Sunday, October 23, 2011
காட்சிகள்....
உள்ளாட்சி தேர்தல்வரை வரப் பயந்து முடிவுகள் தெரிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலக் காத்திருந்த வானம் லேசாகக் கண் திறந்து மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சவுக்கு இலைகள் போல ஊசிஊசியாய் தொடங்கிய மழை அவை இறுகிப் பின்னிய கயிற்றைபோல கணமாகப் பெய்ய ஆரம்பித்தது.
நகரத்தில் தீபாவளி கடைபோட்டிருந்த பிளாட்பார ஓரக் கடைவாசிகள் கலக்கமுற்று தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் போர்வையால் போர்த்திவிட்டு வாயை மட்டும் உரக்கத் திறந்திருந்தார். ரெண்டு ஐம்பது. நாலு இருவத்தஞ்சு..வாங்க சார்...வாங்கம்மா...வாங்கம்மா...குடை 60 கலர்க்குடை 60தான் சார்...இப்படிப் பல குரல்கள். மழையில் நனைந்தபடியும் குடையைப் பிடித்தபடியும்..புடவை தலைப்பால் தலையை மூடியும் பெண்கள் துணிக்கடைகளிலும் சாலையோரக்கடைகளிலும் பட்சணங்களில் மொய்த்த ஈக்களாயினர்..
அப்பா ஒரு சுடிதார் கூட எடுத்துக்கொடுங்கப்பா...
சும்மா இருடி... நீ ஒருத்தி மட்டும்தான் அதிசயமா இருக்கியா..உனக்கு மேல ஒண்ணு...கீழ ரெண்டு இருக்கு.. இத உங்கப்பா கடன் வாங்கிட்டு வந்திருக்காரு...சத்தம் போடுவாரு...பாவம் அந்த மனுஷன்...
அப்பா தர்த்தா வாங்கிகொடுத்த பட்டாசோட நிறுத்தக்கூடாது...எனக்குத் தனியா 500 ருவாயிக்கு வேணும்..
தொணதொணங்காதே.. வாங்கி தந்து தொலைக்கிறேன்..
எனக்கு வேணாம்...எங்கப்பா கருமாதிக்கு வச்சுக்கொடுத்த துணிங்க இருக்கு. அத தச்சிப் போட்டுக்கலாம்.. புள்ளங்களுக்கும் உனக்கும் எடுத்துக்க..
நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டேயிருந்தா உங்கப்பனா காசு தருவான்.
ஏன் உங்க்ப்பன்கிட்டே கொட்டிக்கிடக்குன்ன அள்ளிக்கிட்டு வாயேன்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
பாரு...பதிலுக்குப் பதிலு பேசறதுக்கு சீக்கிரமே தாலியறுத்து பிச்சை எடுப்பே பாரு..
பரவாயில்லை...
நாலுமாசமா வட்டி வரலே...இதுலே இபப்வேற கடன் கேக்கறே..ஆடம்பர மயிரு பண்ணத்தெரியுது..உன்பொண்டாட்டி திமிறாப் பேசறா.. நீ என்னடான என் காலை நகக்றே பணத்துக்க..
அவளுக்குத் தெரியாதும்மா..தீபாவளி புள்ளங்களுக்குத் துணி எடுக்கணும்..கொடுங்க..ஏற்கெனவே கொடுக்கவேண்டிய வட்டிய அசலோட சேத்துக்கங்க.. லோன் போட்டிருக்கேன்..அடுத்த மாசம் எல்லாதையும் பைசல் பண்ணிடறேன்..
பேச்சு நல்லா பேசறே..மானம் ரோசமா இருக்க மாட்டேங்குறே..
இல்லம்மா கொடுத்துடறேன்.
இதான் கடைசி...அடுத்த மாசம் வட்டி வரலே..விளக்குமாறுதான் பேசும்..
சரிம்மா..
நாலு டிரசும் பிடிக்கல்லியா?
நான் உன்ன கேட்டனா?
என்னடா ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி பண்ணறே?
எனக்குப் பிடிச்ச நான் எடுத்துக்கறேன்.. நீ எடுக்கவேண்டாம். எனக்கு ஐயாயிரம் கொடு நான் பாத்துக்கறேன்.
இந்தா என்னமோ பண்ணித்தொலை. ஏன்தான் எனக்குன்னு வந்து பொறந்தியோ?
