Sunday, June 27, 2021

 

              கண்ணதாசனின் வசந்த காலங்கள்…

                                     

 

     கண்ணதாசனை ஆசைதீர எல்லோரும் எழுதிப் பார்த்துவிட்டார்கள். அவன் படைப்புகளை ஆராய்ந்து பல பட்டங்கள் பெற்றும் விட்டார்கள். இனி எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் எவர் கிரீன் என்று சொல்வார்களே அப்படி அவனைப் பற்றி எழுதுவதற்கு இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அவனும் அவன் படைப்புகளை வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவத்தைக்  கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறான்.

     ஒரு படைப்பு என்றைக்குப் படைக்கப்பட்டிருந்தாலும் அது புழங்குகிற காலத்துப் பொருத்தத்தையுடையதாக அமைதல் என்பது அந்தப் படைப்பின் அசல் தன்மையையும் திறனையும் அடையாளப்படுத்துவதாகும். கண்ணதாசன் படைப்புகள் பெரும்பான்மையும் அப்படித்தான்.

      அவர் எழுதியுள்ள பல நூல்களில் ஒரு சிறுநூல் ஒரு மணிநேரத்திற்குள் வாசித்து முடித்துவிடக்கூடிய நூல் எனது வசந்த காலங்கள் என்பதாகும். ஒரு மணிநேரத்திற்குள் படித்து முடித்துவிடக்கூடிய திறன் இருந்தாலும் அது ஏற்படுத்தும் உணர்வுகள் ஆண்டுகளைக் கடக்கும் வல்லமை பெற்றவை.

         இந்த வசந்தகாலங்களும் அப்படித்தான். நான் தவற விட்டதை என் வாழ்வில் என்னைக் கடந்துபோனவற்றைத் திரும்ப அனுபவிக்க முடியாமல் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நூலை எழுதுகிறேன் என்கிறான். அவருடைய சுயசரிமை வனவாசம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். என்றாலும் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது

         வாழ்க்கை எப்படித் துவங்கி, எப்படிப் போய்விட்டது என்பதில் முடிந்தது.

           சொல்லப்போனால் எனது வனவாசத்தைக்கூட இதுதான் நிறைவு செய்யும் என்கிறார்.

         இந்நூலில் எட்டுக்கட்டுரைகள் உள்ளன. எட்டு என்பது ராசியான எண் என்பார்கள். ஒருவேளை இப்படிக் கழித்துவிட்ட வசந்தகாலங்களைத் திரும்பப் பெறமுடியாத நிலையில் எட்டு என்பதை வைத்தாரோ என்று நினைக்கவும் தோனுகிறது. இச்சிறுநூல் உணர்த்தவருவது இன்றைய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் பலவற்றைப் பேசியிருப்பதுதான். எல்லாவற்றையும் தன் வாழ்வின் அனுபவத்திலிருந்துதான் எடுத்துக் காட்டுகிறார். முதல் மூன்று கட்டுரைகள் தாய்மை குறித்தது. ஒரு தாய்மை எப்படி இருக்கவேண்டும் என்கிறார். தன் பெற்ற தாயையும் தத்துஎடுத்து வளர்த்த தாயையும் குறிப்பிடுகிறார். என்றாலும் நிறைய செய்திகளை இங்கே பதிவு செய்கிறார். தாய் தாலாட்டுப் பாடுவதில் உள்ள பண்பாடு, அவர்கள் பயன்படுத்தும் சொற்களிலுள்ள பண்பாடு என எல்லாவற்றையும் அழகுறப் பதிவுசெய்கிறான்.

        கண்ணதாசனின் சகோதரி மூன்று பிள்ளைகளைப் பெற்று மாண்டபோது பாடிய தாய் வண்ண மக்கள் ஆத்தா உன் வயிறெல்லாம் பிள்ளையல்லோ என்று வருணித்தாளாம். முப்பது வயதில் செத்துவிட்ட அவளைப் பார்த்து ஒப்பாரியிடும்போது அநியாயச் சாவுக்கு அடியெடுத்து வைத்த ஆத்தா என்று பாடினாளாம். ஜனனத்திலும் மரணத்திலும் தாய்மையின் சங்கீதம் பரமனையே மெய்சிலிர்க்க வைக்கிறது என்கிறான். அவர்கள் செய்த கிராமத்து வைத்தியத்தை வீட்டிலே உள்ள அஞ்சறைப்பெட்டி சொல்லும் என்கிறார். சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, தைவளை, தூதுவளை, பிரண்டை இப்படியே தாய்மை வளர்த்த ஆரோக்கியம் என்கிறார். பேதி ஆகிறது என்றால் வேவு குடித்தல் என்கிற வைத்தியம். கொதிக்கிற பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவார்கள். அது திரைந்துபோய் விடும். அதை வடிகட்டி சக்கையை எறிந்துவிட்டுச் சாற்றை மட்டும் அருந்தினால் வயிறு சரியாகிவிடும்.

      வள்ளிக்கிழங்கை மாமிசத்தில் போட்டு சமைத்தால் யாரும் மாமிசத்தைச் சாப்பிடமாட்டார்கள் அதைத்தான் சாப்பிடுவார்கள் என்கிறான். அதிகம் கிழங்கை உண்டுவிட்டால் நாலைந்து பூண்டுகளைச் சுட்டுச் சாப்பிட அதிகாலையில் வாயு முழுவதும் வெளியேறிவிடும் என்கிறான். தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்கிறான். தன் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும்போதுகூட தாயைவிட்டு மகனைப் பிரிக்காத குடும்பமாகப் பார்க்கவேண்டும் என்று கருதியவன்.பெற்ற தாயின் மடியிலும் வளர்த்த தாயின் நிழலிலும் குடியிருந்த காலங்களே என் வாழ்வின் வசந்தகாலங்கள். வசந்தம் பூமியில் வருஷம் ஒருமுறை வரும். வாழ்வில், ஒரே ஒரு முறைதான் வரும் என்கிறான்.

