Friday, June 27, 2014

சிறுகதை



மாறாதய்யா மாறாது,,,,,,



                       நிறைய உடல் வெப்பத்தை இழந்திருந்ததால் சூரியன் மேற்கில் களைத்துபோய் தள்ளாடிக்கொண்டிருந்தான்.

                        தாய்ப்பசுவிடம் பால் குடித்ததும் பசி தீர்ந்த கன்றுக்குட்டியின் துள்ளல்போல் இரவு மெல்ல தன் வலையை வீசியிருந்தது.

                        அந்த வலையினுர்டாக நாலைந்து பறவைகள் கூடு திரும்பிக்
கொண்டிருப்பது வானப்போர்வையில் வரையப்பட்ட ஓவியங்கள் அசைவது
போலிருந்தது.

                         தெரு முழுக்க வாசல் தெளித்துக் கோலமிட்டிருந்தார்கள்.

                         இன்றைக்கும் ஐந்து மணிக்குப் பொழுதுசாயத் தொட்ங்கியவுடனே பெண்கள் செய்யக்கூடிய மறக்காத வேலைகளுள் ஒன்றாக இருந்தது.

                          பெரும்பான்மை பெண்கள் ஆறு மணிக்கு மேல் எந்த வேலையும் செய்வதாக இல்லை என்பதை சங்கம் வைக்காமல் தீர்மானமாய் உறுதி எடுத்திருந்தார்கள்.

                          நள்ளிரவில் ஆந்தைகள் அலறி இரைதேடப் புறப்படுவதுபோல மாலை ஆறுமணிக்குமேல் அத்தனை வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வாய்க்கூட்டை திறந்து தொடர் ஆந்தைகளை அலறவிட்டுவிடும்.

                           தெருவில் போடப்பட்டிருந்த நான்கு சோடிய வேப்பர் விளக்குகளில் இரண்டு எரியவில்லை. எனவே பாதி வெளிச்சமும் பாதி இருளுமாகத் தெருவிருந்தாலும் நடந்துபோகிறவர்கள் எதிரில் வருகிறவர்கள் தென்படுகிற சூழல் இருந்தது.

                              இப்படியான தெரு ஒன்றில்தான் உடல்சோர்வும் மனச்சோர்வும் ஒன்றிணைந்து வாட்ட ராகவன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.

                              படிக்கிறபோது கொஞ்சம் கனவுகள்

                              படித்து முடித்ததும் கொஞ்சம் கனவுகள்

                              வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கொஞ்சம்
கனவுகள்.

                              அதன்பின் மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கும் தருண நிகழ்வுகளைப் பெண் பார்க்கத் தொடங்கி மணவறையில் தாலி கட்டுவதுவரை எனக் கொஞ்சம் கனவுகள்.

                               பார்க்காமல் விட்ட பொருள்களைக் கரையான் அரித்ததுபோல
படித்து முடித்ததுமே அத்தனை கனவுகளும் அரிக்கப்பட்டுவிட்டன பயனற்று.

                               தொடக்கத்தில நம்பிக்கையோடு இருந்தான்.

                                அப்புறம் போராடவேண்டும் என்பதை உணர்ந்தான்.

                                போராடினான்.

                                 முடியவில்லை.  ஐநதாண்டுகள் கடந்துவிட்டன பட்டப்படிப்பு
என்று ஒன்றைக் கையில்வாங்கி ஆனால் வேலை அமையவில்லை.

                                  ஆயிரம் ரூபாய்க்கு அமெரிக்கா ஒப்பந்தம் போலப் பேசினார்கள்.

                                   கஷ்டக் காலத்திற்குப் பொருள்களை அடகு வைக்கலாம்.

                                   தவறில்லை.

                                    ஆனால் படித்த சான்றிதழ்களை அடகு வைக்கமுடியாது.

                                    சொற்ப சம்பளத்திற்கு மூலச் சான்றிதழ்களைக் கேட்டார்கள். உண்மையில் நல்ல வேலை கிடைக்கும்போது அவர்களிடம் வாங்க முடியாது. சட்டம் பேசுவார்கள். அவர்கள் பேசுகிற சட்டத்திற்கு முன்னால் தான் செல்லாக்காசுதான் என்று ராகவன் நினைத்து மறுகினான்.

                                     இடித்துப்போட்ட கட்டிட சிதைவுகளுக்குள் நடப்பதற்குத் தடுமாறுவதுபோல உடைந்த  தன் கனவுகளில் தடுமாறினான்.

                                      எல்லா வீட்டு வாசல்களிலும் வாசல் விளக்குகள் எரிந்துகொணடிருந்தன. உள்ளே தொடர் புதைமணலில் புதைந்துகொண்டிருந்தார்கள்.

                                       ராகவன் இவ்வளவு எளிதாக வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்பவே முடியாமல் ஏதோவொன்று
நெஞ்சடைத்துக் கிடந்தது.

                                      அப்பாவை நினைத்துப் பார்த்தான்.

                                      அடிக்கடி தன்னுடைய கதையைச் சொல்வார் அப்பா.. 67 சம்பளத்துக்கு வேலைக்குப்போனேன். அஞ்சு பிள்ளைங்க  என்ன பாடு பட்டிருப்பேன். ஒரு சொந்தக்காரன் சல்லிக்காசு உதவலே.. கழைக்கூத்தாடி
வாழ்க்கை வாழ்ந்தேன்.

                                          வுடுப்பா சதா புராணம் பாடறே... என்று விட்டு விலகி
ஓடுவோம்.

                                          இல்லடா தம்பி.. குடும்பக் கஷ்டம் உணர்ந்து நடக்கற புள்ளங்கதான் உருப்பட்டு கரையேறும்பார் பொறுமையாக.

