
ஆண்டின் இறுதியில்தான்
எதனையுமே தொடங்கவில்லையென்று
உணர்கிறோம்...
தொடங்கியதான எதனையும்
முடிக்கவில்லையென்று
உணர்கிறோம்...
முடிந்த எல்லாமும் பயனில்லையென்று
உணர்கிறோம்...
ஆனாலும் தொடங்கியதென்றும்
முடிந்ததென்றும்
பயன் விளைந்ததென்றும்
ஒரு நம்பிக்கையின்
பற்றுக்கோட்டில்
நாள்களைக் கடக்கிறோம்
ஒவ்வோராண்டும்...
இவற்றில் கிடைத்த மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் இடர்களையும்
தடைகளையும் சங்கடங்களையும்
அசிங்கங்களையும் அவமானங்களையும்
இழப்புக்களையும் ஏமாற்றங்களையும்
வெற்றிகளையும்
புன்னகைகளில் கொஞ்சமாகவும்
அழுகைத்துளிகளில் கொஞ்சமாகவும்
கரைத்துக்கொள்கிறோம்...
வாழ்வு கடந்துபோகிறது
புத்தாண்டில் வாழ்த்துக்களைப்
பரிமாறிக்கொள்கிறோம்..
ஒருசிறிதும் களைப்புறாமலும்
கவலையுறாமலும்
அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
வாழத்தொடங்கிவிடுகிறோம்...