தமிழ் செம்மொழியாகி வேண்டுமென்கிற அளவிறகு விழாவும் கொண்டாடியாகி முடிந்துவிட்டது.
செம்மொழி என்பதற்கு அடிப்படை தமிழின் சங்க இலக்கியங்கள். பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்கிற இலக்கியங்கள்.
இவ்விலக்கியங்களைப் பாடிய புலவர்களும் அவர்கள் பட்டபாடும் எழுத்தில் வடிக்கமுடியாதவை.
ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த மனித வாழ்வைத் தேடி இரவும் பகலும் பாராமல் ஓயாமல் எந்தவித வாகன வசதியுமற்ற காலவெளியில் ஓயாத மனத்துடன் அலைந்தவர் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யர் அவர்கள். உவேசா என்று அழைக்கப்படுபவர்.
அவர் பட்ட பாடுகளும் அத்தனை துன்பங்களுக்கிடையில் அவர் சேகரித்துப் பாதுகாத்துத் தந்துவிட்டுப்போயிருக்கிற இலக்கியங்கள் ஏராளமானவை.
அவர் இல்லையென்றால் அவ்விலக்கியங்கள் இல்லை. அவ்விலக்கியங்கள் இல்லையென்றால் இன்றைக்குப் பலருக்கு பிழைப்பே இல்லை.
தமிழ்மொழி உள்ளளவும் தமிழ்பேசும் உள்ளம் உள்ளளவும் அவரை மற்க்கக்கூடாது. மறந்தால் அவர்களை மன்னிக்கவும் முடியாது.
அப்படிப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டுவிட்டது.
முன்பிருந்தே தமிழுணர்வு உள்ளவர்கள் போராடியும் பலனற்று அவ்வீட்டை வாங்கியவர்கள் அதன் அருமை தெரியாமல் இடித்துவிட்டார்கள். அரசும் பேசாமல் இருந்துவிட்டது.
அவ்வீட்டை நினைவு இல்லம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமான தானே வரவேண்டிய உணர்வுள்ள கோரிக்கை விடுக்கப்பட்டும் இடிக்கப்பட்டுள்ளது தமிழ்த்தாத்தாவின் வீடு.
அரிய பல நுர்ல்களைப் புதிப்பித்தவர் (பதிப்பித்தவர்)
கருத்தரங்குகள் அல்லது அவரின் பிறந்த நாளில் அல்லது நினைவுநாளில் புகைப்படத்திற்கு மாலையிட்டுப் புகைப்படம் எடுத்து மறந்துவிடுவதைத்தான் காலங்காலமாக ஒவ்வொரு தமிழறிஞருக்காகவும் நாம் செய்கிற அதிகப்பட்சத் தமிழ்த்தொண்டு.
தமிழுக்காக நம்முடைய தாய்மொழிக்காகப் பாடுபட்டவர்களை நாம் என்றைக்கும் நினைத்து அவர்கள் உரைத்துவிட்டுப்போன வாழ்வின் சொற்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் பின்பற்றி வாழவேண்டும்.
உள்ளம் இடிகிறது..
அரசிடம் ஒரு வேண்டுகோள்... அவர் வீடு இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவிடம் கட்டியாவது நாம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். தமிழுக்காக தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர்வது என்பதும்கூட தமிழ்த்தொண்டுதான்.