                                          எதற்கும் கோபப்பட்டோ கை நீட்டி அடித்தோ அப்பாவைப் பார்த்ததில்லை.

                                          வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் அனுபவிக்கிற போது   தான் அப்பா அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பதை.

                                           இருக்கும் வரை அப்பா புரியவில்லை. இறந்தபிறகு வாழ்க்கை தெரியவில்லை.

                                          ஒவ்வொன்றுக்கும் குட்டிக்கரணம் போடாத குறைதான். அப்போதுதான் அப்பா எத்தனை பாடுபட்டிருப்பார். ஆனால் எதையும் காட்டிக்
கொள்ளமாட்டார். கேட்டது கொடுக்கும் கற்பகவிருட்சமாகத்தான் இருந்தார்.

                                           மின்சாரம் வசதியில்லாத சிம்ளி விளக்கு ஏற்றப்படும்
வீட்டைப்போல ஆகிவிட்டது வாழ்க்கை.

                                           ராகவன் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே
நடந்தான்.

                                          யாருக்கு இல்லை பிரச்சினை. போராடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். தலைக்குமேல் போனபிறகு சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்பதுபோல எல்லாவற்றையும் உதறிவிட்டு ஆறு மணிக்கு மேல் டிவி முன்பு நடுகல்லாகிவிடுகிறார்கள். கண்களில் மட்டும் உயிர் வைத்துக்கொண்டு.

                                         வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கொன்று  புதைக்கும்  ஒரு மெல்லக் கொலலும் விஷமாகத் தொடர்கள் இருப்பதையுணராத வாழ்க்கையில் அவர்கள் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.

                                           உறவறுக்கும் மாயச்சுழலாக தொலைக்காட்சிப்
பெட்டி மாறிக்கொண்டிருந்தது.

                                          வாசல் கதவு திறந்து கிடந்தது. உள்ளே போனான்.
வீடு நிசப்தமாக இருந்தது. அம்மா படுத்துவிட்டிருப்பாள். அவளுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிக்
கொண்டிருந்தாள்.வாயைத் திறந்து கேட்கவில்லை. கேட்க முடியவில்லை. அவள் உரிமையாகக் கேட்டுப்பெறுபவர்களில் அப்பா இப்போது இல்லை.
ராகவன் மட்டுமே இருக்கிறான். ஆனாலும் அவனால் ஒரு தொலைக்காட்சி
பெட்டி விலைக்குக்கூட ஒரு வேலை கிடைக்கவில்லை.

                                         இந்த ஐந்தாண்டுகளில் அவன் பல வேலைகள் பார்த்துத்தான் இருந்தான். அதிலெல்லாம் அவனுக்கு மிஞ்சியது அவமானங்கள்தான். காயங்கள்தான். அவற்றில் இன்னும் சில ஆறாமல் பயன்படாமல் நாறிக்கொண்டிருக்கும் நீர்க்குட்டைகள் போல உறுத்திக்
கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் வாங்குகிற சம்பளத்தில் இரண்டு வேளை உணவு மட்டுமே உறுதியாக இருந்தது.

                                         இவனுடைய நண்பர்கள் எல்லாரும் ஏதேதோ வேலை தேடி சென்னை. திருப்பூர் மும்பாய் திருநெல்வேலி என்று சிதறியிருந்தார்கள்.
இவனால் அப்படிப் போகமுடியாது. தனக்கு மேலே வளர்ந்து கிடக்கிற பெண் பிள்ளைகளைக் கரைசேர்க்கவேண்டும்.

                                         அப்பா இறந்துபோகும்போது நான்கு பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பவுன்தான் சேர்த்து வைத்துவிட்டுப்போயிருந்தார்.கூடவே ஒரு
சின்ன ஓட்டுவீடு. அறைகளேயில்லாத திருமண மண்டபத்தைப் போல.

                                         ஐந்து பவுனை வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையின் நுழைவுக் கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாது.

                                         இவன் உள்ளே வாசனை உணர்ந்து ராகவன் அம்மா
விளக்கைப் போட்டாள்.
                                          வெக்கையா இருக்கு. குளிச்சிட்டு ரசம்தான் வச்சிருக்கேன்.கொத்தரவத்தல் வறுத்திருக்கேன். சாப்பிடு. இன்னிக்கு காய் வாங்க முடியலேப்பா..

                                         குளித்ததும் உடல் முழுக்க ஒரு களைப்பு அழுத்தியது.

                                         கண்கள் செருகின. அப்படியே படுத்துவிட்டான்.

                                         ராகவன் அமமா பதறிப்போனாள்.

                                         என்னப்பா ஆச்சு?  சாப்பிடலே... நான் போட்டுக் கொண்டு வரவா?
                                         வேண்டாம்மா. அலைஞ்சது காலெல்லாம் வலிக்குதும்மா. துர்ங்கறேன் பசித்தா அப்போ எழுந்து சாப்பிட்டுக்கறேன். என்றபடி அப்படியே தரையில் சரிந்து படுததுறங்கிப்போனான்.

               நள்ளிரவில் விழிப்பு வந்தது. பசி. மெல்ல எழுந்து வந்து  அடுப்புக் கருகில் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு  ரசக் கிண்ணத்தையும் அருகில் எடுத்துவைத்துக்கொண்டான். சாதம் இருந்த அலுமினியப்  பாத்திரத்தைத் திறந்தான். உள்ளே நாலைந்து கரப்பான் பூச்சிகள் நுழைந்து  இறந்து
கிடந்தன.

                                                                                                                 (நாளை முடியும்)