Saturday, June 9, 2012

,இரவின் மடியில்



            எதற்கெடுத்தாலும் ஏன் தலையை
            உயர்த்திக் குரைக்கிறாய்...அடிக்கடி செய்தால்
            தலை செயலிழந்துவிடும்...
            எப்படியோ இந்தத் தெருவில் அத்தனை வீட்டிலும்
            உணவு கிடைக்கிறது...எனவே இத்தெருவைக் காப்பது
            நமது உரிமையாகும்,, சின்ன அசைவுக்கும் ஒரு குரைப்பைச்
            செலவு செய்வதால் எதுவும் கெட்டுவிடாது,,,நீ உறங்கு
            உனக்கும் சேர்ந்து குரைக்கிறேன்,,, சிரமமில்லை..
            (ஓர் ஆண் நாயும் பெண் நாயும்)





           நாம் உறங்கவே  தாமதமாகிவிடுகிறது இந்த
           ஆந்தையால்... பகல் முழுக்கப் பறந்துபறந்து அலைந்த
           இந்த வாழ்வில் இரவில் உறங்க முடியவில்லை,,,
           ஆந்தை ஓய்ந்துவிட்டது என்றால் காற்று ஓய்வதில்லை
           இந்த மரமும் ஓய்வதில்லை,,,
            எனவேதான் உட்கார்ந்திருக்க முடியவில்லை
            சற்று எழும்பி வானத்தில் படபடத்துவிட்டு
            வருகிறேன்,,,

             (வேப்பமரத்தின் சில பறவைகள்)


              காற்றுக் காலத்தில் திறந்து வைப்பார்கள் என்றால்
              எல்லா சன்னல்களும் அடைக்கப்பட்டுவிடுகின்றன..
              முன்பெல்லாம் சன்னல்களும் திறந்திருக்கும் பால் பாத்திரங்களும்
               திறந்திருக்கும்.. கொஞ்சமாவது குடிக்கலாம்,,
             இப்போது வாடையடிக்கிறது கரப்பானுக்கு அடித்திருக்கும்
             மருந்துவாடை,,,
             மியாவ் மியாவ் என்று பசியில் வாய் திறந்தால்
              குச்சி வீசுகிறார்கள்,, கல்லால் அடிக்கிறார்கள்,,
               முட்செடிகளுக்குள் ஓடி ஒளிவதே வேலையாகிறது,,
               எப்போதாவது கிடைக்கும் எலிகளும் கிடைப்பதில்லை
               இரையாக,,,பூனைகளும் காவல் காக்கின்றன என்கிற
               பேராவது கிடைக்குமா என்ன இந்த மியாவ் கத்தலுக்கு,,,

                (சில பூனைகள்)

















               
                 என் வாழ்க்கை இருளில்தான் என்று உணவு தேடியலைந்தால்
                 என்ன சனியன் கத்துகிறது,,, கெட்ட சகுனம் என்கிறார்கள்,
                 நான் பிறந்தது நான் வாழவா,,, அல்லது உங்களின் கெட்ட
                 சகுனத்திற்கு அடையாளமா?... பறவைகள் நாங்கள் சகுனமா?
                 யாருக்கு யார் சகுனம்?

                 (மின்கம்பியில் உட்கார்ந்திருக்கும் ஓர் ஆந்தை)


                  பகலெல்லாம் வெயிலில் காய்ந்து சாகவேண்டியிருக்கிறது,
                 இரவெல்லாம் எரிந்து தொலைய வேண்டியிருக்கிறது,
                  இவர்களுக்குத்தான் எல்லாமுமா?  நாங்கள் ஜடமா?
                  யார் சொன்னது? ஒருநாளாவது இவர்கள் எங்களுடைய மனத்
                  தை கண்டறிந்திருக்கிறார்களா?

                  (தெருவில் நிற்கும் தெருவிளக்கு)


                   உயரத்தில் இருந்தாலும் அலையற பொழப்பாயிடிச்சி,,,
                   கையும் இல்லாம காலும் இல்லாம எங்கேயும் பிடிமானம்
                   இல்லே,,, ஆடுமாடுகளை விரட்டற மாதிரி இந்த காத்து
                   விரட்டிட்டு வருது,,,சும்மா உருண்டுகிட்டு இருக்கு இந்த
                   நிலாவை விரட்டமுடியல்லே,, காத்தால,,, எல்லாம்
                   ஓடறதக் கண்டாதான் துரத்தறதுக்குக் கொண்டாட்டம்,,,

                   (ஓடும் மேகங்கள் தங்களுக்குள்ளாக)


                              மொட்டை மாடியில் விழித்திருக்கும் இரவில் இப்படி
                     யெல்லாம் யோசிக்கத் தோணுது,, ரொம்ப யோசிச்சிட்டா
                      தப்பாயிடுமேன்னு நிறுத்திக்கிறேங்க,,,