Tuesday, May 1, 2012

மனச்சித்திரம்



       1.  அலெக்ஸ் பால் மேனன் ஒரு பொறுப்பான உயர்பதவியில்
            இருப்பவர் என்பதைவிட அடிப்படையில் ஒரு மனிதர்.
            அவரின் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது. மாவோயிஸ்டுகள்
             யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உடனடியாக
            அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான்
            மிக முக்கியமானது. பேச்சு வார்த்தை நடத்துகிறோம்..பேசிக்
            கொண்டிருக்கிறோம்.. வழக்கம்போல குழு அமைத்திருக்கிறோம்.
            இவையெல்லாம் ஒரு உயிருக்கு முன்னர் அர்த்தமற்றது.
            உடல்நலமில்லாத ஆஸ்மா  தாக்குதலுக்குள்ளவரை.. உடனடி
            யாகக் காப்பாற்றுதல்தான் பொறுப்பான அதிகாரியாக இருந்து
            இந்த தேசத்திற்காகக் கடமைதவறாது பணியாற்றும் அவருக்கு
            நாம் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கும். மனசு தவிக்கிறது.
            அலெக்ஸ் பால்மேனன் விரைவில் வாருங்கள் நலமுடன்.



       2.  யாருமே யாராகவும் இல்லை. யாருமே நேராகவும் இல்லை.
           தேரோடும் வீதியில் வசிப்பவனுக்கு தேரின் அருமை தெரிய
           வில்லை. கடுகு சிறியது காரமானது என்பது ஊரறிந்தது. எனவே
           தான் சிறியவரிடத்து பதவி வழங்கப்படும்போது அது அதி-காரமாக
           உள்ளது. வலிய போய் செய்கின்ற உதவிகள் உதவாக்கரைகளைப்
           போல பலனற்றுப்போகின்றன. தகுதியற்றவனுக்கு உரிய எந்த
           ஒன்றையும் அவன் போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது.
            வாழையிலை அழகாக உள்ளது. எச்சில் இலையாக வெளியே
           எறியப்படும்போது அதன் வாழ்வியல் குறித்து யாரும் கவலை
            கொள்வதில்லை. தகைமையற்றவர்கள் உலகமெங்கும் நிரம்பி
           வழிகிறார்கள் கொசுக்களைப்போல. வயதானவர்கள் வாழ்வது
           வீணென்று அவர்களிடமே முகத்தில் அறைந்துசொல்கிற தலை
           முறை சரியாக இலக்கு இல்லாமல் இழப்பை ஈடுகட்டமுடியாத
            அழிவைநோக்கி நகர்ந்துபோகிறார்கள் யாரும்  காப்பாற்றமுடியாமல்.
            யாரேனும் ஒரு அழகான அர்த்தமுள்ள அற்புதக் கவிதையை
            எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்தபடியே
            அது யாரின் பிரசுரத்திற்கும் ஆளாவதில்லை.

                         இப்போதுள்ள குழந்தைகளுக்கு மண் வாசனை இல்லை.
             தொலைக்காட்சியெனும் தொற்றுநோய் அவர்களின் கண்களைக்
              கெடுக்கிறது. சோம்பலை அள்ளிப் பூசுகிறது. கவனமின்மையை
             உருவாக்குகிறது. கல்லைப்போல இருந்த இடத்திலேயே கட்டிப்
             போடுகிறது மிருகங்களைப் பழக்குவதுபோல குழந்தைகள்
             பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

                                                                                                   (வரைவேன்)

              இம்மாதம் உண்மை பத்திரிக்கையில் வெளிவந்த கவிதைகள்

                யாரேனும்
                கிள்ளினால்தான்
                வலிக்கும்
                இப்போது கிளறினாலே
                வலிக்கிறது
                தொட்டால்தான் சுடும்
                இப்போது
                சொன்னாலே சுடுகிறது
                அறைந்தால்தான்
                கண்ணீர் வரும்
                இப்போது
                பார்த்தாலே கண்ணீர்
                வருகிறது.
                வாழ்தலே வாழ்க்கை
                இப்போது
                வாழாதிருத்தலே வாழ்க்கை...

                000000

                 எல்லாவற்றையும்
                 செய்வதற்கு
                 நேரம் ஒதுக்குகிறோம்
                 எதையுமே செய்யாமல்தான்
                 எல்லா நேரமும்
                  ஒதுங்கிவிடுகிறது
                  கசடுகளைபபோல

                 000000

                  தொடர்ந்து
                  ஒலித்துக்கொண்டிருக்கும்
                  தொலைபேசியை
                   யாரும்
                   உடனே
                   எடுத்துவிடாதீர்கள்
                   எடுக்காமலும்
                   இருந்துவிடாதீர்கள்...

                  00000

                  வாழ்வின் எல்லாக்
                  கேள்விகளையும்
                  கேட்டுவிடுகின்றன
                   நொறுங்கநொறுங்க
                  சருகுகளின் மீது
                  நடக்கும்போது...

                   000000

                            (நன்றி / உண்மை மாதமிருமுறை இதழ் / மே.2012)