கொஞ்சம் கவிதைகள்…..
ஹரணி
யாரேனும் ஒருவர்
விட்டுக் கொடுத்துப்
போயிருக்கலாம்
அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்
அப்பாவைப் போலில்லை…
அப்பாவிடம் அவர்கள்
உதவிபெற்று
உயிர்வாழ்ந்த தருணங்களை
ஒருபோதும்
அப்பா அனுபவித்ததேயில்லை…
தன்னிழல்கூட அறியாமல்தான்
அப்பா
உறவுகளை நேசித்து
வாழ்ந்துபோனவர்
உயிரற்றுப்போன
அப்பாவின் முன்னால்
அத்தனைபேரும் விட்டுக்கொடுக்கமுடியாதவர்களாக
இயங்கிக்கொண்டிருந்தார்கள்..
முக்கியமான முடிவெடுக்கும்
நிலைப்பாடுகளில்
அழக்கூடாதென அப்பா
கூறியதை அம்மா
என்றைக்கு மனதிலேந்திகொண்டாளோ
அன்றைக்கு ஏந்திக்கொண்டு
வெளியேவந்தாள்
அம்மாவை அப்படியொரு
அமைதியான
சொற்களில் கண்டதில்லை…
எல்லோரும் நிறுத்திக்கொள்ளுங்கள் இத்துடன்
ஒற்றையடிதான் சொன்னாள்..
புயல் ஓய்ந்த பெருங்கடல்போல
அத்தனைபேரும்
அமைதியானார்கள்..
அவர்களிடம் பேசிய
கண்களால் என்னைப்
பார்த்தாள்
நான் அப்பாவைப்
பார்த்தேன் அவர் கண்மூடி
ஆமோதிப்பதைபோல
மார்பின்மேல் விழுந்த
மாலை அசைந்தது
மாலையை சரிசெய்தேன்
அப்பா புறப்பட்டுவிட்டார்
அம்மா விட்டுக்கொடுத்துவிட்டாள்
நான் கொள்ளியை
எடுத்துக்கொண்டேன்
மூங்கிலின் வழியாக
வெப்பமேறிக் கையைத்
தொட்டது..
000
குலதெய்வமிருந்த
இடம்
பொட்டல் காடாகிக்கிடந்தது..
சுற்றிலுமிருந்த
வயல்வெளிகள்
அறுவடை கண்ட அயர்ந்துபோய்
கிடந்தன.
தினமும் யாரேனும்
வழிபாடு
நடத்திக்கொண்டுதான்
இருக்கிறார்கள்..
நடுவழியில் கோயிலில்
விட்டுவந்த
தண்ணீர் பாட்டில்
குறித்து அம்மா
உரக்கக் கத்தினாள்
நடுக்காட்டில எங்க
தண்ணி கெடக்கும்
விட்டுட்டு வந்திட்டிங்க..
என்று
தங்கை அமைதியாகச்
சொன்னாள்
விடும்மா
கருப்புசாமிக்கும்
தாகம் எடுக்குமில்ல
குடிச்சுக்குவாரென்று..
வறண்டவெளியின்
ஊடாக வந்த
காற்று குளிர்ந்திருந்தது.
000
சிலவேளைகளில்
மனம் எகிறிவிடுகிறது..
எதையேனும் எடுத்து
வன்முறை நிகழ்த்திவிடத்
துடித்துவிடுகிறது..
இயல்பினை ஒருபோதும்
இயல்பற்று
மாற்றிவிட எண்ணாத
மனத்தின்
இயல்பு எல்லாவற்றையும்
சமன் செய்கிறது..
பெருமழை பெய்கிற
நாளில்
கூச்சலிடும் தவளைகளுக்கும்
மழையின் ஈரம் தேவைதான்படுகிறது
என்பதை தவளைகள்
அறிவதில்லை..
தவளைகளுக்காக
கத்திகளை உயர்த்துதல்
மாண்பன்று
வீரமுமன்று
000
பறவைகளின் எச்சங்கள்
விழுந்துகிடக்கும்
நிழல்களில் உறங்கிவிழிக்கிற
தருணங்களில்
கண்களறியா திசையிலிருந்து
பருந்துகளினொலி
காதுகளை
வந்தடையும்போது
சற்று கலக்கமுறுகிறது
மனதெனினும்
பருந்துகளை எதிர்ப்பது
பெரிய செயலில்லை
சிறுசிறு காயங்களோடு
அப்புறப்படுத்திவிடலாம்
அவற்றின் ஒலியை
அல்லது இருப்பை
என்கிற நம்பிக்கை
வலிதானது.,.
காலம் முழுக்க
இருத்தலின் தடங்களில்
பருந்துகளின் நிழல்களைத்
தவிர்க்கமுடியாது
என்கிற விழிப்புணர்வை
கைக்கொண்டே நடந்தோடவேண்டியிருக்கிறது..
என்றாலும்
எலிகளையும் செத்தபொருட்களையும்
அழுகும் நிணங்களையும்
தின்பதான பருந்துகளின்
இயல்பே அவற்றை
மற்றவற்றிலிருந்து
ஒதுக்குகிறது
என்பதுவே இருத்தலின்
தடத்தில் அழுத்தமுறக்
கால்
பதித்திடவும்…
தொடர்ந்தியங்கிடவுமான…
0000
பேருந்துகளிலும்
ரயிலின் பெட்டிகளின்
உள்ளும்
கைப்பேசிகளில்
குரல்களும்
சொற்களும்
விலங்குகளின் பண்புகளை
உலவ விடுகின்றன
இடையில் கைப்பேசி
ஒலித்தால்
எடுக்க மனசஞ்சுகிறது
எந்த விலங்கின்
எந்த உறுமலோவென
ஆறுதலேற்றுகிறது
பயணிக்கும் யாரின்
குழந்தையின்
சிரிப்பையோ அழுகையையோ
கேட்கிற நிமிடங்களில்
வாழ்வின் தாகத்தில்
விழுகின்றன
சொட்டுக்களாய்…
கவிதைகள் அனைத்தும் நன்று. முதல் கவிதை மனதைத் தொட்டது.
ReplyDeleteஅன்புள்ள வெங்கட் நாகராஜ் சார்...
Deleteவணக்கம். உங்களையும் திண்டுக்கல் தனபாலன் சாரையும் என்னால் ஆயுளுக்கும் மறக்கமுடியாது. தொடர்ந்து எழுதுவேன் என்று மூன்று முறைக்கு மேல் வாக்களித்தும் என் பணிச்சூழல் வரமுடியாமல் செய்துவிட்டது. இனி சொல்லாமல் வந்து உங்களின் அன்பைப் பெறுவேன். நன்றி.