Tuesday, June 29, 2010
இளைப்பாற இலக்கியம்.....
தமிழ்மொழி பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் ஒரு சுவையான கனி. ஒவ்வொருமுறையும் ஒரு தனியான சுவை. மனித வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து இலக்கியம் படைத்த பான்மை நுட்பமானது. இல்லறம் பேணுதல் என்பது அகத்திலும் வெளியில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் புறத்திலுமாக அடங்கும். இந்த இருபெரும் பிரிவுக்குள்தான் தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று ஆண்மையோடும் ஆளுமையோடும் இயங்கிகொண்டிருக்கிறது. இவற்றின் நுட்பத்தையும் சுவையையும் அவ்வப்போது ஒரு இலக்கியப் பாடலுடன் பகிர்ந்துகொள்ளலே இந்த இளைப்பாற இலக்கியம் பகுதி.
முதலில் குறுந்தொகை. சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கருவறை என்று சொல்லலாம். அதில் அக இலக்கியமும் புற இலக்கியமும் என அமைந்தவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனும் 18 இலக்கியங்கள். இவற்றுள் அக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கது குறுந்தொகையாகும். காதலும் இல்லறமும் வாழ்வியலின் நுட்பமும் செழுமையான சுவையும் நிரம்பியது குறுந்தொகையாகும். மட்டுமின்றி தமிழுலகில் அதிகஅளவு சான்றோர்களால் சான்று காட்டப்பட்ட இலக்கியமும் இதுவேயாகும்.
இன்று இளைப்பாற.....
ஒரு தலைவன் தலைவியை காதல் வயப்படுத்திவிட்டு..திருமணம் செய்து கொள்வதில் காலம்தாழ்த்துகிறான். தலைவி மிகுந்த துயரத்திற்காளாகிறாள். அவளின் துயர் துடைக்கமுடியாமல் அவளுடைய நெருங்கிய தோழி தலைவனைப் பார்த்துப் பேசுகிறாள்.
என் இனிய தலைவனே உன்னுடைய நாட்டில் அரசனுடைய காவல் மரம் பலாமரமாகும். அதனைச் சுற்றி மூங்கிலால் வேலியிடப்பட்டிருக்கும். அந்தப் பலாப்பழம் சிறிய காம்பில் பெரிய பழமாகத் தொங்கும். இது பலாமரத்தின் இயல்பு. எனவே அந்த இயல்பில் தலைவியைக காக்கவைக்காதே. இவளுடைய உயிரானது மிகச் சிறியது. ஆனால் உன்னால் அவள் மனதில் ஏற்பட்டிருக்கும் காதலானது அந்தப் பலாப்பழம்போல பெரியது. இதை உணர்ந்துகொள் என்கிறாள்.
இது சற்று புரியாப் பொருள்போல இருக்கும். முதலில் இதன் நுட்பத்தைப் பார்க்கலாம்.
அரசனுடைய காவல் மரம் என்பது கடும் காவலுக்கு உரியது. அம் மரத்தின் பழத்தை எளிதில் யாரும் அணுகமுடியாது. இது தலைவனுடைய நாட்டின் நிலை,அதேபோன்று இரவு நேரத்தில் தலைவியை எப்படியாவது அடைந்துவிடலாம் என்றெண்ணி பல ஆபத்தான நிகழ்வுகளை எல்லாம் கடந்துவரும் தலைவனிடம் இதை தோழி சொல்லி அந்த கடும் காவலுக்குப் பின் இருக்கும் பழத்தைப் போலதான் தலைவியின் நிலையும் அடைய முடியாது. எனவே விரைவில் முறைப்படி வந்து திருமணம் செய்துகொள் என்று தோழி கூறுகிறாள்.
இதனைத் தாண்டிய ஒரு சுவையான நுட்பமும் இதில் இருக்கிறது. தலைவன் இருக்கும் நாட்டையாளும் அரசனின் காவல் மரத்தில் சிறிய காம்பில் பெரிய பலர்ப்பழம் காய்த்துத் தொங்குவது மரத்தின் இயல்பாகும். அந்த இயல்பில் தலைவனாகிய நீயும் இருக்கிறாய். ஒன்றைப் புரிந்துகொள் பலாமரத்தின் இயல்பு என் தலைவயிடம் இல்லை. அவள் உயிரோ மிகச்சிறிய காம்புதான் (பலாப்பழத்தைத் தாங்கும் காம்பைப் போல்) ஆனால் அந்த காம்பில் தலைவனாகிய உன்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காதல் நாளுக்கு நாள் பழுத்து மிகப்பெரிய பலாப்பழம்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. மரத்தின் இயல்பைப் போல் அது இல்லை. நீ முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் உன்னால் பழுத்திருக்கும் காமம் (காதல்) என்கிற கனியின் பாரம்தாங்காமல் அவளின் உயிர் ஆகிய காம்பு முறிந்துவிடும். இதனைப் புரிந்துகொள் என்று உணர்த்துகிறாள்.
அந்தப் பாடல் பின்வருமாறு
வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தாங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே...
கபிலர்
வசதிக்காக... வேரல் என்பது மூங்கிலைக் குறிக்கும். கோடு என்பது சிறு காம்பைக் குறிக்கும். பலவு என்பது பலாப்பழம்.
