பிரச்சினை? என்றார் ஐயர்,
                                        இல்லே சாமி,, நான் சொல்லறதுலே ஒரு குறிப்பு இருக்கு என்றார்,  உங்களுக்கு விவரமா சொல்றேன், என்றார் வேணுகோபால்,
                                         ஐயர் குழப்பமாக வேணுகோபால் முகத்தைப் பார்த்தார்,

                                                                                                 (ஜால்ரா ஒலிக்கும்)