Monday, July 6, 2020


என்னமோ நடக்குது…. குறுந்தொடர்…
               அத்தியாயம் 7
       விடியற்காலை 3 மணிக்கு ஏனோ விழிப்பு வந்துவிட்டது. கோபிக்கு. கொல்லைப்புறம் சத்தம் கேட்டது. குரல்களில் கோபமும் ஆதங்கமும் தெரிந்தன. மெல்ல நடந்துபோய் கொல்லைப்புறம் எட்டிப் பார்த்தான். ராகவன் கோபியின் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
             கல்யாண வயசுல பையன் இருக்கான். அவனுக்கொரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும். அதுலயும் இப்போ மண் விழுந்துடீச்சி.. முதமுதலப் பாக்கப்போகையிலே கெட்ட சகுனமாயிடிச்சு. யாராச்சும் பெண்ண கொலை பண்ணுவாங்களா?  இதுல நீங்க செய்யற காரியம் சொல்லவே அசிங்கமா இருக்கு..
             இதுல என்னடி அசிங்கம்? நான் ஆம்பிள.. ஆயிரம் பண்ணுவேன். அதனால உங்களுக்கு நம்ப குடும்பத்துக்கு ஏதும் கஷ்டம் வந்துடுச்சா.. மாசம் பொறந்தா முள்ளிங்கி பத்த மாதிரி பணம் கொடுக்கறேன். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கறேன்.. எந்தக் கடனும் இல்ல. அப்புறம் ஏன் என் வழியிலே குறுக்கே வரே..
           அடக் கண்றாவியே.. ஒரு பையன் இருக்கான். பொண்ணு இருக்கா. இந்த வயசுல இன்னொரு பொம்பள சுகம் தேடி அலையறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா..
            என்னால முடியுது.. செய்யறேன்..
            கோபிக்குப் புரிந்துவிட்டது. அவர்களிடையே போனான்.
            சே.. அசிங்கமா இருக்குப்பா.. என்ன காரியம் பண்ணறீங்க? அம்மாவுக்கு துரோகம் பண்ணலாமா?
             நீ எதுக்குடா குறுக்கே வரே.. உன் வேலைய பாரு… எனக்குப் புடிச்சிருக்கு.. செய்யறேன்.
              ஒரு தகப்பன் பேசற பேச்சாப்பா இது?  யாரும் கேட்டா காரி துப்புவாங்க.. எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்கமாட்டான்…
              இந்த பாரு.. தகப்பனா இருந்தாலும் புள்ளயா இருந்தாலும் பொண்டாட்டியா இருந்தாலும வாயும் வயிறும் வேற.. எனக்குப் பசிச்சா நீ சாப்பிட்டா என் பசி அடங்காது.. அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க வாழணும்.. நீ உன் வாழ்க்கை வாழறே.. நான் என் வாழ்க்கைய வாழறேன்.. இதுல என்ன தப்பு? நாளக்கி நீ இன்னொரு பொண்ண விரும்புனா நான் அதுல தலையிடமாட்டேன்.. அது உன்னோட வாழ்க்கை. நல்லது கெட்டது உன்னோட சேர்ந்தது…
              சே.. எவ்வளவு கேவலமா நடந்துக்கறீங்கப்பா என்றான் கோபி.
              உனக்குக் கேவலமா இருந்தா விட்டுட்டுப்போ..
              என்னம்மா இது? விட்டும்மா.. எனக்கு எதுவும் வேண்டாம். நான் அமெரிக்காவேப் போயிடறேன்..
               கோபி கோபமாகப் பேசிவிட்டு வெளியே போய்விட்டான். போன சற்று நேரத்திலேயே திரும்பி வந்தான். நேரே ராகவனிடம் போனான்..
               யோவ் நீ மனுஷனாய்யா.. பொம்பளப் பொறுக்கி… என்றான்.
               யேய்.. ஒழுங்காப் பேசு.. போனாப் போவுதுன்னு விடுறேன்..
            கோபியின் அம்மா பதறி ஓடிவந்தாள் உள்ளிருந்து. ஏண்டா என்னடா ஆச்சு?
            அம்மா. இவரு பண்ண காரியத்தப் பாரும்மா.. ,இவரு பிரெண்ட் அதான் கோபாலகிருஷ்ணன் அங்கிள்.. அவரு இப்போ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு.. அதுக்கு இவர்தான் காரணம். என் போன எடுத்து என்னமோ பேசியிருக்காரு.. அவரோட பையன் போன் பண்ணி என்னக் கத்தறான்.. உன்னை சும்மா விடமாட்டேன்.. போலிசுக்குப் போவப்போறேங்கறான்..