அடுத்த இளைப்பாறுதல் வரைக்கும்...
Sunday, June 27, 2010
ஆங்கிலக்கவிதை....
இருபதாண்டுகளுக்கு முன் கல்கத்தாவிலிருந்து வரும் பொயட்ரி டூடேயில் ஆங்கிலக் கவிதைகள் கொஞ்சம் எழுதி பிரசுரமானது. அப்புறம் பணியின் நிகழ்வுகள் பயணங்களில் கழிந்தன. ஆனாலும் அவ்வப்போது விட்டுவிடாமல் குறிப்புகள் எடுத்து வைத்து வந்திருக்கிறேன். அதன் வெளிப்பாட்டில் இனி சிறுசிறு கவிதைகள் வரும்.
N E V E R....
First Attack
First Love
First Poem
First Pain
First Insult
First Triumph
Never comes
in our life
again...
T R U T H.....
All truths show
all shadows..
but
All shadows never
show even single truth...
PUNCTUATED MARKS..
Many times we are missing
commas...
Sometimes we are keeping
Semicolons...
Rarely We are using
brackets...
Question marks using us
ever..
Single Quotes often
by our relatives...
Exclamation marks alloted
only for Children..
Normally full stops in
Waiting List...
Awaiting some marks still
like our life...
N E V E R....
First Attack
First Love
First Poem
First Pain
First Insult
First Triumph
Never comes
in our life
again...
T R U T H.....
All truths show
all shadows..
but
All shadows never
show even single truth...
PUNCTUATED MARKS..
Many times we are missing
commas...
Sometimes we are keeping
Semicolons...
Rarely We are using
brackets...
Question marks using us
ever..
Single Quotes often
by our relatives...
Exclamation marks alloted
only for Children..
Normally full stops in
Waiting List...
Awaiting some marks still
like our life...
Saturday, June 26, 2010
ஹைகூ...கூ...கூ....
வலை வீசுதலில்
சிக்குகின்றன மீன்கள்
நதிகளல்ல...
நீயும் பேசவில்லை
நானும் பேசவில்லை
எல்லோரும் பேசுகிறார்கள்.
நீரின்றி அமையாது
உலகு
நத்தைக்கு யார் சொன்னது?
குழந்தை கையசைக்க
பயந்த காற்று
முகத்தில் தஞ்சமாகும்..
எறும்புகள் மொய்க்கலாம்
குப்பைக்குப் போகலாம்
சிறுமிக்கு இல்லை பருக்கை..
டயர் பஞ்சர்
விடுதலையான காற்று
காட்டிக்கொடுத்தது முள்ளை...
தொட்டிக்குள் நீந்துகின்றன
மீன்கள்
மனசுக்குள்ளிருக்கு கடல்...
சாலையில் காலி பீர்பாட்டில்
உள்ளிருந்து வரும் காற்று
கண்ணீர்த்துளிகளைப் பாடுகிறது..
கிணற்றுச் சரிவில்
குருவிக்கூடு..
மனசிலிருக்கு வாழ்க்கை..
காய்ந்த டீகோப்பை
மொய்க்கும் ஈக்கள்
நினைவில் நண்பர்கள்....
யாரின் மரணம்?
கூரியரில் கண்ணீர்
ஓடும் மேகங்கள்...
விடைபெறுகிறது சருகு
வழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று...
விபத்தில் பிணம்
கடந்துபோகின்றன
நாளைய பிணங்கள்...
டிரான்ஸ்பார்மரில் பட்டாம்பூச்சி
11000 வோல்ட்
அழகு ஆபத்துதான்...
தரிசன க்யூ
எறும்புகள் ரயில்
மேசையில் திருப்பதி லட்டு...
யார் செய்த பிழை?
தவளை விழுங்கி
அடிபட்ட பாம்பு...
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
அப்பாவிடம் திருடிய பீடி...
இன்று ஸ்டாக் இல்லை
அரிசியா?
அவளின் வாழ்க்கையா?
நாடக அரங்கு....
பொம்மை.....
(நாடகம்)
காட்சி ஒன்று
( ஒரு அப்பார்ட்மெண்டின் உறால் அது. சுவற்றில் அழகான ஷோகேஸ்
அதில் பல பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு
வெள்ளை நிற முயல்பொம்மை பீங்கானால் செய்யப்பட்டது.
அந்த முயல் தாவுவதுபோல் இருக்கிறது.)
(அந்த உறாலில் இரு பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருத்தியின் பெயர் ஈசுவரி. இன்னொருத்தி நிர்மலா. கூடவே
நிர்மலாவின் பையன் பாபுவும் இருக்கிறான். அவன் அந்த ஷோகேஸ்
முயல்பொம்மையை எடுக்க முயற்சிக்கிறான்)
ஈசுவரி: நிர்மலா உன்னைப் பார்த்து நாளாச்சு.. ஒரே அப்பார்ட்
மெண்ட்ல இருக்கோம்னுதான் பேரு..
நிர்மலா: எங்க வேலை சரியா இருக்கு ஈசுவரி. அதுவும் இவன
வச்சு சமாளிக்கறது பெரும்பாடா இருக்கு..படுத்தறான்..
