Monday, June 21, 2021

 ரவா தோசையும் நாக்குப் பதுங்குகுழியும்…

பணி நிமித்தமாக தஞ்சைத் தொடங்கி நாகர்கோயில் வரையில் ஒரு மாவட்டம் விடாமல் எல்லா மாவட்டங்களிலும் தங்கியிருக்கிறேன். சனி. ஞாயிறு இரண்டு நாட்கள்.

இரண்டு நாட்களிலும் உணவு என்பது மாறாதது. காலையில் இட்லி. மதியம் விலை அதிகமுள்ள சாப்பாடு. இரவு மட்டும் ஒரேயொரு ரவா தோசை.

ரவா தோசையைத் தவிர வேறு எதையும் மனது விரும்புவதில்லை.

தஞ்சை நகராட்சிப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது பள்ளிக்கு எதிரில் அப்பா வேலை பார்த்த மருத்துவமனை. அப்போது கரந்தையில் இருந்த ஓட்டல்கள் இரண்டுதான். ஒன்று ராமைய்யர் ஹோட்டல் மற்றொன்று கணேச பவன்.

அப்படி அடிக்கடி அங்கே ரவாதோசைதான் வாங்கித் தந்து நாக்கை யோகாசனப் பயிற்சிபோல ஆக்கிவிட்டார். அப்பாவை எல்லோருக்கும் தெரியும் என்பதால் (மருத்துவமனையில் பணிபுரிந்ததால். மருந்தாளுநர்) ரவா தோசையில் சிறப்புக் கவனமிருக்கும். தோசையைச் சுற்றி அளவிட்டதுபோல ஒட்டைகள் உடைந்த சோப்புக் குமிழிகளைப்போல இருக்கும். ஒரு ஓட்டைக்கும் இன்னொரு ஓட்டைக்கும் இடைபட்ட பகுதி லேசான சிவப்பில் வெந்திருக்கும். சுற்றுவட்டம் பிளேடுபோல கூர்மை. அதை மடக்கி எடுத்து வரும்போது முருங்கைக்காயைத் துண்டுபோட்டு தோலுரித்தது போலப் படக்கென்று மையப்பகுதி உடைந்து துருத்தி நிற்கும். நெய் வாசனை தூக்கும். சிவப்பு மிளகாய் போட்டு அரைத்த சட்னி சுவையைப் பெருக்கும். பெரும்பான்மைப் பச்சை மிளகாய் சட்னிதான்…அப்புறம் சாம்பார் ஊற்றுவார்கள். அந்த சாம்பாரின் மேல் லேசாக மேகத் திட்டுகளைப் போல ஜீனி தூவுவார் அப்பா..

ஒரு முறை பள்ளி விட்டதும் ரவா தோசை நினைப்பில் எதிரில் மருத்துவமனைக்குப் போய் அப்பாவைப பார்க்க வழிதெரியாமல் அந்த மருத்துவமனை கேட்டைப் பிடித்துக்கொண்டு உறங்கிவிட.. உள்ளே போய் தகவல் சொல்லி அப்பா வந்து என்னடா தம்பி..என்று லேசாய்க் கடிந்துவிட்டு அப்புறம் ரவா தோசை சாப்பிடவைத்து.. (வீட்டில் வந்து அம்மாவிடம் துடை திருகல் வாங்கியது வேறுகதை) வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இன்று வரை ரவாதோசை நாக்கின் நிழலாக நிற்கிறது. தஞ்சாவூரில் கோல்டன் கபே… ஆரிய பவன்.. ஹோட்டல்கார்த்திக். வெங்கடா லாட்ஜ் காபி பேலஸ் ( காபிபேலசில் மட்டும் சின்ன வெங்காயம் முழுசாப் போட்ட சாம்பார் வாசம் நாக்கைப் பியானோ வாசிக்க வைக்கும்) வசந்த பவன் மங்களாம்பிகா அப்புறம் சின்ன சின்ன உணவுக்கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ரவாதோசைக்குப் படையெடுத்தக் காலங்கள் போக. தஞ்சைத் தொடங்கி நாகர்கோயில் வரையிலும் இந்த நாக்கு ரவாதோசை வேட்டை யாடியது. . இருப்பினும் தஞ்சையின் ரவாதோசையே நாக்கை அரசாள்கிறது.

பொதுமுடக்கக் காலமாதலால் ரவாதோசை சாப்பிட்டு மாதங்களாகிவிட்டன. பார்சல் என்றாலும் கொரோனா பயம் ரவாதோசையின் ஆசையை நாக்கிற்குக் கீழாகப் பதுங்குகுழியில் பதுங்க வைத்திருக்கிறது.

00000
Maana Baskaran மற்றும் வடுவூர் சிவ. முரளி
2 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

2 கருத்துகள்

4 comments:

 1. நன்றி தனபாலன் சார். நலமா. நலமே விழைகிறேன்.

  ReplyDelete
 2. ரவா தோசை - ஆஹா மொறுகலாக ரவா தோசை சாப்பிட மனம் விழைகிறது! தில்லியில் சில தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும் தற்போது ரவா தோசைக்கு வாய்ப்பில்லை!

  ரசனையான பதிவு.

  ReplyDelete
 3. உங்களின் நாவல் நடை சுவையானது. நாவல் வடிவத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். கட்டுரைகளும் எழுதலாம்.

  ReplyDelete