இலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.
உலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.
சிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.
சிங்கன் - இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி?
சிங்கி - பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.
சிங்கன் - உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்
இருக்குதடி சிங்கி.
சிங்கி - அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.
சிங்கன் - உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்
சிங்கி?
சிங்கி - சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.
சிங்கன் - சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி?
சிங்கி - அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.
சிங்கன் - நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல நெ ளிவு அது
என்னடி சிங்கி?
சிங்கி - பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.
சிங்கன் - செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி?
சிங்கி - குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச
மடா சிங்கா.
சிங்கன் - உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்
சிங்கி?
சிங்கி - கண்டிய தேசத்தில் நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.
சிங்கன் - உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து
வைத்தது யாரடி சிங்கி?
சிங்கி - திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.
சிங்கன் - உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி
சிங்கி?
சிங்கி - சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.
சிங்கன் - உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-
சிங்கி - காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.
சிங்கன் - எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு
போன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி?
சிங்கி - குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.
சிங்கன் - காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி?
சிங்கி - அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.
சிங்கன் - குமிழமலர் மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி?
சிங்கி - முத்து மூக்குத்தியடா சிங்கா.
சிங்கன் - சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி
சிங்கி?
சிங்கி - தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.
இப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்
சிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.
சிங்கி - அதில் சந்தேகமோ, உன் தலைப் பேனைக் கேளடா சிங்கா.
என்கிறாள்.
எத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.