இருபதாண்டுகளாக சுமந்து
கொண்டிருக்கிறேன்...
காலம் சருகைக் கிள்ளியெறிவதுபோல
எனது பருவத்தின் ஒவ்வொரு நொடியையும்
கிள்ளியெறிந்தார்கள் சுடுசொற்களால்...
முகம் பார்க்கிற திசையெங்கும் முகத்தில்
வேதனை சேற்றள்ளிப் பூசினார்கள்...
எதற்கும் பதில்பேசமுடியாத
ஊமையாகவே நானிருந்தேன் பேச்சிருந்தும்
பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...
ஆளுக்கொரு வாழ்வில்
அப்பா என்றழைக்கிற உரிமையை
அவரும் பறித்தார் நீயும் பறித்தாய்...
பொறுமைசாலி என்கிறார்கள்
பிள்ளைப்பூச்சி என்கிறார்கள்
சுரணையற்றவன் என்கிறார்கள்
பரவாயில்லை பிழைச்சிக்குவான் என்கிறார்கள்
வலியற்றவன் வலிமையற்றவன் என்கிறார்கள்
நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
சுவையைப்போல எனதன்பை எனக்குள்ளே
கரைத்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கென்று ஒரு வாழ்க்கை
எனக்கென்று ஒரு பாதை
எனக்கென்று ஒரு தீர்வு
எனக்கென்று ஒரு இருப்பு
இல்லாமல் போய்விடவில்லை
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
என்பதற்கு ஒரு சான்றைப் போலிருக்கும்
நான் ஒரேயொரு கேள்வியைத்தான்
கேட்கிறேன்
என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்
வைத்திருக்கும் அன்பைவிட,,,, பெற்ற
பிளளையைவிட,,,,
காமம் பெரிதா அம்மா?