பொழுது போயிடுது...
ஈசுவரி : விடு நிர்மலா..சின்ன பையன்தானே...அப்படித்தான்..
என்ன நினைச்சுப் பாரு..(பெருமூச்சுவிடுகிறாள்..)
கல்யாணம் ஆகி பத்து வருஷமாச்சு..நீ என்னப் பாரு..
நான் உன்னப் பாக்கிறேன்னு..ஓடுது பொழுது...
நிர்மலா: வருத்தப்படாதே ஈசுவரி. கடவுள் நிச்சயம் கண்ணத்
திறப்பார்..
(அப்போது பாபு ஒரு மோட்டாவை எடுத்துவந்து ஷோகேஸ்
அருகே போட்டு அதன்மேல் ஏறி முயல்பொம்மையை எடுக்க
முயல்கிறான். இவர்கள் கவனிக்காது பேச்சைத் தொடர்கிறார்கள்.)
ஈசுவரி : எனக்கு நம்பிக்கை போயிடிச்சி நிர்மலா..எத்தனை விரதம்..
எத்தனை கோயில்?...எத்தனை பிராத்த்தனை..ஒண்ணும்
பிரயோசனமில்லே..கடவுள் இருக்கான்னு சந்தேகமா இருக்கு..
(பொம்மையை எடுக்க முயலும்போது அது கைதவறி கீழே
தரையில் விழுந்து உடைகிறது...சில்லுகளாய்..)
நிர்மலா: யேய் பாபு.. அய்யய்யோ என்ன பண்ணே? அடக்கடவுளே
ஒடச்சிட்டியா..சனியனே..உன்னால தொல்லை...(அடிக்கிறாள்)
ஈசுவரி : என்ன நிர்மலா.. ரொம்ப ஆசையா வாங்கினது..இப்படிப்
பண்ணிப்புட்டான்..இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...அடக்
கடவுளே...எனக்குப் பயமாயிருக்கு..என்ன நடக்கப்போவுதோ?
நிர்மலா: சாரி ஈசுவரி..
ஈசுவரி : சாரி எதுக்கு நிர்மலா? அதனால உடைஞ்சது ஒட்டிடுமா..
(ஈசுவரி கோபமாகப் பேச நிர்மலா முகம் சுண்டுகிறது.)
நிர்மலா: தப்புதான் ஈசுவரி.. இதே மாதிரி வேறு வாங்கி கொடுத்துடறேன்.
(பிள்ளையைப் பார்த்து) சனியனே..எனக்குன்னு வந்து
பிறந்து தொலைச்சே பாரு...(ஓங்கி அறைகிறாள் கன்னத்தில்)
ஈசுவரி : என்னால மறக்கமுடியாத பொம்மை அது..இருந்தாலும்
இப்படிப்பட்ட மோசமான பிள்ளையைப் பெத்துக்கக்கூடாது..
நிர்மலா: நான் வரேன் ஈசுவரி..வந்து தொலைடா கழிச்சல்ல போற
நாயே...புள்ளயா வந்துருக்கு...பேய்..
(அடித்தபடியே இழுத்துக்கொண்டு போகிறாள்)
(ஈசுவரி உடைந்த முயல்பொம்மையின் சில்லுகளையே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்).
காட்சி இரண்டு
(அதே உறால்..ஈசுவரியும் அவள் கணவனும்..)
கணவன் : சரிவிடு..சின்ன பையன்தானே..வேணுமின்னா போட்டு
உடைப்பான்..ஆசையா எடுத்திருக்கான் கைதவறி விழுந்துடிச்சி..
வேற வாங்கிக்கலாம்.. பெரிசு பண்ணாதே இத...
ஈசுவரி: இல்லங்க..உங்களுக்குத் தெரியாது..நீங்க ஆபிசு போயிட்டா..
அதுதாங்க எனக்கு ஆறுதல்..கொஞ்சறதுக்கு எனக்கென்ன பிள்ளையா..
குட்டியா..அந்தக் கொடுப்பினைதான் எனக்கு இல்லே.. என்ன பாவம்
செஞ்சேன்னு தெரியல்லே..வயித்துலே வந்து தங்கறதும் நினைக்கறதுக்
குள்ளே கலைஞ்சி போயிடுது.. இதுகிட்டதான் சொல்லிப் புலம்புவேன்..
என் கவலைங்கள எல்லாம் பேசாம கேட்டுக்கும்.. இன்னிக்கு
வெள்ளிக்கிழமை..உடைஞ்சிப்போனது நல்ல சகுனமில்லீங்க..ஏதோ
நடக்கப்போவுது எனக்குப் பயமாயிருக்குங்க...(அழுகிறாள்)
கணவன் : ரொம்பக் குழம்பிக்காதே ஈசுவரி..சாதாரணப் பொம்மை..பேசாமப்
படு..பயமாயிருந்தா சாமியைக் கும்பிட்டு விபூதி பூசிக்கிட்டுப் படு..
நாளைக்கு உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்..
ஈசுவரி : இல்லங்க என்னமோ போல இருக்கு..என் பக்கத்துலே உக்காந்துக்கங்க.
