குறுங்கதை
16
இன்னார்க்கு இன்னார் என்று
ஹரணி
கார்த்திக்கு சோபாவுக்கு நிச்சயதார்த்தம்
முடிந்து ஒருவாரந்தான் ஆகிறது. அதுவும் அதிகம் கூட்டம் சேர்க்காமல் கார்த்தி வீட்டு
சார்பில் பத்துபேர் சோபா வீட்டு சார்பில் பத்துபேர் கூடுதலாக ஐயர் எனக் குறைந்த பேர்களைக்
கொண்டு வீட்டிலேயே வைத்து முடித்துவிட்டார்கள். முகக்கவசம் அணிந்து வந்தோர்களுக்கு
எல்லாம் சானிடைசர் கொடுத்து மிகக் கவனமாகச் செய்தார்கள். அக்கம் பக்கம் வீட்டுப் பெண்கள்
உதவி செய்ய வந்திருந்தோர்க்கு விருந்தும் செய்தும்போட்டார்கள்.
சோபா தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவள்
சென்னையில். இப்போது ஒர்க் அட் ஹோம் என்கிற சூழலில் வேலை செய்கிறாள்.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
எந்த அறிகுறியும் இல்லை.
எதேச்சையாகப் பரிசோதிக்க வந்ததில் சோபாவிற்குப்
பாசிடிவ் என்று வந்துவிட்டது
.
அதிர்ந்துபோனார்கள்.
லாக்டவுன் முடிந்ததும் திருமணம் வைக்கலாம்
என்கிற சூழலில் இப்படியொரு சங்கடம்.
பயந்தார்கள்.
ஆனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்
என்று மருத்துவத்துறை அதிகாரிகள் சொல்லி அதற்கான விதிமுறைகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
சாப்பிடவேண்டிய உணவு முறைகள்.. எல்லாவற்றையும் சோபாவின் குடும்பத்தார்க்குச் சொல்லிவிட்டு..
அவ்வப்போது தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டுப்போனார்கள்.
மாடியில் ஒரு அறை இருந்தது. கொஞ்சம் தட்டுமுட்டு
சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறை.
அதை ஓரமாக எடுத்து வெளியே போட்டுவிட்டு
பாய், தலையணை, இதர விஷயங்கள் என்று அந்த அறையைத் தயார் செய்து அதற்குள் சோபா போய்விட்டாள்.
இப்ப என்ன பண்ணறது?
ஏன் எல்லாம் சரியாயிடும். பயப்படவேண்டாம்.
இல்ல மாப்பிள்ள வீட்டுக்குத் தெரிவிக்க
வேண்டாமா? ஏதாச்சும் நினைச்சுக்கப்போறாங்க…
ஒருவேளை கல்யாணம் நின்னுடுமோ.. என்று
சோபாவின் அம்மா பயந்தாள்.
அதெல்லாம் நடக்காது.. நீ எந்தக் காலத்துல
இருக்கே.. இது ஒரு வைரஸ் தொற்று.. எத்தனையோ பேருக்கு வந்திருக்கு.. பெரிய பெரிய ஆளுங்களுக்கு
எல்லாம் வந்திருக்கு.. மினிஸ்டர்.. எம்எல்ஏ கோடீஸ்வரங்க.. நாட்டோட அதிபர்கள்னு .. எல்லாம்
சரியாயிடும். இதுக்குப் போய் கல்யாணத்த நிறுத்திடுவாங்கன்னு சொல்றது பைத்தியக்காரத்தனம்.
எதுவும் நடக்கும். ஆனா நாம எதுக்கும்
தயாரா இருந்துக்கணும் என்றார் சோபாவின் அப்பா.
என்னங்க இப்படி சொல்றீங்க?
இல்ல.. உண்மையைச் சொன்னேன்.. எது நடந்தாலும்
அதை ஏத்துக்கற மனப்பக்குவம் நமக்கு வேணும்.. அவ்வளவுதான்.. என்னம்மா சோபா சொல்றே? என்றார்.