            அய்யோ..அய்யோ.. எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள் கோபியின் அம்மா. ராகவனுக்கு விஷயம் இன்னும் விபரீதமாகப் போவதை உணர்ந்து ஏதேனும் செய்யவேண்டும் இல்லையெனில் தாம் ஜெயிலுக்குப் போவது உறுதியாகிவிடும் என்று நினைத்து அதிர்ந்தார். உடன் கிளம்பி வெளியே போனார்.
000
            அங்கே அந்த 25 ஆம் எண் பங்களாவில்..
            உனக்கு என்ன குறை வச்சேன்?.. சின்ன வயசுலேர்ந்து எங்க குடும்பம் கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு முட்டையை வாங்கி அவிச்சு ஆறுபேர் சாப்பிடுவோம். நீங்க எல்லாம் இத மனசுல வச்சிக்கிட்டு நல்ல வரணும்.. நல்லாப் படிக்கணும் எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. இன்னிக்கு நல்ல வந்துட்டேன். உன் மனசு போலத்தான் செய்யறேன். நாம் சேத்து வச்சிருக்கிற சொத்து பல கோடி பெறும். ஒண்ணுகூட என் பேர்ல இல்ல.. உன் பேர்லதான் எழுதி வச்சிருக்கேன். இரவும் பகலுமாக நான் உழைக்கறது நமக்குத்தான் உனக்குத்தான் வெளிநாட்டுல படிக்கற நம்ப புள்ளங்களுக்குத்தான்.. உனக்கு எந்தவிதத்துலேயும் குறை வக்கலே.. ஆனா நீ யாரோடவே.. உனக்குப் பிடிக்கும்னு ஒவ்வொண்ணையும் நினைச்சு செய்யறேன்.. அன்னிக்குக்கூட உனக்குப் பிடிக்கும்னுதான் சுடச்சுட வாங்கி காயத்ரிகிட்ட கொடுத்து அனுப்பிச்சேன்.. நல்ல பொண்ணு அவ.. நல்ல குடும்பத்துப் பொண்ணு.. அவளுக்குக் கல்யாணம் ஆகப்போவுது.. தப்பா நடந்தது உன் குற்றமா? அத அவப் பார்த்தது குற்றமா? என்கிட்ட சொல்லி அழுதா.. சார்.. எங்களுக்கு எவ்வளவோ செய்யறீங்க? ஆனா உங்க வாழ்க்கை இப்படி ஆயிடிச்சேன்.. ஆனா அவள நீ கொலை செஞ்சுட்டே.. அந்த அளவுக்கு உனக்கு உடம்பு சுகம் கண்ண மறச்சிடிச்சி.. இனிமே நீ தப்பிக்க முடியாது.. உனக்கு தண்டனை கெடச்சாகணும்..
           என்று பேசியபடியே கையில் துப்பாக்கியை எடுத்து அவளை (தன் மனைவியை ) குறிப்பார்த்தான்.. குறி பார்த்தபடியே பேச ஆரம்பித்தான்… உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்டி.. இப்படிச் செஞ்சுட்டியே.. பாவி.. நான் என்னடி பாவம் பண்ணேன்? நான் ஏதும் தப்பு பண்ணேனா.. என்றபடி அழுதான். ஆனால் அவளை நோக்கியிருந்த துப்பாக்கி விலகவில்லை.
            என்ன மன்னிச்சிடுங்க.. புத்திகெட்டுப் பண்ணிட்டேன்.. என்ன விட்டுடுங்க.. புள்ளங்க இருக்கு.. இனிமே பண்ணமாட்டேன்.. என்ன விட்டுடுங்க..
            இல்ல உனக்குத் தண்டனை கொடுத்தே தீருவேன்.. உன்ன மாதிரி ஆளுங்களாலதான் என்ன மாதிரி உண்மையான ஆம்பளங்க வாழ்க்கை முடிஞ்சிப்போயிடுது.. உனக்கு மன்னிப்பே கெடயாது…
            கெஞ்சினாள்.
        அப்போதுதான் ராகவன் அந்த பங்களாவின் வெளிக் கேட்டில் கைவைத்துத் தள்ளவும் உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அம்மா என்று ஒரு பெண் அலறினாள்.
                                                      (இன்னும் நடக்கும்)