நானா உன்னை பெத்துக்க சொன்னேன்?
சேதி தெரியுமா?
மூணுசக்கர வண்டியிலே வருவாரில்லை முட்டை எடுத்துக்கிட்டு...
ஆமா..
ஆறு மாசத்துக்கு முந்தி கால்ல ஆணி குத்திச்சாம்.. கவனிக்காம விட்டுட்டாரு... சுகரு வேற..அது ரொம்ப புண்ணாயிடிச்சாம்.. காலையிலே செத்துப்போயிட்டாரு..
அடப்பாவமே...நாலு வயசுல பொம்பள புள்ள இருக்கு.
ஆமா.. அவருக்கு செத்துப்போயிடுவோம்னு தெரியுமா? ஆஸ்பத்திரியிலே பொண்டாட்டியைக்கூப்பிட்டு பத்திரமா பர்த்துக்கோன்னு சொன்னாராம்..
தீபாவளி அதுவுமா அடக்கடவுளே?
மழை வலுத்துக்கிடந்தது.
ஒரு அப்பாவும் பெண்ணும் மழையில் ரோட்டில் கிடந்த பள்ளத்தைக் கவனிக்கவில்லை.
அந்த பெண் ஸ்கூட்டியை ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார் போல..பள்ளத்தில் முன்சக்கரம் விழுந்து அப்படியே இருவரும் விழுந்தவிட்டார். தரையில் கிடந்த கல் ஒன்று பெரியவர் தலையைப் பதம்பார்க்க ஏகமாய் இரத்தம். அந்த பெண் காலில் அடி..
பாத்து வரக்கூடாதும்மா.
அடக்கடவுளே?
பாதாள சாக்கடை போடறேன் போடறேன்னு நாசம் பண்ணிட்டானுங்க..
ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு இந்த ரோட்டுலதான் போறான்.. எம்எல்ஏ மினிஸ்டர்.. எல்லாம் போறானுங்க..அவனுஙக்ளுக்கு என்ன ஜெயிச்சாச்சு..இனிமே என்னா? ஒரு வயதானவர் தலையிலடித்துக்கொண்டு பேசிப்போனார்.
ஒருவர் வண்டியையும் ஒருவர் அந்தப் பெண்ணையும் ஒருவர் அந்த பெரியவரை தாங்கிப்பிடித்து ஓரமாய் உட்கார வைத்தார்கள்.
அந்தப் பெண் பதறினாள்.
அப்பா செல்லையும பணத்தையும் காணோம்..
அந்தப் பெரியவர் பரிதாபமாக மகளைப் பார்த்தார்...
மழை லேசாகக் குறைந்திருந்தது.
பட்டாசுகள் சரவெடிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.
பைக்குகள் ஊர்வலம் வந்தன. பின்னாலே நாலைந்து கார்கள். அப்புறம் ஒரு
ஜீப் அதில் கையை கும்பிட்டபடி ஒரு பெண். கழுத்தில் அவள் சார்ந்திருந்த கட்சியின் துண்டு.நன்றி அறிவிப்பு ஊர்வலம்.
சும்மாவா 40 இலட்சம் செலவு பண்ணியிருக்கேன்.
என் பொண்டாட்டிய ஜெயிக்கமுடியுமா?
இவங்களாச்சும் ரோடு போட்டுடுவாங்களா?
நாலு தெரு தாண்டி தண்ணிக்குப் போவவேண்டியிருக்கு,,ஒரு பைப்பாவது வச்சுத் தருவாங்களா...
நைட்டு பிரியாணியும் சரக்கும் இருக்காம்.. அண்ணே வரச்சொன்னிச்சு..
எங்க?
அண்ணனோட கல்யாண மண்டபத்துலதான்.
எல்லாவற்றையும் மறந்து வாயைப் பிளந்தபடி இரு ஓரமும் மக்கள் கூட்டம் வெற்றி வேட்பாளரை வியக்கப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரு வீட்டின் உள்ளே
என்னடா இது நாளைய தேதிய இன்னிக்கே கிழிச்சிட்டே..
சும்மாப்பா?
சும்மாவா? அப்படியெல்லாம் கிழிக்கக்கூடாது. நாளைக்குதான் கிழிக்கணும்.
அதனால என்னப்பா?
அதனால என்னப்பா?
அதனால என்னப்பா?
Subscribe to:
Posts (Atom)