கணவன்: சரி..சரி.. பயப்படாம படு.. (அருகில் உட்கார்ந்துகொள்கிறான்.)
காட்சி மூன்று
(நிர்மலாவும் ஈசுவரியும்)
நிர்மலா: ஈசுவரி.. எப்படியும் அந்த பொம்மைய வாங்கி கொடுத்துடறேன்.
அது மாதிரி முயல் பொம்மை கிடைக்கலியாம்.. பாபு அப்பா
அலைஞ்சி பாத்துட்டார்.
ஈசுவரி : சரி நிர்மலா..என் விதி..
நிர்மலா: வருத்தப்படாத ஈசுவரி. உன் கோபம் புரியுது..நல்லா அடிச்சு
விலாசிட்டேன்..உடம்புக்கு முடியாம படுத்திருக்கான்..
ஈசுவரி : அதனால என் பொம்மை கிடைச்சுடுமா..அது வெறும் பொம்மை
யில்ல.. என்னோட குழந்தை மாதிரி..கொன்னுட்டான்..
(சொல்லிவிட்டு ஈசுவரி திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறாள்.)
(அவள் போவதையே பார்த்துவிட்டு நிர்மலா திரும்பி நடக்கிறாள்.)
காட்சி நான்கு
(ஈசுவரியின் வீடு..அமர்ந்திருக்கிறாள். டிவியில் படம் ஓடிக்கொண்டிருக் கிறது. அவள் கணவன் கூடவே உட்கார்ந்து இருக்கிறான். அப்போது நிர்மலாவும் அவள் பையன் பாபுவும் உள்ளே வருகிறார்கள். பாபு முன்னால் ஓடிப்போய் ஈசுவரியின் முன்
நிற்கிறான்)
பாபு : ஆண்ட்டி அம்மா உங்களுக்கு பொம்மை கொண்டாரங்க...
நான் ஒடச்ச அதே முயல் பொம்மை..
நிர்மலா: மன்னிச்சுக்க ஈசுவரி..இந்தா அவரு பெங்களுரு போனப்ப பாத்திருக்காரு..
மறக்காம வாங்கிட்டு வந்துட்டாரு..எடுத்துக்க..திரும்பவும் மன்னிப்பு
கேட்டுக்கறேன்.
பாபு : ஆண்ட்டி வாங்கிக்கங்க..நான் ஒடச்ச அதே பொம்மைதான்..
ஈசுவரியின்
கணவன்: ஈசுவரி.வாங்கிக்க..கொடுங்க..விடுங்க..இது பெரிய விஷயமே
இல்ல.. (ஈசுவரி எழுந்து வாங்குகிறாள்.)
பாபு : ஆண்ட்டி அங்கேயே வச்சுடுங்க..இனி நான் எடுக்கமாட்டேன்..
எங்கப்பா எனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காரு..இதே மாதிரி
முயல் பொம்மை...
எழுந்து அதை ஷோகேஸில் வைக்கப் போகிறாள். வழியில்
கிடந்த பாத்திரத்தைக் கவனிக்கவில்லை. கால் அதில் பட
தடுமாறி விழப்போக..சமாளிக்க பொம்மையை நழுவவிடுகிறாள்.
மறுபடியும் அந்த முயல்பொம்மை கீழே விழுந்து உடைகிறது
சில்லுகளாய்.. அதிர்ந்துபோய் நிற்கிறாள் ஈசுவரி..
( திரை )
Tuesday, June 22, 2010
ஆராய்ச்சிமணி
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அந்த அரிய மானிடப் பிறவியைக் காப்பதே பெரும்பாடாகிவிடும் சூழல் இப்போது. அந்தக் காலம்போல் எதுவும் இல்லை. உடல் பராமரித்தலும், உணவு தயாரித்தலும், உணவு உண்ணும் முறையும் மாறியுள்ளது. அதனால்தான் சொற்ப வயதில் எல்லா நோயும் வருகின்றது. மரணமும் நேருகிறது. இது காலத்தின் கட்டாயம் என்று ஒத்துக்கொண்டுபோனால். மனிதனே சக மனிதனை அழிக்கும் கொடூரம் என்றைக்கும் மன்னிக்கமுடியாதது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படிதான் எல்லாமும் எனும்போது மனது வேதனைப்படுகிறது. எடுத்துக் காட்டு போபால் விஷவாயுவில் பலியானவர்களுக்கான நீதி இரண்டாண்டுகள்தான். அதுவும் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் எனும்போது பலியான உயிர்களை நினைத்து மனம் கசிகிறது. தற்போது போலி மருந்து. மனசாட்சியேயில்லாமல்...வீட்டுப் பத்திரங்களை அடகு வைத்து...தாலியை அடகு வைத்து...5 காசு 10 காசு என வட்டிக்கு வாங்கி எப்படியாவது நோய் தீர்ந்துவிட்டால்போதும் சம்பாதித்துவிடலாம் எனும் நம்பிக்கையோடு மருத்துவமனைக்குப் போனால்....போலி மருந்துகள்...இது தெரியாமல் பல ஆண்டுகள்..எத்தனை எத்தனை உயிர்கள் பலியானதோ...யாரறிவார்..அந்த ஆண்டவனை அன்றி...இப்படி ஈடுபட்டவனைப் பெற்றவளும் ஒரு பெண்தானே? அவள் தாய்தானே?...அவளுக்குத்தான் இந்த வேதனை கவிதை...