     கல்லாதான் பெற்ற கருந்தனங்கள் என்னும் கட்டுரையில் வாசிப்பின் எழுதுவதின் சுகத்தை அனுபவிக்கத் தருகிறான். ஒருவனது உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோஅதே வழியில் அவனை விட்டுவிடவேண்டும். வேறு தொழில்களுக்கு அவனைத் திருப்பக்கூடாது என்கிறான்.

       இப்படிக் கூறுகிறான் கேளுங்கள்.

         சொல்லிக்கொடுத்த புத்தியும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குக் கூடவரும்.

         நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறியே மிகும் என்றான் வள்ளுவன்..

         ஆட்டுக்கு இலை தழைகள் பிடிக்கும். மாட்டுக்குப் வைக்கோல் புண்ணாக்குப் பிடிக்கும். யானைக்குக் கரும்பு பிடிக்கும். குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கும்.

         புண்ணாக்குத் தின்னும்படி குரங்கை வற்புறுத்தக்கூடாது. என்னை எங்கெங்கோ வேலைக்கு அனுப்ப என் பெற்றோர்கள் முயன்றார்கள்.

          அந்த வேலைகளும் கிடைக்கவில்லை. எழுத்தாசையும் என்னை விடவில்லை என்கிறான்.

            தன் வாழ்வின் அனுபவத்தின் அடிப்படையில் பாடல்கள் பிறந்ததை ஆற்றொழுக்கில் சொல்லிப்போகிறான். பைரன் என்னிடத்தில் தோற்றான். அனுபவத்தில் உமர்கய்யாம் என்னிடம் பிச்சை வாங்க வேண்டும். என்று தன் பாடல் புனையும் ஆற்றலைப் பெருமைப்படுத்துகிறான்.

      அதை எழுது இதை எழுது என்று ஏதோ ஒரு தேவதை என்னைப் பிடித்துத் தள்ளும் என்கிறான்.

        உலகத்தை முற்றும் உணர்ந்துகொண்ட பின்னாலேதான் என் எழுத்துகள் பிரகாசிக்கத் தொடங்கின என்கிறான். மெய்யாலும் மனத்தாலும் அனுபவித்தவற்றைப் பகிரும்வேளையே பாடல்களாகக் களங்கொண்டன அவனிடத்தில். மதுவின் சுகமும் அறிவேன். மதுவின் தீமையுமி அறிவேன். என்னைவிடச் சக்தி ஏது இவற்றை அறிவதற்கு என்கிறான்.

          ஒரு காலை சந்தனத்தில் வைத்தால் மறு காலைச் சேற்றில் வைப்பதே என் வாழ்க்கையின் விதி என்றாகிவிட்டது என்கிறான்.

        தலைக்கு மேலே தேவர்கள் பூமாரி பொழிவார்கள். காலுக்குக் கீழே கருநாகங்கள் படையெடுத்துக்கொண்டிருக்கும்.

      என் பக்கத்தில் மனிதர்களும் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பேய்களும் உட்கார்ந்துகொண்டிருக்கும்.

       வசனம் எழுதிக்கொண்டிருப்பேன். விசனம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும். நாம் எல்லாரிடத்திலும் அக்கறை செலுத்துகிறோம். நம் வாழ்க்கையில் யார் அக்கறை செலுத்துகிறார்கள்?

      எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவார்? என்று கேட்கிறான்.

         கோர்ட்டிலே என் பெயர் கூப்பிடாத நாள் கிடையாது.

         ஆனால் பாட்டெழுதுவதற்கு என் வீட்டை முற்றுகையிடாத ஆள்  கிடையாது.

          நதியினில் வெள்ளம். கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு.

          நிம்மதியில்லாமல் எழுதிய பாடல்களையே நீங்கள் நிமிமதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

          பத்துபேர் சொல்லும் புத்திமதியைக் கேட்க வேண்டியவன் பத்துப் பேருக்குப் புத்திசொல்லும் நிலைக்கு வந்தான் என்று அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய சூழலைக் குறிப்பிடுகிறான்.

          எனது தென்னை மரங்களில் இன்னும் சில இளநீர்கள் செழிக்கட்டும்.

         எனது நந்தவனத்தில் இன்னும் சில புஷ்பங்கள் மலரட்டும்.

         எனக்கு விளக்குகள் இன்னும் பிரகாசமாக எரியட்டும்.

         எனது சங்கீதம் தாளம் தப்பாமல் எழட்டும்.

         எல்லாம் கண்ணனுக்கே என்கிறான் ஒவ்வொன்றிலும்.

         கண்ணதாசன் என்னும் கவிஞன் இன்னும் கொண்டாடப்படட்டும் நமக்காக. நம் வாழ்வின் வசந்தக் காலங்களைத் தொலைத்துவிடாமல் அனுபவிக்கவும் சேமிக்கவுமாக.

         கண்ணதாசன் பிறந்தநாளான 24.6.21 அன்று எழுதியது.

                          00000