0000
மீந்திருக்கட்டும்
எலிப்பொறி வேண்டாம்
சோறும் அதன் வாழ்க்கையும்...
0000
கலைகின்றன
மேகங்களும் மோகங்களும்
அடர் இரவு..
0000
பழம் விற்கிறாள்
பல்லாண்டுகளாய்
கனியாதிருக்கிறது வாழ்க்கை...
0000
கவனிப்பற்ற நிராகரிப்பில்
எரிந்து அடங்குகிறது மெழுகுவர்த்தி
யேசு முன்பு,,
0000
பக்தி வெள்ளம்
கரையுடைக்கிறது
நதியும் விதியும்
0000
கௌரி (சிறுகதை)
மூலையில் இருந்தன மண்ணெண்ணெய் டின்னும் ஒரு தீப்பெட்டியும்.
அதை உற்றுப் பார்த்தாள் கௌரி.
அதுபோதும் தன்னை எரிப்பதற்கும் உயிர் போவதற்கும்,
உடம்பு எரியும்போது வலிக்கும். தாங்க முடியாத வலியிருக்கும். அதைவிட மனத்தில் இருக்கிறது.
எல்லாம் தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள்.
பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.
பிடிக்கவில்லை என்பதற்காக சாக முடிவெடுக்கவில்லை.
அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசி அதைக் காரணம் சொல்லி பேசிவிட்டுப்போகிறார்கள்.
அப்பர் என்கிற ஒரு மிருகம் இருந்தும் கெடுத்தது, அம்மாவை உதறிவிட்டுப் போயும் கெடுக்கிறது.
எப்படி எதுவுமில்லாமல் இப்படி பெண்ணை வளர்த்திருக்கமுடியும்?
இவளின்அம்மா சரியில்லை என்றுதானே கணவன் விட்டுவிட்டுப்போனான்.
உண்மை அதுவல்ல.
அவனுக்கிருந்த பல பெண்களின் உறவால்கூட அம்மா விலகவில்லை. ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு வாய் குடிக்கும் அம்மாவைப் போகச்சொன்னான் பதிலாக.
அன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாகப்போகிறோம் நானும் என் பெண்ணும் என்று மிரட்ட ஓடிபபோனான். அதை சாக்காக வைத்துக்கொண்டு எண்ணெய் உடலோடு மகளோடு ஓடிவந்தாள் இந்த உலகில் வாழ.
இதுதான் உண்மை.
எதுவுமற்றவள் உண்மை எப்போதும் ஏற்றம் பெறுவதில்லை. அது நம்பப்படுவதுமில்லை.
தன்னை உருக்கி எரியும் மெழுகுவர்த்திபோல அம்மா கௌரியை வளர்த்திருக்கிறாள்.
ஆனால் விதி துரத்துகிறது.
சொற்களால் துரத்துகிறது.
அதில் நெருப்பைத் தடவியபடி துரத்துகிறது.
என்ன செய்வாள் பாவம்.
ஆகவேதான் கௌரி இந்த முடிவை எடுத்தாள்.
நெடுநேரம் யோசித்தாள்.
முன்புபோல் இல்லை. இப்போது வரிசை எண் கொடுத்து டோக்கன் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த டோக்கன்படிதான் மண்ணெண்ணெய் தருகிறார்கள்.
காலையில் வெறும் வயிற்றில் பழையசோற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டுப்போய் மாலையில்தான் இந்த மண்ணெண்ணெய் வாங்கிவருகிறாள்.
இதை வைத்துதான் விறகடுப்பில் எல்லாம் முடியும.
தான் ஊற்றிக்கொண்டு எரிந்துவிட்டால் அம்மா பட்டினிதான் கிடப்பாள்.
செத்துப்போன என்னை நினைப்பாளா? தன்னை நினைப்பாளா? எதுவுமே தெரியாமல் துடிக்கும் தன் வயிற்றை நினைப்பாளா?
யோசித்தாள்,
சரி அம்மா இன்றைக்கு சமைக்கட்டும். வயிறு நிரம்பச் சாப்பிடட்டும். மண்ணெண்ணெய் மிச்சமிருந்தால் சாவது பற்றி யோசிக்கலாம்.
அவமானம்தான்.
அம்மா படாத அவமானமா?
போதும். அவளின் துன்பம் தணியவேண்டும்.
சரியென்று யோசித்து நாளை சாகலாம் என்று முடிவெடுத்தாள் கௌரி.
அரசு தன்னையறியாமல் ஏழை மக்களுக்கு செய்கிற உதவியிது.