அன்புள்ள அம்மா...
இந்த முகந்தெரியாத மகனின்
வேதனை வணக்கங்கள்....
என் மனைவி...என்னைப் பெற்ற தாய்...
என் பிள்ளைகள்..என் உறவுகள்...
இப்படியாக அடுத்தடுத்து
இழந்திருக்கிறேன்....
என் வேதனையெதற்கு உங்களுக்கு
என்று நினைக்கலாம்...
உங்கள் மகன்தான்
எங்களுக்கு மரணத்தை மருந்துகளில்
தந்தவன்...
மரண மிருகத்தை உங்கள் கருவறையில்
சுமந்து எங்கள்மீது ஏவிவிட்டிருக்கிறீர்கள்..
பலரைக் கொன்று வைத்த நெருப்பில்தான்..
உலை வைத்து உயிர் வளர்த்திருக்கிறீர்கள்..
மருந்துக்கூட மனிதனாக இல்லாதவன்
தந்த காசில்தான் நீங்கள் உங்கள் மானத்தை
மறைத்த ஆடை தொடங்கி எல்லா சுகத்தையும்
அனுபவித்திருக்கிறீர்கள்...
உங்கள் குடும்பம் வாழ அழகியவீடு
அதனால் பலகுடும்பம் கண்டதோ எரியும் சுடுகாடு..
பலருக்கு பிணமாலை
உங்களுக்குப் பணமாலை...
நியாயமா அம்மா...?
அம்மா ஒரு தாயாக நிற்கிறீர்கள்
உலகமெங்கும் உங்களை நினைக்கிறது..
எரிகிற பிணங்களின் முன்நின்று கண்ணீரோடு...
என்ன செய்யப்போகிறீர்கள்?
தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற
சொல்லுக்காகப் பால்கொடுத்த மார்பை
அறுத்தெறிவேனென்ற தாய்கள் வாழ்ந்த தேசத்தில்..
பல தாய்களின் தாலிகளை அறுத்தவன்
உங்கள் மகன் புறமிருந்து...
என்ன செய்யப்போகிறீர்கள்?
உங்களின் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
ஒரு தாயை இழந்த மகனின் கண்ணீர்...
ஒரு மகனை இழந்த தாயின் ரத்தம்...
ஒரு கணவனை இழந்த மனைவியின் துடிப்பு...
ஒரு மனைவியை இழந்த கணவனின் வேதனை..
என நிரம்பி வழிகிறது...
சாகும்வரை நின்று உறுத்தும்
இதற்கு மருந்தேதும் கிடையாது அம்மா..
உங்களுக்கும்...உங்கள்..
இனிவரும் எல்லா தலைமுறைக்கும்...
என்ன செய்யப்போகிறீர்கள் அம்மா....?
Friday, June 18, 2010
மடலேறுதல்
அன்புள்ள....
பெரும்பான்மை ரயில் பயணங்களிலும் பேருந்து பயணங்களிலும் பார்க்கமுடிகிறது. கொஞ்சம் வயல்கள்தான் பசுமையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாம் நடுகற்கள் நடப்பட்டு பிளாட்போடப்பட்டு வருகின்றன. மயானமானது வயல்கள் மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்.
வயல்களைப் பார்க்கிறபோதெல்லாம் போஸ்ட் ஆபிஸ் ஞாபகத்திற்கு வருகின்றது. எப்படியும் வயல்ல அறுத்துடுவேன். இந்தவாட்டி நல்லா வௌஞ்சிருக்கு..நமக்கு தும்பம் தொலையற காலம் வந்துடுச்சி....கரும்பு போட்டிருக்கேன். நல்ல வெல போகும் உனக்கு செய்ய வேண்டியத செஞ்சி எவன்கிட்டயாவது இழுத்துவிட்டுடலாம்... நல்லா படிடா மவனே..நம்ப வம்சத்துலே யாரும் காலேசிக்கு போகல...பணத்தப் பத்தி கவலைப்படாத..மாவுக்கு பதினஞ்சி முட்டை கண்டுமுதலு வரும்...ஜமாய்ச்சுடலாம்...படிச்சி ஆபிசரா ஆவணும்.. இத்தனை கனவுகளையும் ஒரு அஞ்சல் அட்டையில் யாரிடமாவது கொடுத்து எழுதச் சொல்லி அனுப்புவார்கள். எத்தனையோ கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்..அஞ்சல் அட்டை வெறும் அட்டையல்ல அது உயிர்.
ஒரு தாயின் ஏக்கம்...பரிவு...பாசம்..எதிர்பார்ப்பு...மகிழ்ச்சி...துக்கம்..எல்லாம்..
ஒரு தந்தையின் பெருமை..சிறுமை..அவமானம்..அசிங்கம்..மகிழ்ச்சி..
துள்ளல்...வாரிசு பெருமை...எல்லாமும்..
