Thursday, July 23, 2020




குறுங்கதை 14

                             ஒழுக்கம்

                                                                ஹரணி

            அந்தக் கோயிலைச் சுற்றித் தெருக்கள் அகண்டு கிடந்தன. ஒன்று நீண்ட சாலை அதன் ஓரங்களுக்குள் தெருக்கள் செருகிக்கிடந்தன. கோயிலின் இடப்பக்கம் இந்த சாலை. வலப்பக்கம் கடைத்தெரு. பின்பக்கம் கடைத்தெரு. முன்பக்கம் பேருந்துசாலை இவற்றைத்தான் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான் கோபால்.

             எதேச்கையாகக் கடைத்தெருவிற்கு வந்த கண்ணன் கோபால் கோயில் வெளியே சுற்றுவதைக் கண்டான்.

             என்ன கோபால் இது? என்றான்.

             இரு நாலு சுத்து முடிச்சிட்டேன். இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு முடிச்சிடறேன். அதுக்குள்ள  நீ வாங்கறத வாங்கிட்டு வந்துடு.

             இருவரும் அப்படியே கோயிலின் பின்புறத் தெருவின் பூட்டிக்கிடந்த கடையொன்றின் கட்டையில் உட்கார்ந்தார்கள்.

              ஏன் கோயிலுக்குள்ள போகமுடியலியா கோபால்?

              போகலாம். கொரோனாவால உள்ள வரக்கூடாதுன்னு ஐயர் சொல்லிட்டாரு. தினமும் காலையில கோயிலுக்கு வந்து பழகிட்டேன்.

             அதுக்காக வெளிப்பிரகாரம் இருந்தா சுத்தலாம். இப்படிக் கடைத்தெருவை சுத்தினா சிரமமா இல்ல.

              சிரமமாத்தான் இருக்கு.

              அப்புறம் ஒரு சுத்து சுத்துனா போதாதா?

              இல்ல அஞ்சு சுத்து பழகிட்டேன்.

              அதுக்குன்னு ரொம்பப் பக்திதாண்டா.

               கோபால் சிரித்தபடியே இல்லடா.. சுத்தணும் அவ்வளவுதான்.

              என்ன சொல்றே? கோயிலுக்குத் தினமும் வர்றே பக்தி இல்லன்னு சொல்றேன்.

              ஆமாண்டா..அப்படிப் பழகிட்டேன். கடவுள் பிடிக்கும். ஆனால் அதன்பேர்ல செய்யற எல்லாத்தையும் என்னால ஏத்துக்கமுடியல..

            என்ன சொல்றே?

                சின்ன வயசுல அப்ப ஆறாவது படிச்சிக்கிட்டிருந்தேன். எங்கம்மா வெள்ளிக்கிழமை ஆனாப்போதும் உஜ்ஜயினி காளி கோயிலுக்கு அழச்சிட்டுப்போவாங்க.. சுத்திலும் பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க. எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக்கொடுத்திருந்தாங்க.. அயிகிரி நந்தினி.. 20 பாட்டுங்க.. படிக்கணும்.. இன்னிவரைக்கும் மறக்காம இருக்கு. இத்தனைக்கு எங்கம்மா கைநாட்டு படிக்கத்தெரியாது.. இப்படி வற்புறுத்தல்லதான் சாமி கும்பிடற பழக்கம் வந்துச்சி.. இன்னி வரைக்கும் தொடருது..

               வற்புறுத்தல்னு சொல்றே அப்புறம் எப்படி ஆறாவதுல தொடங்குனது இன்னிவரைக்கும் தொடருது..

              அது பயிற்சி. ஒண்ணுக்குப் பழகிப்போயிடறது. எனக்கும் அப்படியே பழகிப்போச்சு.

              செய்யாம இருந்தா என்னமோ போல இருக்கும்.

              அதான் கடவுள் செயல் கோபால்.

              இருக்கலாம். ஆனா நான் படிச்சமாதிரி யாருமில்லாம இருக்கற தருணங்களில் கடவுள் வந்து ஏதும் கேட்டு வரங்கொடுத்த அனுபவமே இல்லையே..