சரிப்பா.. கார்த்தி வீட்ல சொல்லிடுங்க..
முதல்ல கார்த்திக் கிட்ட போன்பண்ணி பேசிடுங்க.. அப்புறம் அவங்க வீட்டுல சொல்லுங்க என்றாள்.
சரிம்மா என்று போன்பண்ணி விஷயத்தைச் சொன்னார்கள்.
அப்ப ஏற்கெனவே இருந்திருக்கு.. உள்ளுக்குள்ளேயே
இருந்துருக்கு.. சரி பாருங்க.. இந்தப் பத்திரிக்கை
அடிக்கற வேலை எல்லாத்தையும் கொஞ்சம் நிறுத்தி வச்சிடுங்க.. எல்லாம் சரியாகட்டும்..
பார்க்கலாம்.. நானும் என்னோட சொந்தக்காரங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேன்.. இது மோசமான
நோய்ங்கறாங்க.. பின்னாடி வேற பாதிக்கும்னு வேற சொல்றாங்க.. எதுக்கும் யோசிச்சு முடிவு
பண்ணிக்கலாம் என்றார் தயவுதாட்சண்யம் இல்லாமல்.
சரிங்க.. என்றார் சோபாவின் அப்பா.
அப்புறம் கார்த்திக்கிடமும் பேசினார்.
சரிங்க.. மாமா அப்பா சொல்றபடி செய்யுங்க.. என்று சொல்லிவிட்டு கச்சேரியை தன் அப்பாவிடம் வைத்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்தான்.
கார்த்திக்கும் இப்படிச் சொன்னவுடன் சோபாவின்
அப்பா அதிர்ந்துபோனார்.. இனி இந்தக் கல்யாணம் நடக்காது என்பதுபோல உறுதி வந்துவிட்டது.
அன்று இரவு.. கார்த்திக் தன் அப்பாவிடம் பேசினான்.
என்னப்பா.. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க..
இது உலகம் முழுக்க இருக்கிற நடக்கற விஷயம்.. கொரோனான்னா எல்லாரும் செத்துப்போயிடமாட்டாங்க..
அதுக்காகப் பத்திரிக்கை அடிக்கறத நிறுத்துங்கன்னு பேசினது தப்புப்பா.. எதுவும் நிலையில்ல..
யாருக்கு வேணா என்ன வேணா வரலாம்.. இதே எனக்கு வந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? நல்லதோ
கெட்டதோ சோபா எனக்குன்னு நிச்சயிக்கப்பட்ட பெண்.. அத மாத்தமுடியாது.. மாத்தக்கூடாது..
வாழப்போறவன் நான்.. என் வாழ்க்கையைத் தீர்மானிக்க எனக்கு உரிமை இருக்கு..
அதற்குமேல் கார்த்திக் அப்பா பேசவில்லை.
உடனே சோபாவுக்கு அடிச்சுப் பேசினான்.
சோபா.. நமக்கான வாழ்க்கையை யாரும் மாத்தமுடியாது. பத்திரமா இரு.. கவனமா இருந்தா
போதும்.. நான் தினமும் வருவேன்.. உனக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை வாங்கிக்கொடுத்திட்டுப்
போவேன்.. எதனாலும்போன்ல பேசு… தினமும் பேசு.. தைரியமா இரு.. நாம வாழப்போற வாழ்க்கைக்கு
முன்னாடியே சவாலா இந்தக் காரியம் நடக்குது. எல்லாம் நன்மைக்கே.. நாம பேசிவச்சபடி ஒரு
கல்யாணப் பத்திரிக்கையை நான் டிசைன் பண்ணி வச்சிருக்கேன்.. வாட்ஸ் அப்ல அனுப்புறேன்..
பார்த்து திருத்தம் சொல்லு.. கவலைப்படாதே.. உன்னோட அப்பா கிட்ட என்னோட அங்கிள் கிட்ட
சொல்லு.. நம்பக் கல்யாணம் திட்டமிட்டபடி நடக்கும்.. நானிருக்கேன்.. என்றான்.
000