ஒரு மனைவியின் அளவுகடந்த சொல்ல முடியாத ஆசைகள்..எதிர்பார்ப்பு...
ஒரு கணவனின் செயல்பாடுகள்...சாதனைகள்..நம்பிக்கைகள்..
ஒரு விதவையின் அவலம்..வாழமுடியாமல் போன வேதனைகள்..
ஒரு வாழாவெட்டியின் கொடுமைகள்...
இப்படி எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு கித்தான் பைக்குள் புழுங்கிக்கொண்டு அந்த அஞ்சலட்டை போகும்.
சொல்ல வந்தது இதுதான். யாரும் கடிதம் எழுதுவதில்லை இப்போது.
கடிதம் எழுதுவதே போயிற்று.
செல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.
கடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம்.
ஒரு நம்பிக்கையின் வேர் துளிர்விட்டிருக்கும்.
ஒரு வாக்குறுதியின் சிறகுகள் துடித்திருக்கும்.
ஒரு உறவின் உறுதிப்பாட்டை அது கனியாக்கியிருக்கும்.
ஒரு ஈடுகட்டமுடியாத துயரத்தையும் அது வாரி போட்டிருக்கும்.
ஒரு மகிழ்ச்சியை அது கட்டுக்கடங்கா நதியாய் பொங்கவிட்டிருக்கும்.
ஒரு கடிதம் வருகிறது என்றால் அது ஏதாவதொரு வாழ்வின் கருவிற்கு உணவு ஊட்டுகிறது என்று அர்த்தம்.
இப்போது எழுதவே வரவில்லை பலருக்கு. அப்புறம் எப்படி கடிதம் எழுதுவது.
எல்லாம் அலைஅலையாய் போகிறது பேசிகளில்..அதில் எதையும் மாற்றலாம்...ஏமாற்றலாம்...போலிகளைப் பிரசவிக்கலாம்..
ஒரு வாழ்க்கை செம்மையாக வாழ்ந்ததை பல கடிதங்களில்தான் கண்டெடுத்து அடுத்த தலைமுறை மகிழ்ந்திருக்கிறது..
வாரத்திற்கொருமுறையேனும் கடிதம் எழுதுங்கள். வாழ்வைத் தொலைக்காமல் இருக்கிறோம் என்றர்த்தம்.
கடிதம் வாசியுங்கள்..
அப்பாவின் கடிதத்தில் ஒரு நம்பிக்கையும் வாழ்வின் உயர்ச்சியும் இருக்கும்.
அம்மாவின் கடிதத்தில் அன்புதேன் சிந்தி இழையும்..
அக்காவின் கடிதத்தில் வாழ்வின் அர்த்தம் தெறிக்கும்..
தங்கையின் கடிதத்தில் இளமை துள்ளி... பொய்யாய் சண்டையிட்ட பொழுதுகள் தோன்றி கரையும்..
மாமாவின் கடிதத்தில் மயங்கிக் கிறங்கலாம்..
நண்பனின் கடிதத்தில் நமக்கு எல்லா இறக்கைகளும் கிடைக்கும்..
கடிதம் எழுதுங்கள். கடிதம் படியுங்கள்.
கடிதம் நமக்கு ஆறுதலைத் தரும். நம்பிக்கையை விதைக்கும்.
கடிதம் காயங்களுக்கு மருந்தாகும். நமது நேர்மையையும் பண்பையும் தக்க வைக்கும்.
கடிதம் நமது சுமைகளை இறக்கி வைக்கும். இளைப்பாற நிழல்களைத் தரும்.
கடிதம் நாம் போனபின்பும் வாழும் நமது பெயரில்.
கடிதம் நம் வாழ்க்கையின் சுவடு.
கடிதம் நம் வாழ்க்கையின் பிரதிநிதி. தலைமுறையின் வழிகாட்டி.
கடிதம் எழுதுங்கள். கடிதம் வாசியுங்கள்.
ஒரு பாய்ச்சல் மானைப்போல....பரந்து ததும்பும் நதியைப்போல...வானில் சுகமாய் மிதக்கும் பறவையைப்போல...நமது பிள்ளையின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிச உணர்வைப்போல...ஒரு நல்ல காதலைப்போல..
கடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.
Wednesday, June 16, 2010
குறும்புப்பேச்சு......
என் கண்ணப் பாத்து
சொல்லுங்க...
எங்களுக்குன்னு இலக்கியம்
அதிகம் இருக்கா?
இதையும்
பிளாட் போட
வர்றாங்களாம்..
சீரியல் பாத்துட்டு
என்னிக்கும்மா
வருவே?
எங்களுக்குக் கதைகள்
சொல்ல
அந்த
முதியோர் இல்லங்களை
மூடிவிட்டு
பாட்டிகளை
அனுப்புங்கள்.
ஒரு
பிள்ளைத்தமிழ்
பாடவா?
கனவு காணுங்கன்னு
கலாம் தாத்தா
சொன்னாரு..
டாடியும் மம்மியும்
பிரிகேஜி
இண்டர்வியுக்குப்
போயிருக்காங்க
என்ன பாக்குறீங்க....
அலாவுதீன் விளக்கு
கிடைக்குமா?
ஹோம்வொர்க்
செய்யணும்.