               அப்போ கடவுள் இல்லைங்கறியா?

               இல்லை. அவரைப் பார்க்கலேன்னு சொல்றேன்.

               என்னடா குழப்புறே கோபால்.

               குழப்பமே இல்லை. தெளிவா இருக்கேன். அவ்வளவுதான்.

               காலையில எழுந்து பல் விளக்கறதுங்கறது ஒரு பயிற்சி. விடமுடியாது. குளிக்கறதுங்கறது ஒரு பயிற்சி. டிபன் பயிற்சி. அதுபோல ஏழு மணியிலேர்ந்து எட்டு மணிவரை ஏதாவது ஒரு கோயில் சுத்தறது பயிற்சி. ஒரு ஒழுங்கு. அதுவே ஒழுக்கமாயிடிச்சி. ஏன்னு காரணம் சொல்லமுடியாது. என்னால விடவும் முடியாது.

              எனக்குப் புரியலடா கோபால்.

              இதுல புரியாமப் போறதுக்கு என்ன இருக்கு? வாக்கிங் போறமாதிரி கோயில் போறது சாமி கும்பிடறது எல்லாமும் எனக்குள்ள ஒரு பயிற்சியா இருக்கு. இது என்னோட அம்மா ஏற்படுத்துனது.. அம்மா இப்போ செத்துப்போயிட்டா.. அவ சொல்லிக்குடுத்த எதுவும் செத்துப்போகல.. சிம்பிள்..

                   அம்மாவுக்காகப் பக்திய தொடர்ந்து செய்யறே?

                   இல்லை. அம்மாமேல பக்தியால தொடர்ந்து செய்யறேன்.

                   என்னோட அம்மாவுக்காக இது. என்னோட மனைவிக்காக வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு எலுமிச்சை விளக்குப் போடறேன். அவதான் வேண்டிக்கிட்டுப் போடஆரம்பிச்சா.. அவளால முடியல. ராகுகாலத்துல போடணும். என்னப்போடுங்கன்னு சொன்னா செய்யறேன். சனி ஞாயிறு எதுவும் அசைவம் சாப்பிடமாடேன். என் பிள்ளைக்காக சனிக்கிழமை வெங்கடாசலபதிக்கு வேண்டிக்கிட்டாங்களாம் என்னோட மாமியார்.. ஞாயிற்றுக்கிழமை என்னோட பொண்ணுக்காக வேண்டிக்கிட்டது என்னோட அக்கா.. அதனால்.

                 வித்தியாசமா இருக்குடா உன்னோட பக்தி. நீ எதுவும் வேண்டிக்கமாட்டியா?

                 எப்பவும் வேண்டினது இல்ல. எதுவும் வேண்டாம அப்படியே சுத்துவேன். ஆனா சுத்தும்போது என்னன்ன செய்யவேண்டியிருக்கு நம்மோட குடும்பம் பத்தி.. பிள்ளைங்க பத்தின்னு யோசிச்சுக்கிட்டே சுத்துவேன். புது ஐடியா கிடைச்சிருக்கு.

                 திரும்பவும் சொல்றேன்…இது ‘ஒரு ஒழுங்கு. மனசையும் உடம்பையும் ஒழுங்குல வச்சிக்கப் பயிற்சி செய்யறமாதிரி.. யோகா செய்யறமாதிரி.. இதுவும். அவ்வளவுதான். நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல மனைவி பிள்ளைகள்னு உறவுகள் இருக்கு.. இது எல்லாமும் பின்னிப்பிணைந்து ஒரு வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. ஓடுற வாழ்க்கையில உள்ள இருக்கறவங்க ஆளுக்கொரு திசையில இயங்கறாங்க.. அவ்வளவுதான். இது வாழ்க்கை சக்கரம்.

                  சரி வா டீ சாப்பிடலாம்.

                  வேண்டாம். நான் கோயிலுக்கு வர்றப்ப எதுவும் சாப்பிடமாட்டேன். அதேபோல கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்குத்தான் போகணும்.. வேற எங்கயும் போகக்கூடாது. இது என் அம்மா சொன்னது. பார்ப்போம் என்றபடி எழுந்து போனான் கோபால்.

                        000000