வாசிக்க...சுவாசிக்க...
புத்தகங்கள் வாசிக்காத யாரிடமும் பழகவேண்டாம். உயிர்வாழ சுவாசிப்பதைப் போன்றது புத்தகங்கள். காசுகொடுத்து வாங்கி வாசிக்கவேண்டும். வாசித்தல் என்பது அற்புதமானது. அது தாய்மையைபோன்ற அன்பைப் பரிமாறும். ஒரு மலர்ந்து வாசம் வீசும் போல அழகான தருணத்தைத் தரும். துன்பத்தின் வலிக்கு மருந்தாய் இருக்கும். நாம் உயிர்த்திருக்கிறோம் என்பதை அறிவிப்பவை புத்தகங்கள்தான்.
ஒருமுறையேனும் வாசித்துவிட......
1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்.
2. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்.
3. மௌனியின் அழியாச்சுடர்.
4. ஜெயகாந்தன் சிலநேரங்களில் சில மனிதர்கள்
5. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
6. பாலகுமாரன் இரும்புக்குதிரைகள்
7. பிரபஞ்சன் சிறுகதைகள்.
8. நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்
9. சா.கந்தசாமியின் தொலைந்துபோனவர்கள்.
10.சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை
11. ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
12. வண்ணநிலவனின் கடல்புரத்தில்
13. ஐசக். அருமைராசனின் கீறல்கள்
14. கோணங்கியின் மதினிமார் கதைகள்
15. விட்டல்ராவின் நதிமூலம்
16. சுஜாதாவின் நைலான் கயிறு
17. கல்கியின் பொன்னியின் செல்வன்.
18. நீல பத்மநாபனின் தலைமுறைகள்
19. லா.ச.ராவின் அபிதா
20. ஹெப்சிபா ஜேசுதாசின் டாக்டர் செல்லப்பா
21. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்
22. அம்பையின் வீட்டின் மூலையில் சமையலறை
23. வாஸந்தியின் சிறுகதைகள்
24. கிருத்திகாவின் புகை நடுவில்
25. சிவகாமியின் ஆனந்தாயி
26. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
27. பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்
28. ஜெயமோகனின் ஏழாம் உலகம்
29. விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி
30. எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து
31. எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதைகள்.
32. திலகவதியின் கல்மரம்
33. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்
34. சி.எம்.முத்துவின் நெஞ்சின் நடுவே.
35. பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதைகள்
36. தேவனின் துப்பறியும் சாம்பு
37. தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார்.
38. கார்த்திகா ராஜ்குமார் சிறுகதைகள்
39. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை
40. ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை
41. சி.ஆர்.ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம்.
42. ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள்
43. மு.மேத்தாவின் சோழநிலா
44. சாண்டியல்யனின் யவனராணி
45. ஆதவனின் காகிதமலர்கள்
46. சோலைசுந்தரபெருமாளின் செந்நெல்
47. யூமா வாசுகியின் இரத்த உறவு
48. கே.டேனியலின் கானல்
49. க.நா.சுவின் பித்தப்பூ
50. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்
இந்தப் பட்டியல் கன்னாபின்னா பட்டியல். என் நினைவிலிருந்து வருவது. பட்டியல் முடியவில்லை. பழைய வாசித்த நினைவுகளை அசைபோட்டபடியே தந்திருக்கிறேன். தொடர்ந்து பட்டியல்கள் தருவேன்.
வாசிக்கவென்று இலக்கிய இதழ்கள்.
1. தஞ்சையிலிருந்து வரும் சௌந்தர சுகன்..
2. திருச்சியிலிருந்து வரும் உயிர் எழுத்து...
3. சென்னையிலிருந்து வரும் யுகமாயினி...
4. பெங்களுரிலிருந்து வரும் புதிய விசை...
5. சென்னையிலிருந்து வரும் இலக்கியப்பீடம்..
6. புதுதில்லியிலிருந்து வரும் வடக்குவாசல்...
7. திருப்பூரிலிருந்து வரும் கனவு
8. சென்னையிலிருந்து வரும் தீராநதி...
9. சென்னையிலிருந்து வரும் தஞ்சாவூர்க்கவிராயர்...
10. பாண்டிச்சேரியிலிருந்து வரும் சுந்தர்ஜி..
11. கடலுர்ரிலிருந்து வரும் சங்கு...
12. புத்தகம் பேசுது
13. மணல் வீடு
14. சென்னையிலிருந்து வரும் உயிர்மை
15. கேரளாவிலிருந்து வரும் கேரளத்தமிழ்
Sunday, June 13, 2010
கவிதை நதியில்.......
எப்போதும்
கவிதை நதியில்
நனைந்துபோகிறேன்...
மனசெங்கும் நதியின்
ஈரம் படர்ந்து விரிகிறது
ஒரு நன்றாக சிறகு விரிந்த
பறவையின் சிறகுகளைப்போல...
தனிமையாய் தவமிருக்கும்
நதியின் மௌனத்தோடு
என் மௌனத்தைப் புணரச்
செய்கிறேன்..
நதியோடு நான் செய்துகொண்ட
எழுத்துக்களில் வடிவங்கொள்ளாத
ஒப்பந்தங்கள் ஏராளம்...ஏராளம்..
நதிகளில் கொப்பளிக்கிற திவலைத்துளிகளில்
விழுந்து எழும் சூரியனையும்
நிலவையும் அது அறியும்...
இப்போதும் எனக்கும் கவிதைநதிக்குமான
ஒரு பரஸ்பரத்தில் திளைத்திருக்கிறேன்..
நதியோடு நானிருப்பேன்
எனது கவிதைகளின் அடையாளங்களோடூ......
என் அப்பாவிற்கு
அம்மாவைப் பிடிக்கவில்லையாம்...
அம்மாவை விட்டுவிட்டு
எனக்கு ஒரு மன்ச் வாங்கிகொடுத்துவிட்டு
அப்பா போய்விட்டார்....
எப்போதும்போல அப்பா
டாட்டா காண்பிக்கவில்லை...
அப்பா இனி வரமாட்டார்
என்று எல்லோரும் சொல்கிறார்கள்
அம்மாவைக் கேட்டால்
அழுகிறாள்...
இப்போது அத்தைவீட்டில்
கொண்டுவந்து விட்டுவிட்டு
இங்கதான் இருந்து படிக்கணும்னு
சொல்லிட்டுப் போயிட்டாங்க அம்மா...
அத்தையைப் பாத்தா
மாமாவைப் பாத்தா
பயமாயிருக்கு..பசி வந்தாகூட கேக்க...
அப்பாவை அழச்சிட்டு வருவேன்னு
அம்மா சொல்லிட்டுப்போயிருக்கு...
அதுவரைக்கும்
யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்
பயமாயிருக்குன்னு...
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லையென்றபோதிலும்
ஏதேனும் சொல்லத்தான்
வேண்டியிருக்கிறது.
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லையென்பதான
தொனியில்
பல சமயங்களில்
பேசிக்கொள்ள ஒன்றுமில்லை
யென்று சொல்லித்தான் தொடங்கி
மணிக்கணக்கில் பேசி
களைக்கிறது
அலைஅலையாய் கூட்டம்
அலைபேசிகளில்...
ஒரு செடியின் அசைவாய்
எல்லாம் நடக்கிறது
ஒரு செடியின் அசைவின்மைபோல
எல்லாம் முடிந்துவிடுகிறது..
நானும் நீயும்
வாழ்வதாய் செடியிடம்
பேசிக்கொண்டிருக்கின்றன
நமக்கான
வாழ்வின் தருணங்கள்...
தப்பித்தோடிவிடுகிறது
எப்போதுமந்தப் பூனை
சாமர்த்தியம் அதற்கென்று ஒரு
பாராட்டும் விழுந்திருக்கிறது.
அந்தப் பூனையைப்போலத்தான்
நீயும் தப்பித்தலை
சாமர்த்தியம் என்கிறாய்
தப்பித்தல் எப்போதும் பாதுகாப்பல்ல
பிடிபடலே பிடித்தமானது எப்போதுமே...
காதல் அகராதியின் சில பக்கங்கள்...
சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சி
இரையாகும்...
காதல் வலையில்
சிக்கிய மனசு
இறையாகும்...
உன் பார்வைக்குயில்
அமரும்
இமைக்கிளையில்
ஓர்
இலையாயிருக்க
ஆசை...
கதவு திறந்ததும்
முகத்தில் அறைகிறது
காற்று மணமுடன்...
காதுகளுக்கருகில்
விசிலடித்துத் துள்ளிப்
போகிறது...
கொடியில் கிடக்குமென்
சட்டையைக் கலைத்து
கிண்டலடித்துப் பின்..
கொல்லைக்குப்
போய் செடிகளையும்
பூக்களையும்
வம்புக்கிழுக்கிறது...
செல்லம்தான்.
கண்டித்து வை
காற்றை..
அப்படியே
கவனித்து வை
நம் காதலை....
பொழுது பொறுக்கிகள்
உறக்கம் கலைத்து எழும்போதே
எதையாவது பொறுக்கவேண்டுமென்ற
மனமுடயே எழுகிறார்கள்...
யாரிடம் எது கிடைக்கும்
என்ற பிச்சை மனோபாவத்துடேனே
பொழுதைச் சுமக்கிறார்கள்..
அதிகபட்ச முட்டாள்தனத்தை எங்கும்
காட்சிப்படுத்துகிறார்கள்..
அடாவடித்தனம்..மலநாற்றமாய்
பேச்சும் வார்த்தைகளும்...
நேர்மையின்மை...தகுதியின்மை..
முறையின்மை..ஒழுங்கின்மை...
மனித உணர்வின்மை..
இப்படியே ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பொழுதும்...
தகுதியின்மையே வாழ்நாளின்
தகுதியாய் பெருமைகொள்ளும்
இவர்களுக்கு
பொழுதெல்லாம் பொறுக்கல்களே....
ஒற்றைச்சொல்லில் தொடங்கி
ஒற்றைச் சொல்லில் முடிகிறது
இவர்களின் எல்லாப் பொறுக்கல்களும்...
அந்த ஒற்றைச்சொல்
ஜாதி...
Subscribe to:
Posts (Atom)